லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 2

ஆண்பால் பெண்பால் அன்பால் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்பால் பெண்பால் அன்பால் - 2

#MakeNewBondsஜெயராணி, ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

ஆண்பால் பெண்பால் அன்பால் - 2

ரு ஜோடி கண்கள், கைகள், கால்கள், காதுகள், ஒரு வாய், ஒரு மூக்கு, ஒரு முகம் என உடலின் பெரும்பான்மை உறுப்புகள் ஒரே மாதிரி இருப்பதால், ஆணும் பெண்ணும் சரிசமமாகிவிடுவார்களா?
ஓர் உறுப்பின் மாறுபாட்டால் அதை அழுத்தமாக `இல்லை' என்கிறது இந்தச் சமூகம். கருக்கலைப்பு, சிசுக்கொலை, குடும்ப வன்முறை, பாலியல் சீண்டல்கள், சாதிக்கு உட்பட்ட கட்டாயத் திருமணம், வரதட்சணைக் கொடுமை, வன்புணர்ச்சி, ஒருதலைக் காதல், கௌரவக் கொலை என இத்தனை கொடுமைகளையும் பெண்கள் மேல் திணிப்பது, அந்த ஓர் உறுப்பின் மாறுபாடும் செயல்பாடும்தான்.

இங்கே, தெருவில் நடக்கும் பாலியல் வன்முறைகளைவிட வீடுகளுக்குள் நடக்கும் வன்முறைகள் மிக அதிகம். வீட்டுக்குள் ஒரு பெண்ணை எப்படி அடித்தாலும் துன்புறுத்தி னாலும், அது பிறர் தலையிட முடியாத அவளின் குடும்ப விஷயமாகிவிடுகிறது. வீடுகளில்தான் ஆண்கள் மிக மோசமான ஆதிக்க உணர்வோடு நடந்துகொள்கின்றனர். தன் மனைவியிடம், மகளிடம், தாயிடம் கட்டற்ற அதிகாரத்தைச் செலுத்துகின்றனர். கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை அறியத் துடிப்பதில் தொடங்குகிறது, பெண் இருப்புக்கு எதிரான வன்மம். என் அம்மா மீனா, அவளது நான்காவது பிரசவத்தில் இதே காரணத்துக்காக மரித்துப்போனாள். மூன்று பெண் குழந்தைகளுக்குப் பிறகு நான்காவதையும் பெண் குழந்தையாகப் பெற்றுவிட்ட அதிர்ச்சி, வலிப்பைக் கொண்டுவந்தது; வலிப்பு, மரணத்தைத் துணைக்கு அழைத்தது. அப்போது எனக்கு வயது ஏழு.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 2

அம்மா மரணித்த கதையை, பாட்டி அழுது கொண்டே அடிக்கடி சொல்லும். ஒவ்வொரு முறையும் ஆண்களுக்கான இந்த உலகில் வாழ்வதை நினைத்து மனதில் பயம் கவ்வும். இது ஏதோ 1980-களில் நடந்த கதை அல்ல. இன்றும் இந்தப் பெருநகரத்திலும் வயிற்றைத் தடவி குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெரும்பாலான கர்ப்பிணிகள் பண்ணும், ஆண் குழந்தைகளுக்கான பிரார்த்தனைகளில் இருக்கும் நிதர்சனம். செயற்கைக் கருத்தரிப்பில்கூட `ஆண் கரு'வைக் கேட்டு வாங்கும் நவீன அவலமும் அதையே உறுதிசெய்கின்றன.

வீடுகளையும் உறவுகளையும் எதிர்த்து கடுமையான போராட்டங்களை நடத்திய பிறகே, ஒவ்வொரு பெண்ணும் தனக்கான அடையாளத்தைப் பெற்றிருப்பார்கள்.

ஓர் ஆணிடம் நான் வாங்கிய முதல் அடி, இன்றும் நினைவில் இருக்கிறது. அப்போது நான் சிறுமி. வீட்டு ஆண் ஒருவரால் தண்ணீர் எடுத்துவரப் பணிக்கப்பட்டேன். எடுத்து வந்து கொடுத்துவிட்டுத் திரும்புவதற்குள் சுவரில் வீசியெறியப்பட்டுக் கிடந்தேன். தட்டுத் தடுமாறி எழுந்து, `ஏன் என்னை அடித்தீர்கள்?’ எனக் கேட்பதற்குள் அடுத்தடுத்த அடிகள் விழுந்தன. அன்றைய பொழுதின் அடிகளும் அதற்குப் பிறகு ஓயாமல் தொடர்ந்த ஒவ்வோர் அடியும் எனக்கு ஓர் உண்மையை உணர்த்தியது. ‘பெண்ணை அடிப்பதற்குக் காரணமே தேவை இல்லை. அவள் பெண்ணாக இருப்பதே போதுமானதுதான்’. பெண்ணைத் தாக்குவதன் மூலம் தனது வலிமையை நிரூபிக்க முனையும் ஆணுக்கு, அதற்கு என எந்தக் காரணமும் தேவை இல்லை.

வசிக்கும் இடம் சிறையாக இருந்தால், அதைத் தகர்ப்பது ஒரு வேட்கையாக ஒவ்வோர் உள்ளத்திலும் கனன்றுகொண்டிருக்கும். அதற்கு வீடுகள் விதிவிலக்கு அல்ல. அதனால்தான், எனது இருபதாவது வயதில் நான் வீட்டைவிட்டு வெளியேறினேன்.

இன்று வரை பிறந்த வீட்டில் எனக்கு இருக்கும் அடையாளம், `வீட்டைவிட்டு ஓடிப்போனவள்’ என்பதே. பொதுவாக இதுபோன்ற அடைமொழி, பெண்களை அவமானத்துக்கு உள்ளாக்கும். ஆனால், இந்த அடைமொழியால் நான் பெருமிதமேகொள்கிறேன். அதிகாரமும் ஆதிக்கமும் நிறைந்த ஒரு வீட்டைவிட்டு வெளி யேறுவது என்பது பெண் அடிமைத்தனத்துக்கு எதிரான மிகப்பெரிய ஒரு புரட்சி. கல்வியின் பெயராலோ, காதலின் பெயராலோ, அந்தப் புரட்சியை கணிசமான பெண்கள் காலம் காலமாகச் செய்துகொண்டே இருக்கிறார்கள். அது அவர்களின் உயிரைப் பறித்துவிடும் ஆபத்தையும் தாங்கி இருக்கிறது. தன் வாழ்க்கையை தானே வாழ விரும்பும் பெண்கள் அந்தச் சவாலை சந்தோஷமாக எதிர்கொள்ளத் துணிகின்றனர். அந்தத் துணிவோடுதான் பெருங்கனவுகளைத் துரத்திக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினேன்.

உறவுகள், நகைகள், சொத்துக்கள் என எல்லாவற்றையும் துறந்தேன். அந்த வகையில் இழப்பு என எதையுமே நான் கருதவில்லை. ஆனால், அதற்குப் பிறகு நான் அடைந்தவைதான் ஏராளம். அதில் முக்கியமானது என் சுயம்.

இன்று நான் ஒரு பத்திரிகையாளர். என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும், `என் வீட்டிலேயே முடங்கி இருந்தால், அதே கொடுமைகளில் உழன்று தற்கொலை செய்திருப்பேன் அல்லது என் தாயைப்போல பிள்ளை பெற்றுத்தரும் துருப்பிடித்த இயந்திரமாக்கப்பட்டிருப்பேன்' என்று.

பெண்களுக்கு மிக முக்கியமான இரண்டு அடிப்படை உரிமைகளை `ஆண்களின் வீடுகள்' காலம்காலமாக மறுத்துவருகின்றன. ஒன்று, பயணம்; இன்னொன்று வாசிப்பு. இரண்டுமே அவர்களின் அறிவை விருத்திசெய்துவிடும் என்பது ஆண்களின் அச்சம். பயணங்கள் பெற்றோராகவும், புத்தகங்கள் ஆசிரியராகவும் என்னை வழிநடத்தின.

வீடே உலகம் என்று இருந்த எனக்கு, உலகத்தையே வீடாக்கித் தந்தவை பயணங்களே! தடை இல்லாத பயணம் செய்ய வேண்டும் என்றால், ஒவ்வொரு பெண்ணும் முதலில் பகுத்தறிவோடு இருக்க வேண்டும். பேய் பயம், ஆள் பயம், சாமி பயம், தீட்டு பயம் என மதம் சார்ந்து கற்பிக்கப்படும் இந்தப் பயங்கள், பெண் களைப் பயணம் செய்யவிடாமல் தடுக்கின்றன. பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், புதிய மனிதர்களிடம் எப்படிப் பழக வேண்டும், பிரச்னைகளை எவ்வாறு கையாள வேண்டும் என வாழ்வியல் அறிவைத் தருவதோடு, அவை புதிய சிறகுகளை அணிவிக்கின்றன. தயக்கம் இன்றி தலைநிமிர்ந்து நடக்கும் பெண்ணைச் சீண்ட ஆண்கள் துணிவது இல்லை என்பதை, பயணங்களில்தான் கற்க முடியும்.

திருநெல்வேலியில்தான் இதழியல் படித்தேன். தென்கோடியில் இருக்கும் திருநெல்வேலி, எவ்வளவு பின்தங்கிய ஊர் என்பது எல்லோருக்கும் தெரியும். 15 ஆண்டுகளுக்கு முன்னர், நிலைமை இன்னும் மோசம். ஆனால், எனது ஒலிம்பஸ் எஸ்.எல்.ஆர் கேமராவைக் கழுத்தில் மாட்டிக் கொண்டு, தெருத்தெருவாகச் சுற்றி வந்திருக்கிறேன், கடைகடையாக தேநீர் அருந்தியிருக்கிறேன், நான் வர தாமதமானாலும் கடையைச் சாத்தாமல் எனக்காக இரண்டு பரோட்டாக்களை எடுத்துவைத்துக் காத்திருப்பார் ஹோட்டல் அண்ணா. ஹாஃப் பாயில் என்ற உணவை அறிந்துகொண்டதும், அதை லாகவமாகச் சாப்பிடக் கற்றதும் அங்குதான். அப்படித்தான் எனக்கே எனக்கான என் வாழ்க்கையை நான் வாழத் தொடங்கினேன்.

இருபது வயது வரையிலான அடைப்பட்ட வாழ்க்கையால், மேலும் மேலும் பயணிக்கும் ஆவல் தீரவே இல்லை. முகம் தெரியாத ஊர்கள், எனக்கு அதீத சுதந்திரத்தை அளித்தன. வெவ்வேறு மனிதர்களின் வாய்மொழிக் கதைகளே என் சமூக அறிவை வளர்த்தன. நாம் வாழும் இந்தச் சமூகத்தின் மையப் பிரச்னைகளான சாதி மதப் பாகுபாடுகள் குறித்து புத்தகங்களில் நான் வாசிக்கும் முன்னரே, பயணங்கள் எனக்குப் போதித்தன. ஆண்கள் குறித்த பயத்தை நான் திருநெல்வேலியிலேயே தொலைத்துவிட்டிருந்தேன். சென்னை வந்த பிறகு, நான் கைவிடாத பயணங்களே என்னைச் செதுக்கின.

எந்த நேரம் என்றாலும், எவ்வளவு தொலைவு என்றாலும் `கிளம்பு' என மனம் சொன்னால், கிளம்பிவிடுவேன். `ஆண்களால் கேடு உண்டாகும்' எனச் சொல்லி, பெண்களுக்கு பயணங்களைத் தடைசெய்பவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பயணங்கள், உங்களுக்கு மனிதர்களை அறிமுகம் செய்கின்றன... ஆண்களை அல்ல. ஆம், ஆணோ... பெண்ணோ... நாம் ஒரு பயணியாகும்போது பாலற்றவர் ஆகிவிடுகிறோம்.

பேருந்து வராத குக்கிராமங்களில், யார் யாரோ வீடுகளில் கொஞ்சம் இடம் கேட்டுப் படுத்து உறங்கியிருக்கிறேன்; மூங்கில்காட்டின் நடுவே கிராமத்து மனிதர்களுடன் கதை பேசிக்கொண்டே இரவுகளைக் கடந்திருக்கிறேன். குடிக் கலாசாரம் பற்றிய ஒரு செய்திக் கட்டுரைக்காக பெங்களூரு பப்களுக்குள் குடிக்க வந்தவர்களோடு உரையாடியபோதோ, பாலியல் தொழில் பற்றிய கட்டுரைக்காக மகாபலிபுரம் லாட்ஜ், மும்பை காமத்திபுரா போன்ற பகுதிகளுக்கு வருகிறவர் களோடு பேசியபோதோ, கூவாகம் திருவிழாவில் சுற்றியபோதோ, வேறு எப்போதுமோ நான் என்னை ஒரு பெண்ணாக உணர்ந்து ஒருபோதும் தயங்கி நின்றதே இல்லை. வெகுசிலரால் இதில் இடர்பாடுகள் நேர்ந்திருந்தாலும் அவை என் மனஉறுதியை வளர்க்கவே செய்தன.

நான், ஓடிக்கொண்டே இருந்தேன்; `பெண்’ என்பதை மறந்திருந்தேன்; ஆண்களுடன்தான் அதிகம் பழகினேன். காரணம், நான் வாழ விரும்பும் பரந்துபட்ட சமூக வாழ்க்கை ஆண்களுக்கே வாய்த்து இருந்தது. உரையாடு வதற்கும் விவாதிப்பதற்குமான திறனை அவர்கள் கொண்டிருந்தனர்.

இக்கட்டுகளை எப்படிச் சமாளிப்பது என ஆண்கள்தான் எனக்குக் கற்பித்தனர். வீட்டில் நான் பார்த்து வளர்ந்த ஆண்களுக்கும், வெளியே எனக்கு அறிமுகமா னவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன சில ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு மலைக் கிராமத்துக்குச் சென்றிருந்தபோது நடுவழியில் பேருந்து பிரேக்டவுண் ஆகிவிட்டது. அடைய வேண்டிய ஊருக்கு வெகுதொலைவு நடக்க வேண்டும். நெடுநேரம் சாப்பிடாததால் கடுமையான தலைவலி வேறு. அதிக நேரம் நடந்ததால் கால்வலியும்.

அதனால் அப்படியே அமர்ந்து விட்டேன். `இருட்டுவதற்குள் போய்விடலாம் எழுந்திரு!' என என்னுடன் வந்த நண்பன் சொன்னான். என்னால் முடியவில்லை. அப்போது சுற்றுலா வாகனம் ஒன்று அந்தப் பக்கம் வேகமாகப் போனது. திடீரென அது திரும்பி வந்தது. அதில் இருந்த மது அருந்திய இளைஞர் களில் ஒருவன், `மேடம் லிஃப்ட் வேண்டுமா?' எனக் கேட்டான். அவன் கேட்ட தொனி, ஏற்கெனவே தகித்துக்கொண்டிருந்த என் தலைவலியை அதிகப்படுத்தியது. நான் சண்டைக்குப் போய்விட்டேன். வாகனத்தில் இருந்த ஐந்து பேரும் இறங்கிவிட்டனர். அப்போது அந்த நண்பன்தான், `சார் அவங்களுக்கு உடம்பு சரியில்லை. நான் ஸாரி கேட்டுக்குறேன். நீங்க கிளம்புங்க’ எனச் சொல்லி அனுப்பிவைத்தார். ஆனால், நான் விடுவதாக இல்லை. அந்த நேரத்தில் அவர் கடுமையாகக் கோபப்பட, நான் சற்று அமைதியடைந்தேன். வாகனம் போன பிறகு, `நாம எந்த மாதிரி இடத்துல இருக்கோம்னு உனக்கு மறந்துபோச்சா? இந்த இடத்துல ஏதாச்சும் நடந்தா, யார் கேட்க முடியும்? ஆபத்து நடக்கிறப்போ, நாம வீரத்தைக் காட்ட முயற்சி பண்ணக் கூடாது. இது மாதிரி சூழல்கள்ல, தப்பிக்கிறதுதான் வீரம். கும்பலா இருக்கிறவன் கிட்டயும் ஆயுதம் வெச்சிருக்கிறவன்கிட்டயும் மோதக் கூடாது’ என்றான். அந்த நண்பனின் இந்த அறிவுரை, பத்திரிகையாளராக ஊர் ஊராகச் சுற்றிய எனக்கு ஒரு வாழ்க்கைப் பாடமாக அமைந்தது.

பெண்களால் வாழ முடியாத சுதந்திரமான வாழ்வை ஆண்கள் தொடர்ந்து வாழ்கின்றனர். பெண்கள் சந்தித்திராத சவால்களை வெளி உலகில் சமாளிக்கின்றனர். அதன் வழி நிறையவே கற்கின்றனர். அந்தக் கற்றலை ஆண்கள் தமது சமூக வாழ்வனுபவத்தில் இருந்து பெண்களுக்கு அள்ளித் தர முடியும். ஆனால், எல்லா ஆண்களிடமும் அப்படி எதிர்பார்க்க முடியாது என்பதே யதார்த்தம்.

ஆண்களின் பரந்த உலகத்துக்குள் அடியெடுத்து வைக்கும்போது, காலம் காலமாகக் கற்பிக்கப்பட்ட பெண் அடையாளங்களான அச்சம், மடம், நாணம் முதலானவற்றை முதுகில் சுமந்து கொண்டிருக்க முடியாது. `பெண் அடையாளங் களைத் துறப்பது' என்பது, ஆண்களை மட்டும் அல்ல... பல நேரங்களில் இந்த அடையாளங்களைக் கவசம்போல அணிந்துகொண்டு வாழும் பெண்களையும் பதற்றத்துக்கு உள்ளாக்குகிறது. `நீ ஏன் பேன்ட்- ஷர்ட் போடுற, எதுக்கு சத்தமாப் பேசுற... சிரிக்கிற, எதுக்கு அதிக நேரம் வேலை செய்யுற, உனக்கு பயமே கிடையாதா?' என வெள்ளந்தியாகக் கேட்கும் பெண்களைக் கழிவிரக்கத்தோடு கடந்துபோயிருக்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் பணிபுரிந்த செய்தி நிறுவனத்தில், சக ஆண் செய்தியாளர் ஒருவர், பலர் கூடி இருக்கும் இடத்தில் வைத்து சத்தமாக அந்தக் கேள்வியைக் கேட்டார்.

`ஏம்மா... உனக்கு வெட்கப்படத் தெரியுமா, தெரியாதா?’

அவர் இந்தக் கேள்வியைக் கேட்டதும் ஒட்டுமொத்த அலுவலகமும் பொங்கிச் சிரித்தது.

`ரொம்ப நல்லா தெரியும் சார். ஆனா, உங்ககிட்ட படணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. உங்களுக்கு அந்தத் தகுதியும் இல்லை’ என உறுதியாகச் சொன்னேன்.

ஒரு பெண்... தான் சந்திக்கும் ஒவ்வோர் ஆணிடமும் ஏன் வெட்கப்பட வேண்டும்? காதல் வயப்படும்போது, சம்பந்தப்பட்ட நபரிடம் (அதுவும்கூட எல்லா நேரத்திலும் வருவது இல்லை) மட்டும் வரச் சாத்தியமான அந்தரங்க மான ஓர் உணர்வை, ஏன் பொதுவில் வெளிப் படுத்த வேண்டும் என நினைக்கின்றனர்?

ஆண்பால் பெண்பால் அன்பால் - 2

சுதந்திரமான பெண்களைப் புரிந்துகொள்வதில் ஆண்களுக்கு சில சிக்கல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. சிரிப்புக்கும் பகிர்வுக்கும் அவர்கள் வெவ்வேறு அர்த்தங்களைக் கற்பித்துக் கொள்கின்றனர்.

ஊடக அலுவலகங்களில் சக ஊழியர்களுடன் இணைந்து பேதமின்றி பழகுவதும் பயணிப்பதும் சாதாரணம். அப்போது என்னுடன் நன்றாகப் பழகிய அலுவலக நண்பர் ஒருவருடன் தினமும் தேநீர் அருந்துவேன்; ஹோட்டல்களில் ஒன்றாகச் சாப்பிடுவேன்; கடற்கரைக்குச் சென்றிருக்கிறேன்.

இதனாலேயே அந்த நண்பர் நான் அவரைக் காதலிப்பதாக எடுத்துக்கொண்டார். இது ஒரு பிரச்னையாகக்கூட ஆனது. நான் அவருக்குத் தவறான ஆசை காட்டி ஏமாற்றிவிட்டதாகப் பரப்பினார். அப்போது எனக்கு அது கடுமையான மனஉளைச்சலை ஏற்படுத்தியது. இதற்கு பஞ்சாயத்து பண்ணியவர்கள்,  `நீ அவருடன் அங்கே போனாயா, இங்கே போனாயா, அவருடன் சேர்ந்து சாப்பிட் டாயா, டீ குடித்தாயா?' என்றெல்லாம் கேட்டார்கள். நான் `ஆமாம்' என்றே பதில் சொன்னேன். ஆனால், அவை எல்லாம் எப்படி காதலுக்கான சிக்னல்கள் ஆகும்? தான் நம்பக்கூடிய ஆண்களிடம் நிறைய விஷயங்களைப் பகிர்வது பெண்களின் இயல்பாக இருக்கிறது. பெரும்பாலும் அதை காதலுக்கான அல்லது தவறான ஓர் அழைப்பாக ஆண்கள் எடுத்துக் கொள்கிறார்கள். ஆண்களுடன் அலுவலகரீதியாகவோ நட்புரீதியாகவோ பழகும் பெண்கள், அந்த எல்லையைத் தெளிவாக வைத்துக்கொள்வது எவ்வளவு அவசியம் என உணர்ந்தது அப்போதுதான்.

ஆண்கள், மோசமான வளர்ப்புப் பின்னணியில் இருந்தே வருகின்றனர். கல்வியோ, வாசிப்போ, எழுத்தோ, பயணங்களோ எதுவுமே பெரும்பாலான வர்களை அடிப்படைவாதக் கருத்துக் களில் இருந்து விடுவிப்பது இல்லை. காரணம், இந்தக் குடும்ப அமைப்பு அவர்களுக்கு பல சௌகரியங்களை வழங்குகிறது. சுதந்திரம் என்ற பெயரில் அவர்கள் அனுபவிக்கும் அதிகாரம் அவர்களை ஏதோ ஒரு பேரரசனைப்போல உணரவைக்கிறது. வீடுகளில், பணி இடங்களில் பார்க்கும் பழகும் பெண்களிடம் ஏதேனும் ஓர் அதிகாரச் சீண்டலை அவர்கள் செய்ய விழைவதன் எளிய காரணம் அந்த அரச குணம்தான்.

அதற்கு மாறாக, பாலியல் சமத்துவத்தை உணர்ந்த ஆண்களுக்கு, பெண்களின் சுயத்தை மதிக்கவும் கொண்டாடவும் நன்றாகவே தெரியும்; இயற்கையான உடலியல் இன்னல்களைப் புரிந்துகொள்ள தெரியும்; கண்ணியமாக நடக்க வேண்டியதன் அவசியம் தெரியும்; மார்பகங்களோ, பிறப்பு உறுப்போ அல்ல, மூளைதான் மிக வலிமையான பாலுறுப்பு என்கிற புரிதல் இருக்கும்; இவர்களுக்குத் தான் பெண்களை சம உயிராக நேசிக்கத் தெரியும்; மரியாதை செலுத்தவும் அக்கறை காட்டவும் தெரியும்.

என் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அப்படியான ஆண்கள் பலர் உண்டு. திருமணத்தின் பெயரால் என் சுயத்தை முறித்துவிடாத, என் எழுத்தைக் கொண்டாடியவர் மறைந்த என் கணவர் கிருஷ்ணா டாவின்ஸி. உரையாடல்கள் வழியாகவே என் சமூக அறிவை மேம்படுத்தியவர் தோழர் புனித பாண்டியன். என் வளர்ச்சியை தூர நின்று பார்த்துவிட்டு, என் துயரங்களை அருகே இருந்து தாங்கிக்கொள்ளும் நண்பன் இயக்குநர் ராம், சீனியர் என்றாலும் ஈகோ பார்க்காமல் நான் எப்போது என்ன வேலை சொன்னாலும், என்ன உதவி கேட்டாலும் செய்து தரும் நண்பர் பத்திரிகையாளர் இம்மானுவேல் பிரபு, இவர்களோடு, `பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன், கவிஞர் நரன், தோழர் செல்வா என, என் மீது அன்பும் மரியாதையும் கொண்ட நான் மதிக்கும் ஆண்களின் பட்டியல் மிகப் பெரியது. இவர்களில் யாருமே என் ரத்த சொந்தம் இல்லை. ஆனால், எனக்கான மனிதர்கள். `ஆண்’ செருக்கைத் துறந்தவர்கள்.

இவர்கள் மட்டும் அல்ல, `குழந்தை பெற விருப்பம் இல்லை' எனச் சொல்லும் துணையின் விருப்பத்தை மதிக்கிறவர்; நோயாளியானபோதும் மனைவியைக் கைவிடாதவர்; மனைவி, ஆண் நண்பர்களோடு பழகுவதைச் சந்தேகிக்காதவர்; திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழும் பெண்ணின் தெரிவை அங்கீகரிக்கிறவர்; பெண்ணின் தலைமைப் பண்பை ரசிக்கிறவர்; தனியாகப் பயணம் போவதைத் தடுக்காதவர்; செல்போன்களை, ஃபேஸ்புக் அக்கவுன்ட்களை ஆராயாதவர்; போகும் இடம் எல்லாம் வேவு பார்க்காதவர்; விரும்பிய ஆடையை அவள் அணிவதை ஏற்கிறவர்; தாலி அணியவோ சடங்குகள் செய்யவோ மாட்டேன் என்பதை மதிக்கிறவர்; காதலிக்க மறுத்தால், விவாகரத்துக் கேட்டால் பழிவாங்கத் துடிக்காமல் விலகிப் போகிறவர் என இங்கே பெண்கள் வாழ்வதற்கான நம்பிக்கையை விதைக்கும் ஆண்கள் ஏராளம். இவர்களை வழிநடத்துவது அறிவு அல்ல, அன்பு மாத்திரமே. அந்த அன்புதான் மிக நிச்சயமாகப் பரவ வேண்டும்.

ஆணாதிக்கத்துக்கு, கால் பகுதி வாழ்க்கையை மோசமாகப் பலிகொடுத்தவள் நான். அதற்காக ஒட்டுமொத்த ஆண் சமூகத்தையும் பழிவாங்கும் நோக்கம் எனக்கு ஒருபோதும் வந்தது இல்லை. என்னைப் பொறுத்தவரை ஆண்களும் பலிகடாதான். அன்பும் அமைதியும் நிறைந்த ஒரு நல்வாழ்க்கை வாழ, அவர்களுக்கும்தான் தெரியவில்லை. ஆண்களை ஆதிக்கவாதிகளாகவும், பெண்களை அதற்குப் பலியாகிறவர்களாகவும் மத சாதியக் கருத்தியல்களால் ஆன இந்தச் சமூகக் கட்டமைப்பே உருவாக்குகிறது. அதை மாற்றவேண்டிய பொறுப்பு எனக்கும் இருப்பதாக உணர்கிறேன். என் அம்மாவைக் கொன்ற இந்த மண், என் மகள் வளர்கிறபோது பண்பட்டதாக இருக்க வேண்டும். அதற்கு நான் பாடுபட்டாக வேண்டும். நம் மகள்களைக் கொன்றுவிட்டு மகன்கள் ஜெயிலுக்குப் போகும் அவலத்துக்கு முடிவுகட்ட நாம் ஒவ்வொருவரும் பாடுபட்டாக வேண்டும்.

ஆணும் பெண்ணும் முரண்களால் பின்னப்பட்டவர்கள். மனித இயக்கத்தின் பெரிய சுவாரஸ்யமே அதுதான். ஒருவரை ஒருவர் நேசித்து மதித்துக்கொண்டாடித் தீர்க்க வேண்டுமே தவிர, வன்மத்தையும் வெறுப்பு உணர்வையும் பரவச் செய்யக் கூடாது. இன்றைய பெண்கள் சுதந்திரத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால், சுதந்திரம் ஒருபோதும் அதிகாரம் ஆகாது. மாறாக, அது சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உள்ளடக்கியது.

ஆண்கள் இதுவரை நம்பிக்கொண்டிருந்ததைப் போல, பெண்கள் இப்போது நம்பத் தொடங்கி இருப்பதைப்போல எந்தச் சுதந்திரமும் கட்டற்றது அல்ல (No freedom is absolute). சுதந்திரம் எப்போதும் பொறுப்புஉணர்வுடன் இணைந்து வருகிறது (Freedom always comes with responsibility). ஆண்-பெண் இணக்கம் என்பது, அதிகாரத்தால் நிறுவப்படுவது அல்ல; அது சமத்துவத்தால் மலர்விக்கப்படவேண்டியது. அதற்கான விதையை விதைக்க எல்லோருக்குமே அழைப்புவிடுக்கிறேன்.

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

ஆண்பால் பெண்பால் அன்பால் - 2

பெண் ஏன் அடிமையானாள்?

தந்தை பெரியார்


பெண் அடிமைத்தனத்தை, ஆண் - பெண்களுக்கு இடையிலான பாலினப் பிரச்னையாக நாம் கருதுகிறோம். உண்மையில், அது ஒரு சமூகப் பிரச்னை. ஆண் ஆதிக்கக் கருத்தியலின் வேர், மதங்களில் இருந்து கிளம்பி சாதியில் கிளை பரப்பி நிற்கிறது என்பதை மிக அழகாகவும் ஆழமாகவும் விவரித் திருப்பார் பெரியார். படிக்க, சற்றுக் கசப்பாக இருந்தாலும் மிக நல்ல மருந்து.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 2

இந்துப் பெண்ணின் எழுச்சியும் வீழ்ச்சியும்

டாக்டர் அம்பேத்கர்


இந்தியாவில் பெண்களின் நிலைக்கான ஒரு வரலாற்றுப் பார்வையைக் கொடுக்கக்கூடிய நூல். சாதியை உருவாக்கிய இந்து சனதான தர்மம் நீட்சியாகப் பெண்களை எவ்வாறு அடிமைப்படுத்தியது என்பதைப் புரிந்துகொள்ள இந்த நூல் உதவும்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 2

பாலினப் பாகுபாடும் சமூக அடையாளங்களும்

வ.கீதா, கிறிஸ்டி சுபத்ரா


பாலினப் பாகுபாடு குறித்த அடிப்படை விஷயங்களை, கேள்வி-பதில் வடிவில் எளிமையாக விவரிக்கும் புத்தகம்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 2

குழந்தைப் போராளி

சைனா கெய்ரெற்சி


உகாண்டாவில் பிறந்து டென்மார்க்கில் அகதியாக வாழும் இளம் கறுப்பு இனப் பெண்ணின் வாழ்க்கை வரலாற்று நூல். சமூக அநீதிகளும், குடும்ப வன்முறைகளும், ஆண் ஆதிக்க வன்மங்களும் குழந்தைகளிடம் இருந்து குழந்தைப் பருவத்தைப் பறித்து வீசும் விதத்தை, சைனாவின் எழுத்து எடுத்துரைக்கிறது. இந்தியக் குடும்ப அமைப்பு, பெரும் அளவில் கறுப்பு இனத்தவரோடு ஒத்துப்போகக்கூடியது என்பதால், நம் வாழ்வியலோடு ஒப்பிட்டுக்கொள்ள முடியும். ஆண்கள் நிச்சயம் படிக்க வேண்டும்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 2

லவ், செக்ஸ் அண்ட் ரெஸ்பெக்ட்

செட்ரிக் எம் கென்னி.


சமகால நகர்ப்புறக் கலாசாரத்தில் பாலியலை முற்போக்காக ஆய்வுசெய்யும் நூல். மண உறவில் குடும்ப அமைப்பு உண்டாக்கும் தாக்கம் தொடங்கி பாலுறவில் ஆண் மற்றும் பெண்ணின் பாத்திரங்களை வெளிப்படையாகப் பேசுகிறது.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 2

3'S A CROWD

விஜய் நாகஸ்வாமி


`கள்ள உறவுகள்' எனச் சொல்லப்படும் திருமணத்தை மீறிய உறவுகள் நவீனக் கலாசாரத்தின் ஒழுக்கமின்மையால் வருகிறது என நம்பப்படுகிறது. ஆனால், அது ஒரு மூடநம்பிக்கை என்கிறார் நாகஸ்வாமி. `கள்ள உறவுகள் எவ்வளவு சர்வ சாதாரணமானவை, ஏன் அவை நிகழ்கின்றன, யாருக்கு, எதனால் அவை நிகழ்கின்றன, பாதிக்கப் பட்டவர்கள் எப்படி நடந்து கொள்கின்றனர்?' போன்ற பல கேள்விகளுக்கு இந்த நூலில் விடை உண்டு. திருமணத்தை மீறிய உறவுகளைப் புரிந்துகொள்ளவும், அதில் இருந்து மீண்டு வரவும் இந்த நூல் பெரிதும் உதவும்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 2

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை

அம்பை


வீடுகளில் பெண் உழைப்பு சுரண்டப்படும்விதம் மற்றும் சமையலறைகள் எப்படி பெண்களைச் சிறைப்படுத்து கின்றன என்பதை இலகுவான மொழியில் எடுத்துரைக்கும் சிறுகதை. அம்பை எழுதிய பிற சிறுகதைகளும் அவசியம் வாசிக்கவேண்டியவையே!