Published:Updated:

ரத்த உறவே... லெக் பீஸ் போடு!

ரத்த உறவே... லெக் பீஸ் போடு!
பிரீமியம் ஸ்டோரி
ரத்த உறவே... லெக் பீஸ் போடு!

தமிழ்ப்பிரபா, ஓவியங்கள்: கண்ணா

ரத்த உறவே... லெக் பீஸ் போடு!

தமிழ்ப்பிரபா, ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ரத்த உறவே... லெக் பீஸ் போடு!
பிரீமியம் ஸ்டோரி
ரத்த உறவே... லெக் பீஸ் போடு!
ரத்த உறவே... லெக் பீஸ் போடு!

`விருந்தோம்பல்'கிற ஒரு விஷயத்தை, பேருக்காவது கடைப்பிடிச்சிட்டிருந்த ஒரே இடம் கல்யாண மண்டபங்கள்தான். ஆனா, இப்போ கல்யாணத்துல செல்ஃபி எடுப்பது, யோகா டான்ஸ் ஆடுவது என திருமண வீட்டினர் பிஸியாக இருப்பதால், `நமக்கு நாமே' திட்டப்படி கல்யாண மண்டபங்களுக்குள் இயங்கவேண்டியிருக்கிறது. வாட்ஸ்அப்பில் வந்த பத்திரிகைக்கு மரியாதை செய்யாமப் போகக் கூடாதுனு சின்சியரா மொய் எழுதும் கடைசித் தலைமுறை தமிழன் படும் கஷ்டங்கள்தான் இங்கே...

கல்யாண வீட்டில் நாம் சந்திக்கும் ஒரே பிரச்னை, மேடையில் ஏறி கிஃப்ட் கொடுப்பது அல்ல; பந்தியில் இடம் பிடிப்பதுதான். பந்திக்குக் காத்திருப்பது என்பது ஒரு கலை. சம்பவ இடத்துக்குச் சென்றதும் `எங்கே இடம் காலியா இருக்கு?’ என நாசூக்காகத் தேட வேண்டும். கைக்குட்டையால் முகத்தைத் துடைத்தவாறு அல்லது செல்போனை நோண்டிக்கொண்டே என நாகரிகமான உத்திகளைக் கையாளலாம். ஆனால் சிலர், மனதின் பரபரப்பை கண்களால் அப்பட்டமாக வெளிப் படுத்துவார்கள். உட்கார்ந்து சாப்பிடுபவர்களின் உடலில் சிறு அசைவு ஏற்பட்டாலும், உடனே அவர் முதுகுக்குப் பின்னால் போய் நின்று, அவர் தலையை மோப்பம் பிடிக்க ஆரம்பிப்பார்கள். சாப்பிடுபவர்களுக்கு இது எவ்வளவு பெரிய அசௌ கரியத்தைக் கொடுக்கும் என போஜனப்பிரியர்கள் யோசிப்பதே இல்லை.

பந்திக்கு இடம் தேடுவதுபோலவே சாப்பாடு கேட்டு வாங்கிச் சாப்பிடுவதும் ஒரு கலைதான். உதாரணத்துக்கு, கறி விருந்தாக இருந்தால் பரிமாறுபவர்கள் நம் அருகில் வரும்போதே சிநேகமாகப் புன்னகைக்க வேண்டும். அவரும் பதிலுக்குப் புன்னகைத்தால் ‘லெக் பீஸ் இருந்தா போடுங்க பாஸ்' என பிரபலத்துடன் செல்ஃபிக்கு அனுமதி கேட்பதுபோல் கேட்டால், அன்னக் குத்தியைப் பாத்திரத்தில் ஒரு வெட்டு வெட்டி அந்தப் பொக்கிஷத்தை எடுத்து இலையில் வைப்பார். ஆனால், கறாரான சேவகரிடம் இதெல்லாம் எடுபடாது. ‘சார், இருக்கிறதுதான போட முடியும்' எனச் சிரித்த முகத்துடன் சொல்லி விடைபெறுவார். பீஸ் இல்லாததுகூட அந்த நேரத்தில் பிரச்னையாக இருக்காது. `அவன் இதைச் சத்தம் போட்டுத்தான் சொல்ல வேண்டுமா!' என்று கோபம் எழும். பக்கத்து இலையில் நமக்குக் கிட்டாத ரெண்டு பீஸ்களைப் பார்த்ததும் நம் கோபம் இருமடங்கு ஆகும். அருகில் உட்கார்ந்திருப்பது ரத்த உறவே என்றாலும், இந்தப் பாகுபாட்டை மனம் ஏற்றுக்கொள்ளவே செய்யாது.

ரத்த உறவே... லெக் பீஸ் போடு!

பசி அடங்காத நிலையில் பரிமாறுபவர்கள் இரண்டாம் முறைக்காக வரும்போது, தூரத்தில் அவர்களைப் பார்த்த உடனேயே உறவினரை விமானநிலையத்தில் கண்டுபிடித்ததும் கை அசைப்பதுபோல அசைக்க வேண்டும். வந்ததும் நம் இலையை நோக்கி கண்களை அசைத்துவிட்டு, பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொள்ள வேண்டும். அவரை நேருக்குநேர் பார்த்துக் கொண்டிருந்தால் ‘அய்யோ போதும் போதும்’ எனச் சொல்லவேண்டிவரும். பிறகு இலை நிறைந்ததை ஓரக்கண்ணால் பார்த்ததும் `என்ன பாஸ்... இவ்ளோ போட்டுட்டீங்க!' என்றதும் பரிமாறுபவர் ஒரு துறவியின் புன்னகையுடன் நம்மைவிட்டுக் கடந்துபோவார்.

`சொந்தக்காரர்கள் பரிமாறினால், தெரிந்த வர்களுக்கு மட்டும் கறி வைக்கிறார்கள்!' என்ற பிரச்னை தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்த காலத்தில்தான் ‘கேட்டரிங்’காரர்கள் என்ற நடுநிலைவாதிகள் உருவாகி, பரிமாற ஆரம்பித் தார்கள். இவர்களால் பெரும்பாலான இடங்களில் வெட்டு, குத்துகள் கணிசமாகக் குறைக்கப்பட்டன. இவர்களிடம் உள்ள பெரிய குறை, பொறுமையு டன் பரிமாறத் தவறிவிடுவார்கள். கல்யாணத் துக்கு வரும் ஒவ்வொருவரையும், மடியில் உட்காரவைத்து நிலாச்சோறு ஊட்டச் சொல்ல வில்லை. இலையில் நிதானத்துடன் பலகாரங் களை வைக்கலாம். இவர்கள் பரிமாறும் வேகத்துக்கு ஜீரா ததும்பும் குலோப்ஜாமூன் மீதே தயிர்ப்பச்சடியின் சாரல் அடிக்கும். கத்திரிக்கா சட்னியுடன் அன்னாசிப்பழக் கேசரி பின்னிப் பிணையும். கொஞ்சம் கவனத்துடன் இல்லை என்றால், சாம்பாரும் ரசமும் இலை வழியாகப் பாய்ந்து மடி மீது தவழும். பிரியாணி போன்ற ஜாம்பவான்களால் இந்தப் பிரச்னை இல்லை.

வாழ்த்த வந்தோரின் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பதற்காக அவற்றை ஆதிக்கம் செலுத்தும் வகையில் இசைக் கச்சேரி வைப்பது நம் மரபு(?). அதற்காக வந்திருப்பவர்களின் செவித்திரையைக் கிழிக்கும் அளவுக்குத்தான் கச்சேரியின் ஒலி அளவு இருக்க வேண்டுமா என ஏற்பாட் டாளர்கள் சிந்திக்க வேண்டும். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் நண்பர்களிடம் மனம்விட்டுப் பேச முடியாமல், அவர் காதுகளுக்கு முத்தம் கொடுக்கும் விதமாகத் தான் நம்மைப் பற்றிய நல்லது கெட்டது களைப் பகிர்ந்துகொள்ள வேண்டி யிருக்கிறது.

முன்பாவது பரவாயில்லை. ஒரே பாடகர் மேடையில் ஏறி இளையராஜா, எஸ்.பி.பி., ஜானகி என, பல்வேறு குரல்களில் பாடி அசத்துவார். அதில் சத்தம் ஒரு பொருட்டாக இருக்காது. கவனம் அவர் பக்கம் குவியும். ஆனால், தற்போது திருமணக் கச்சேரியில் பாடுபவர்கள், இசையமைப்பவர்கள் எல்லாம் அழிந்துவரும் உயிரினங்கள் லிஸ்ட்டின் கீழ் வந்துவிட்டார்கள்! DJ என்ற மேற்கத்திய இசை மரபு, அந்தக் கலைஞர்களின் தலையில் உட்கார்ந்து பெரிய பெரிய ஸ்பீக்கர்களாக ‘பூம்... பூம்...’ என அதிர்கிறது. பணக்கார வீட்டுப் பையனுக்குப் பைத்தியம் பிடித்தது போல காணப்படும் ஒரு நபர், அதை இயக்குபவராக இருப்பார். அவரின் விரல் நுனிகளில் ஒரு கலை அழிந்துகொண்டிருக்கிறது.

பிராந்தி, விஸ்கி, பீர் வாசனை இல்லாமல் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், சுற்றி உள்ள மெஜாரிட்டியான குடிமகன்கள் ஒருவித தாழ்வு மனப் பான்மையை உருவாக்குகிறார்கள். ‘குடிக்கிற பழக்கம் இல்லை’ எனப் பெருமையாகச் சொல்ல வேண்டியதையே, ஏதோ ஓர் அந்தரங்க வியாதியை மருத்துவரிடம் சொல்லும் தயக்கத்துடன் சொல்ல வைக்கிறார்கள்.

திருமண நிகழ்ச்சிகளில் பொறுமையின் எல்லையில் நின்றுகொண்டுதான், புகைப்படக்காரர்கள் அவர் தம் பணிகளைச் செய்கிறார்கள் எனத் தோன்றுகிறது. அவர்கள் படம் பிடிக்கையில் இடைமறித்து, செல்போனைக் கொடுத்து க்ளிக்கச் சொல்வது என்பது ஆகக்கொடுமையான செயல். பற்பல கோணங்களில் எடுக்கச் சொல்லிச் செய்யும் துன்புறுத்தல்கள் காண சகிக்காதவை. சிலை வடிக்கும் சிற்பியிடம் இருந்து உளியைப் பிடுங்கி ஊசியைக் கொடுப்பதற்கு ஒப்பானது அது. ஆனால், `சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை’ என்ற சித்தாந்தத்தை அடிப்படையாகக்கொண்ட செல்ஃபி முறை பரவலாக்கப்பட்டதும், புகைப்படக் கலைஞர்களுக்குக் கொஞ்சம் ஆசுவாசம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. தவிர, ப்ரி வெட்டிங், போஸ்ட் வெட்டிங் படங்கள் எடுப்பதற்காக, தம்பதிகளுடன் வெளியூர் செல்லும் பாக்கியங்களும் அவர்களுக்குக் கணிசமாகக் கிடைத்துவருவது மகிழ்ச்சிக்குரியது.

ரத்த உறவே... லெக் பீஸ் போடு!

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், ஒருவர் மிகச் சுமாராக ஆடினால்கூட அவரைச் சுற்றி பலத்த ஆரவாரம் எழும். காரணம், பெண் அல்லது மாப்பிள்ளை வீட்டாரின் நெருங்கிய சொந்தமாக அவர் இருப்பார். அதனால் அவருக்கு அந்தச் சலுகை வழங்கப்பட்டிருக்கும். அது புரியாமல் தன் நளினங்களுக்குத்தான் பொதுமக்கள் வரவேற்பு கொடுக்கிறார்கள் என எண்ணி, போட்ட ஸ்டெப்பையே போட்டு, பொறுமையைச் சோதிப்பார். அவர் ஒரு பக்கம் ஆடிக்கொண்டிருக்க, கரகோஷம் எழுப்பவேண்டிய சொந்தபந்தங்கள்கூட கொஞ்ச நேரத்தில் செல்ஃபி, குரூப்பி எடுப்பதில் மும்முரமாகி விடுவார்கள். அவர் மட்டும் கிட்டத்தட்ட `சலங்கை ஒலி’ கமல் போல கிணறு மீது நின்று ஆடாத குறையாக தனியாக ஆடிக்கொண்டிருப்பார்.

கல்யாண மண்டபத்துக்குள் பேச்சுலராகப் போகும் தமிழனின் துயரம் சொல்லி மாளாது. அங்கு இருக்கும் எல்லா அழகுப் பெண்களுமே, தன்னை மட்டுமே பார்ப்பதுபோன்ற ஃபீலில்தான் இருப்பார்கள். கல்யாண மண்டபத்தில் ஒட்டுமொத்தக் கவனத்தையும் தன்வசம் திசை திருப்பும் வகையில் ஒரு பெண் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருப்பாள். எல்லா திருமண நிகழ்விலும், வெவ்வேறு முகங்களில் அந்தப் பெண்ணைப் பார்க்கலாம். ஆனால், அந்தப் பெண்முகம் மட்டும் நம்மைப் பார்க்கவே பார்க்காது!