Published:Updated:

அம்மாக்களின் ‘பணி’ப்போர்!

அம்மாக்களின் ‘பணி’ப்போர்!
பிரீமியம் ஸ்டோரி
அம்மாக்களின் ‘பணி’ப்போர்!

கே.அபிநயா, படம்: ஆ.முத்துக்குமார்

அம்மாக்களின் ‘பணி’ப்போர்!

கே.அபிநயா, படம்: ஆ.முத்துக்குமார்

Published:Updated:
அம்மாக்களின் ‘பணி’ப்போர்!
பிரீமியம் ஸ்டோரி
அம்மாக்களின் ‘பணி’ப்போர்!
அம்மாக்களின் ‘பணி’ப்போர்!

`இங்கே தரையில் படுத்திருப்பது, குழந்தை அல்ல; என்னுடைய இதயம். அவனுக்குக் காய்ச்சல். அதனால் யாருடனும் அவனுக்குத் தங்கப் பிடிக்கவில்லை. மதியம் கடந்துவிட்டது. உடனடியாக லோன் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதால், என்னால் அரை நாள் விடுமுறைகூட எடுக்க முடியவில்லை. ஆனால், என்னால் என் மனதை ஒருமுகப்படுத்தி இரண்டு கடமைகளையும் சமாளிக்க முடியும். சட்டமன்றங்களில் தூங்கிக்கொண்டிருப்பவர் களுக்கு தகவல் சொல்வதற்காக மட்டுமே இதை எழுதுகிறேன்' - இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய, புனேவைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஸ்வாதி சித்தால்கரின் ஃபேஸ்புக் பதிவுதான் இது.

காய்ச்சலால் அவதிப்பட்ட குழந்தையை வீட்டில் வேலைக்காரர்களிடம் விட்டுவிட்டுவர முடியாமல், அலுவலகத்தில் விடுமுறையும் எடுக்க முடியாமல் அவர் பட்ட வேதனை வெறும் ஓர் உதாரணம் மட்டுமே. இன்று நம் வீட்டிலும் அலுவலகத்திலும் சொந்தங்களிலும் இப்படி இரண்டு கடமைகளையும் சரியாகச் செய்ய, கடுமையாகப் போராடும் பெண்கள் பல லட்சம் பேர் இருக்கிறார்கள்; வீட்டுப் பொறுப்புகளுக்கும் அலுவலகப் பணி அழுத்தங்களுக்கும் இடையில் உழல்கிறார்கள்.

பணிக்குச் செல்லும் இந்தியப் பெண்களில் 68 சதவிகிதம் பேர் வாழ்வியல் வியாதிகளான மனநிலைக் கலக்கம் (Anxiety), பயம், இயல்பாக இருக்க முடியாமை (Uneasyness), கையாள முடியாத உணர்ச்சிக் கொந்தளிப்பு (Hysteria), அலுவல் அழுத்தத்தால் உறவுகளைச் சரிவரக் கையாள முடியாமை, பணியிடச் சுமைகளைச் சமாளிக்க இயலாமை போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் வீடு, அலுவலகம் என இரு தரப்புகளில் இருந்தும் விலகிப்போகும் பெண்கள் நிறையப் பேர் என்கிறது மருத்துவ உலகம்.

``நான் சென்னையில் உள்ள வங்கியில் பணியாற்றுகிறேன். ஒருநாள் பணியில் இருந்தபோது, பள்ளியில் இருந்து வீடு திரும்பிய என் மகன், தனக்குக் காய்ச்சல் என போனில் சொன்னான். நான் `வீட்டில் இருந்த மாத்திரையின் பெயரைச் சொல்லி, அதைச் சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடு. நான் சீக்கிரமே வந்துவிடுகிறேன்' எனச் சொன்னேன்.  அலுவலகம் முடிந்ததும் ப்ளேஸ் கூலில் இருந்த என் மகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றேன். வெகுநேரம் காலிங் பெல் அழுத்தியும் என் மகன் கதவைத் திறக்கவில்லை. பயந்துபோய் பால்கனி வழியே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தால், அதிகக் காய்ச்சல் மற்றும் மாத்திரை தந்த மயக்கத்தால் தூங்கிவிட்டான். அந்த அரை மணி நேரம் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலை வார்த்தைகளால் சொல்ல முடியாது. பணிக்குச் செல்லும் ஒவ்வொரு தாயும் இதுபோன்ற கொடூர நிமிடங்களைக் கடந்திருப்பார்கள்.

வங்கியின் பெண் ஊழியர்களை, அவர்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கிளைகளில் பணியமர்த்த வேண்டும் என்பது அரசு விதி. கிடப்பில் கிடந்த இந்த விதி, மோடி அரசு பதவியேற்ற பின்னர் சுற்றறிக்கையாக எல்லா வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டது. ஆனாலும் பலன் இல்லை. வங்கி நிர்வாகங்கள், பெண்கள் நலனில் அந்த அளவுக்கு அக்கறையுடன் இருக்கின்றன. வீட்டுக்கு அருகில் உள்ள கிளையில் பணி அல்லது அலுவலகத்தில் குழந்தைக் காப்பகம் என இந்த இரண்டுமே எந்த வங்கியிலும் இல்லை என்பதுதான் வேதனை.

பெண் ஊழியர்களிடம் எட்டு மணி நேரத்துக்கு மேலும் வேலைவாங்கும் வங்கி நிர்வாகம், அவர்களைப் பணி நிரந்தரம் செய்வது இல்லை. அப்படிச் செய்தால், சென்னையில் இருக்கும் பெண்களை புதுச்சேரிக்கும், கோவையில் இருக்கும் பெண்களை மதுரைக்குமாகப் பணி மாறுதல் செய்து பந்தாடுவதுதான் வாடிக்கை. நம்பித்தான் ஆக வேண்டும்... சென்னையில் உள்ள சில தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலேயே பெண்களுக்கு என சுகாதாரமான தனிக் கழிவறை கிடையாது'' என்கிறார் வங்கி ஊழியரான பிரேமலதா.

அம்மாக்களின் ‘பணி’ப்போர்!

பணியிடங்களில் பெண்களுக்கு இருக்கும் உரிமை பற்றிய புரிதல் படித்து வேலைக்குச் செல்லும் பெண்களுக்கே இல்லை என்பதுதான் அதிர்ச்சி. டாய்லெட் வசதி, குழந்தைக் காப்பகம், பாலூட்டுவதற்கு நேரம் என்பது எல்லா அலுவலகங்களிலுமே இருக்கவேண்டியது கட்டாயம். ஆனால், இந்த உரிமைகள் எல்லாம் சலுகைகளாகப் பார்க்கப் பட்டு, அதற்காக பெண்கள் போராடவும் வேண்டியிருக்கிறது. பணியிடங்களில் குழந்தைக் காப்பகம் என்ற வசதி விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்கூட இல்லை.

ஆஸ்திரேலிய அரசாங்கம், தனியார் அமைப்புகளுடன் இணைந்து ஐந்து குழந்தைக்கு ஒரு காப்பாளர் என்ற விகிதத்தில் குழந்தைக் காப்பகங்களை இயக்குகிறது. ஆனால், இங்கே பணியிடங்களில் குழந்தைக் காப்பகம் இருக்க வேண்டும் என்ற சட்டம் வெறும் சட்டமாக மட்டுமே இருக்கிறது.

``பணியிடங்களில் குழந்தைக் காப்பகம் இருக்கவேண்டியது அவசியம். குறைந்தபட்சம் மூன்று குழந்தைகளுக்கு ஓர் ஆள் இருக்க வேண்டும். உணவு கொடுக்க வேண்டும். ஒரு செவிலியர் இருக்க வேண்டும். விளையாட்டுப் பொருட்கள் இருக்க வேண்டும். சுத்தமான இடம் அவசியம். பேறுகாலத்தில் தன் மனைவிக்கு உதவியாக இருக்க வேண்டும் என ஆண்களுக்கும் ஒரு மாதம் விடுப்பு இருக்கிறது. ஆனால், இது எதுவுமே நடைமுறையில் இல்லை'' என்கிறார் சமூகச் செயற்பாட்டாளர் ஷீலு. 

அம்மாக்களின் ‘பணி’ப்போர்!

குழந்தை பெற்றுக்கொள்ள தடை!

 ``ஐ.டி ஃபீல்டில், பணியாற்றும் நிறுவனங்களை அடிக்கடி மாற்றுவது சகஜம். அப்படித்தான் நானும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் மிகப்பெரிய ஐ.டி நிறுவனத்தில் நேர்முகத் தேர்வுக்காகச் சென்றிருந்தேன். நேர்காணலின்போது `தற்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இருக்கிறதா?' என நேரடியாகவே என்னிடம் கேட்டார்கள். நான் அதிர்ந்துபோனேன். பொதுவாகவே ஐ.டி நிறுவனங்களில் கான்ட்ராக்ட் முடிந்து பணி உறுதிசெய்யப்படும் நேரத்தில் அந்தப் பெண் கருவுற்று இருந்தால், பணி உறுதி செய்ய மாட்டார்கள். குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இருந்தால், பணிக்கு உத்தரவாதம் கிடையாது என இலைமறைக் காயாக உணர்த்துகிறார்கள். இதற்காகவே கருக்கலைப்பு செய்யும் பெண்கள் அதிகம். மகப்பேறு விடுமுறை முடிந்து மூன்று மாதங்கள் கழித்து பணியில் சேரும் பெண்களின் நிலை இன்னும் மோசம். அவர் பார்த்துக்கொண்டிருந்த வேலைக்கு புது ஆள் எடுத் திருப்பார்கள். மேலாளரிடம் கேட்டால் `நீங்க மெட்டர்னிட்டி லீவ் முடிஞ்சு நிச்சயம் ஜாயின் பண்ணுவீங்கங்கிறதுக்கு என்ன உத்திரவாதம்? அதான் இன்னொருத்தரை வேலைக்கு எடுத்தோம்' என்று கூலாகச் சொல்வார்கள். பேரன்ட்ஸ் மீட்டிங், குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போன்ற காரணங்களுக்காக அரை மணி, ஒரு மணி நேரம் அனுமதி பெற்றுச் செல்பவர்களிடம், அதற்கு இரண்டு மடங்கு நேர உழைப்பை வாங்குகிறார்கள்'' என்கிறார் சென்னை ராஜீவ் காந்தி சாலையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் ரம்யா.

மகப்பேறு சலுகைகள் மறுக்கப் பட்டதாக இதுவரை 1000-க்கும் குறைவான வழக்குகளே இந்திய நீதிமன்றங்களில் பதிவுசெய்யப் பட்டுள்ளன. `சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் குழந்தை பெற்றுக்கொண்ட பின்னர் வேலைக்குச் செல்லும் பெண்கள் 35 சதவிகிதத்துக்கும் குறைவு' என்கிறது சமீபத்திய ஆய்வு.

தனியார் அமைப்புகளில்தான் இந்த நிலை என்றால், அரசு பெண் ஊழியர்களின் நிலையும் மோசமாகவே இருக்கிறது. மத்திய அரசுப் பெண் ஊழியர்களுக்கு `குழந்தை நலன்' என்ற கூடுதல் விடுப்பை ஒதுக்கியிருந்தாலும், அபூர்வமாகவே அந்த விடுமுறையை எடுக்க முடியும். மாநில அரசுப் பெண் ஊழியர்களுக்கு அந்த விடுப்பு வசதியும் கிடையாது.

``அலுவலகப் பணிகளில் இருக்கும் பெண்களைவிட, வறுமை என்ற பிரச்னையையும் சேர்த்துச் சுமக்கிறார்கள் கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள். கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் பெண்கள், உள்ளூரில் வேலை என்றால் மேஸ்திரியின் அனுமதி கிடைத்தால், குழந்தையை வேலை நடக்கும் இடத்துக்கு அழைத்துவரலாம். அடுக்கப்பட்ட செங்கல், மணல் மூட்டைகள், குவிந்திருக்கும் ஜல்லி, திறந்துகிடக்கும் தண்ணீர் டிரம்கள் என இந்த ஆபத்துக்களுக்கு நடுவில் குழந்தையை இருத்திவிட்டு வேலைக்குச் செல்லும் பெண்களின் அவஸ்தை கொடூரமானது.

இத்தனை பிரச்னைகளையும் சமாளித்து ஆண்களுக்குச் சமமாக அந்தப் பெண்கள் உழைத்தாலும், அவர்களுக்கு சமமான சம்பளம் கொடுக்கப்படுவது இல்லை. பெரு நகரங்களில் ஆண்களுக்கு தினக்கூலி 500 ரூபாய் என்றால், பெண்களுக்கு 300 ரூபாய். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 30 லட்சம் கட்டடத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 30-40 சதவிகிதம் பெண்கள். இவர்களுக்கு அடிப்படைத் தேவையான கழிவறை இருக்காது. கட்டடம் கட்டும் இடத்தின் அருகில் பொதுக்கழிவறை இருக்க வாய்ப்பு இல்லைதான். ஆனால், இவர்களுக்கு மொபைல் டாய்லெட் ஏற்பாடு செய்து தருவது பற்றி எல்லாம் யோசிக்க யார் இருக்கிறார்கள்?'' என்கிறார் சிஐடியு மாநிலப் பொறுப்பாளர் மாலதி.

அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் நிலை இப்படி என்றால், நம்மிடையே நம் வீடுகளில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படும் பெண்களின் நிலையும் மோசமாகவே இருக்கிறது.
``வீட்டு வேலைக்குச் செல்லும் வீடுகளில் சிலர் குழந்தைகளை உள்ளே அனுமதிப்பார்கள். சிலர் வெளியே விடச் சொல் வார்கள். சில வீடுகளில், அவசரத்துக்குக்கூட கழிவறையைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டார்கள்'' என்கிறார் சென்னை அண்ணாநகரில் வீட்டு வேலை செய்யும் கலா.

``என் ஏழு வயதுப் பெண் குழந்தைக்கு அன்று உடல்நிலை சரியில்லை என்பதால், நான் வேலைபார்க்கும் வீட்டுக்கு என்னுடன் அழைத்துச் சென்றிருந்தேன். அவர்கள் சொன்னபடி அவளை பார்க்கில் உட்காரச் சொல்லிவிட்டு, நான் வேலைபார்க்கச் சென்றுவிட்டேன். எதேச்சையாக வந்து பார்த்தபோது, அந்த வீட்டுத் தாத்தா என் குழந்தையிடம் தவறாக நடக்க முயற்சி செய்துகொண்டிருந்தார். அதைப் பார்த்தபோது என் உடலில் ஏற்பட்ட நடுக்கமும் பதற்றமும் இன்னும் என்னை விடவில்லை. சத்தம்போட்டுவிட்டு அங்கு இருந்து கிளம்பிவிட்டேன். அவர்களைப் பொறுத்தவரை வீட்டு வேலைக்கு வரும் பெண்களுக்கு சுயமரியாதை, தற்காப்பு உணர்வு எதுவும் இருக்கக் கூடாது” என்று கலங்குகிறார் கலா.

``பணிக்குச் செல்லும் பெண்கள் குடும்பப் பொறுப்புகளில் சிறிது தவறினாலும், வீடும் சமூகமும் அவர்களுக்கு குற்றவுணர்ச்சியைத்தான் கொடுக்கின்றன. இன்னொரு பக்கம் கடந்த 10-15 ஆண்டுகளில் அலுவலக உயர் பொறுப்புகளை பெண்கள் எட்டியிருந்தாலும், நிர்வாகரீதியாக சரி, தவறுகளைப் பேச முடியாத சூழலில்தான் இருக்கிறார்கள். சாலையில் ஸ்கூட்டரில் பெண் ஓவர்டேக் செய்வதையே தாங்க முடியாத ஆண் மனம், அலுவலகத்தில் தனக்குப் போட்டியாக வரும் பெண்ணை வீழ்த்த, கோழைத்தனமாக, அவர் ஒழுக்கத்தைத் தவறாகப் பேசுவதை ஆயுதமாக எடுக்கிறது.

கல்வி மறுக்கப்பட்ட காலத்தில், பள்ளிக்குச் செல்ல பெண்கள் போராடினார்கள். வேலைக்குச் செல்ல அனுமதிக்காத காலத்தில் குடும்பத்துடனும் சமூகத்துடனும் அதற்காகப் போராடி வெற்றிபெற்றார்கள். ஆனால், இன்று படித்து வேலைக்குச் செல்லும் பெண்கள் எதற்காகவும் போராடத் தயாராக இல்லை என்பதுதான் நிதர்சனம். `ரெஸ்ட் ரூம் போகணும்' என்பதையே வெளிப்படையாகக் கேட்கக் கூச்சப்படும் பெண்கள், குழந்தைகள் காப்பகம் வேண்டும் என எப்படிப் போராடுவார்கள்; பொதுக் கழிவறைகளுக்கு எப்படிப் போராடுவார்கள்?'' எனக் கேள்வி எழுப்புகிறார் சமூகச் செயற்பாட்டாளர் ஓவியா.

பெண்கள் அதிக அளவில் வேலைபார்க்கும் இந்தக் காலகட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டே ஒரு பெண் குழந்தையைப் பெற்றுக்கொள்ளவும், அதை வளர்க்கவும் படும் போராட்டங்களை சும்மா உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பதில் நியாயம் இல்லை. தமிழ்நாட்டை ஆறாவது முறையாக ஆட்சிசெய்யும் பெண் முதலமைச்சர் கருணையோடு கவனிப்பாராக!