லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ஆத்திரத்துக்கு வேண்டும் அணை!

ஆத்திரத்துக்கு வேண்டும் அணை!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆத்திரத்துக்கு வேண்டும் அணை!

ஆத்திரத்துக்கு வேண்டும் அணை!

ஆத்திரத்துக்கு வேண்டும் அணை!

காவிரிப் பிரச்னை, மீண்டும் கொதிநிலையை அடைந்திருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, தண்ணீர் மட்டும் அல்ல... தமிழர்கள் மீதான வெறுப்பும் சேர்ந்தே திறந்துவிடப்பட்டிருக்கிறது. தமிழக வாகனங்கள், கர்நாடகாவில் கொளுத்தப்படுகின்றன; பெங்களூரு, மாண்டியா, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்கள் நடத்தும் வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல்கள்; தமிழகத்துக்கு ஆதரவாகக் கருத்து தெரிவிக்கும் கர்நாடகத் தமிழர்கள் தாக்கப்படுவது என விரும்பத்தகாத நிகழ்வுகள் அங்கே தொடர்கின்றன.

இதற்கு எதிர்வினையாக கர்நாடகப் பதிவெண்கொண்ட வாகனங்களைத் தாக்குவது; கர்நாடக மாநிலத்தவரின் நிறுவனங்களை அடித்து நொறுக்குவது; கர்நாடகத்தவர் தாக்கப்படுவது எனத் தமிழ்நாட்டிலும் மோசமான நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டிருப்பது வேதனை அளிப்பதாக இருக்கிறது.

`வன்முறை என்பது, இரு பக்கமும் கூரான கத்தி' என்பது எந்நாளும் மறக்கக் கூடாத வாசகம். சகிப்பின்மைக்கான தீர்வு, சகிப்பின்மை அல்ல என்பதை வன்முறையாளர்கள் நினைவில்கொள்ள வேண்டும்.

தண்ணீர் என்பது, இயற்கை நமக்கு அளித்த வரம். எவ்வளவு வீரியமாக வளர்ந்தபோதும் விஞ்ஞானத்தால் உற்பத்தி செய்ய முடியாத பொருள். மாநிலங்களின், தேசங்களின் எல்லைக்கோடுகளைத் தாண்டியது தண்ணீரின் அடையாளமும் கருணையும். யாரும் அதை அணை கட்டி, தங்களுக்கு மட்டுமே சொந்தம் எனப் பிடிவாதம் பிடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அதேசமயம், தண்ணீருக்கும் தட்டுப்பாடு இருக்கிறது என்பதை உணர்ந்து, நீண்டநெடிய ஆய்ந்தறிதலுக்குப் பிறகு நடுவர் மன்றம் வகுத்துக் கொடுத்திருக்கும் வழிமுறையின்படி தண்ணீரைப் பகிர்ந்துகொண்டால் பிரச்னைக்கே இடம் இல்லை.

‘கிணறு என் நிலத்தில்தான் இருக்கிறது. அதனால் தண்ணீர் எனக்குத்தான் சொந்தம்' என்றோ, ‘பம்ப்செட் என் நிலத்தில்தான் இருக்கிறது. அதனால் தண்ணீர் எனக்குத்தான் சொந்தம்' என்றோ எந்தச் சகோதரனாவது மொத்தத் தண்ணீருக்கும் உரிமை கொண்டாடினால், அது அபத்தம் இல்லையா?

தமிழ்நாட்டுக்குத் திறந்துவிடப்படும் தண்ணீர், தானதர்மத்துக்காகக் கொடுக்கப்படும் தண்ணீர் அல்ல. அது தமிழ்நாட்டுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய பங்குதான் என்கிற உண்மையை, அமைதியை விரும்பும் அரசியல் தலைவர்கள் கர்நாடக மக்களுக்குப் புரியவைக்க வேண்டும். மேலும், இது நீதியின் துணையோடு மட்டுமே வென்றெடுக்கவேண்டிய தீர்வு என்பதை தமிழ்நாடு மக்களுக்குப் புரியவைக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழகத் தலைவர்களுக்கு இருக்கிறது.

காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பை முறையாக அமல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை உடனே அமைப்பது ஒன்றுதான் நிரந்தரத் தீர்வுக்கு வழி. இதைவிடுத்து, உணர்ச்சிவசப்படுவது எந்தவிதத்திலும் உதவப்போவது இல்லை என்பதை உணரவேண்டும் இருதரப்பும்.