Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 13

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 13
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 13

ம.செந்தமிழன், ஓவியம்: ஹாசிப்கான்

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 13

ம.செந்தமிழன், ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 13
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 13
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 13

ரே ஒரு பிடிச் சோற்றை உண்ணும் முன்னர், உங்களுக்கு வேதியியல், மரபணுவியல், உயிரித் தொழில்நுட்பம் ஆகியவை பற்றித் தெரிந்திருக்க வேண்டும். நிச்சயமாக, நான் மிகைப்படுத்தி எழுதவில்லை. நிலவும் சூழலின் அவலத்தையும் குரூரத்தையும் மிகவும் குறைத்து எழுதுகிறேன். உள்ள நிலைமையை அப்படியே எழுதினால் அச்சமும் பீதியும் பெருகும் என்பதால், பல செய்திகளை மட்டுப்படுத்தி வெளிப்படுத்துகிறேன்.

நமது உணவு எவ்வளவு மோசமானதாக மாற்றப்பட்டுள்ளது என்பதைப் பற்றி உங்களோடு உரையாடுவதற்கு, மேற்கண்ட துறைகள் சார்ந்த அறிவு தேவைப்படுகிறது.

`சல்ஃபோனமைடு' (Sulfonamide)  என்ற வேதிப்பொருள் கொண்ட மாத்திரை, இந்த நாட்டில் அறிமுகமாகியிருக்கவே கூடாது. ஆனால், எல்லோருடைய தட்டுக்களிலும் உள்ள பெரும்பாலான உணவுப் பொருட்களில் இந்த மாத்திரையின் பங்களிப்பு இப்போது இருக்கிறது. அச்சத்தையும் அருவருப்பையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தக் கட்டுரையின் கருத்துக்களை கவனமாகப் புரிந்துகொள்ளுங்கள்.

பசுமைப் புரட்சிக்கு முந்தைய காலம், தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யாத காலம். அப்போது எல்லாம் அரிசி, பருப்பு, புளி, மிளகாய், மஞ்சள், கடலை, எள் உள்ளிட்ட உணவுப் பயிர்கள், அவற்றுக்கான பருவங்களில் மட்டும் விளைவிக்கப்பட்டன. விளையும் பயிர்கள் வீட்டுத் தேவைகளுக்கும் விற்பனைக்கும் அனுப்பப்பட்டன. எந்த விவசாயியும் அதிகமான அளவில் இந்தப் பயிர்களை தம் வீட்டில் சேமிக்கவில்லை. காரணம், இந்தப் பயிர்களைச் சேமித்துவைத்தால் சில வாரங்களிலேயே பூச்சிகளும் வண்டுகளும் உருவாகிவிடும்.

அந்தக் காலக் கிராமங்களில் குதிர், பத்தாயம், தொம்பை போன்ற சேமிப்புக்கலன்கள் இருந்தன. உணவுப் பயிர்களை இவற்றில் கொட்டிவைத்து பயன்படுத்தினார்கள் நம் முன்னோர். அந்தக் காலத்தில் இருந்த வணிகர்கள், உணவுப் பயிர்களைக் காயவைக்கவும், பூச்சிகள் வராமல் பராமரிக்கவும் கலங்களும் கிடங்குகளும் வைத்திருந் தார்கள். நகர மக்களுக்கு, கடைகளில் நல்ல உணவுப் பொருட்கள் கிடைத்தன.

மரபுவழிப்பட்ட உற்பத்தி முறையின் சிறப்பு, தேவைக்கு மட்டும் விளைவிப்பது. பசுமைப் புரட்சியின் மந்திரமே ‘மிகை உற்பத்தி’ என்பதுதான். இந்த மந்திரம் மிக வீரியமானது. ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் நவீன மேதைகளால் உச்சரிக்கப்பட்ட இந்த மந்திரம், இப்போது பிறக்கும் குழந்தையின் செல்களில்கூட ஒலிக்கிறது. நவீன நுட்பங்களின் வழியாக எல்லா உணவுப் பொருட்களும் மிக அதிகமான அளவில் உற்பத்தி செய்யப்பட்டன. கிராமங்களில் இருந்த குதிர்களும் தொம்பைகளும் தாங்கவே இயலாத அளவுக்கு உற்பத்தி மிகுந்தது.

வேதி நஞ்சுக்களை நிலத்திலும் பயிர்களின் மீதும் கொட்டிய பிறகுதான் உற்பத்தி உயர்ந்தது என்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள். விளைச்சலுக்குப் பிந்தைய செயல்பாடுகளைத்தான் இப்போது கூற விரும்புகிறேன். மிகையான உற்பத்தியைப் பங்குபோடுவதற்காக, எண்ணற்ற வணிக நிறுவனங்கள் உணவுத் துறையில் நுழைந்தன. குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே விளையும் பயிர்கள், எல்லா பருவங்களிலும் விளையத் தொடங்கின. இதனால் உணவுப் பொருட்களைச் சேமித்துவைப்பதில் பெரும் சிக்கல் உருவானது. முந்தைய தலைமுறை வணிகர்களால், உணவுப் பயிர்களை வெயிலில் காயவைத்து மூட்டைகளில் கட்டிவைக்க இயலாமல்போனது. விளைவு, வண்டுகள், பூச்சிகள், பூஞ்சை காளான்கள், எலிகள் உள்ளிட்ட உயிரினங்கள் உணவுப் பயிர்களைச் சிதைத்தன.

உணவுப் பொருள் உள்ள கிடங்குகள் யாவும் சூதாட்டக் களமாக மாற்றப்பட்டதன் பின்னணி இதுதான். `தேவைக்கு அதிகமாகச் சேர்த்துவைத்த உணவுப் பயிர்களை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமானால், அந்த உணவுப் பயிர்களின் மீது நச்சுக் காற்றைப் பரப்புவதுதான் சிறந்த வழி’ என்ற கொள்கையை மனசாட்சி இல்லாத மனிதர்கள் உருவாக்கினார்கள்.

ஆண்டுக்கு இருமுறைதான் அரிசி வகைகள் கிடைக்கும். ஆண்டுக்கு ஒருமுறைதான் புளி கிடைக்கும், மஞ்சள் கிடைக்கும் என்ற நிலைமை இருந்தபோது, அந்தப் பொருட்கள் யாவும் உண்மையான உணவுகளாக இருந்தன. இப்போது எல்லா நாட்களிலும் எல்லா பொருட்களும் கிடைக்கும். ஆனால், `உணவுப் பொருட்களின் தரம் எந்த நிலைமையில் இருக்கிறது?' என, பொதுச் சமூகம் கேள்வி எழுப்பவில்லையே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 13

ஒரு கைப்பிடி அரிசியை, ஒரு கண்ணாடிப் புட்டிக்குள் போட்டு இறுக்கமாக மூடி வைத்துவிட்டால், சில வாரங்களில் அந்தப் புட்டிக்குள் வண்டுகள் பறந்துகொண்டிருக்கும். எங்கு எல்லாம் உணவு பயன்படுத்தப் படவில்லையோ, அங்கு எல்லாம் அந்த உணவை உட்கொள்ளும் உயிர்களைப் படைப்பதுதான் இறைக்குணம். வண்டுகளின் முட்டைகளை அரிசிக்குள் புதைப்பதுதான் படைப்பின் சிறப்பு.
படைப்பில் `உபரி’ என்ற கருத்தே இல்லை. எது தேவையோ அதை மட்டுமே உற்பத்தி செய்துகொள்வதுதான் படைப்பின் விதிமுறை. அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டால், அந்த உற்பத்தியைப் பங்கிட்டுக்கொள்ளும் உயிர்கள் உடனே அனுப்பப்படுகின்றன.

நவீன சிந்தனையின் அடித்தளமோ, உபரியை மனிதர்களுக்குள் மட்டுமே எவ்வாறு பங்கு போட்டுக்கொள்வது என்பதைப் பற்றியதுதான்.

வேம்பு, நொச்சி உள்ளிட்ட இலைகளை தானியங்களுடன் கலந்துவைத்தும், அவ்வப்போது வெயிலில் உலர்த்தியும் உணவுப் பொருட்களைப் பாதுகாத்தது நம் மரபு. இவ்வாறான இயற்கை வழிகளில் அதிகபட்சம் ஓர் ஆண்டுகாலம்தான் உணவுப் பயிர்களைப் பாதுகாக்க முடியும்.

இப்போது நீங்கள் உண்ணும் அரிசி ஐந்து ஆண்டுகளுக்கு முந்தையதாகக்கூட இருக்கலாம். புளியின் ஆயுள் ஆறு ஆண்டுகளாகவும், மிளகாயின் ஆயுள் அதைவிட அதிகமானதாகவும் இருக்கலாம். எல்லாவற்றையும்விட கொடுமையானவை மஞ்சள் கிடங்குகள்தான். பத்து ஆண்டுகளாக மஞ்சள் மூட்டைகளைப் பாதுகாக்கும் புனிதர்கள் இப்போதும் இருக்கிறார்கள்.

மரபு உணவுகளிலேயே மிகச் சிறந்த மருத்துவக் குணம்கொண்டது மஞ்சள். இது உங்கள் வீட்டு அலமாரிக்கு வந்து சேரும் முன்னர் சந்திக்கும் வேதி நஞ்சுக்களை எல்லாம் பட்டியலிட்டால், நமக்கு நடுக்கம் ஏற்பட்டுவிடும். சல்ஃபோனமைடு  மாத்திரைகளைப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

மஞ்சள் கிழங்குகளை மூட்டைகளாகக் கட்டி கிடங்குகளில் அடுக்கிய பிறகு, அந்த மூட்டைகளுக்கு  இடையில் இந்த மாத்திரை களைப் பரப்பிவிடுவார்கள். இவ்வாறு பரப்பும் பணியாளர்கள், நச்சுப் புகை தாக்காத வகையில் முகமூடிகள் அணிந்துகொள்வர். வெளிக்காற்று உள்ளே நுழையவோ, உள்காற்று வெளியே செல்லவோ இயலாத வகையில் சல்ஃபோனமைடு மாத்திரைகள் வைக்கப்பட்ட கிடங்குகளின் கதவுகள் இறுக்கமாக மூடப்படும். மஞ்சள் கிடங்குகளின் வெப்பத்தில் சல்ஃபோனமைடு மாத்திரைகள் கரைந்து, காற்றில் கலக்கும். விளைவு, அந்தக் கிடங்கில் உள்ள காற்று நஞ்சாக மாறும். இதுதான் ‘தொழில்நுட்பம்’. மஞ்சள் கிடங்குகளில் பணியாற்றும் அனைவருக்கும் இது தெரியும். பாதுகாப்பு முகமூடிகள் அணியாமல் கிடங்குகளுக்குள் சென்றால், சில நொடிகளில் மரணம் நேரிடலாம்.

சல்ஃபோனமைடு மாத்திரைகளின் அடிப்படையே வெப்பத்தை உமிழும் தன்மைகொண்ட கந்தகம்தான்.  மூடப்பட்ட கிடங்குக்குள் தொடர்ந்து வெப்பம் உமிழப்பட்டு காற்றே நஞ்சாக மாறிவிட்டால், வண்டுகள், பூச்சிகள் போன்ற உயிரினங்கள் உருவாகாது. இந்த நுட்பத்தை இன்னும் சற்று ஆழமாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.

எல்லா உயிரினங்களுக்கும் மூலமாக உள்ளவை செல்கள்தான். செல்களின் இயற்கையான குணம், பல்கிப் பெருகுவதும் சுருங்குவதும்தான். ஒரு மஞ்சள் துண்டு இருக்கிறது என்றால், அதன் மீது உள்ள வெப்பம் மறையும் வரை அதன் மீது எந்தப் பூஞ்சையும் உருவாகாது. வெப்பம் குறைந்து ஈரம் உருவானவுடன் பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகளின் செல்கள் உருவாகத் தொடங்கும். இதன் பிறகுதான் வண்டுகளும் பூச்சிகளும் உருவாகும். உணவுப் பயிர்களைக் காயவைப்பது செல்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான்.

கந்தகத்தையும் வேறு பல வேதி நஞ்சுக்களையும் மூலப்பொருட்களாகக் கொண்டு தயாரிக்கப்படும் மாத்திரைகள், செல்களின் உருவாக்கத்தைச் செயற்கையாகத் தடுத்து நிறுத்துகின்றன. செல்களின் கருவைக் கலைப்பதுதான் இந்த மாத்திரையின் முதல் பணி. செல்களின் இனப்பெருக்கத்தில் ஃபோலேட் (Folate) என்பது ஒரு நிலை. இந்த நிலைக்கு மேல், செல்களின் வளர்ச்சி நிகழாமல் தடுப்பது சல்ஃபோனமைடு மாத்திரைகளின் மூலக்கூறுகளில் பதிக்கப்படுகிறது.

சுருக்கமாகச் சொல்வதானால், நமது உணவுப் பொருட்களின் செல்களுக்குள் புகுந்து கோடானுகோடி கருக்களைக் கலைக்கும் குரூரத்தை நிகழ்த்துவதுதான் இந்த மாத்திரைகளின் பணி. உங்களில் பெரும்பாலானோருக்குத் தெரிந்த மாத்திரை ஒன்றின் பெயரை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். ‘ஃபோலிக் ஆசிட்’ மாத்திரைகள் மகப்பேறு மருத்துவத் துறையில் மிக முக்கியமானதாகப் பரிந்துரைக்கப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஃபோலிக் அமில மாத்திரைகளின் பணி, `செல்களில் உருவாகும் கருச்சிதைவைத் தடுப்பது’ என்பது நவீன மருந்தியல் அறிவு.

உணவுப் பொருட்களில் சல்ஃபோனமைடு மாத்திரைகளின் மூலக்கூறுகள் அதிகரித்த பிறகுதான் கருச்சிதைவுகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

உண்ணும் உணவில் உள்ள செல்களில் எல்லாம் கருக்கலைப்பு நிகழ்த்தும் நஞ்சுக்களை ஒருபுறம் விற்பனை செய்வது, கருச்சிதைவைத் தடுக்கும் மாத்திரைகள் என்ற பெயரில் வேறு மாத்திரைகளையும் விற்பனை செய்வது என்ற மனசாட்சிக்குப் புறம்பான வணிகத்தில்தான் நாம் அனைவரும் சிக்கியுள்ளோம்.

புளி, மிளகாய், அரிசி, பருப்பு என அனைத்து உணவுப் பொருட்களிலும் இவ்வாறான நஞ்சுகள் கலந்துள்ளன. உணவுப் பொருட்களை வெயிலில் காயவைத்து எடுத்து, கெட்டுப்போனால் வீசி எறியும் நேர்மையாளர்களை இன்று காண இயலவில்லை. எல்லா வணிகக் கூடங்களிலும் ஆயிரக்கணக்கில் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த மூட்டைகளில் ஒரு புழு-பூச்சிகூட உருவாவது இல்லை. எல்லா பருவங்களிலும் எல்லா பொருட்களும் கிடைக்கின்றன. அரசு அறிக்கைகளில் ‘உணவு உற்பத்தி’ குறித்த பெருமித அறிவிப்புகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. எல்லா பகட்டுகளுக்கும் கீழே உண்மை நசுங்கிக் கிடக்கிறது.

புற்றுநோய் என்பதன் அடிப்படை, செல்களின் திடீர் பெருக்கம்தான். உணவுப் பொருட்களின் செல்களில் நஞ்சைக் கலந்துவிட்டால், அதைச் சாப்பிடும் மனிதர்களின் செல்கள் தாறுமாறாகப் பெருகாமல் என்ன செய்யும்?

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 13

இயற்கை உழவர்களைக் கண்டறியுங்கள். உங்களுக்கென ஒரு துண்டு நிலம் இருந்தாலும் உங்கள் தேவைக்காகவாவது பயிர் செய்யத் தொடங்குங்கள். இந்தக் கருத்துக்களில் ஒப்புமைகொண்டவர்கள் ஒன்றாகக் கூடி, உழவர்களிடம் இருந்து நேரடியாக உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்யுங்கள். நமது மரபுவழி கொள்கலன்களான தொம்பை, குதிர் போன்றவற்றைப் பாதுகாத்துப் பயன்படுத்துங்கள்.

ஏதேனும் ஒரு பெயரில் நீங்கள் சின்னஞ்சிறு குழுக்களாக இணைந்து, நல்ல உணவைக் கொள்முதல் செய்யுங்கள். நல்ல மிளகாய் எது எனக் கேட்டால், நிறுவனங்களின் பெயர்களைக் கூறாமல் மிளகாய் விவசாயியின் பெயரையும் ஊரையும் குறிப்பிடும் காலம் வர வேண்டும். அந்தக் காலத்தில் நாம் எந்த வேதித் தொழில்நுட்பத்தையும் தெரிந்திருக்க வேண்டியது இல்லை.

ஏனெனில், உணவு படைக்கப்படுகிறது; தயாரிக்கப்படுவது இல்லை!

- திரும்புவோம்...