Published:Updated:

இரும்பிலே ஓர் இருதயம்!

இரும்பிலே ஓர் இருதயம்!
பிரீமியம் ஸ்டோரி
இரும்பிலே ஓர் இருதயம்!

மருதன்

இரும்பிலே ஓர் இருதயம்!

மருதன்

Published:Updated:
இரும்பிலே ஓர் இருதயம்!
பிரீமியம் ஸ்டோரி
இரும்பிலே ஓர் இருதயம்!
இரும்பிலே ஓர் இருதயம்!

‘ஒரு பேய், கார் ஓட்டியதுபோல் இருந்தது!’ என வியக்கிறார் 25 வயது ஒலிவியா. ‘அதுவே திரும்புகிறது, நிற்கிறது, வேகத்தைக் கூட்டிக்கொள்கிறது, சின்னச் சின்னத் தடைகளைக்கூடக் கண்டுபிடித்து விடுகிறது. ஒரு பறவை குறுக்கே வந்தால், எச்சரிக்கையுடன் நகர்கிறது. நிச்சயம் நம்பிப் போகலாம்!’ சிங்கப்பூர் வீதிகளில் உருண்டோடத் தொடங்கியிருக்கும் தானியங்கி காரைப் பயன்படுத்திப்பார்த்துவிட்டு, பரவசத்தில் ஆழ்ந்திருப்பவர்களில் ஒருவர் ஒலிவியா.

உலகின் கவனத்தைக் கவர்ந்திழுக்கும் இந்தத் தானியங்கி காரை அறிமுகப்படுத்தியிருப்பது, `நுடோனோமி' என்னும் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம். சிங்கப்பூர் வீதிகளில், மொத்தம் ஆறு கார்கள் இப்போது இறக்கிவிடப்பட்டிருக்கின்றன. தேர்ந்தெடுத்த வழித்தடங்களில் மட்டுமே இவை இயக்கப்படும். பதிவுசெய்துவிட்டுக் காத்திருப்பவர்கள் மட்டுமே, இப்போதைக்கு சேவையைப் பயன்படுத்த முடியும்.

`கூடியவிரைவில் ஊபர் போல தெருக்குத் தெரு எங்கள் காரையும் பார்க்க முடியும்' என்கிறது மேற்படி நிறுவனம். ஏற்கெனவே கூகுள், வோல்வோ, டெஸ்லா போன்ற பெரும் நிறுவனங்கள் தானியங்கி கார்களை உருவாக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவருவதால், சிங்கப்பூரில் மட்டும் அல்ல எல்லா நாடுகளிலும் ‘பேய் ஓட்டும் காரை’ இனி நாம் பார்க்க முடியும் என்றே தோன்றுகிறது.

`ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ்' எனப்படும் செயற்கை அறிவுத்திறனைப் பயன்படுத்தி இந்த அற்புதம் நிகழ்த்தப் பட்டிருக்கிறது. `இது அற்புதம் அல்ல... சாபம்' என்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம்தான். `நம் கண் முன்னால் இயந்திரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களைக் காணாமல் ஆக்கிக்கொண்டிருக்கின்றன' என இவர்கள் அஞ்சுகிறார்கள். ஆதாரம் இல்லாத அச்சம் என இவர்களை ஒதுக்கிவிடவும் முடியாது. என்ன செய்யலாம்?

இரும்பிலே ஓர் இருதயம்!

மனிதர்களை ஆளும் இயந்திரங்கள்!

அமெரிக்காவின் முன்னணி சட்ட ஆலோசனை நிறுவனமான பேக்கர் ஹோஸ்டெட்லர், சமீபத்தில்தான் ஒரு ரோபோவை வழக்குரைஞராக நியமித்திருக்கிறது. ரோபோ வழக்குரைஞரின் பெயர் ராஸ். ஐ.பி.எம் உருவாக்கியிருக்கும் வாட்சன் என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ரோபோ இயங்குகிறது.

சரி, ராஸ் என்ன செய்யும்?

24 மணி நேரமும் விழித்து இருப்பதால் நீதிமன்றத்தில் இருந்து வரும் ஒவ்வொரு தீர்ப்பையும் பெற்றுப் படித்து, மனப்பாடம் செய்துவைக்கிறது. வழக்குரைஞர்கள் எப்படி வாதிடுகிறார்கள் என உன்னிப்பாகக் கவனித்து, அவர்களுடைய புத்திசாலித்தனமான வாதங்களை மட்டும் தொகுத்து, தனியே சேமித்துக்கொள்கிறது.

தேநீர் அருந்தியபடியே ராஸ் முன்னால் அமர்ந்து, ‘எனக்கு ஒரு கேஸ் வந்திருக்கிறது. அதை எப்படித் தீர்ப்பது?’ எனக் கேட்டால், உங்களிடம் இருக்கும் கோப்புகள் அனைத்தையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, வழக்கின் மையம் என்ன, அதை இதற்கு முன்னர் யாரெல்லாம் வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார்கள், சட்டப் புத்தகத்தில் என்னென்ன பிரிவுகளில் இந்த வழக்கு பற்றிய விவரங்கள் அடங்கியுள்ளன, நீதிமன்றங்கள் இந்த வழக்குக்கு எத்தகைய தீர்ப்புகளை இதுவரை அளித்திருக்கின்றன என எல்லாவற்றையும் நேர்த்தியாக எடுத்துவைக்கும்.

திவாலாகும் கம்பெனிகள் பற்றிய வழக்குகளை மட்டுமே, ராஸ் இப்போதைக்கு கவனித்துக் கொள்கிறது. விரைவில் முழுமையாக சிவில், கிரிமினல் வழக்குகளை அது எடுத்துக் கொள்ளக்கூடும். கோட்-சூட் அணிந்த மனித வழக்குரைஞர்களைக் காட்டிலும் ராஸ் வேகமாக இயங்குகிறது. சோர்வடைவது இல்லை; தவறுகள் செய்வது இல்லை; சம்பளம் வாங்கிக்கொள்வது இல்லை; விடுமுறை எடுத்துக்கொள்வது இல்லை. ‘மனித வழக்குரைஞர்கள், மிக அதிகக் கட்டணம் கேட்கிறார்கள். அதனால் எதிர்காலத்தில் அமெரிக்கர்கள் பலர், ராஸ் போன்ற ரோபோக்களை அதிகம் நாடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது’ என்கிறார்கள் இந்தத் துறையைக் கவனித்துவருபவர்கள்.

`விரிவான, சிக்கலான மற்றும் நுணுக்கமான துறைகளில் மனித மூளையைக் காட்டிலும் செயற்கை அறிவுத்திறனைக்கொண்டு பணியாற்றுவது எளிதாக இருக்கிறது' என்கிறார்கள் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள். `வேகமான தீர்வுகளை மட்டும் அல்ல, வெற்றிகரமான தீர்வுகளையும் இயந்திரங்கள் அளிக்கின்றன' என்கிறார்கள் இவர்கள். மருத்துவத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திவரும் சர்ஜிக்கல் ரோபோக்களை இவர்கள் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டு கிறார்கள். இவர்களிடம் உள்ள புள்ளி விவரங்களின்படி, நுட்பமான அறுவைசிகிச்சைகளை மனிதர்களைக் காட்டிலும் சர்ஜிக்கல் ரோபோக்கள் வெற்றிகரமாகச் செய்து முடிக்கின்றன. `கத்தியை சாதுரியமாகவும் குறைவாகவும்  பயன்படுத்தி, அதிக ரத்த சேதம் இல்லாமல் கட்டிகளை அகற்ற, சர்ஜிக்கல் ரோபோவிடம் நோயாளிகளை ஒப்படைத்துவிடலாம்' என்கிறார்கள் இவர்கள்.

 மெஷின் லேர்னிங்!

செயற்கை அறிவுத்திறனை நம் வாழ்வில் மேலும் மேலும் நுழைப்பதற்கு ஏதுவாக, `மெஷின் லேர்னிங்' (Machine Learning) என்னும் துறை சிறுத்தைப் பாய்ச்சலில் முன்னேறிவருகிறது. கணிதம், தொழில்நுட்பம், கற்பனைத்திறன் ஆகியவற்றைக் கொண்டு இயங்கும் துறை இது. சொல்லிக்கொடுத்ததைச் செய்யாமல் சுயமாக யோசித்து செயல்படுமாறு இயந்திரங்களைத் தூண்டிவிடுவதே இந்தத் துறையின் சவால். `அங்கே போ', `காபி கொண்டுவா', `இதை எடுத்து மேலே வை' என்றெல்லாம் உத்தரவிடாமலேயே, உங்கள் நண்பர் அறைக்குள் நுழையும்போது சமயோசிதமாக நகர்ந்துபோகும் ரோபோவை, `தலை வலிப்பதுபோல் இருக்கே' என நீங்கள் நினைக்கும்போதே கையில் காபியோடு நிற்கும் ரோபோவை (மிதமான சூடு, குறைவான சர்க்கரை என உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப தயாரிக்கும் திறனுடன்), புதுப் புத்தகங்கள் வாங்கி வந்தால் அவற்றை வரிசையாக அலமாரியில் துறைவாரியாகப் பிரித்து அடுக்கிவைக்கும் ரோபோவை உருவாக்க, இவர்கள் முயன்றுவருகிறார்கள். ஏற்கெனவே இதில் பெரும் வெற்றியும் பெற்றுவிட்டார்கள்.

இரும்பிலே ஓர் இருதயம்!

சில உதாரணங்கள். கூகுளின் புதிய தேடல் கருவி, ரேங்க் பிரெயின், நீங்கள் என்ன தேடுகிறீர்கள் என்று அல்ல, என்ன தேட நினைக்கிறீர்கள் என்பதை யூகித்து விடைகளை அளிக்கவல்லது. சிரி, கூகுள் நவ், கோர்டானா ஆகியவை செயற்கை அறிவுத்திறன் படைத்த மொபைல் தொழில் நுட்பங்கள். அருகில் சீன உணவகம் எங்கே இருக்கிறது, இன்று நான் எங்கெங்கு போகவேண்டும் போன்ற கேள்விகளைக் கேட்டால், உங்கள் குரலைப் புரிந்துகொண்டு மொபைலில் உள்ள மற்ற ஆப்ஸ்களை முடுக்கிவிட்டு, அங்கும் இங்கும் தேடித் திரிந்து நீங்கள் கேட்டதைப் பிடித்துவந்து கொடுக்கும். உங்கள் விருப்பத்துக்கு ஏற்ற ஆடைகளை, புத்தகங்களை, ஆல்பங்களை இணையத்தில் இருந்து அள்ளி எடுத்துவந்து உங்கள் திரையில் அவ்வப்போது காட்சிப்படுத்தும். அமேஸான், டார்கெட் போன்றவை இதில் கொடிகட்டிப் பறக்கின்றன. இப்போது உங்களுக்கு என்ன தேவை, அடுத்த வாரம் என்ன தேவைப்படும், இன்னும் ஐந்து மாதங்கள் கழித்து என்ன வாங்குவீர்கள் என்பதை உங்களைவிட இந்த ஆன்லைன் நிறுவனங்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றன.

செயற்கை அறிவுத்திறன், மெஷின் லேர்னிங், டேட்டா மைனிங் பற்றி எல்லாம் நீங்கள் சிரமப்பட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியதே இல்லை. அவை அனைத்தும் உங்களையும் உங்கள் தேவைகளையும் ஏற்கெனவே நன்கு தெரிந்துவைத்திருக்கின்றன. அரசாங்கங்கள், வங்கிகள், இணையதளங்கள், மருத்துவத் துறை, விளம்பர நிறுவனங்கள், எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள், ஆய்வுக்கூடங்கள், போக்குவரத்துத் துறை என உலகம் முழுவதிலும் பல துறைகளில் செய்கை அறிவுத்திறன் சார்ந்த தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.

அது பிடித்தால் இதோ இதுவும் பிடிக்கும், அதை வாங்குவதாக இருந்தால் இதையும் வாங்குங்கள். `போன வாரம் வாங்கியது பழசாகி இருக்குமே, இன்னொன்று பார்சல் செய்யவா?' என்று எல்லாம் இணையத்தில் உங்களுக்குத் தூண்டில் போடுவது மேற்படி தொழில் நுட்பம்தான்.

`ஸ்மார்ட் ஹோம் டிவைசஸ்' எனப்படும் புத்திசாலிக் கருவிகள், உங்கள் வீடு மற்றும் அலுவலகம் இரண்டையும் கவனித்துக்கொள்ளும் திறன் பெற்றவை. நீங்கள் சமையலறையைவிட்டு வெளியே செல்லும்போதே மைக்ரோவேவ் அவனை அது அணைத்துவிடும். நீங்கள் படுக்கை அறைக்குள் நுழையும் போது மட்டுமே குளிர்சாதனத்தை இயக்கும். நீங்கள் டி.வி பார்க்கும்போது விளக்கு மங்கலாகும், படிக்கும்போது பிரகாசமாகும், படுக்கும்போது இருண்டுவிடும். வீட்டு வாசலில் வந்து நின்றால் தானியங்கி கார் பவ்யமாக ஊர்ந்து வந்து நின்று கதவைத் திறந்து வரவேற்கும்.

வரமா... சாபமா?

இயந்திரங்களும் தொழில் நுட்பங்களும் பழகிப்போகலாம். ஆனால், செயற்கை அறிவுத்திறன் என்பது அதற்கும் மேல் அல்லவா? இயற்கை அறிவா... செயற்கை அறிவா என்னும் மோதல், மனிதனின் ஆதார இருப்பையே கேள்விக்கு உட்படுத்துகிறது அல்லவா? நமக்கு ஒத்துழைத்து, நம் வேலைப்பளுவைக் குறைக்கும் இயந்திரங்களை அரவணைத்துக்கொள்வதில் தவறு இல்லை. `நீ ஒதுங்கு, நான் பார்த்துக்கொள்கிறேன்' என்றோர் இயந்திரம் சொல்லுமானால், அதை எதற்காக நான் ஏற்க வேண்டும்? செயற்கை அறிவுத்திறனை வளரவிட்டால், நாளை மனித இனமே அழிந்துவிடாதா?
`அழியாது' என்கிறார் மைக்ரோசாஃப்ட் ஆய்வுப் பிரிவைச் சேர்ந்த கிரிஸ் பிஷப். ‘செயற்கை அறிவுத்திறன் மனிதர்களின் மூளைத்திறனைத் தோற்கடித்துவிடாது. ஒரு கார் ஓட்டுவதால், சில அறுவைசிகிச்சைகள் செய்வதால் நாம் செய்யும் எல்லாவற்றையும் இனி இயந்திரங்களே செய்துவிடும் என  அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது’ என்கிறார் இவர்.

`மிதமிஞ்சிய அச்சம், ஏகோபித்த வரவேற்பு. இரண்டும் உதவப்போவது இல்லை. மாறாக, எச்சரிக்கை உணர்வுடன் சில கேள்விகளை எழுப்புவது பலனளிக்கும்' என்கிறார் பிஷப். ‘செயற்கை அறிவுத்திறன் செயல்படுவதற்கு அடிப்படை தேவை, டேட்டா. இது எங்கு இருந்து வருகிறது? இதை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? இது எப்படிப் பயன்படுத்தப்படும்?’ இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைத்தால், அதை வைத்து குறிப்பிட்ட ஒரு தொழில்நுட்பம் யாருக்கு பலனளிக்கும், யாரை பாதிக்கும் என்பதைக் கண்டறிய முடியும்.

இயந்திரம் அல்லது ரோபோ அல்லது செயற்கை அறிவுத்திறன் பற்றிய பிரச்னை அல்ல இது. இதை எல்லாம் உருவாக்கும், நிர்வகிக்கும், பயன்படுத்தும் மனிதன் எப்படிப்பட்டவன் என்பதுதான் பிரச்னையின் மையம். இதைத் துல்லியமாக உணர்ந்துகொள்ள, ஓர் உதாரணம்.

சென்ற வாரம், யூத் லேபாரட்டரீஸ் என்னும் நிறுவனம், ஆன்லைன் அழகிப் போட்டி ஒன்றை நடத்தியது. லட்சக்கணக்கில் குவிந்த புகைப்படங்களில் இருந்து 44 அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களில் 36 பேர் வெள்ளை நிறத்தவர். இந்த அழகிகளைத் தேர்ந்தெடுத்தது யார் தெரியுமா? ஒரு ரோபோ! கறுப்பு அல்ல வெள்ளையே அழகு என இந்த ரோபோவுக்கு யார் சொல்லிக்கொடுத்தது? சந்தேகமே இல்லாமல் ஒரு மனிதன்தான். டாட்!