Published:Updated:

ஜென் Z - புளூ சுடிதார்... ரெட் டி ஷர்ட்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஜென்  Z - புளூ சுடிதார்... ரெட் டி ஷர்ட்!
ஜென் Z - புளூ சுடிதார்... ரெட் டி ஷர்ட்!

நித்திஷ், படம்: பகத்குமார்

பிரீமியம் ஸ்டோரி
ஜென்  Z - புளூ சுடிதார்... ரெட் டி ஷர்ட்!

`ஆனந்தம் ஆனந்தம் பாடும்' காலத்தில் இருந்து லேட்டஸ்ட் `ராக் அண்ட் கூத்து' அப்கிரேடு வரை, காலேஜ் கல்ச்சுரல் காட்சிகள் கிட்டத்தட்ட ஒன்றுதான். மைண்ட்செட் மாறினாலும் ஜீன் ஒன்றுதானே! அப்படி நம் ரத்தத்திலேயே ஊறி, ஊறுகாய் ஆகியிருக்கும் கலர்ஃபுல் கல்ச்சுரல் அக்கப்போர்கள் பற்றிய ட்விட்லாங்கர் குறிப்பு இது.

`கல்ச்சுரலில் என்ன பாட்டுக்கு ஆடுவது?’ என்பதில் தொடங்கும் முதல் அக்கப்போர். ஒருவன் `மச்சி... தெய்வீகமா ஆரம்பிச்சு, லைட்டா வெஸ்டர்ன் தொட்டு, வெயிட்டா ஃபோக்ல முடிப்போம்' என்பான். இன்னொருவன், `தட்ஸ் யூஷுவல் மேன். நாம வித்தியாசமா மெலடி பாட்டு மெட்லிக்கு டான்ஸ் ஆடலாம்' என்பான். இப்படியாக வாய்க்கு ஒன்றாக வெர்ஷன் வாங்கி, கலந்து, அரைத்து ஓடவிட்டால், அது கிளாசிக்கல் கலந்த வெஸ்டர்ன் ஃபோக் வித் கதக் டாப்பிங்' என்ற கொடூர காம்போவாக இருக்கும்.

ஜென்  Z - புளூ சுடிதார்... ரெட் டி ஷர்ட்!

பாட்டு ஓ.கே... அடுத்தது பிராக்டீஸ்தான். நடு இரவில் ஹாஸ்டல் பெட்டில் அசந்து தூங்கும்போது, திடீரென உங்கள் கட்டில் வைபரேஷன் மோடுக்குச் செல்லும். பயந்து பதறி எழுந்தால், `திங்கு... திங்கு...' எனச் சத்தம் கேட்கும். அதுதான் கல்ச்சுரல் ப்ராக்டீஸ் எனக் கொள்க. ஓடுவது, குதிப்பது, உருள்வது, பாபா ராம்தேவின் பாம்பு டான்ஸ் ஆடுவது... என எல்லாவற்றையும், மிட் நைட்டில்தான் மேற்கொள்வார்கள். பகலில் செய்தால் சர்ப்ரைஸ் போய்விடும் அல்லது யாராவது காப்பி அடித்துவிடுவார்கள் என்பது அவர்களின் ஹரி பட லாஜிக்.

எல்லா டான்ஸ் குரூப்களிலும் ஓர் ஆள் உண்டு. `அவனுக்கு டான்ஸ் சூப்பரா வரும்’ என யாரோ பெண்டுலம் ஆட்டி அவன் ஆழ்மனதில் ஸ்ட்ராங்காகப் பதியவைத்திருப்பார்கள். அதை நம்பி `நடுவில்தான் ஆடுவேன்’ என அவன் அடம்பிடிப்பான். கொஞ்சம் `தமிழ்ப் படம்’ சிவா, கொஞ்சம் `ஹவ்வா... ஹவ்வா...' செந்தில் எனக் குழப்ப காக்டெய்லாகச் சொதப்பும் அவனை, நடுவில் நிற்கவைப்பது காங்கிரஸோடு கூட்டணி வைப்பதற்கு சமம் என்பதால், `நீ போய் தனியா தொங்கு' என ஓரம்கட்டிவைத்திருப்பார்கள். முகத்தில் வெள்ளை பெயின்ட்டோடு அவனும் ஓரமாகத் தவழ்ந்துகொண்டிருப்பான்.

 `ஆசையைக் காத்துல தூதுவிட்டு' பாட்டு ஆல்டைம் டெம்ப்ளேட். சேலையைச் சுற்றிக்கொண்டு, கையில் விளக்கோடு பெல்லி டான்ஸ் ஆடும்  கண்மணிகளை கண்கள் அவியக் காண்பவர்களுக்கு, சொர்க்கலோக சுகங் களுக்கான எக்ஸ்க்ளூசிவ் பாஸே இலவசமாகக் கிடைக்கும்.
கெளதம் மேனன் புண்ணி யத்தில் கிடார் வாசிக்கத் தெரிந்தவர்கள், தங்களை சூர்யாவாக ஃபீல்செய்து சமீராவுக்காக `பா’ இயற்றுவார்கள். `வாவ்... வாட் எ வாய்ஸ், சூப்பரா வாசிக்கிறான்ல' எனப் பெண் ரசிகைகள் கொண்டாடுவதை, காதில் கார்பன்டை ஆக்ஸைடு வெளியேறக் கேட்டு, சூடாகுவார்கள் சில ஜென்டில்மேன்ஸ்.

`இந்தப் பொண்ணுங்களே இப்படித் தான் தெரிஞ்சுபோச்சுடா', `வேணாம் மச்சான் வேணாம்... இந்தப் பொண்ணுங்க காதலு' என, முக்கால்வாசி ஆடவர் கலைக்குழுவின் ப்ளேலிஸ்ட்டில், இப்படி ஒரு சூப் சாங் நிச்சயம் இருக்கும். `ஷீலா கீ ஜவானி’, `சிக்கினி சம்மேளி' - என பெண்கள் கரகாட்டக் கோஷ்டியின் ப்ளேலிஸ்ட்டில் ஒரு பாலிவுட் பாட்டு நிச்சயம் இருக்கும்.

ஜென்  Z - புளூ சுடிதார்... ரெட் டி ஷர்ட்!

கோலிவுட்டே பிச்சை கேட்கும் அளவுக்கு 10 செகண்ட் காதல் கதைகள், கேம்பஸ் முழுவதும் களைகட்டும். ப்ளூ கலர் சுடிதார், ரெட் டி-ஷர்ட் என பெயர் தெரியாதவர்களுக்கு வண்ணங்களே அடையாளம் ஆகியிருக்கும். முதல் நொடியில் இளையராஜா மெலடி, ஐந்தாவது நொடியில் ஏ.ஆர்.ரஹ்மான் ராப், 10-வது நொடியில் தேவா கானா... எனப் போட்டிபோட்டு மனதுக்குள் பி.ஜி.எம் ஓடும்.

இந்தப் பரபரப்புகள் எதுவும் பாதிக்காத கூட்டம் ஒன்று இருக்கும். அது `தல - தளபதி ரசிகர்கள்’. அவர்கள் இருவரின் பாடல்கள் வந்துவிட்டால் கரகோஷம் விண்ணைப் பிளக்கும். அந்த ரசிகமணிகள் வட்டம் போட்டு முரட்டுக்குத்து குத்துவார்கள். உடனே மொத்தக் கூட்டமும் இவர்கள் பக்கம் திரும்பிவிடும். பாவம்... ஹெட் ஸ்டைல், ஏர் சேர், எல்போ ஸ்பின் என ஸ்டேஜில் உயிரைக் கொடுத்து வித்தை காண்பிப்பவர் களைக் கண்டுகொள்ள நாதி இருக்காது.

கானாடுகாத்தான் பக்கத்தில் நடந்த கல்ச்சுரல் ஷோவை, நீங்கள் கலிஃபோர்னியாவில் இருந்தாலும் தெரிந்துகொள்ளலாம். காரணம், மறுநாள் ஃபேஸ்புக் டைம்லைன் முழுக்க செல்ஃபிக்கள், ஓவர் ஃப்ளோ ஆகும். போட்டோவில் எல்லாரும் இரட்டை இலைக்கோ, பிரேம்ஜிக்கோ ஓட்டு கேட்டுக்கொண்டிருப்பார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு