Published:Updated:

ஏரிகளின் மேல் புற நகரங்கள்!

ஏரிகளின் மேல் புற நகரங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஏரிகளின் மேல் புற நகரங்கள்!

கே.பாலசுப்ரமணி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

ஏரிகளின் மேல் புற நகரங்கள்!

கே.பாலசுப்ரமணி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
ஏரிகளின் மேல் புற நகரங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஏரிகளின் மேல் புற நகரங்கள்!
ஏரிகளின் மேல் புற நகரங்கள்!

வீட்டைவிட்டு கீழே இறங்கினால் சூப்பர் மார்க்கெட், வளாகத்துக்குள்ளாகவே டென்னிஸ் கோர்ட், ஜிம், நீச்சல்குளம் என சுகவாசிகளாக இருந்தவர்களின் வாழ்க்கையை, கடந்த ஆண்டின் நவம்பர், டிசம்பர் மாத மழை புரட்டிப்போட்டுவிட்டது. முதல் தளம் வரை மழைநீரில் தத்தளித்தன. வீட்டில் இருந்து சில அடி தூரத்தைக் கடக்கவே படகில் பயணித்து வெள்ளத்தில் இருந்து மீண்டு வந்தார்கள்.

`இந்தப் புறநகர் பகுதியில இனி இருக்க முடியாது. தண்ணி இல்லாம, சாப்பாடு இல்லாம பட்டினியோட உயிர் பிழைச்சதே பெரிய விஷயமாப்போச்சு' என, தங்களது பரிதவிப்பையும் வேதனையையும் பதிவுசெய்தார்கள்.

புறநகர்களில் நீர்நிலைகளின் ரத்தநாளங்களாக இருக்கும் ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால்தான் மக்கள் துயரத்தின் எல்லைக்குச் செல்ல நேர்ந்தது. ஆடு, மாடுகளைக் கூறுபோடுவதுபோல நீர்நிலைகளும் விளைநிலங்களும் மனைகளாகக் கூறுபோடப்பட்டன. `லேக் வியூ' எனச் சொன்னவர்கள், இறுதியில் லேக்கிலேயே வீடுகளைக் கட்ட பட்டா போட்டனர்.
ஒருகாலத்தில் விவசாயம் செழித்த வயல்களின் மீதுதான் நாம் வாழ்கிறோம் என்பதுகூட அறியாமல், பலிகடாக்கள் ஆனது மக்கள்தான்.

பிரச்னை, அரசுக்குத் தெரியுமா?

ஆதனூரில் தொடங்கும் அடையாறு ஆறு, தாம்பரம் புறநகரில் தொடங்கும் பாப்பான் கால்வாய் இரண்டும் தாம்பரம் புறநகர் பகுதிகள் வழியே பயணிக்கும் முக்கியமான நீர் ஆதாரங்கள். இந்த இரண்டு நீர்வழிகளும் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியிருந்ததுதான் புறநகரின் தத்தளிப்புக்குக் காரணம்.

ஆதனூர் ஏரியில் தொடங்கும் அடையாறு, வாலாஜாபாத்-ஒரகடம் சாலையைக் கடந்து, மணிமங்கலம் சாலையைக் கடந்து, வரதராஜபுரம், ராயப்பா நகர், மதனபுரம் பகுதிகளுக்கு அருகே அடையாற்றின் இன்னொரு கிளையில் சென்று சேர்கிறது. தாம்பரம் புறநகர் பகுதிகள் வழியே பயணிக்கும் அடையாறு பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு ஒரு கால்வாயைப்போலவே இருக்கிறது. ஓர் ஆற்றுக்கான அறிகுறியே இல்லை. அந்த அளவுக்கு ஆற்றை ஆக்கிரமித்திருக் கிறார்கள்.  

``1976-ல் அரசு ஊழியர் சங்கங்களுக்காக இங்கு வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அதற்கான லே-அவுட் என்னிடம் இருக்கிறது. அரசு ஊழியர்களிடம் இருந்துதான் ரியல் எஸ்டேட்காரர்கள் மனைகளை வாங்கி வீடுகளைக் கட்டியிருக்கின்றனர். எங்கள் பகுதியைச் சுற்றித்தான் அடையாறு போகிறது. கடந்த ஆண்டு மழையின்போது ஒரு தீவுப் பகுதிபோல உள்ளே சிக்கிக்கொண்டோம். வீட்டைவிட்டு வெளியே வர முடியவில்லை. முதல் மழைக்கு வீட்டுக்குள் மூன்று அடி அளவுக்குத் தண்ணீர் வந்தது. இரண்டாவதாக டிசம்பர் 1-ம் தேதி மழை பெய்தபோது ஏழு அடி உயரத்துக்குத் தண்ணீர் வந்தது. மழை விட்டதும் ஆற்றை அகலப்படுத்துவார்கள் என நினைத்தோம். ஆனால், இதுவரை செய்யவில்லை. இந்த ஆண்டும் திரும்ப மழை வரும் என்கிறார்கள். இங்கேயே இருப்பதா? சொந்த வீட்டைப் பூட்டிவிட்டு வேறு எங்கேயாவது சென்றுவிடுவதா என ஒன்றும் புரியவில்லை. எங்கள் பிரச்னை அரசுக்குத் தெரியுமா... தெரியாதா? என்றும் தெரியவில்லை. இப்போது சின்ன மழைக்கே முழங்கால் அளவுக்குத் தண்ணீர் போகிறது'' என்கிறார் ராயப்பா நகர் குடியிருப்போர் சங்கத்தைச் சேர்ந்த பிரபாகரன்.

அரசிடம் நிதி இல்லை?!

`மழை நின்ற பிறகு, அடையாறு ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆற்றை மீட்டெடுக்க வேண்டும்' என்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ச்சியாக முறையிட்டு வருகிறார்கள் வரதராஜபுரம் பகுதி மக்கள். 

ஏரிகளின் மேல் புற நகரங்கள்!

``மீண்டும் ஒரு மழை தொடங்குவதற்கு முன்னர் அடையாறு தூர்வாரப்பட வேண்டும் எனக் கோரி, ஜூன் 20-ம் தேதி குடியிருப்போர் நலச் சங்கங்களைச் சேர்ந்த 600 பேர் கையெழுத்திட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தோம். கலெக்டர் எங்களிடம், `தூர்வார அரசிடம் நிதி இல்லை. உலக வங்கித் திட்டத்தில் நிதி கேட்டிருக்கிறோம்' என்றார். எங்கள் கோரிக்கை எல்லாம் ஆற்றை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி முழுமையாகத் தூர்வார வேண்டும் என்பதுதான். சென்ற வருடம் வெள்ளம் வந்தபோது ஆற்றில் வண்டல்மண் படிந்துவிட்டது. இதனால், இப்போது கோரைப்புற்கள் அடர்த்தியாக வளர்ந்திருக்கின்றன. கடந்த ஆண்டைப் போல அதிக மழை பெய்யவேண்டியது இல்லை. குறைந்த அளவு மழை பெய்தாலே வெள்ளப்பெருக்கு ஏற்படும். எங்களின் குடியிருப்புகள் மீண்டும் மிதக்கும் சூழல்தான் உள்ளது'' என்கிறார் வரதராஜபுரம் நகர் மன்றக் கூட்டமைப்பைச் சேர்ந்த வி.ராஜசேகரன்.

தொடர்ச்சியாக நடவடிக்கை இல்லை

தாம்பரத்தில் இருந்து முடிச்சூர் செல்லும் சாலையில் இருக்கும் கண்ணன் அவென்யூ மெயின் ரோடு பகுதியில் இருந்து பாப்பான் கால்வாய் தொடங்குகிறது. பொதுப்பணித் துறை ஆவணங்களின்படி இந்தக் கால்வாயின் அகலம் 60 மீட்டர். ஆனால், இப்போது அது ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதால் 20 மீட்டர் வரைதான் கால்வாய் இருக்கிறது. பாப்பான் கால்வாயின் அருகிலேயே சாலை அமைத்திருக்கிறார்கள். அதன் கரையிலேயே குடியிருப்புகளைக் கட்டியிருக்கிறார்கள். சி.டி.ஓ காலனியை ஒட்டிப் பயணித்து பாப்பான் கால்வாய் கிஷ்கிந்தா சாலையில் முட்டுகிறது.

பின்னர் அந்தச் சாலை ஓரத்திலேயே பயணித்து ஸ்ரீராகவேந்திரா நகர் மெயின் ரோட்டின் அருகே அடையாறு ஆற்றில் கலக்கிறது. `கடந்த ஆண்டு மழை வெள்ளத்தின்போது கன்னடப் பாளையம் பகுதியில் சாலையை வெட்டி வெள்ளநீரை வெளியேற்றினார்கள். சாலை உடைக்கப்பட்ட இடத்தில்தான், பல ஆண்டுகளுக்கு முன்னர் பாப்பான் கால்வாய் சென்றது' என்கிறார்கள். சாலை உடைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் சாலையைப் போட்டு விட்டார்கள். ஆனால், சாலைக்குக் கீழே கால்வாய் தண்ணீர் போவதற்கு முறையான வடிகால் வசதி செய்யவில்லை. தற்காலிகமாக இங்கு வைக்கப்பட்ட மணல் மூட்டைகள்கூட அகற்றப் படவில்லை. கடந்த மழை வெள்ளத்தின் சாட்சியாக மணல் மூட்டைகள் அப்படியே கிடக்கின்றன. 

ஏரிகளின் பெயர்களில் புறநகர்கள்

கடந்த ஆண்டு பெய்த மழையில் மட்டும் அல்ல... 2005-ம் ஆண்டு பெய்த மழையிலும் தென் சென்னையின் புறநகர் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப் பட்டன. வேளச்சேரி, பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகள் அடிக்கடி மழை பாதிப்புக்கு உள்ளாகும் பட்டியலில் இருக்கின்றன.

சென்னையில் உள்ள மொத்த ஏரிகளில் 15 சதவிகித ஏரிகள் தென் சென்னைப் புறநகரில் உள்ளன. பல்லாவரம் ஏரி, வேளச்சேரி ஏரி, கீழ்க்கட்டளை ஏரி, மடிப்பாக்கம் ஏரி, பெருங்குடி ஏரி, சித்தேரி ஏரி, நாராயணபுரம் ஏரி, பெரும்பாக்கம் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் சேரும் மழைநீர் பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் சேர்கிறது. பின்னர் அங்கு இருந்து பகிங்ஹாம் கால்வாய் வழியாகச் சென்று கோவளம் அருகே கடலில் கலக்கிறது.

44 சதவிகிதம் ஆக்கிரமிப்பு

சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தென் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகளில் 44 சதவிகிதம் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. வணிகரீதியிலான கட்டடங்கள், குடியிருப்புக் கட்டடங்கள் என கணக்கு வழக்கு இல்லாமல் ஆக்கிரமித்திருக் கிறார்கள் என்கிறது அந்த ஆய்வு. தொடர்ச்சியான மழைப் பாதிப்புகளுக்குப் பின்னரும் ஆக்கிரமிப்புகளை அகற்றவோ, ஏரிகளைப் பாதுகாக்கவோ, அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் அதிர்ச்சி .

“ சென்ற ஆண்டு பெய்த மழையில் எங்கள் குடியிருப்பில் முதல் தளம் முழுமையாக தண்ணீரில் மூழ்கிவிட்டது. சித்தாலபாக்கம், பெரும்பாக்கம் ஏரிகளின் கரையை சிலர் உடைத்துவிட்டதால் அந்தத் தண்ணீர் பெரும்பாக்கத்தைச் சூழ்ந்துவிட்டது. பெரும்பாக்கத்தில் சின்ன அளவுக்கு மழை பெய்தாலே அது வடிய வடிகால் வசதிகள் இல்லை. குளோபல் மருத்துவமனை அருகே ஒரு கால்வாய் வழியே சதுப்பு நிலப் பகுதிக்கு மழை நீர் செல்ல வேண்டும். ஆனால், அதில் அடைப்பு ஏற்பட்டுவிட்டது. அதை அகற்ற இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை'' என்கிறார் பெரும்பாக்கம் கேம்பர்ஸ் குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் சாரங்கதாஸ்.

ஏரிகளின் மேல் புற நகரங்கள்!

முழுமையான நடவடிக்கை இல்லை

``பழைய மகாபலிபுரம் சாலையில் பெரும்பாலான பகுதிகள் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்துத்தான் கட்டப்பட்டுள்ளன. 6,000 ஹெக்டேர் பரப்பு உள்ள பள்ளிக்கரணை ஏரி, இப்போது 600 ஏக்கர்தான் இருக்கிறது. ஆக்கிரமிப்புகள் காரணமாகத்தான் சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன. இது மக்கள் செய்த பிழைதான். ஆனால், மக்களை ஆட்சி செய்யும் அரசாங்கம் இதை ஆரம்பத்திலேயே ஏன் தடுக்கவில்லை என்பதுதான் என்னுடைய கேள்வி. சோழிங்கநல்லூரில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி கடந்த ஆண்டு மழைக்கு முன்னரே தொடங்கியது. சில இடங்களில் அந்தப் பணிகள் முடிந்திருக்கின்றன. ஆனால், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் முடிக்கப்படவில்லை. கடந்த ஆண்டைப்போல பாதிக்காமல் இருக்க அரசாங்கம் முழுமையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை. மேம்போக்கான தற்காலிக நடவடிக்கைகள் மட்டுமே எடுத்திருக்கிறார்கள்’’ என்கிறார் சபரி டெரஸ் குடியிருப்போர் சங்கச் செயலாளர் ஹர்ஷா கோடா.

கடுமையான மழை வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில்கூட அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காது இருப்பது அங்கே வாழும் மக்களை அச்சத்தில் மூழ்கடித்திருக்கிறது. மக்கள் சொந்த வீடுகளை விட்டுவிட்டு வெளியேறத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், வீடு மாற்றுவதுபோல குழந்தைகள் படிக்கும் பள்ளி, கல்லூரிகளை மாற்றுவது அவ்வளவு ஈஸி கிடையாதே!

ழை வெள்ளத்தை எதிர்கொள்ள, தமிழக அரசு எடுத்திருக்கும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் என்ன?

கள நிலவர அப்டேட்ஸ் அடுத்த இதழிலும்...