Published:Updated:

மழையும்... போராட்டமும்!

மழையும்... போராட்டமும்!
பிரீமியம் ஸ்டோரி
மழையும்... போராட்டமும்!

பா.ஜெயவேல்

மழையும்... போராட்டமும்!

பா.ஜெயவேல்

Published:Updated:
மழையும்... போராட்டமும்!
பிரீமியம் ஸ்டோரி
மழையும்... போராட்டமும்!
மழையும்... போராட்டமும்!

லகின் ஒட்டுமொத்த சாட்டிலைட்களையும் சென்னையை நோக்கித் திரும்பவைத்தது  2015- ம் ஆண்டு டிசம்பர் மழை. `தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த மழைக்குப் பிறகாவது அரசு விழித்துக்கொண்டதா, தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறதா, அடுத்த மழைக்கு நாம் தயாரா, களநிலவரம் என்ன..?' என்பதை, தொடர்ந்து வெளியிட்டுவருகிறோம்.

இந்த வாரம், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் தற்போதைய நிலை.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்ததே மழைவெள்ளம்தான். அந்தச் சமயத்தில்தான் மாவட்ட நிர்வாகத்துக்கே ஆக்கிரமிப்புகளின் விவரங்கள் தெரியவந்தன. மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி, தொழிலாளர் நலத் துறைச் செயலாளர் அமுதா இருவரும் களத்தில் இறங்கினார்கள். 

`மஞ்சள்நீர் ஓடை, வேகவதி ஆற்றங்கரை ஓரம், ஜி.எஸ்.டி சாலை, மகாலட்சுமி நகர், பாப்பான் கால்வாய் முகத்துவாரத்தில் உள்ள சமத்துவப் பெரியார் நகர் உள்பட பல இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றினோம். ஆக்கிரமிப்பு களை அகற்றும் பணி ஆண்டு முழுவதும் தொடரும்’ என, கடந்த மழையின்போது பேட்டி கொடுத்தார் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி.

ஆனால், இதுவரை எந்த ஆக்கிரமிப்பும் முழுமையாக அகற்றப்படவில்லை என்பதே தற்போதைய நிலவரம்.

காஞ்சிபுரத்தில் மேட்டு தெரு, காந்தி ரோடு, நான்கு ராஜவீதிகளும் கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் இருக்கும் பகுதிகள். ஆனால், இவை அனைத்துமே நவம்பர் மாதம் பெய்த மழைக்கே வெள்ளநீரில் மூழ்கின. 30 ஆண்டுகளுக்கு முன்னர் பாலாறு மற்றும் வேகவதி ஆறுகளில் வெள்ளம் வந்தபோதுகூட இந்தப் பகுதிகளில் எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், கடந்த ஆண்டு பாதிப்புக்குக் காரணம் வேகவதி ஆற்றின் கரைகளில் இருக்கும் ஆக்கிரமிப்பு. 

மழையும்... போராட்டமும்!

``வேகவதி ஆற்றின் மொத்த நீளம் 26 கி.மீ. இது, காஞ்சிபுரம் நகரத்தின் வழியாக திம்மராஜம்பேட்டையில் உள்ள பாலாற்றில் கலக்கிறது. மஞ்சள்நீர் கால்வாய், அஷ்டபுஜம் கால்வாய், தேனம்பாக்கம் கால்வாய், ரெட்டைக் கால்வாய் என நான்கு கால்வாய்கள், வேகவதி ஆற்றில் இருந்து பிரிந்து காஞ்சிபுரம் நகரத்துக்கு வருகின்றன. வேகவதி ஆற்றின் அகலம், சில இடத்தில் 500 மீட்டர் இருக்கும், ஒரு இடத்தில் 50 மீட்டர் இருக்கும், ஒருசில இடங்களில் வெறும் 5 மீட்டர்தான் இருக்கும். அவ்வளவு ஆக்கிரமிப்புகள் இங்கே உள்ளன.

மஞ்சள்நீர் கால்வாயில் இப்போது ஓடுவது, சாக்கடைநீர்தான். அதன் கிளைக் கால்வாயான அஷ்டபுஜம் கால்வாயில்தான் ஏகப்பட்ட ஆக்கிரமிப்புகள். கடந்த மழையில், இந்தக் கால்வாயை அவசர அவசரமாகத் தூர்வார ஆரம்பித்தார்கள். ஆனால், பாதியிலேயே விட்டுவிட்டார்கள். இதுபோல் ரெட்டைக் கால்வாயும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியிருக்கிறது.

2011-ம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுப் பணித் துறை கொடுத்த புள்ளிவிவரப்படி, 55 ஏக்கரில் 1,798 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், 4,000-த்துக்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிப்புசெய்து கட்டப் பட்டுள்ளன. `வேகவதி ஆற்றின் அகலம் 400 அடிக்கு மேல் உள்ளது' என அரசாங்க வரைபடம் சொன்னாலும், சில இடங்களில் வெறும் 50 அடி அகலம் மட்டுமே உள்ளது. மாவட்ட நிர்வாகம் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

79 ஏரிகள், 390 கோடி ரூபாயில் உலக வங்கித் திட்டத்தின் மூலமாக நீர்-நிலவளத் திட்டத்தின் கீழ் 2011-ம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம ஏரிகளில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் பாசனவரத்துக் கால்வாய் மற்றும் கலங்கல் சீரமைப்பு என்னும் திட்டத்தில் பணிகள் நடைபெற்றதாக அறிவிப்புப் பலகை வைத்திருக்கிறார்கள். ஆனால், சொல்லும்படியாக எந்த வேலையும் சரிவர நடக்கவில்லை. நான்கு வருடங்களாக எங்கள் போராட்டம் தொடர்கிறது. ஆனால், நடவடிக்கைகள்தான் இல்லை” என்கிறார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் பண்பாட்டுக் கழக அமைப்பாளர் கோ.ரா.ரவி. 

மஞ்சள்நீர் கால்வாயில் இருந்து கிளம்பும் நீர், நத்தப்பேட்டை ஏரியில் கலக்கிறது. ஒரு பக்கம் துர்நாற்றத்துடன் வரும் மஞ்சள்நீர் கால்வாய்க் கழிவுகள், மற்றொரு பக்கம் ஏரியில் கொட்டப்படும் நகராட்சிக் குப்பைக் கிடங்கு என அந்தப் பகுதியே மோசமாகக் காட்சியளிக்கிறது. நகராட்சிக் குப்பைகளையும் செப்டிக் டேங்க் கழிவுகளையும் லாரிகள் மூலம் ஏரியில் கொட்டுகிறார்கள்.

ஆற்றிலும் கால்வாயிலும் அதிகாரிகளின் துணையோடுதான் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. ஆளும் கட்சியினர், ஆக்கிரமிப்புகளை ஓட்டுக்காக அகற்றுவது இல்லை. பெரும்பாலான உள்ளாட்சிப் பிரமுகர்கள்  ‘முரட்டு’த்தனமானவர்கள் என்பதால், பொது மக்களும் அரசாங்கத்தினரும் அதைப் பற்றி பேசவே அச்சப்படுகிறார்கள்.

மழையும்... போராட்டமும்!

செங்கல்பட்டு: கடந்த வருடம் களத்தூரான் கால்வாய் உயரமாக அமைக்கப்பட்டதாலும் தூர்வாரப் படாததாலும், மகாலட்சுமி நகர் வெள்ளத்தில் மூழ்கியது.

“சில வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட தடுப்பணையால்தான் தண்ணீர் ஊருக்குள் வருகிறது. தடுப்பணை கட்டுவது தவறு இல்லை. ஆனால், தடுப்பணையில் இருந்து தண்ணீர் பாய்கிற களத்தூரான் கால்வாய் புதர் மண்டிக் கிடக்கிறது. தென்னேரி, ஆத்தூர் வடபாதி ஏரி, உள்ளாவூர் பெரிய ஏரி, கொளவாய் ஏரி என மொத்தம் 22 ஏரிகளில் இருந்து இங்கே தண்ணீர் வருகிறது. செங்கல்பட்டில் இருந்து ஆரம்பிக்கும் களத்தூரான் கால்வாய் (நீஞ்சல் மடு) இங்கு உள்ள கிராமங்களின் வழியாக 16 கி.மீ வரை சென்று பொன்விளைந்த களத்தூர் ஏரியில் கலக்கிறது.

களத்தூரான் கால்வாயை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, தூர்வாரினால் தண்ணீர் விரைவாகச் செல்லும். மகாலட்சுமி நகர் பகுதியில் இருபுறமும் கரைகள் கட்டப்பட வேண்டும். செங்கல்பட்டில் மழை லேசாகப் பெய்தாலும் சுற்று வட்டாரத்தில் பெய்யும் மழைநீர் வரவால் இந்தப் பகுதியில் தண்ணீர் சூழ்ந்துவிடும். போன வாரம் பெய்த லேசான மழைக்கே ஏரியாவில் 10 அடி தண்ணீர் ஏறிவிட்டது” என்கிறார் மகாலட்சுமி நகர் குடியிருப்போர் நலவாழ்வு சங்கச் செயலாளர் மணி.

கூடுவாஞ்சேரி: ஐந்து ஏரிகளின் சங்கமம், கூடுவாஞ்சேரி. இந்தப் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பால் அமுதம் காலனி, உதயசூரியன் நகர், ஜெயலட்சுமி நகர், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி நகர், ஐஸ்வர்யா நகர், கோமதி நகர் ஆகிய இடங்கள் மூழ்கின. மகாலட்சுமி நகரில் உள்ள சுமார் 1,500-க்கும் மேற்பட்ட வீடுகள், வெள்ளத்தில் மூழ்கின. அங்கு உள்ளவர்கள் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்தனர். இதற்கு எல்லாம் முக்கியக் காரணம், நந்திவரம் பெரிய ஏரி இரவோடு இரவாக உடைக்கப்பட்டதுதான்.

``நந்திவரம், மூலக்கரணி, பெருமாட்டு நல்லூர், தங்கப்பா புரம் ஆகிய நான்கு ஊர்களை அடக்கியுள்ளது நந்திவரம் ஏரி. இந்த ஏரியில் இருந்து ஜி.எஸ்.டி ரோடு வரை இரண்டு கி.மீ.

17 அடியில் இருந்த நந்திவரம் பெரிய ஏரியின் வடிகால் கால்வாய், இப்போது 9 அடிதான் இருக்கிறது. 60 அடி உள்ள கால்வாய் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஊருக்குள் தண்ணீர் வடியாமல் தேங்குகிறது. வெள்ளத்தின்போது ஆர்.டி.ஓ., மாவட்ட ஆட்சியர் உள்ளிட் டவர்கள் இங்கே வந்து பார்த்தார்கள். ஜி.எஸ்.டி சாலையில் ஒரு சின்ன பைப் போட்டுக் கொடுத்தார்கள். தண்ணீர் வடியாத காரணத்தால், அதை மூன்று முறை மாற்றிவிட்டார்கள். நந்திவரம் ஏரி, ஊரப்பாக்கம் ஏரி போன்ற ஏரிகளைத் தூர்வாரவில்லை. வெள்ளம் ஏற்பட்டபோது, அதிகாரிகள் இங்கே வந்து ஆக்கிரமிப்புகளை மார்க் செய்துவிட்டுச் சென்றார்கள். ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்ற இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்கிறார் ஜெயலட்சுமி நகர் குடியிருப்போர் நலச் சங்கச் செயலாளர் சுப்பிரமணி.

மழையும்... போராட்டமும்!

திருப்போரூர்: இந்தப் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அனைத்தும் கடுமையான சேதத்தைச் சந்தித்தன. கிழக்குக் கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர் ஆகிய பகுதிகளில் வெள்ளம், சாலைகளை மூழ்கடித்தன. கேளம் பாக்கத்தில் இருந்து பூஞ்சேரி வரையிலான இடங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால், சாலைகள் சேதம் அடைந்தன.

“திருப்போரூர் பகுதியில் மட்டுமே சுமார் நான்கு ஆயிரம் இருளர்கள் வாழும் மண்குடிசைகள் உள்ளன. கடற்கரை ஓரம் என்பதால், ஏரிகள் உடைந்தாலோ, வழிந்தாலோ இந்தப் பகுதியில் இருக்கும் பக்கிங்ஹாம் கால்வாய்க்குத்தான் தண்ணீர் வரும். வெள்ளம் ஏற்பட்டால் அனைத்துப் பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் கூடும் பகுதி என்பதால், பாதிப்பு மிகவும் அதிகமாகவே இருக்கும். கடந்த வருடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பஞ்சந்திருத்தி, பண்டிதமேடு, சிறுதாவூர் போன்ற கிராமங்கள் மூழ்கின. இந்தப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு, அரசாங்கத்தால் இன்னும் சரியான இடம்பார்த்துக் கொடுக்க முடியவில்லை” என்கிறார் சி.பி.ஐ-எம் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் செல்வம்.

`வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்னரே அடையாறு ஆற்றைத் தூர்வாரி முறைப்படுத்த வேண்டும்' என முடிச்சூர், வரதராஜபுரம் போன்ற பகுதிகளில் உள்ள ஏராளமான மக்கள் கடந்த வாரம் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மழை நெருங்க நெருங்க, மக்களின் அச்சம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது; அவர்களின் போராட்டமும் வலுக்கத் தொடங்கிவிட்டது.