Published:Updated:

ஜென் Z- “நான் விசாலினி ஆனது எப்படி?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஜென் Z- “நான் விசாலினி ஆனது எப்படி?”
ஜென் Z- “நான் விசாலினி ஆனது எப்படி?”

சிபி

பிரீமியம் ஸ்டோரி

னக்கு வெளிநாட்டு கம்பெனி ஒண்ணு `153 கோடி ரூபாய் சம்பளம் தர்றேன்’னு சொன்னாங்க தெரியுமா” - சர்ப்ரைஸ் கொடுக்கிற விசாலினி, திருநெல்வேலித் தமிழச்சி. கற்பூர ஜீனியஸ். இவரது ஐக்யூ லெவல் 225. (மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸின் ஐ.க்யூ 160-தான்) 16 வயதிலேயே இன்ஜினீயரிங் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.

ஜென் Z- “நான் விசாலினி ஆனது எப்படி?”

``உலகத்தைப் பார்க்கிற ஆசையில ஏழு மாசத்துலயே அம்மா வயித்துல இருந்து வெளியே வந்துட்டேனாம். ஒரு பிரம்புக் குச்சிக்கு கண், மூக்கு எல்லாம் வெச்ச மாதிரி இருந்தேனாம். `பத்து நாட்கள் உயிரோட இருப்பதே கஷ்டம்’னு டாக்டர் சொல்லிட்டாங்க. நான் ரொம்ப நாள் உயிரோடு இருக்க மாட்டேன்கிறதால எனக்கு பேரு வைக்கவே மூணு மாசத்துக்கும் மேல ஆகிடுச்சு. 90 நாட்களுக்குப் பிறகுதான்... நான் விசாலினி ஆனேன்.

எல்லா குழந்தைகளுக்குமே இந்த உலகம் புத்தம் புதுசுதான். புதுசா எதைப் பார்த்தாலும் கேள்விகேட்பாங்க. அப்படித்தான் நானும் என் அம்மாகிட்ட கேள்விகள் கேட்டுட்டே இருந்திருக்கேன். `மீன் ஏன் தண்ணிக்குள்ளயே வாழுது, மனுஷன் ஏன் தண்ணிக்கு வெளியே வாழுறான், இந்தப் பூமி எப்படித் தோன்றியது?'னு என் வயசுக்கு மீறிய கேள்விகளால் என்னை எல்லோரும் கவனிக்க ஆரம்பிச்சாங்க.

ஜென் Z- “நான் விசாலினி ஆனது எப்படி?”

ஒருநாள் சாக்பீஸை எடுத்து காம்பஸ் இல்லாமலே நேர்த்தியா வட்டம் போட்டேன். அம்மாக்கு `இவ ஸ்பெஷல் சைல்டாக இருப்பாளோ, இவளுக்கு வேற ஏதாவது பிரச்னை இருக்குமோ?'னு ஒரு டவுட்டு வந்து  ஐக்யூ டெஸ்ட் எடுத்திருக்காங்க. என் மூன்றரை வயதில், என் ஐக்யூ லெவல் 225 இருப்பதைக் கண்டுபிடிச்சாங்க. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஐக்யூ - 190, பில் கேட்ஸின் ஐக்யூ - 160, ஸ்டீபன் ஹாக்கிங் ஐக்யூ - 160. என்னுடைய ரிசல்ட்டைப் பார்த்து எங்க அம்மா, அப்பா மிரண்டுட்டாங்க. `இவளது மூளையால் சிறந்த விஞ்ஞானியாகவும் வர முடியும். குண்டு தயாரிக்க முடியும். எல்லாம் உங்க வளர்ப்பில்தான் இருக்கு'னு என்னை பரிசோதனை செய்த டாக்டர் சொல்ல... அம்மா வேலையை விட்டுவிட்டாங்க. என்னைக் கவனிப்பதிலேயே முழு நேரத்தையும் ஒதுக்கினாங்க.

ஒருநாள் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் `ஜெயிப்பது எப்படி?'னு ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்தப் பக்கம் போன என் அம்மா என்னைப் பத்தி சொல்லியிருக்காங்க. அவங்க, இன்ஜினீயர்கள் எழுதும் சி.சி.என்.ஏ தேர்வை என்னை எழுதச் சொல்லியிருந்தாங்க. நானும் நாலு மாசத்துல எல்லாத்தையும் படிச்சேன். பத்து வயசுல 90 சதவிகித மதிப்பெண் வாங்கி பாஸ் பண்ணினேன். `இது உலக சாதனை’னு அங்கீகாரம் கொடுத்தாங்க. அடுத்த ஒரு வருடத்தில் மட்டும் இதுபோல 12 தேர்வுகள் எழுதினேன். அதில் ஐந்து... உலக சாதனை. எனக்குப் படிக்கப் படிக்க இந்த இன்ஜி
னீயரிங், கம்யூட்டர் ஃபீல்டு ரொம்பப் பிடிச்சிருந்தது. இந்த நேரத்துலதான் ஐ.ஓ.பி பேங்க்-ல ஒரு லெக்சர் கொடுத்தேன். அவங்க `ஏதாவது உதவி வேணுமா?’னு கேட்டாங்க. `ஹரியானா மாநிலத்துல பி.ஹெச்டி மாதிரி கம்யூட்டர் ஃபீல்டுல ஒரு படிப்பு இருக்கு. அதைப் படிக்கணும்’னு சொன்னேன். அதுக்கான ஏற்பாடுகள் செஞ்சு கொடுத்தாங்க. அதுக்குப் பிறகு பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இருந்து, `இங்க வந்து படிங்க’னு கூப்பிட்டாங்க. சில தனியார் கம்பெனிகள்ல மாசம் நாலு லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கும் கூப்பிட்டாங்க. அதிக பட்சமாக ஒரு வெளிநாடு கம்பெனியில் இருந்து 153 கோடி ரூபாய்க்கு வேலைக்குக் கூப்பிட்டாங்க. எங்க அப்பா `Vishalini not for sale'னு சொல்லி அனுப்பிட்டார்.

ஜென் Z- “நான் விசாலினி ஆனது எப்படி?”

கூகுள் நிறுவனம் நடத்திய சர்வதேச மாநாட்டில் சிறப்பு அழைப்பாளரா கலந்துக்கிட்டுப் பேசினேன் `கூகுளின் இளவயதுப் பேச்சாளர்’ என்ற அங்கீகாரம் கொடுத்தாங்க. பல சர்வதேசப் போட்டிகள்ல கலந்துகிட்டு பல வெற்றிகளைக் குவிச்சேன். போன வருஷம் நம் பிரதமர் மோடியோடு பேசும் வாய்ப்பு கிடைத்தது. `இந்த நாட்டுக்கு என் அறிவால் நான் எப்படிப் பெருமை சேர்ப்பது?னு கேட்டேன்.
`இந்தச் சின்ன வயதில் நீ செய்துள்ள சாதனையே இந்திய நாட்டுக்கான சேவைதான்'னு  பாராட்டினார்.

இப்ப எனக்கு 16 வயசு, டென்த், ப்ளஸ் டூ படிக்காமலேயே... கலசலிங்கம் யுனிவர்சிட்டியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறேன். நான்தான் யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் வருவேன். இயற்கையாகப் பார்த்துக் கொடுத்த இந்த வரத்தை நம் நாட்டுக்குப் பயன்படுத்தணும் என்பதுதான் என் ஆசை.

முக்கியமாக எனக்கு மூன்று கனவுகள் இருக்கு. ஒண்ணு... இந்தியாவுக்கு சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் நோபல் பரிசு வாங்கிக் கொடுக்கணும். ரெண்டாவது... கம்ப்யூட்டர் துறை சார்ந்த ஒரு கம்பெனி தொடங்கி அதுக்கு சி.ஈ.ஓ ஆகணும். மூணாவது... மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு ஹோம் ரெடி பண்ணி அவங்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கணும். இதை நோக்கித்தான் என் அடுத்த கட்டப் பயணம் தொடருது. நமக்கு வாழ்வு ஒருமுறைதான்... அதில் எக்கச்சக்கமா நல்லதை விதைக்கணும்’’ என்கிறார் விலாசினி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு