Published:Updated:

ஜியோ ஜித்தன்!

ஜியோ ஜித்தன்!
பிரீமியம் ஸ்டோரி
ஜியோ ஜித்தன்!

ஞா.சுதாகர்

ஜியோ ஜித்தன்!

ஞா.சுதாகர்

Published:Updated:
ஜியோ ஜித்தன்!
பிரீமியம் ஸ்டோரி
ஜியோ ஜித்தன்!
ஜியோ ஜித்தன்!

`டேட்டாதான் இனி நமக்கு ஆயில்... இன்டலிஜென்ட் டேட்டாதான் பெட்ரோல்’ எனக் கடந்த மார்ச் மாதம் ரிலையன்ஸ் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் முழங்கினார் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸின் கவனம் இப்போது ஆயில் பிசினஸில் இருந்து டேட்டா பிசினஸுக்கு மாறியிருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ பற்றிய அறிவிப்புகள் எல்லாமே மிரளவைக்கின்றன. ஏர்டெல் தொடங்கி சகல டெலிகாம் நிறுவனங்களும் திகைத்துப்போயிருக்கின்றன.

அவ்வப்போது சலசலப்புகள் மட்டுமே நிகழ்ந்துகொண்டிருந்த டெலிகாம் மார்க்கெட்டில், ஒரு பேரதிர்வை உண்டாக்கியிருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ. இது பற்றி கடந்த சில வாரங்களாகவே எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருந்தது.

- இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை வாய்ஸ், டேட்டா எல்லாமே முற்றிலும் இலவசம்.

- ஒரு ஜி.பி டேட்டா 50 ரூபாய்; ஒரு எம்.பி டேட்டா விலை 5 பைசா.

- வாய்ஸ் காலிங் சேவை இலவசம்.

- மாணவர்களுக்கு டேட்டாவில் 25 சதவிகித சலுகை.

- இந்தியா முழுக்க ரோமிங்குக்குக் கட்டணமே கிடையாது.

என ரிலையன்ஸ் அள்ளிவிட்ட ஆஃபர்கள் எல்லாமே தேர்தல் காலத்து இலவச அறிவிப்புகளுக்கு இணையானவை!

`அதிகம் பயன்படுத்துங்கள். குறைவாகக் கட்டணம் செலுத்துங்கள்’ -இதுதான் ரிலையன்ஸ் உச்சரிக்கும் மயக்குறு மந்திரம். ` `ஜியோ’ என்றால் வாழ்வு என்று அர்த்தம். நாம் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் எவ்வளவு முக்கியமோ, அதுபோல டிஜிட்டல் உலகில் ஆக்ஸிஜன் டேட்டாதான். எங்கள் அடுத்த இலக்கு 100 மில்லியன் வாடிக்கையாளர்கள். தற்போது ஜியோ 18,000 நகரங்களையும், 2 லட்சம் கிராமங்களையும் இணைக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 90 சதவிகித இந்தியர்களை ஜியோ சென்றடையும்' என முகேஷ் அம்பானியின் பேச்சில் ஏகப்பட்ட கனவுகள். 

ஒருகாலத்தில் போன்களின் ஒரே பயன் டாக்கிங் மட்டும்தான். ஆனால், போன்கள் எல்லாம், ஸ்மார்ட் போன்களாக மாறியதில் இருந்தே ஹீரோ என்பது டேட்டாதான். டெக்ஸ்ட் சாட்டிங், வீடியோ காலிங், ஆன்லைன் கேம்ஸ், ஆன்லைன் மூவிஸ் என எல்லா பொழுதுபோக்குகளும் ஜிபிகளில் கரைந்தன.

ஜிபிகளை நாம் ஜீரணித்துத் தீர்க்க, அதை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டன டெலிகாம் நிறுவனங்கள். ஒவ்வொரு மாதமும் நாமே அறியாமல் டேட்டா கட்டணங்களை, தாறுமாறாக உயர்த்த ஆரம்பித்தன. இதனால் டாக்டைம் மற்றும் மொபைல் டேட்டா என இரண்டு வழிகளில் நம் பாக்கெட்டுகளைச் சுரண்டவும் தொடங்கின. இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ சார்ந்த அறிவிப்புகள் பல கேள்விகளை எழுப்புகின்றன. அவற்றில் முக்கியமானது, `இத்தனை நாளும் நாம் ஏமாற்றப்பட்டோமா? நம்மிடம் ஐந்து மடங்கு அதிகமான கட்டணத்தை இந்த நிறுவனங்கள் வசூலித்துக்கொண்டிருந்தனவா? இது ஏன் அனுமதிக்கப்பட்டது?'

`சில ஆண்டுகளுக்கு முன்னர் மொபைல் போன்களை வெறும் 500 ரூபாய்க்கு சி.டி.எம்.ஏ தொழில்நுட்பத்தில் கொடுத்து, அதன் பயன்பாட்டைப் பரவலாக்கியது ரிலையன்ஸ்தான். அதுமாதிரியான இன்னொரு முயற்சியாக ரிலையன்ஸ் ஜியோ இருக்கும்’ என்கிறார்கள் தொழில்நுட்ப ஆர்வலர்கள். இன்னும் 2G, 3G என்றே இருக்கும் இந்தியர்கள் மத்தியில் 4G மீது ஈர்ப்பு வராததற்குக் காரணமே, அச்சுறுத்தும் கட்டணங்களே. அந்த மனநிலையை ஜியோ மாற்றும்.

வாய்ஸ் காலிங்கைப் பின்னுக்குத் தள்ளி, டேட்டாவை மையமாகவைத்து, ஜியோ தொடங்கியிருக்கும் இந்தக் காய்நகர்த்தல் பழசுதான் என்றாலும், வாய்ஸ் காலிங் முற்றிலும் இலவசம் என அறிவித்திருப்பது புதுசு. தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில், காலிங் மற்றும் டேட்டாவுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதிலும், எல்லா நெட்வொர்க் நிறுவனங்களும் ஒரே ரகம்தான். அந்த ட்ரெண்டையும் உடைத்திருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ. எல்லா நாளும் ஒரே கட்டணம்தான்.

ஆனால், இவ்வளவு அதிரடி இருந்தாலும், ஜியோவின் பிளான்களின் வேலிடிட்டியும் 28 நாட்கள்தான். 30 நாட்கள் என இருந்த, மாதத்தை 28 நாட்களாக்கி, வருடத்தில் 12-க்குப் பதிலாக, 13 மாதங்களுக்குக் கட்டணம் வசூலிக்கும் டெலிகாம் சூட்சுமம் ஜியோவிலும் தொடர்கிறது.

இவ்வளவு குறைவான கட்டணங்கள், அதிகமான சலுகைகள் தற்போது வியக்கவைத்தாலும், இதன் வேலிடிட்டி எல்லாம் எவ்வளவு நாட்கள் என்பது தெரியவில்லையே? வாடிக்கையாளர்கள் கையில், தற்போது இருக்கும் 2G மற்றும் 3G சேவைகளை எல்லாவற்றையும் பிடுங்கிவிட்டு, 4Gயைக் கொடுத்து மயக்கிய பின்பு, அதன் விலையைத் தாறுமாறாக ஏற்றி, அம்பானியும் அப்பாவி மக்களுக்கு ஆப்பு வைத்துவிட்டால்?

ஜியோவின் காலிங் தொழில்நுட்பம் VoLTE. அதாவது நமது போன் கால்கள், ஜி.எஸ்.எம் மூலமாக இல்லாமல், 4G டேட்டா மூலமாகவே நடக்கும். இது ஜியோ டு ஜியோ கால் செய்யும்போது பிரச்னை இல்லை. ஆனால் ஜியோவில் இருந்து, வேறு நிறுவனங்களுக்குக் கால் செய்யும்போது சிக்கல் இருக்கிறது.  அப்போது நீங்கள் ஜியோ ஜாய்ன் எனும் ஆப்பை இன்ஸ்டால் செய்யவேண்டும். அது தற்போது மற்ற நிறுவனங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பத்துடன் ஜியோ காலிங்கை இணைக்கும்.  இதனால் மற்ற நெட்வொர்க்குகளுக்கு கால் செய்யும்போது, கால் டிராப் பிரச்னை ஏற்படும்.

ஜியோ ஜித்தன்!

கடந்த வாரம் மட்டும் ஐந்து கோடி கால் டிராப் பிரச்னைகள் இதனால் வந்துள்ளன. `சக டெலிகாம் நிறுவனங்கள் விரைவில் இதைச் சரிசெய்து, தங்கள் கடமையைச் செய்ய வேண்டும். அப்போதுதான் ஜியோ வாடிக்கையாளர்கள் சிரமம் இல்லாமல் இருக்க முடியும்' என்கிறார் முகேஷ் அம்பானி. ஆனால் இப்படி மற்ற அத்தனை பேரையும் அழித்துவிட்டு வளர நினைப்பவரோடு எப்படி மற்ற நிறுவனங்கள் ஒத்துழைக்கும் என்ற கேள்வியும் எழுகிறது?

என்னதான் `மக்கள் சேவையே மகேசன் சேவை’ என அம்பானி சொன்னாலும், கார்பரேட் நோக்கம் லாபமாகத்தான் இருக்கும். அந்த லாபநோக்கம் ஆசைவார்த்தைகள் காட்டி அப்பாவிகளைச் சிக்கவைக்கிற அபாயசுழலாக இருந்துவிடக் கூடாது. ஏனென்றால்... `ஒருத்தனை ஏமாத்தணும்னா முதல்ல அவன் ஆசையைத் தூண்டணும்...' என்பதுதான் விதி. அம்பானி ஆசையைத் தூண்டியிருக்கிறார். அடுத்தது என்ன?