Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 14

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 14
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 14

ம.செந்தமிழன், படங்கள்: வி.பால் கிரேகோரி

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 14

ம.செந்தமிழன், படங்கள்: வி.பால் கிரேகோரி

Published:Updated:
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 14
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 14
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 14

ரபு குறித்து பேசும்போது எல்லாம் நானும் என்னைப் போன்றோரும் எதிர்கொள்ளும் குற்றச்சாட்டு, ‘நீங்கள் பேசுவது எல்லாம் மூடநம்பிக்கைகள்’ என்பதுதான். மரபுக் கொள்கைகளும் தொழில்நுட்பங்களும் `சோதித்து அறியாமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றப்படுகின்றன’ என்பது நவீனர்களின் வாதம். பன்னாட்டு நிறுவனங்களாலும், முதலாளிய மற்றும் பொதுவுடைமைக் கொள்கைகளைப் பின்பற்றும் அரசுகளாலும் முற்றும் முழுதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள ஓர் உணவுத் தொழில்நுட்பத்தை, இந்தக் கட்டுரையில் வைக்கிறேன்.

`தொழில்நுட்பங்கள் எல்லாம் எனக்குத் தெரியாது; தெரிந்துகொள்ளவேண்டிய தேவையும் எனக்கு இல்லை’ என்று நீங்கள் ஒதுங்கக் கூடாது. ஏனெனில், ஒரே ஒரு சொட்டு எண்ணெய் ஊற்றி ஒரு தோசை வார்த்தால்கூட அந்த ஒரு சொட்டு எண்ணெய் ‘தயாரிக்கப்படும்’ முறையைத் தெரிந்துகொள்ளவேண்டிய உரிமையும் கடமையும் உங்களுக்கு உண்டு.

சூரியகாந்தி, சோயா, தவிடு உள்ளிட்ட பல்வேறு தாவர எண்ணெய்களின் தொழிற்சாலை நுட்பங்களை முதலில் சுருக்கமாக அறிமுகப் படுத்துகிறேன்.

1. எண்ணெய் வித்துக்களை ஆலையில் கொட்டி ஆட்டும்போது, அவற்றுடன் ஹெக்ஸேன் (hexane) கலக்கப்படுகிறது. வித்துக்களில் இருந்து பிழியப்படும் எண்ணெயின் அளவை அதிகரிப்பது, இந்தக் கலப்புக்கான முதல் நோக்கம். இந்த வேதிப்பொருள் மனித உடலில் கூடுதலாகச் சேர்ந்தால் உருவாகும் நோய்களின் பட்டியல் இது. நினைவிழந்து விழுதல், அடிவயிற்றில் கோளாறுகள், மயக்கம், மந்தம், வாந்தி, குமட்டல் மற்றும் பல்வேறு மூளை நரம்பியல் கோளாறுகள்.

2. எண்ணெய் ஆட்டும்போது, எண்ணெய் வித்துக்களின் சக்கைகள் உருவாகும் அல்லவா? அந்தச் சக்கைகளையும் எண்ணெயையும் பிரிப்பதற்காகவும், அந்தச் சக்கைகளில் மிச்சம் மீதியிருக்கும் எண்ணெயைப் பிழிந்து எடுப்பதற்காகவும் கலக்கப்படும் வேதிப்பொருள்... பாஸ்பேட் (phosphate). இந்த வேதிப் பொருளின் அளவு உடலில் மிகுந்தால் வரக்கூடிய நோய்களின் பட்டியலை எழுதினால் பக்கங்கள் போதாது. `பக்கவாதம் உருவாகி விரைவில் உயிர் பிரியும் ஆபத்து உண்டு’ என்பது அவற்றில் ஒன்று.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 14

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

3. மேற்கண்ட நிலைகளைக் கடந்த எண்ணெயில் தண்ணீர் கலக்கப் படுகிறது. ஏற்கெனவே கலக்கப்பட்ட வேதிப் பொருட்களைச் சுத்திகரிப் பதற்காக இந்தச் செயல்முறை.

4. சோடியம் கார்பனேட் அல்லது சோடியம் ஹைட்ராக்சைடு கலத்தல் நான்காவது நிலை. எண்ணெயில் உள்ள கொழுப்பு, மெழுகு, பாஸ் போலித்திக் எனும் வேதி நுண் பொருட்கள் உள்ளிட்டவற்றை நீக்குவது இந்தப் பணியின் நோக்கம். இந்தச் செயலுக்குப் பின்னர் வெளியே வரும் எண்ணெய், அடர்த்தி குறைந்ததாக, நிறம் அற்றதாக இருக்கும். பிசுபிசுப்பற்ற, பளிச் வெண்மை நிறத்திலான எண்ணெய்களை விளம்பரங்களில் கண்டுகளிக்கிறீர்கள் அல்லவா... அந்த நிலை வருவதற்காகச் செய்யப்படும் செயல்தான் இது.

அமெரிக்க மருத்துவத் துறையின் அறிக்கைச் சுருக்கத்தை இங்கே குறிப்பிட வேண்டும். `சோடியம் ஹைட்ராக்சைடின் அளவு உடலில் அதிகரித்தால் உருவாகக்கூடிய நோய்கள் ஒவ்வோர் உறுப்புக்கும் தனித்தனியாகப் பட்டியலிடும் அளவுக்கானவை. நுரையீரல் – மூச்சுத்திணறல், நுரையீரல் வீக்கம். வயிற்றுப் பகுதி – மலத்தில் ரத்தம், உணவுக்குழாயில் புண்கள், பேதி, வாந்தி மற்றும் குமட்டல், அடிவயிற்றில் கடுமையான வலி. இதயம் மற்றும் ரத்த மண்டலம் – இதயச் செயலிழப்பு, குறைந்த ரத்த அழுத்தம், ரத்தத்தில் அமிலத்தின் அளவு மாறிவிடுதல், அதிர்ச்சி. இன்னும் நிறைய நோய்களை அந்த அமைப்பு பட்டியலிட்டுள்ளது.

5. எண்ணெயை வெளுத்தல் (bleaching) அடுத்த நிலை. இந்த நிலையில், எண்ணெயில் கரிமங்கள் (carbon) கலக்கப்படுகின்றன. கரிமங்களுக்கும் புற்றுநோய்களுக்குமான உறவு பிரிக்கவே இயலாதது என்பதையும் நவீன அறிவியல்தான் கூறிக்கொண்டுள்ளது.

6. இதன் அடுத்த நிலை, நாற்றம் நீக்குதல். மேற்கண்ட செயல்களை எல்லாம் செய்தால், அந்த எண்ணெயில் இருந்து மணமா வீசும்? குறிப்பாக, சூரியகாந்தி எண்ணெய் என்றால், அதில் சூரியகாந்தி விதையின் மணமாவது இருக்க வேண்டும் அல்லவா! ஆனால், இவ்வளவு வேதிப்பொருட்களைக் கலந்தால், அந்த எண்ணெய் துர்நாற்றம்தான் அடிக்கும். இதை நீக்க வேண்டும் என்பதற்காகச் செய்யப்படும் இந்தச் செயல்முறையை, உலகின் பல்வேறு உடல்நல அமைப்புகள் கடுமையாகக் கண்டிக்கின்றன. மிக அதிகமான வெப்பத்திலும் மிகக் கடுமையான அழுத்தத்திலும் எண்ணெயைக் கொதிக்கச் செய்வதுதான் இதன் தொழில்நுட்பம். பல எண்ணெய் நிறுவனங்கள், ஏறத்தாழ 220 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் கொதிக்கவைக்கின்றன. நாம் சந்திக்கும் அதிகபட்ச வெயில் 40 டிகிரி என்பதை மனதில்கொண்டு, எண்ணெய் கொதிக்கும் வெப்பநிலையைப் புரிந்துகொள்ளுங்கள்.

இவை அனைத்துக்கும் மேலாக, கூடுதலாக இரண்டு கலப்புகள் செய்யப்படுகின்றன. ஒன்று, எண்ணெயின் அலமாரி ஆயுளை அதிகரிக்கச் செய்யும் வேதிப்பொருள். அதாவது, எண்ணெய் ‘கெட்டுப்போகாமல்’ இருப்பதற்காகக் கலக்கப்படும் பொருள். அதன் வேதிப்பெயர் டெர்சியரி பியூடில் ஹைட்ரோ குவினினோன் (tertiary butylhydroquinone). இதை TBHQ – 319 என அழைப்பது, உணவுத் தொழில்நுட்பத் துறையின் வழக்கம்.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து மேலாண்மை அமைப்பு (FDA –FOOD AND DRUG ADMINISTRATION), இந்த வேதிப்பொருளைப் பற்றி கூறும் சேதியை அழுத்தமாக உள்வாங்கிக்கொள்ளுங்கள். ‘மனித உடலின் ஒரு கிலோ எடையில் இந்த TBHQ-வின் அளவு வெறும் 0.02 மி.லி கிராம் மட்டுமே இருக்க வேண்டும். இதற்கு மேல் அந்த வேதிப்பொருள் அதிகரித்தால், மனித உடலால் அதைத் தாங்கிக்கொள்ள இயலாது.’

எண்ணெயைச் சட்டியில் ஊற்றும்போது நுரைத்தால், உங்களுக்குப் பிடிக்காது அல்லவா! அவ்வாறு நுரைக்காமல் இருப்பதற்காகக் கலக்கப்படும் வேதிப்பொருளையும் தெரிந்துகொள்ளுங்கள். பாலி டைமெதில் சிலாக்ஸேன் (poly dymethil siloxane) என்பது அதன் பெயர்.

எண்ணெயில் மட்டும் அல்ல, பல்வேறு உணவுப் பொருட்களில் இந்த பாலி டைமெதில் சிலாக்ஸேன் கலக்கப்படுகிறது என்பதையும் குறித்துக்கொள்ளுங்கள். இதனால் உருவாகும் நோய்களில் முக்கியமானவையாக, கல்லீரல் நஞ்சாகுதல், குழந்தையின்மை, நுரையீரல் நோய்கள், தோல் நோய்கள் என பன்னாட்டு நல அமைப்புகள் குறிப்பிடுபவை.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 14

எண்ணெயை தோசையில் ஊற்றும்போது ஒருவகையான மினுமினுப்பு கிடைப்பதற்கும் பாலி டைமெதில் சிலாக்ஸேன்தான் காரணம்.

எண்ணெய்ப் புட்டிகளிலும் உறைகளிலும் மிகவும் சிறிய எழுத்துக்களில் அச்சிடப் பட்டிருக்கும் இந்த வாச கத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், ‘Avoid from Heat and Light’. `வெப்பம் மற்றும் வெளிச்சத்தில் வைக்காதீர்கள்’ என அந்த நிறுவனங்கள் உங்களிடம் கூறுகின்றன. இந்தத் தகவல் எதற்காக என்றால், வெப்பமும் வெளிச் சமும் இந்த எண்ணெய்கள் மீது செயல்பட்டால், அவற்றின் மூலக்கூறுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் உருவாகும். குறிப்பாக, பாலி டைமெதில் சிலாக்ஸேனின் மூலக்கூறுகள் அனைத்தும் மனித உடலுக்கு மோசமான விளைவுகளை உருவாக்கத்தக்க மூலக்கூறு நிலைக்கு (Formaldehyde ) மாற்றம் அடைந்துவிடும். அதன் பின்னர் அந்த எண்ணெயை உணவுக்குப் பயன்படுத்துவது அபாயகரமான விளைவுகளை உருவாக்கும்.

உணவு எண்ணெய் நிறுவனங்களின் தொழிற் சாலைகளுக்குள் நடக்கும் ‘சட்டப்படியிலான’ நடவடிக்கைகளை மட்டும்தான் நான் இங்கே குறிப்பிட் டுள்ளேன். இங்கே சட்டங் களும் நடைமுறைகளும் நவீனத்தின் வெறித்தனங் களுக்குக் கட்டுப்பட்டவை யாக வடிவமைக்கப்படு கின்றன. சட்டத் துறையில் இருக்கும் வல்லுநர்களுக்கு இந்த நவீனத் தொழில்நுட் பங்கள் மிகவும் அந்நிய மானவை. அவர்களால் இந்த வேதிப் பொருட்களையும் அவற்றால் உருவாகும் குரூர விளைவுகளையும் முழுமையாகப் புரிந்துகொள்ளக்கூட முடியாது. ஆகவே, நீதித் துறை, சட்டத் துறை ஆகியவை எல்லாம் இந்த அவலத்தைப் போக்கும் என நீங்கள் நம்பிக் கொண்டிருக்க வேண்டாம்.

நல்லெண்ணெயில் எள் இருக்க வேண்டும், கடலை எண்ணெயில் கடலை இருக்க வேண்டும், விளக்கெண்ணெயில் ஆமணக்கு இருக்க வேண்டும் – இவ்வளவுதான் நமது மரபுத் தொழில்நுட்பம். நமது செக்குகள் யாவும் வெளிப்படையாக இருந்தன. மக்கள் தமது தோட்டங்களில் விளைந்த பொருட்களை எடுத்துச் சென்று கண் எதிரே சுழலும் செக்கில் எண்ணெய் ஆட்டிக்கொண்டு திரும்பினர்.

`மரபு எண்ணெய்களில் கொழுப்பு உள்ளது. அது இதயத்தைப் பாதிக்கும்’ என்ற அச்சுறுத்தலை வெற்றிகரமாகச் செய்தன எண்ணெய் நிறுவனங்கள். இதற்குச் சாதகமான பல்வேறு அறிக்கைகளைத் தயாரித்து வெளியிட்டார்கள் அவற்றின் ஆதரவாளர்கள். குறிப்பாக, அலோபதி மருத்துவ வல்லுநர்கள் இந்த எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டார்கள். ‘சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை மட்டும் பயன்படுத்துங்கள்’ என்ற அறிவுரையை, பெரும்பாலான இதய நோய் மருத்துவர்கள் இப்போதும் வழங்கிவருகின்றனர்.

எண்ணெய் தயாரிப்பின் ஒவ்வொரு படிநிலையும் உருவாக்கிக்கொண்டுள்ள நோய்களை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். கடந்த 30 ஆண்டுகளில் பெருகியுள்ள இதய நோயாளிகள், மூளை நரம்பியல் நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், புற்றுநோயாளிகள், நுரையீரல் நோயாளிகள் எண்ணிக்கைக்கும் எண்ணெய்களில் கலக்கப்படும் பொருட்களுக்குமான உறவை நவீன மருத்துவத்தின் வழியாகவே நம்மால் நிறுவ முடியும்.

ஆனால், கடந்த காலத்தில் நம் சமூகத்தில் பயன்படுத்தப்பட்ட செக்கு எண்ணெய்களால்தான் இதய நோய்கள் அதிகரித்தன என்பதை நவீன மேதைகளால் நிறுவ முடியுமா?

நல்லெண்ணெய், கடலை எண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், புங்கன் எண்ணெய் ஆகியவை நம் மரபில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. ஆமணக்குக் கொட்டைகளை நீரில் கொதிக்கவைத்து எண்ணெயைப் பிரித்து எடுக்கும் தொழில்நுட்பம் நம் கிராமங்களில் இப்போதும் உள்ளது. இரும்புச் செக்கில் ஆட்டினால்கூட எண்ணெயில் வெப்பம் ஏறிவிடும் என்பதால், மரச் செக்கைப் பயன்படுத்திய அறிவார்ந்த மரபின் பிள்ளைகள் நாம். மரச் செக்கிலும் எந்த மரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற விதிகள் உள்ளன. குறிப்பாக, வாகைமரங்கள் மரச் செக்கு செய்ய சிறந்தவை. இந்த மரங்களின் இலகுத்தன்மை, உறுதி, சுவை மற்றும் குளிர்ச்சி ஆகியன செக்குக்கு உகந்தவை.

நவீன வெறிகொண்டு வேதிப் பொருட் களைக் கலப்பதும் பின்னர் ‘வெப்பமும் வெளிச்சமும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்’ என எச்சரிப்பதுமான மூடத்தனம் நம்மிடம் இல்லை. எண்ணெய் ஆட்டும்போதே அதன் மிதமான வெப்ப நிலையை நாம் உறுதிசெய்கிறோம்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 14

நாம்தான் உண்மையான அறிவாளிகள். நவீனத்தின் இந்த உணவுத் தொழில் நுட்பங்கள்தான் உண்மையான மூடநம்பிக்கைகள்.

இப்போது மரச் செக்குகள் மிகுந்து கொண்டுள்ளன. இந்தத் துறையிலும் பேராசைப் பிசாசுகள் உண்டு. மேலும் பல பூதங்கள் இந்தத் துறைக்குள் நுழையும் ஆபத்தும் உண்டு. ஆகவே, `மரச் செக்கு என்றாலே அது சிறப்பானதுதான்’ என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையில் விழாதீர்கள். எல்லா செக்குக் காரர்களிடமும் வெளிப்படைத்தன்மையைக் கோருங்கள். அனைத்து செக்குக்காரர்களையும் கண் எதிரே எண்ணெய் ஆட்டச் சொல்லுங்கள். ஏற்கெனவே அடைத்துவைக்கப்பட்ட எண்ணெய்ப் புட்டிகளை வாங்கும் முன்னர், விற்பனையாளர் மற்றும் உற்பத்தியாளரைப் பற்றி மிக நன்றாக அறிந்துகொள்ளுங்கள்.

ஏதேனும் வேதிப் பொருட்களின் கணக்குகளை அச்சிட்டுவைத்தால், அவற்றை அப்படியே நம்பிவிட வேண்டும் என்ற மூடநம்பிக்கையை நவீனம் விதைத்துள்ளது. நாம் பல்லாயிரம் ஆண்டுகால மெய்யறிவுச் சமூகத்தின் தொடர்ச்சிக் கண்ணிகள். நம்மால் அனைத்தையும் புரிந்துகொள்ள முடியும்.

மிக எளிதாக நம் மரபுக்குத் திரும்பிவிட முடியும்!

 - திரும்புவோம்...