Published:Updated:

தென் இந்தியாவின் நெற்களஞ்சியம் இன்று...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தென் இந்தியாவின் நெற்களஞ்சியம் இன்று...
தென் இந்தியாவின் நெற்களஞ்சியம் இன்று...

வெ.நீலகண்டன், படங்கள்: கே.குணசீலன்

பிரீமியம் ஸ்டோரி
தென் இந்தியாவின் நெற்களஞ்சியம் இன்று...

அன்று...

எப்போதும் பச்சை மாறாத நிலம், உழவு சகதியிலேயே உழன்றுகொண்டிருப் பதால், முழங்கால் வரைக்கும் மஞ்சள் காரை ஏறிய மாடுகள், நடவு ஈரம் சொட்டச் சொட்ட, வயல் வரப்பு மர நிழலில் ஊர்க்கதை பேசியபடி உணவு அருந்தும் பெண்கள் என ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் எப்போதும் குளிர்ச்சி குறையாமல் இருக்கும். ஊர்க் கதை, வம்பு, சண்டை, சச்சரவு, ஜாலி என்று கிராமம் கலகலத்துக் கிடக்கும். பண்டிகைகள், திருவிழாக்கள் எனக் கொண்டாட்டங்களுக்குக் குறைவு இருக்காது. பெண்கள் மதுக்குடம் தாங்கிவர, இளைஞர்கள், ஐந்தாறு கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் குயவர் குடியிருப்பில் இருந்து பிரமாண்டமான சுடுமண் சிற்பங்களை தோளில் சுமந்து சாமியாடி வருவார்கள். தஞ்சை வாழ்க்கையைப் பற்றி கற்பனை செய்தாலே நெஞ்சில் ஈரம் சுரக்கிறது.  

இன்று...

எல்லா கிராமங்களிலுமே ஓர் இனம்புரியாத சோகம் இழையோடுகிறது. பெரும்பாலான கிராமங்களில் 35 வயதுக்குக் கீழான இளைஞர்களே இல்லை. ஆற்றுப்பாலங்கள் காலியாகக் கிடக்கின்றன. திருவிழாக்களில் எவ்வித சுவாரஸ்யங்களும் இல்லை. குயவர் குடியிருப்பில் இருந்து மாட்டு வண்டிகளில் வந்திறங்குகின்றன சாமி சிலைகள்.

கடந்த 20 ஆண்டுகளில் காவிரிப் படுகை பண்பாடே மாறிவிட்டது. `தென்இந்தியாவின் நெற்களஞ்சியம்’ என வெள்ளைக்காரர்கள் வியந்துபோற்றிய ஒருங்கிணைந்த தஞ்சை, இன்று தன் இயல்பைத் தொலைத்து நிற்கிறது. நெடுஞ்சாலை ஓர விளைநிலங்களில் பெரும்பாலானவை வீட்டுமனைகள் ஆகிவிட்டன. கிணற்றுப் பாசன நிலங்கள் தவிர, பெரும்பாலான வயல்கள் காய்ந்து கிடக்கின்றன.

காவிரி ஆறுதான் ஒருங்கிணைந்த தஞ்சையின் ஜீவாதாரம். மேட்டூரில் தொடங்கி, சுமார் 21 லட்சத்து 58 ஆயிரத்து 800 ஏக்கர் நிலப்பரப்பைப் பசுமையாக்கி விட்டு பூம்புகாரில் கடல் சேர்கிறது காவிரி. திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களின் ஒரு பகுதி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பே காவிரி டெல்டா. 4 லட்சம் விவசாயிகள், 16 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் இந்தப் பகுதியில் வசிக்கிறார்கள். மேட்டூரில் இருந்து ஒற்றைப்பாதையில் ஓடிவரும் காவிரி, திருச்சி முக்கொம்பில் கொள்ளிடமாகவும், கல்லணையில் வெண்ணாறாகவும், கல்லணை கால்வாயாகவும் மூவுருவம் எடுக்கிறது. பிறகு, 36 கிளை ஆறுகள், 1665 வாய்க்கால்கள் என, நரம்பு மண்டலத்தைப்போல சுமார் 30 ஆயிரம் கிலோ மீட்டர் பாசனப் பரப்புக்குள் பாய்ந்தோடுகிறது.

வழக்கமாக, ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஜனவரி 28-ம் தேதி மூடப்படும். சுமார் 3 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி நடக்கும். ஆகஸ்ட் மாதம் கடைசி அல்லது செப்டம்பர் மாத மத்தியில் குறுவை அறுவடை முடியும். புத்தரிசி, புத்தாடை என தீபாவளி களைகட்டும்.

ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில், சம்பாவுக்கான ஆயத்தங்கள் தொடங்கும். சுமார் 12 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி சாகுபடி நடக்கும். பொங்கலுக்கு முன்பே அறுவடை தொடங்கிவிடும். பொங்கல் பண்டிகையில் புத்துணர்வு பொங்கும். இவை தவிர கோடைப் பயிர்களாக உளுந்து, கடலை போன்ற தானியங்களும் பயிரிடப்படும்.

கடந்த 20 ஆண்டுகளில் இந்த நடைமுறை குலைந்துவிட்டது. குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக காவிரிப் படுகை மக்களுக்குத் தீபாவளியும் இல்லை; பொங்கலும் இல்லை.

தென் இந்தியாவின் நெற்களஞ்சியம் இன்று...

“2011-ம் ஆண்டுக்குப் பிறகு, ஒருமுறைகூட ஜூன் 12-ம் தேதியில் மேட்டூர் அணை திறக்கப்படவே இல்லை. இந்த வருஷம் ஆடிப் பெருக்குக்காக 5,000 கன அடி திறந்தாங்க. குறுவைக்கு தண்ணியே திறக்கலை. மின்மோட்டார் வெச்சிருக்கவங்க மட்டும் கொஞ்சம் குறுவை போட்டிருக் காங்க. மற்றபடி, எல்லா நிலமும் வெறுமையாத்தான் கிடக்கு. எங்களுக்கு விவசாயத்தைத் தவிர வேறு எந்த வேலையும் தெரியாது. அந்தக் காலத்துல, கிடைச்ச அரசாங்க வேலையைக்கூட விட்டுட்டு, விவசாயம் பார்க்க வந்தாங்க. காரணம், அரசாங்க வேலையைவிட லாபம் தர்ற தொழிலா விவசாயம் இருந்தது. இன்னைக்கு, தங்கள் பிள்ளைகள் விவசாயத்துக்கு வந்திடக்  கூடாதுனு எல்லாப் பெற்றோரும் நினைக்கிறாங்க. எப்பாடு பட்டாவது இன்ஜினீயரிங் கல்லூரியில் பிள்ளைகளைச் சேர்த்திடுறாங்க. சரியா படிப்பு வரலைன்னா, இருக்கிற நிலங்களை வித்து வெளிநாட்டுக்கு அனுப்பி வெச்சுடுறாங்க. மன்னார்குடி, ஒரத்தநாடு, தஞ்சாவூர் பகுதிகள்ல ஒவ்வொரு கிராமத்துலயும் குறைந்தது பத்து இளைஞர்களாவது வெளிநாட்டுல இருப்பாங்க. பெண்கள், ஈரோடு, திருப்பூர் பகுதி நூற்பாலைகளுக்கு வேலைக்குப் போறாங்க. திருமணத்தப்போ பட்டுப்புடவை, தாலி எல்லாம் தருவோம், சம்பளம் போக இறுதியில ஒரு தொகையும் தருவோம்னு ஆசை வார்த்தை காட்டி அவங்களை அழைச்சுட்டுப் போறாங்க. அப்படிப் போய் கை, விரல்களை இழந்த, வாழ்க்கையை இழந்த பெண்கள் நிறையப் பேர் இருக்காங்க. வேறு வழியே இல்லைனு கிராமத்துலயே கிடக்கிறவங்க மட்டும்தான் இப்போ விவசாயம் செய்றாங்க...'' என்று ஆதங்கப்படுகிறார் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமலநாதன்.

தென் இந்தியாவின் நெற்களஞ்சியம் இன்று...

வேளாண்மை பொய்த்தது ஒரு துயரம் என்றால், இந்தப் பகுதி இளைஞர்கள் வெளிநாட்டுக்குச் சென்று அவதியுறுவது இன்னொரு துயரம். பெரும்பாலான இளைஞர்கள் சிங்கப்பூர் செல்கிறார்கள். மலேசியா, அரபு நாடுகளுக்கும் சிலர் செல்வது உண்டு. இவர்களைக் குறிவைத்து, ஏராளமான தரகர்கள் காவிரி டெல்டாவில் சுற்றுகிறார்கள். சென்னை கிண்டி, ராமாவரம் போன்ற பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களில் சித்தாள், கம்பி கட்டுனர், கொத்தனார் போன்ற கட்டுமான வேலைகளுக்குக் குறுகிய காலப் பயிற்சி அளிக்கப் படுகிறது. இந்த நிறுவனங்கள், அனுமதியோ அங்கீகாரமோ பெறாதவை. இந்தப் பயிற்சிக்கு மட்டும் 50 முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை வாங்குகிறார்கள். பயிற்சி முடித்ததும், சிங்கப்பூரில் கன்சல் டன்ஸி நடத்தும் சீனர்கள் வந்து தேர்வு நடத்தி விசா கொடுப்பார்கள். விசாவுக்கு மட்டும் 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை வசூலிக்கப்படும்.

“3 ஏக்கர் நிலம் கிடக்கு. ஆனா, தண்ணி இருந்தாத்தானே விவசாயம் செய்ய முடியும்? நாலைஞ்சு வருஷமா நிலத்தைப் பாத்துக்கிட்டே உக்காந்திருந்தேன். இனி இங்கே பிழைக்க முடியாதுனு தெரிஞ்ச பிறகு, 30 ஆயிரம் கட்டி சென்னையில பயிற்சி எடுத்தேன். சீனாக்காரன் வெச்ச டெஸ்ட்ல ஃபெயிலாகிட்டேன். `1 லட்சம் கட்டு, மலேசியாவுக்கு அனுப்புறேன்’னு ஏஜென்ட் சொன்னார். வட்டிக்கு வாங்கி கட்டினேன். 25 ஆயிரம் சம்பளம்னு சொல்லிக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. ஏர்ப்போர்ட்டை விட்டு வெளியே வந்ததும் பாஸ்போர்ட்டை வாங்கி வெச்சுக்கிட்டாங்க. 10 ஆயிரம்தான் சம்பளம். அதுலயே ரூம், சாப்பாடெல்லாம். படாத கஷ்டங்கள் எல்லாம் பட்டு 4 வருஷம் ஓட்டுனேன். ஒருநாள் அங்கு இருந்து தப்பிச்சு, இன்னொரு கம்பெனியில வேலைக்குச் சேந்தேன். அங்கேயும் அதே துயரம்தான். சிங்கப்பூர் கவர்மென்ட் பொது மன்னிப்பு கொடுத்தப்போ, தப்பிச்சோம்- பிழைச்சோம்னு ஊருக்கு வந்துட்டேன். இருந்த நகைகளை எல்லாம் வித்து கடனை வட்டியோடு கட்டி முடிச்சேன்'' என்கிறார் உத்திராபதி.

சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவை ஆண்ட எந்த அரசும், விவசாயத்தைத் தொழிலாகவே மதிக்கவில்லை. உலகம் முழுவதும் வாழும் மக்கள் கண்டிப்பாக மூன்று வேளை சாப்பிட்டாக வேண்டும். என்றால், உணவு உற்பத்தி எவ்வளவு பிரமாண்டமான தொழில்? ஆனால், விவசாயிகளை சுமைகளாகவும், கடன்காரர்களாகவுமே அரசுகள் கருதுகின்றன. 19 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போடுகிற மத்திய அரசு, வேளாண்மை மேம்பாட்டுக்கு ஒதுக்குவது வெறும் 36 ஆயிரம் கோடி ரூபாய்தான். மாநில அரசு ஒதுக்குவது 4,300 கோடி ரூபாய். வேளாண்மையை ஒரு தொழிலாகக் கருதி வளர்க்காததன் விளைவு, உலகுக்குச் சோறிட்ட ஓர் ஆதிப்பெருங்குடி வாழ்வாதாரத்தைத் தேடி அலையும் நிலை.

தஞ்சாவூருக்கு அருகில் உள்ள அய்யம்பேட்டை மதகடி பகுதிக்குச் சென்றால் அந்த அவலத்தைக் காணமுடியும். விவசாயிகளாகவும் விவசாயத் தொழிலாளர்களாகவும் இருந்த நூற்றுக்கணக்கான பெண்கள், தினமும் காலை 7 மணிக்கு கையில் சாப்பாட்டுப் பையோடு இங்கே குவிகிறார்கள். கொத்தனார்களும் இன்ஜினீயர்களும் சித்தாள்கள் தேடி அந்த இடங்களுக்கு வருகிறார்கள். அதிர்ஷ்டம் இருந்தால் வேலை.

தென் இந்தியாவின் நெற்களஞ்சியம் இன்று...

``1972-ம் ஆண்டுல கர்நாடகாவின் பாசனப் பரப்பு 6.83 லட்சம் ஏக்கர். இப்போ 27.28 லட்சம் ஏக்கர். இது, கர்நாடக அரசே கொடுக்கும் புள்ளிவிவரம். ஆனா, காவிரி டெல்டா விவசாயிகள் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு குறைஞ்சுடுச்சு. கடந்த 35 வருஷங்கள்ல 5 லட்சம் ஏக்கர் அளவுக்கு விவசாயம் குறைஞ்சிருக்கு. 50 சதவிகிதம் விவசாயத் தொழிலாளர்கள் இடம் பெயர்ந்துட்டாங்க. 1 லட்சம் ஏக்கருக்கு மேல மனைகள் ஆகிடுச்சு. தரங்கம்பாடி, சீர்காழிப் பகுதியில மட்டும் ஏழு தனியார் பவர் பிளான்ட் நிறுவனங்கள் பெரிய அளவுல விவசாய நிலத்தை வாங்கியிருக்காங்க.
விவசாயத்தை விடுங்க... காவிரிப் படுகையில இனிமே வாழவே முடியாதுங்கிற நிலை வந்துருச்சு. மொத்தமுள்ள 35 பிளாக்ல, 8 பிளாக் தண்ணீர் உப்பாகிடுச்சு. 27 பிளாக்ல நிலைமை மோசமாகிக் கிட்டிருக்கு. 1 லட்சம் மின் மோட்டார்கள் தண்ணியை உறிஞ்சுறதால, பல பகுதிகள்ல தண்ணி உவர்ப்பா மாறிக்கிட்டிருக்கு. மயிலாடுதுறை பகுதிகள்ல 200 அடிக்குக் கீழே தண்ணி போயிடுச்சு. சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகள்ல எல்லாம் குடிதண்ணியே கிடைக்கலை'' என வருத்தத்தோடு பேசுகிறார், காவிரி டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஆறுபாதி கல்யாணம்.

குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம், கருவிக்கான மானியங்கள், காப்பீட்டுத் திட்டங்கள், கூட்டுறவுக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட அரசின் பெரும்பாலான திட்டங்கள் உரிய இலக்கைச் சென்று அடையவில்லை என்கிறார்கள் விவசாயிகள். இறுதித் தீர்ப்புப்படி அமைக்கப்பட வேண்டிய காவிரி நதிநீர் ஆணையம் இதுவரை அமைக்கப்படவில்லை. இறுதித் தீர்ப்புப்படி கிடைக்கவேண்டிய தண்ணீரும் இதுவரை கிடைக்கவில்லை. மெள்ள மெள்ள, காவிரிப் படுகையில் இருந்து மக்களை அப்புறப்படுத்தி விட்டால், கீழே புதைந்து கிடக்கும் மீத்தேனும் நிலக்கரியும் எளிதில் வசமாகிவிடும் என்பது அரசுகளின் எண்ணமாக இருக்கலாம். ஆனால், அதற்குப் பெரிய விலை கொடுக்கவேண்டியிருக்கும் என்பதுதான் நிதர்சனம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு