Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால்

ஆண்பால் பெண்பால் அன்பால்
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால்

#MakeNewBondsபுதிய பகுதி - 1இயக்குநர் ராம், ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி, ரவி

ஆண்பால் பெண்பால் அன்பால்

#MakeNewBondsபுதிய பகுதி - 1இயக்குநர் ராம், ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி, ரவி

Published:Updated:
ஆண்பால் பெண்பால் அன்பால்
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால்
ஆண்பால் பெண்பால் அன்பால்

வாழ்வின் ஆதாரமான ‘ஆண்-பெண் உறவுகளுக்குள் மட்டும் ஏன் இத்தனை வேறுபாடுகள்? தொழில்நுட்பங்கள் வளர வளர, விரிசல்களும் வித்தியாசங்களும் ஏன் இவ்வளவு அதிகரிக்கின்றன?

ஆண்பால் பெண்பால் அன்பால்

சரிசெய்யவேண்டியது எங்கே? நம் குழந்தைகளுக்கு, ஆண்-பெண் மனங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை எப்போது கற்றுக்கொடுக்கப்போகிறோம்? காதல், நட்பு, உறவு, பிரிவு... என ஆண்-பெண் இடையே இருக்கும் இந்த இணைப்பைப் பலப்படுத்தும் அந்த ஒன்று எது?' விடைகளுக்கான விகடனின் தேடலே இந்தத் தொடர். இந்தப் புரிதலை, வரும் வாரங்களில் வாரம் ஒரு பிரபலம் தங்களுடைய வாழ்வின் வழியே, கற்றலின் வழியே வெளிச்சம் பாய்ச்ச உள்ளனர்.

அவர்கள், வேறு ஒரு தீவில் வாழ்பவர்கள்; ஏழு கடல், ஏழு மலை தாண்டி இருக்கும் தேவதைகள். மஞ்சள், மருதாணி, கண்ணாடி வளையல்கள், மூக்குத்தி, கொலுசு போன்ற விசேஷமான பொருட்கள் கொட்டிக்கிடக்கும் ரகசிய மாடங்களில் அவர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள், தலை தூக்கி நடக்க மாட்டார்கள். அவர்கள் கூந்தல் காய, வெகு நேரம் பிடிக்கும். அவர்கள் வீட்டு ஆண்கள் தவிர, வேறு ஆண்களுடன் பேச மாட்டார்கள். அவர்களுக்குப் பிடித்த இடம் கோயில். அவர்கள் வெள்ளிக்கிழமையோ, சனிக்கிழமையோ ஏதோ ஒரு நாளில் விரதம் இருப்பார்கள். அதிகாலை எழுந்து, விருந்து சமைப்பார்கள். பொழுது போகாதபோது வெயில் படாத தாழ்வாரங்களில் தாயம் விளையாடுவார்கள். அவர்களுக்கு உலக நடப்புகளில் பெரும் ஆர்வமோ, அறிவோ கிடையாது. யாருக்கும் தெரியாமல் வார இதழைப் படிப்பார்கள். குழுவாகச் சென்று எப்போதாவது திரைப்படம் பார்ப்பார்கள். வானொலியோடு சேர்ந்து பாடுவார்கள். வெளியே வருவதாக இருந்தால், வீட்டு ஆள் இல்லாமல் வெளியே வர மாட்டார்கள். விளக்கு ஏற்றும் முன்னர், வீட்டுக்குத் திரும்பிவிடுவார்கள். 1974-ம் ஆண்டில் பிறந்த எனக்கு, 18 வயது வரைக்கும் பெண்கள் பற்றி இருந்த அபிப்பிராயம் இதுவே!

எட்டாம் வகுப்பு வரை, அரை டிரவுசர் போட்டுக்கொண்டு பெரிய கால்பந்து மைதானத்தில் நாங்கள் சின்னஞ்சிறு பந்துகளாக கொட்டிக்கிடக்கும் கற்களுக்கு நடுவே எத்திக்கொண்டிருந்த ஓர்அலுப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தோம். அப்போது எல்லாம் பள்ளிக்கூடங்களில் கால்பந்து மைதானம் இருந்தது... கால்பந்துகள்தான் இல்லை.

co-education-தான் என்றாலும் சிறுமிகளோடு எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது. சிறுமிகளோடு பேசுவது சில சமயங்களில் கெளரவக் குறைச்சல் எனக் கருதப்பட்டது. முதல் மதிப்பெண் எடுக்கும் சிறுமிகள் மீது அளவு கடந்த கோபத்தோடும் எரிச்சலோடும் சிறுவர்கள் இருந்தார்கள். அனிதா தேசாயின் `fasting feasting' என்ற நாவலை, பின்னொரு நாள் படித்தபோது புரிந்தது,  பெண்கள் விரதம் இருப்பதற்கும் விருந்து படைப்பதற்கும் படைக்கப்பட்டவர்கள் என்ற எண்ணமே அன்றைய பொது புத்தியின் எண்ணம் என்று. அந்தப் பொது புத்திக்கு இடையேதான் நாங்கள் வளர்ந்தோம் ஆண்களாக.

ஒன்பதாம் வகுப்புக்குச் செல்வது என்பது, சிறுவன் வாலிபனாக மாறுவது என்ற கிளர்ச்சியைத் தந்த

ஆண்பால் பெண்பால் அன்பால்

மாற்றம். ஒன்பதாம் வகுப்பில் இருந்து சிறுவர்கள் தங்கள் அரை டிரவுசரை அணிய வேண்டியது இல்லை. முழு பேன்ட் போடலாம். பெரும்பாலான வீடுகளில் ஒன்பதாம் வகுப்புக்குப் போகும்போது சைக்கிள் வாங்கித் தருவார்கள். `இதயம்' படத்தில் `ஏப்ரல் மேயிலே...' என சைக்கிளில் பாடுவது. `வருஷம் 16' படத்தில் கார்த்திக் `ஏ... அய்யாச்சாமி, உன்... ஆளக்காமி...' எனப் பாடி வருவது. பெண்கள், தாவணி போட்டு வருவார்கள். `செந்தூரப்பூவே' படத்தில் நிரோஷா தேன் சிந்த அணிந்துவரும் அதே நீல நிறத் தாவணியும் வெள்ளை கைச்சட்டையும்.  அந்தப் படங்கள் கொஞ்சம் முந்திப்பிந்தி வந்திருந்தாலும் அதுபோன்ற மனதோடுதான் நாங்கள் அன்று பள்ளிக்கூடம் சென்றோம். பாட வரவில்லை என்றாலும், நாங்கள் பெண்கள் பின்னால் நின்றுகொண்டு பாடினோம். `பிள்ளைகளை நீ சுமக்கும் பருவமடி, books-ஐ எல்லாம் நீ சுமந்தால் பாவமடி...', `ஏ பப்பளக்கிற பளபளக்கிறப் பப்பாளிப் பழமே...' போன்ற பாடல்களால் நிறைந்தது ஒன்பதாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான காலம்.

அப்பாவும் அம்மாவும் கடவுள் முன் வேண்டிக்கேட்டால்... குழந்தை, அம்மா வயிற்றில் வரும் என்ற உயிரியல் அறிவோடு பன்னிரண்டரை வயதில் நான் ஒன்பதாவது போனேன், நீல நிற BSA slr

ஆண்பால் பெண்பால் அன்பால்

சைக்கிளில் காக்கி நிற முழு பேன்ட்டோடு. 1987 ஜூன்-3 என நினைவு. கொஞ்சம் குளிரும் நிறையக் காற்றும் வீசும் கோவையின் ஜூன் மாதம். பார்த்தீனிய செடிக் கூட்டத்துக்கு நடுவே தனித்துக்கிடந்த பள்ளி. வேறு பள்ளிக்கூடத்தில் இருந்து புதிதாக ஒரு சிறுமி அன்றைக்கு மதியம் என் வகுப்புக்குள் நுழைந்தாள் new admission . என்ன பிடித்தது, ஏன் பிடித்தது என இன்று வரை தெரியவில்லை. அந்த new admission சிறுமியை `இது என் ஆள்!' என நான் சொன்னேன். ஒருவேளை அவள் பெயர் பிடித்தது என நினைக்கிறேன். அதுவரை கேட்டிராத பெயர். `பொன்நிலவு தோன்றிடும் நன்னாளிது நன்னாளிது, என் மனதினில் மலர்ந்திடும் பொன்னாளிது பொன்னாளிது...' எனப் பாட்டு எழுதி இலக்கிய மன்றத்தில் பாடுகிறேன் என்ற பேரில் பேசியக் கூத்துக்கள். வீட்டைக் கண்டுபிடிக்கிறேன் என, பேருந்தை சைக்கிளில் துரத்திய சாகசங்கள், அவள் போகும் பேருந்திலேயே ஏறி, அவள் இறங்கும் நிறுத்தத்தில் இறங்கி, அவளோடு நடந்து அவள் வீட்டைக் கண்டுபிடிப்பவன் காதலன் அல்ல, பேருந்தை ஓட்டை மிதிவண்டியில் குறைந்தபட்சம் பத்து நண்பர்களோடு துரத்திச் சென்று கண்டுபிடிப்பவனே காதலன் என்ற இலக்கணத்தைக் கற்றுத்தந்த திரைப்படங்களின் காலம் அது.

ஒருமுறை அவள் ஹீல்ஸ் அணிந்து வந்தபோது, `இது சரிப்படாது நண்பா, பொண்ணு சரியில்லை' எனச் சொன்ன ஒரு நண்பனை மைதானத்தில் புரட்டி எடுத்த வீரங்கள். பாப் கட் பண்ணினால், ஹீல்ஸ் போட்டால் அந்தப் பெண் குடும்பப் பெண் அல்ல என்ற தத்துவம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்த காலம் அது. பியூட்டி பார்லர்கள் இல்லை என்பதே என் நினைவு. அல்லது எங்கள் புவியியல் அறிவில் பார்லர்கள் கிடையாது. அந்தக் காலத்தில் பெண்கள் எங்கு முடிவெட்டினார்கள் என்பது இன்று வரை தெரியாத அதி அதிசயம். அவள் பெண் அல்ல, அந்தச் சிறுமி நீளமாக முடி வளர்த்திருந்தாள். அது அழகு என, நான் நினைத்தேன். ஒருவேளை முடிவெட்டும் இடம் தெரியாததால் அல்லது இல்லாததால் அவள் முடிவளர்த்திருக்கக்கூடும் என இப்போது தோன்றுகிறது.

பன்னிரண்டரை வயதில் இருந்து பதினெட்டு வயது வரை நான் அந்தச் சிறுமியின் பின் சென்றேன். அவள் யார், அவளுக்கு என்ன பிடிக்கும், அவள் விருப்பம் என்ன, அவளைப் பின்தொடர்ந்து வருவது அவளுக்குப் பயத்தைத் தருகிறதா? அவள் ஏன் எதுவும் சொல்லாமல் போகிறாள் என்ற எந்த அறிவும் இல்லாத வன்முறையான ஒரு துரத்தல் எனச் சொல்லலாம். ஆனால், `இதயம்' முரளி அப்படித்தான் செய்தார். அப்படிக் காத்திருப்பதும், கடிதம் எழுதிக் கொடுக்காமல் இருப்பதும் உள்ளங்கை வேர்ப்பதுமே காதல் அப்போது. ஒரு பெண்ணுடன் ஆண் பேசலாம் எனத் தெரியாது. ஆனால், ஒரு பெண்ணை, ஆண் பின்தொடரலாம் எனத் தெரியும். `ஒருதலைராகம்' காதல் முதல் `இதயம்' காதல் வரை அப்படித்தான் இருந்தது.

பன்னிரண்டாம் வகுப்பு விடுமுறையில் ரஷ்யப் புதினங்கள் அறிமுகம் ஆகின. வெண்ணிற இரவுகளின் நாஸ்தென்கா. பனி கொட்டும் பீட்டர்ஸ்பெர்க்கின் இரவுகள். பாப்ளார் மரங்கள். ஸ்தெப்பி புல்வெளிகள். என்ன பானம் எனப் புரியாத வோட்கா. `பெண்களும் காதலிப்பார்களா!' என்ற ஆச்சர்யம் வந்தது. அதுவும் ஒரு பெண்ணுக்கு இரண்டு காதல் இருக்குமா என்பது ஆச்சர்யமாக இருந்தது . ஒருவேளை வெண்பனிக் கொட்டும் ரஷ்யாவில் அப்படி இருக்கலாம், கூதப்பனி வீசும் கோவையில் இருக்கவே முடியாது என நினைத்துக்கொண்டேன். திருமணம் ஆன பிறகு, மற்ற ஓர்  ஆணோடு காதல்கொண்டு காணாமல்போகும் ஜமீலா பயமுறுத்தினாள். என் நண்பன் சொன்னான், `அவை எல்லாம் பொய். பெண்களுக்குக் காதல் எல்லாம் வராது. நீயும் ஆறு வருடங்களாகப் பின் நடக்கிறாய்.ஏதாவது நடந்ததா? கதைகளை நம்பாதே நண்பா, அது புரட்டு. ஒருவேளை அந்தப் பொண்ணுக்கு ரத்தப் புற்றுநோய், இல்லை பெயர் தெரியாத கொள்ளை நோய் வந்தால்... ஒருவேளை `ஓடிப்போலாமா?' எனக் கேட்கும். கெக்கபிக்க எனச் சிரிக்கும்' என்பான். `இதயத்தைத் திருடாதே' படம் எங்கள் இருவருக்கும் ஒரு பைபிள்போல இருந்தது. அவன் அப்போது ப்ரியா என்கிற ஒரு பெண்ணைத் துரத்திக்கொண்டிருந்தான். (ஓ... ப்ரியா ப்ரியா...  என் ப்ரியா... ப்ரியா)

இப்படி, காதல் பற்றிய மாபெரும் குழப்பங்கள் நிறைந்த ஒருவர் என்னதான் செய்ய முடியும். ஆம், மதிப்பெண்கள் குறைவாக எடுக்க முடியும். அப்படித்தான் நான் ஒரு இன்ஜினீயர் ஆகாமல் டாக்டர் ஆகாமல் தப்பித்தேன்.

1992. டிட் டா டிட் டிடி டா. மோர்ஸ் கோட் பழகி, கப்பலில் ரேடியோ ஆபீஸர் பணிக்குச் சென்றால் உலகம் சுற்றலாம் என்ற பேராசையில் சென்னை தி.நகர் சிவா-விஷ்ணு கோயிலுக்குப் பின்புறம் இருந்த ஒரு மெரைன் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்தேன். வந்த பிறகுதான் தெரிந்தது அந்த வேலை கிடைப்பது கடலில் இருக்கும் மீன்களை எண்ணுவதைவிட கடினமானது என்று. அதே டிட் டாடாவை படிக்க மஹாராஷ்டிரா பண்டரிநாதரின் ஊரான பண்டர்பூரில் இருந்து வந்திருந்தார் ஜெயஸ்ரீ. என்னோடு இரண்டு வயது பெரியவரான அவர், ஆங்கில இலக்கியம் முடித்துவிட்டு வந்திருந்தார்.

சென்னை, அப்போதுகூட பெரும் நகரம்தான். ஆண்- பெண் பேசுவதற்கான சாலைகள் இருந்தன. சேர்ந்து அமர்ந்து போய் வருவதற்கான பேருந்துகள் இருந்தன. யார் எனக் கேட்காத யோசிக்காத மனிதக் கூட்டங்கள் வேக வேகமாக நடந்து கொண்டிருந்தன. ரங்கநாதன் தெருவில் யார் ஆண், யார் பெண், யார் திருநங்கை என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சதைக்கூட்டம் நகர்ந்து
கொண்டிருந்தது.

வி.ஜி.பி-யில் தமிழகத்தின் நீளமான தோசை சுட்டுக்கொண்டிருந்தார்கள். ஆக... சென்னை, கோவையைப்போல் இல்லை. சென்னை, ஆணும் பெண்ணும் பழகுவதற்கும் பயணப்படுவதற்கும் கொஞ்சம் இடமும் நேரமும் கொண்டிருந்தது. பெண்களும் காதலிப்பார்கள் என்பதை, கடற்கரைகள் சொல்லின.

ஜெயஸ்ரீ, என் தோழியானார். ஒரு பெண்ணை, பெண் என்பதைத் தாண்டி நட்பாகப் பார்க்க முடியும் என்ற புதியதை எனக்கு அறிமுகப்படுத்தினார். காதல் இன்றி, காமம் இன்றி ஓர் ஆண் நண்பனோடு எப்படிப் பழகுவோமோ அப்படிப் பழக முடியும் என்பது ஆச்சர்யமாக இருந்தது.

ஒரு பெண், ஆணைப் போன்றவள்தான். அவனுக்கு என்ன பிடிக்குமோ அவை எல்லாம் அவளுக்கும் பிடிக்கும். அவளும் சமூகத்தை நேசிப்பவள். சமூகத்தின் மீது அக்கறைகொண்டவள். அவளுக்கும் பயணம் பிடிக்கும், திருமணம் தாண்டி லட்சியங்கள் இருக்கும், கொண்டாட்டங்கள் பிடிக்கும், கேளிக்கைகள் பிடிக்கும். அவளும் காட்டுக்குச் சென்று வர ஆசைப்படுவாள், நீர்நிலையில் நீந்திப்பார்க்க நினைப்பாள். அவளுக்கு தலைகுனிந்து நடப்பது பிடிக்கவில்லை. அவளுக்கு விரதம் இருத்தலும் விருந்து படைத்தலும் இல்லை வாழ்க்கை. ஒரு தாய் ஆவதற்காக, மனைவி ஆவதற்காக அவள் பிறக்கவில்லை என்ற இந்த எளிய உண்மைகளை அவர்தான் எனக்குச் சொல்லிக்கொடுத்தார்.

கப்பல், கவிழத்தானே செய்யும். அந்த கோர்ஸ் படித்தும் பயன் இல்லை எனப் புரிந்தபோது, ஒரு வருடம் வீணாகியிருந்தது. பதின்ம வயது காதல், காதல் அல்ல என எனக்குப் புரியவைத்த ஜெயஸ்ரீ அவருடைய ஊருக்கும், நான் என்னுடைய ஊருக்குமாகப்  பிரிந்தோம்.

1993. மரங்களும் நல் ஆசிரியர்களும் காதலிப்பதற்கான ஸ்டோன் பெஞ்சுகளும் நிறைந்த மதுரை அமெரிக்கன் கல்லூரி. இளங்கலை தமிழ். கல்லூரிப் பதிவு எண் -  93tam13. 1994-ம் ஆண்டில் அங்கு வந்து சேர்கிறாள் சுமதி, முதுகலைத் தமிழ்ப் படிக்க. 94pgt17. டட்லி ஹாலின் பெரும் ஜன்னலில் இப்போது என்னது எனத் தெரிந்த வோட்காவைப் பருகிக்கொண்டே தாஸ்தயெவெஸ்கியின் அடிமையாக நான் அமர்ந்திருக்கத் தொடங்கினேன். வகுப்பிலும் நூலகத்திலும் புத்தகங்கள் தொல்காப்பியனின் களவியலை மெய் தொட்டுப் பயின்றவாறே தி.ஜானகிராமனின் `அம்மா வந்தாள்' நாவலை வாசிக்க முடிந்தது. இலக்கியம், பெண்கள் குறித்தான பார்வையைத் தெளிவாக்கிக் கொண்டிருந்தது. காதல் என்பது, ஒருமுறை ஒருவர் மீது மட்டும் வரக்கூடிய ஒன்று என்ற மதம் சார்ந்த கருத்தாக்கம் எத்தனை பெரிய மோசடி எனப் புரிந்தது.

ஆண்பால் பெண்பால் அன்பால்

சுமதி மல்லிபுதூர் என்ற ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகில் சாதிக் கலவரம் நடந்தால் பேருந்து போகாத குக்கிராமத்தில் இருந்து மதுரைக்கு வந்திருந்தாள். மங்கம்மா, மல்லண்ணாவின் மகள்.  தன் குடும்பத்தில் முதன்முதலாக பத்தாம் வகுப்பில் தேறிய மாணவி. அவளாகவே கல்லூரி கண்டுபிடித்து, அவளாகவே முகவரி கண்டுபிடித்து யார் துணையும் இல்லாமல் முதுகலைப் படிக்க வந்திருந்தாள். அப்பா மஹாராஷ்டிராவில் இருக்க, உறவினர் வீடுகளில் தங்கிப் படித்த அவளுக்கு, கல்லூரி விடுதி கடினமானதாக இல்லை. கவிதை என்ற பெயரில் அவளும் முன்னரே ஏதோ எழுதிக் கொண்டிருந்தவள்தான் எனத் தெரிந்தது.

மதுரை... ஓர் ஆணும் பெண்ணும் பேசுவதற்கான ஊராக இல்லாமல் இருந்தாலும், அமெரிக்கன் கல்லூரியில் இடம் ஏதோ இருக்கத்தான் செய்தது. இருந்தாலும் ஓர் இளங்கலை மாணவன் முதுகலை மாணவியோடு பேசுவதை ஒழுக்கக் குறைவாகப் பார்க்கும் பார்வையும் இருக்கத்தான் செய்தது. புத்தகங்கள் பரிமாறிக் கொண்டோம். எப்போது காதலித்தோம் என நினைவில் இல்லை. என் வீட்டுக்கு அவளும் அவள் வீட்டுக்கு நானும் சேர்ந்து சென்றோம். அதுவரை ரஷியா சென்று ஜமீலாவையோ, நாஸ்தென்காவையோ காதலித்து மணம் புரிந்து ஆர்மேனியாவுக்கு தேனிலவு போகலாம் என்ற என் கனவு தகர்ந்தது. ஆண் குழந்தை பிறந்தால் பாவெல் எனவும், பெண் குழந்தை பிறந்தால் நாஸ்தென்கா எனவும் பெயர் வைத்துக்கொள்வோம் என சமாதானம்  செய்துகொண்டோம்.

சுமதிக்கு, மற்றவரின் பார்வைகளை, பேச்சுக்களைக் கடந்து, புறக்கணித்துக் காதலிக்கும் தைரியம் இருந்தது. சென்னைக்கு இருவரும் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் மேற்படிப்பு படிப்பதற்காக வந்தோம். 1994-ம் ஆண்டில் தொடங்கி 2000 பிப்ரவரியில் திருமணம் நடைபெறும் வரை ஒன்றாகப் படித்தோம், ஒன்றாகப் பயணித்தோம். லெளகீக வாழ்க்கைக்குத் தேவையான எந்தக் கேள்வியையும் அவள் கேட்கவில்லை. 1998-ம் ஆண்டில் நான் சினிமாவுக்குப் போகிறேன் என்றபோது அதுகுறித்து துளியும் அச்சம் கொள்ளவில்லை. Ugc முடித்து பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் விரிவுரையாளர் ஆனாள். `வகுப்புப் பெட்டிகளின் வழி பிரயாணம்' என்ற ஒரு நாவலை எழுதத் தொடங்கினாள். அதைப் படித்தபோது எனக்கு வெகு சுலபமாகக் கிடைத்த எல்லாம் அவளுக்கு எத்தனை கடின முயற்சிக்குப் பிறகு கிடைத்தன எனப் புரிந்தது. 1990-களின் பெண்ணாக அவள் இருந்தாள். சாதி கடந்து, மதம் கடந்து, வீடு கடந்து தனக்கு விருப்பமானதை அடைவதற்கான வழிகளை அவள் அறிந்திருந்தாள்.

திருமணத்துக்குப் பிறகு பொருளாதாரச் சிக்கல்கள். கோவை திரும்பினோம். விளம்பர நிறுவனம் என்ற குட்டி வியாபாரம். மகள் பிறந்தாள். சினிமா ஆசை விடவில்லை. `நான் சென்னைக்குப் போய் முயற்சி செய்யவா?' எனக் கேட்டபோது முகத்தில்கூட பயம் இல்லாமல் `சரி' என்றாள். 2003-ம் ஆண்டில் திரும்பவும் சென்னை. அவள் கோவையில் என் வீட்டில் என் பெற்றோரோடு. கிருஷ்ணாம்மாள் கல்லூரியில் விரிவுரையாளர் ஆனாள். `கற்றது தமிழ்' எடுத்தும் காசு இல்லாத காரணத்தால், பிரிதலும் பிரிதல் நிமித்தமுமே எங்கள் குடும்ப வாழ்க்கை ஆனது. `சினிமாக்காரனை நம்பாதே!' என ஊரும் உற்றாரும் சொன்னதை, என்னிடம் எப்போதாவது மெல்லிதாகச் சொல்வாள். அந்த 8-9 வருடங்களில் அவள் தான் பட்ட இன்னல்களை வெளியில் பெரிதாகச் சொல்லிக்கொண்டது இல்லை. முனைவர் பட்டம் முடித்தாள். `கோடிட்ட இடங்களை நிரப்புக' என்ற கவிதைத் தொகுப்பு கொண்டுவந்து தமிழக அரசு விருதையும் பெற்றாள்.

என் மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையைவிட அவள் கொண்டிருந்தது அதிகம். எனக்கு இருந்த பொறுமையைவிட அவளுக்கு இருந்த பொறுமை அதிகம். எனக்கு இருந்த பொறுப்புகளைவிட அவளுக்கு இருந்த பொறுப்புகள் அதிகம். நான் எதிர்கொண்ட சவால்களைவிட அவள் எதிர்கொண்ட சவால்கள் அதிகம். எனக்கு இருக்கும் இலக்கிய அறிவைவிட அவளுடைய அறிவு அதிகம். அவள் இப்படி இல்லாமல் இருந்திருந்தால் நான் இன்றைக்கு இதை எழுதிக்கொண்டிருக்க முடியாது என்றே நினைக்கிறேன். இன்று சென்னை வந்த பிறகும் கார் வாங்கவில்லை, வீடு வாங்கவில்லை, வங்கியில் பணம் இல்லை... அவள் கேட்டதே இல்லை.

ஆண்களைவிட பெண்கள் வலிமையானவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள, ஆண்களைவிட பெண்கள் பொறுமையானவர்கள் எனப் புரிந்துகொள்ள, பெண் என்பவளை நாம் நம் விதிகளால் கட்டப்பட்ட வீடுகளுக்குள்ளும் கோயில்களுக்குள்ளும் வைத்திருக்க முயற்சிக்கிறோம் என்ற வெகு சுலபமான இந்த எளிமையைப் புரிந்துகொள்ள, 42 வயதாகிவிட்டது. இன்று என் மகளுக்கு 13 வயது. அப்பாவாகப் பார்க்காமல் அவளை ஒரு தோழமையாகப் பார்க்க, பெண்களும் புத்தகங்களுமே எனக்குக் கற்றுத்தந்தார்கள்.

இன்னமும் பாலியல் கல்வி முறையாக வந்தபாடில்லை. பாலியல் கல்வி என்பது, குழந்தை எப்படிப் பிறக்கிறது எனச் சொல்லித்தருவது மட்டும் அல்ல, ஓர் ஆணும் பெண்ணும் எப்படி நட்பாக இருக்க முடியும் என்பதை போதிப்பது, ஓர் ஆண், ஒரு பெண்ணை துரத்துவதற்குப் பெயர் காதல் அல்ல; வன்முறை என்பதைப் போதிப்பது, ஒரு வாழ்க்கை... ஒரு காதல் என்ற கருத்தாக்கம் மோசடி எனச் சொல்வது என்று நான் நினைக்கிறேன். சிறுமிகளை அவர்களின் உடல் குறித்த அச்சம் தாண்டி வளர்ப்பதற்கு, பாலியல் கல்வி தேவை என நினைக்கிறேன்.

காதல் என்பது, உடமையாக்கிக்கொள்ளவோ அல்லது கொலையைப் போதிக்கும் ஒன்றோ அல்ல. அது இயற்கையானது என்பதைச் சொல்லித்தருவது எவ்வாறு? பொறியியல் படிப்பவர்களுக்கும் மருத்துவம் படிப்பவர்களுக்கும் இலக்கியம் சொல்லித்தர வேண்டும் என்பதை நாம் ஏன் மறந்தோம்? இலக்கியமும் வெகு முக்கியமான பாலியல் கல்வியே.

கேமராக்களுக்கு நடுவேதான் நாம் துணிக் கடையில் துணி எடுக்கிறோம், உடுத்திப் பார்க்கிறோம். கேமராக்கள் நம்மைச் சுற்றி நடந்துபோகும்போதுதான் நாம் சாலையைக் கடக்கிறோம். கேமராக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் நாம் ஏதோ ஓர்  உணவுவிடுதியில் உணவை உட்கொள்கிறோம். எந்த நேரத்திலும் நம்மை யாரோ ஒருவர் நமக்குத் தெரியாமலேயே புகைப்படம் எடுப்பதற்கான சாத்தியத்தோடே வாழ்கிறோம். நம் உடலை யார் வேண்டுமானாலும் ஒரு கைபேசியில் சிறைப்படுத்திவிட முடியும்.

குற்றாலத்தில் நிர்வாணமாகக் குளித்த ஆண்களின் படங்கள் `குற்றாலத்தில் சீஸன் தொடக்கம்' என்ற தலைப்போடு நாளிதழ்களில் வெளிவந்ததற்காக எந்த ஆணும் தற்கொலையோ, கொலையோ செய்யாதபோது, பெண் மட்டும் ஏன் தற்கொலை முடிவெடுக்கிறாள் அல்லது `பாபநாசம்' திரைப்படத்தில் ஏன் கொலை நடக்கிறது? பெண் உடல் மீது மட்டும் ஏன் நாம் ஒழுக்கத்தைக் கட்டமைக்கிறோம்? பெண் உடல் மீது ஏன் நாம் `குடும்ப மரியாதை' என்ற அர்த்தமற்றக் குப்பையை ஏற்றிவைக்கிறோம்? பெண் உடல் மீது ஏன் சாதியைக் கட்டவிழ்த்துவிடுகிறோம்? அவர்களை நம்மைப்போலவே உடல் தாண்டி நாம் எப்போது பார்க்கப்போகிறோம்?

நான் என் மகளிடம் சொல்வது இதுதான். ``ஒருவேளை, யாராவது உன்னை புகைப்படம் எடுத்தால், அச்சம் கொள்ளாதே. நீ என்னிடம் சொல். அதனால் ஒன்றும் மாறிவிடப்போவது இல்லை. என்னிடம் சொல்ல முடியவில்லையா, உன் அம்மாவிடம் சொல், இல்லை உன் ஆசிரியையிடம் சொல். அதுவும் இல்லையா, உன் நண்பரிடம் சொல். அதனால் உன் மரியாதைக்கும் பெயருக்கும் எந்தப் பாதகமும் விளையாது. அது உன் தவறு அல்ல. எடுத்தவரை சட்டம் பார்த்துக்கொள்ளும். அதற்காக நாம் பயப்படவேண்டியது இல்லை '' என்பதைதான். கேமராக்களின் உலகத்தில் நீங்கள் இதைத் தவிர உங்கள் குழந்தைகளுக்குச் சொல்ல வேறு என்ன இருக்கிறது? ஆணாக இருந்தால், கேமராவை எப்படிப் பயன்படுத்துவது என்பதைச் சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கும்.

காலம் மாறிக்கொண்டிருக்கிறது. பெண்கள், முன்னேறுகிறார்கள்; முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள்; கடல் தாண்டி பயணிக்கிறார்கள். அவர்களுக்கான பார்லருக்கு அவர்களே போய் வருகிறார்கள். `விளக்கு வைப்பதற்கு முன்னர் வீடு திரும்பிவிடு!' எனச் சொல்வது, ஏதோ ஓர் அளவுக்காவது குறைந்திருக்கிறது. அவர்களுக்கான உடையை அவர்களே எடுக்கிறார்கள். அவர்களின் கீழ் ஆண்கள் பணிபுரிகிறார்கள். அவர்களும் காதலிக்கிறார்கள், பறக்கிறார்கள், வாகனம் ஓட்டுகிறார்கள். தனக்குத் தேவை எது என்பதை  தானே தேடிக்கொள்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும் தான் யார் என்று. யாரும் அவர்களைப் பாதுகாக்க தேவை இல்லை. அவர்கள் துணையைத் தேடுகிறார்களே தவிர, பாடிகார்ட் செக்யூரிட்டிகளை அல்ல.

நீ கொலை செய்வதால், ஆசிட் அடிப்பதால், வீட்டுக்குள் அடைத்துவைப்பதால் உன்னால் இந்த மாற்றங்களைத் தடுத்துவிட முடியாது. சாளரங்கள் என்பது, இப்போது வீட்டில் இருக்கும் வெறும் சாளரங்கள் அல்ல. சாளரம் தாண்டிப் போவது உனக்குத் தெரியாத அந்தர சேட்டிலைட்டுகளின் சாளரங்கள் இப்போது.

ஆண்பால் பெண்பால் அன்பால்

அவர்களும் உன்னைப் போன்றோர்தான் என்ற உண்மையை நீ ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். உனக்கு என்னைப்போல் 40 வயது ஆன பிறகு புரியும் என்பதை அவர்கள் இன்று ஒப்புக்கொள்வதாக இல்லை. நீ அவர்களை மிரட்டுவதாலோ, கத்திக்கொண்டு துரத்துவதாலோ அவர்கள் உன்னைக் காதலிக்கப்போவது இல்லை. உனக்கும் அவர்களுக்குமான இடைவெளி என்பது, பல தலைமுறை இடைவெளி என்பதைப் புரிந்துகொள். கெளரவக் கொலைகளால் நீ எதையும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை அறிந்து வாழ் அல்லது இறந்துபோ. அவர்கள் `இதயம்' காலத்துப் பெண் அல்ல. நீ அந்தக் காலத்திலேயே நின்றுவிட்டாய். அவர்களுக்கு வாய் இருக்கிறது பேச, கண் இருக்கிறது பார்க்க, மூளை இருக்கிறது சிந்திக்க. அவர்கள் உன்னிடம் கோருவது மாற்றத்தை. நீ அவர்களை உடைமை ஆக்கிக்கொள்ள முடியாது. அவர்களுக்கு இணையாகத்தான் முடியும்.

புரிந்துகொள் அவர்கள் வேகமாக முன்னேறி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நீ அந்த ஓட்டப்பந்தயத்தில் இன்னும் இணையவே இல்லை.

அவர்களின் முன்னேற்றம் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது ஒரு மகளின் அப்பாவாக. மகளே... இன்னும் பத்து வருடங்களில் இவர்கள் இருக்க மாட்டார்கள். இந்த உலகம் உனக்கு உன் தம்பிக்குத் தரும் எல்லாவற்றையும் தரும் என்றே நான் நம்புகிறேன்.

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...