Published:Updated:

“கூத்துக்கு அழிவே கிடையாது!”

“கூத்துக்கு அழிவே கிடையாது!”
பிரீமியம் ஸ்டோரி
“கூத்துக்கு அழிவே கிடையாது!”

க.பாலாஜி, படங்கள்: மீ.நிவேதன்

“கூத்துக்கு அழிவே கிடையாது!”

க.பாலாஜி, படங்கள்: மீ.நிவேதன்

Published:Updated:
“கூத்துக்கு அழிவே கிடையாது!”
பிரீமியம் ஸ்டோரி
“கூத்துக்கு அழிவே கிடையாது!”
“கூத்துக்கு அழிவே கிடையாது!”

காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு செல்லும் வழியில், பாலாற்றுக் கரையில் இருக்கிறது புஞ்சையரசன்தாங்கல், கட்டைக் கூத்து குருகுலப் பள்ளி.

கல்யாண முருங்கைமரத்தால் ஆன கனத்த ஆபரணங்களை அணிந்துகொண்டு, துரியோதனனாக, துச்சாதனனாக, தர்மனாக, கர்ணனாகக் களத்தில் இறங்கி பாடி ஆடுவதுதான் கட்டைக்கூத்து. பெரும்பாலும் மகாபாரதக் கதைகளைத்தான் நிகழ்த்துவார்கள். ஒரு காலத்தில் எங்கு எல்லாம் திரௌபதை அம்மன் கோயில் இருக்கிறதோ, அங்கு எல்லாம் விடியவிடிய கட்டைக் கூத்து நடக்கும்.  சினிமா, கிராமத்துத் திருவிழாக்களைக் கபளீகரம் செய்த பிறகு, கட்டைக் கூத்து போன்ற தொன்மக் கலைகள் நசியத் தொடங்கின.

அந்த நேரத்தில்தான் கட்டைக் கூத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினார் பெருங்கட்டூர் ராஜகோபால். கட்டைக் கூத்து சங்கத்தைத் தொடங்கியவர், கட்டைக் கூத்துப் பயிற்சி அளிப்பதற்கு என்றே தனியாக உண்டு உறைவிடப் பள்ளியை ஆரம்பித்தார். அந்தப் பள்ளியில் பயின்று, இன்று தமிழ்நாடு முழுவதும் பலநூறு கூத்துக்கலைஞர்கள் கட்டைக் கூத்தைச் சுமந்துதிரிகிறார்கள்.

கட்டைக் கூத்து குருகுலப் பள்ளியைச் சுற்றிலும் வகை வகையான மரங்கள், வளாகத்தின் நடுவே செடி, கொடி களுடன்கூடிய சிறிய முற்றம், சுவர்களில் ஆங்காங்கே மாணவர்கள் வரைந்த கிறுக்கல் ஓவியங்கள். பள்ளியின் முற்றத்தில் இருந்து பலத்த கைதட்டல் சத்தம். மொத்த மாணவர்களும் முற்றத்தில் இருக்கும் திறந்தவெளி அரங்கத்தில் குழுமியிருக்கிறார்கள். அன்று ராஜகோபாலின் மனைவி ஹென்னாவுக்குப் பிறந்தநாள். `பிறந்தநாள் வாழ்த்துகள் பாட்டி' என்று அரங்கு தெறிக்க மாணவர்கள் உற்சாகக் குரல் எழுப்பி வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள். ஹென்னா, நெதர்லாந்தைச் சேர்ந்தவர். கூத்து பற்றிய ஆய்வுக்காக தமிழ்நாடு வந்தவர், ராஜகோபாலைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.

 ``பெருங்கட்டூர்ங்கிற கிராமம்தான் எங்க பூர்விகம். என் அப்பா பொன்னுச்சாமி வாத்தியார். ரொம்பப் பிரபலமான கூத்து வாத்தியார். தாத்தாவுக்கும் கூத்துதான் வாழ்க்கை. எனக்கு சின்ன வயசுல இருந்தே கூத்து மேல ஆர்வம். ஆறாவதோடு படிப்பை நிறுத்திட்டு, கூத்துக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். நாற்பது வருஷம் ஆச்சு. தமிழ்நாடு மட்டும் இல்லாம, ஐரோப்பா முழுவதும் போய்க் கூத்தாடிட்டு வந்துட்டேன்.

“கூத்துக்கு அழிவே கிடையாது!”

குறைஞ்சபட்சம் வருஷத்துக்கு 150 கூத்துகள்ல நடிப்பேன். கூத்துல நடிக்கிறதுக்கு சில தகுதிகள் இருக்கு. முதல்ல எந்தப் பாத்திரத்தை ஏத்துக் கிட்டாலும் அதுவாவே மாறிடணும். அர்ப்பணிப்போடு இருக்கணும். மனசு சுத்தமா இருக்கணும். எந்தக் கிராமத்துல கூத்து போட்டாலும் அந்த மக்களுக்கு என்ன பிடிக்கும்னு விசாரிச்சுட்டுத்தான், என்ன கதைக்கு ஆடலாம்னு யோசிப்பேன். கூத்துல ஓரளவுக்கு நிறைவடைஞ்ச எனக்கு, படிப்பு மேல இருக்கிற ஆசை இப்பவும் குறையலை. அதனாலதான் ஒரு பள்ளியை ஆரம்பிக்கணும்கிற ஆர்வம் வந்தது. கூத்தையும் திரும்ப மீட்டுருவாக்கம் பண்ணணும். கலைஞர்களுக்கு நம்பிக்கை உருவாக்கணும். அதனாலதான் இதைக் குருகுலமா உருவாக்கினேன்.

2002-ம் ஆண்டுல, நானும் ஹென்னாவும் சேர்ந்து இந்தக் குருகுலத்தை ஆரம்பிச்சோம். இதுவரைக்கும் 600 பேர் படிப்பை முடிச்சுட்டுப் போயிருக்காங்க. இப்போ 52 குழந்தைங்க படிக்கிறாங்க.

எல்லோருக்குள்ளேயும் ஒவ்வொரு வகையான திறமை ஒளிஞ்சுகிடக்கு. அதைக் கண்டுபிடிச்சு வெளிக்கொண்டு வர்றதுதான் எங்க வேலை. முதல்ல பள்ளிப்படிப்பு. தவிர, ஓவியம், விவசாயம், கைத்தறி, கைவினைப் பொருட்கள் செய்றது, ஜிம்னாஸ்டிக்ஸ்னு ஒவ்வொண்ணையும் அந்தந்தத் துறை நிபுணர்களை வெச்சு சொல்லித்தர்றோம். நிறைய வெளிநாட்டு ஆசிரியர்களும் இங்கே வந்து தங்கி வகுப்பு எடுப்பாங்க. கூத்துக் கலைஞர்களும் வருவாங்க. மாணவர்கள் ரொம்ப ஆர்வமா கத்துக்கிறாங்க. அவங்களோட கூத்தைக் கண்கொட்ட விழிச்சிருந்து ரசிச்சுப் பார்க்க இங்கே பெரிய மக்கள் கூட்டமே இருக்கு. அதைப் பார்க்கும்போது, `கூத்துக்கு அழிவே கிடையாது'ங்கிற நம்பிக்கை அதிகரிச்சுக்கிட்டே இருக்கு'' என உணர்ச்சிபூர்வமாகப் பேசுகிறார் ராஜகோபால்.

“கூத்துக்கு அழிவே கிடையாது!”

8-ம் வகுப்பு வரை பள்ளிக்கல்வியை வழங்கும் குருகுலத்தில், மொத்தம் 12 ஆசிரியர்கள் இருக்கிறார்கள். கூத்து பயிற்றுவிக்க மட்டும் 8 ஆசிரியர்கள். அரசு அனுமதி பெற்ற உண்டு உறைவிடப் பள்ளியாக இது செயல்படுகிறது. எல்லா மாணவர்களுமே கூத்தில் பங்கேற்கிறார்கள். சகல வேடங்களிலும் அசத்துகிறார்கள்.

“கூத்துக்கு அழிவே கிடையாது!”

“இங்கே, `படி... படி..!'னு போட்டு வதக்க மாட்டாங்க. வரையலாம், பாட்டு பாடலாம், நடனம் ஆடலாம், தெரியாத விஷயங்களை பயமே இல்லாம கேட்டுத் தெரிஞ்சுக்கலாம். கூத்துன்னா எனக்கு உயிர். கட்டியங்காரன் பண்ற சேட்டை எல்லாம் ரொம்பப் பிடிக்கும். எனக்கும் கட்டியங்காரன் ஆகணும்னு ஆசை. சில நேரங்கள்ல, இங்கே போடுற கூத்துகள்ல அரசனுக்குக் காவல்காரனா நிறுத்திடுவாங்க. சில நேரம் கட்டியங்காரன் வேஷம் கிடைக்கும். கட்டியங்காரன் கத்துக்கிட்டு, அடுத்ததா கட்டவேஷம் போடப் பழகணும்'' என்று கனவுகளை விரிக்கும் இன்பரசன், ஏழாம் வகுப்பு மாணவன்.

குருகுல மாணவர்களோடு ஒன்றி அவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கும் பிரிட்டா, அமெரிக்காவைச் சேர்ந்தவர்; தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டும் கூட.

“கூத்துக்கு அழிவே கிடையாது!”

``கட்டைக் கூத்து மாதிரி கலர்ஃபுல்லான, உயிரோட்டமான கலை வேற எதுவும் இல்லை. இங்கே வர்றவரைக்கும் கட்டைக் கூத்தும் நவீன நாடகம்போல ஒரு கலைனுதான் நினைச்சேன். இங்கு இருக்கும் கலைஞர்களோட அர்ப்பணிப்பையும் ஆவேசத்தையும் பார்த்து வியந்துட்டேன்'' என்கிறார் பிரிட்டா.

“கூத்துக்கு அழிவே கிடையாது!”

மணி மதியம் 3. அரங்கு அமைதியாகிறது. ஹார்மோனியம், நாகஸ்வரம், மிருதங்கம் உயிர்பெற, இருவர் திரை பிடித்து நிற்க, கட்டியங்காரனாக வந்து நிற்கிறான் இன்பரசன்.

தொடங்குகிறது கட்டைக் கூத்து...
“வந்தேனிதோ என்னைப் பாருங்க...
கட்டியங்காரன் வாரானே என்னைப் பாருங்க...
கட்டியங்காரன் அழகான ஆடையுடுத்தி
தாகிட தாகிட தாகிட தாம்
தாகிட தாகிட தாகிட தை...'’