Published:Updated:

பிரிவதுதான் தீர்வா?

பிரிவதுதான் தீர்வா?
பிரீமியம் ஸ்டோரி
பிரிவதுதான் தீர்வா?

ஆர்.வைதேகி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன் ஓவியம்: ஹாசிப்கான்

பிரிவதுதான் தீர்வா?

ஆர்.வைதேகி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன் ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
பிரிவதுதான் தீர்வா?
பிரீமியம் ஸ்டோரி
பிரிவதுதான் தீர்வா?
பிரிவதுதான் தீர்வா?

காட்சி - 1

குழந்தையை விளையாட விட்டுவிட்டு, வாசலையே எதிர்நோக்கிக் காத்திருக்கிறார் மனைவி.

கணவனை எதிர்நோக்கிய தவிப்பு... பரிதவிப்பு.

உள்ளே நுழையும் கணவர், மனைவியைக் கண்டுகொள்ளவே இல்லை. அப்பாவைப் பார்த்ததும் பாசத்துடன் தாவும் குழந்தையையும் உதறிவிட்டு விறுவிறுவென நடக்கிறார். குழந்தையைத் தூக்கிக்கொண்டு கணவர் பின்னால் கண்ணீருடன் ஓடுகிறார் மனைவி.

“எல்லாத்தையும் மறந்துடுவோம்... புது வாழ்க்கையை ஆரம்பிப்போம்... குழந்தை முகத்தை ஒருவாட்டி பாருங்க!”  எனக் கண்ணீரில் நனைந்து வரும் மனைவியின் குரலை, காதில் வாங்காமல் நடக்கிறார் கணவர்.

விவாகரத்து வழக்கு தாக்கல்செய்த தம்பதிக்கு, கவுன்சலிங் தொடங்குகிறது. பிரிவு என்ற முடிவில் உறுதியாக நிற்கிறார் கணவர். கவுன்சலிங் முடிகிறது. மனைவியின் முகத்தைக்கூடப் பார்க்காமல் விருட்டென வெளியேறுகிறார் கணவர்.

குழந்தையை இறுக அணைத்தபடி இடிந்துபோய்க் கதறுகிறார் மனைவி. கவுன்சலிங் கொடுத்தவருக்கே கண்கள் கலங்குகின்றன.

காட்சி-2


மனைவியிடம் ஏதோ பேச முயற்சிக்கிறார் கணவர். அவரது முகத்தைப் பார்க்கக்கூட மனைவி தயாராக இல்லை. தமிழ்ப்பட க்ளைமாக்ஸ் மாதிரி கடைசிக் காட்சியில் `எல்லாம் மாறிவிடாதா...

விவாகரத்து வேண்டாம் என மனைவி தன்னுடன் வந்துவிட மாட்டாரா' என்ற எதிர்பார்ப்பில் கையில் உள்ள பெட்டியை இறுகப் பிடித்துக்கொண்டு நிற்கிறார் கணவர்.

“நான் கேட்டதை எல்லாம் கொண்டு வந்தாச்சா?” - கணவரின் கையில் இருக்கும் பெட்டியை வெடுக்கெனப் பிடுங்குகிறார் மனைவி. அங்கேயே திறந்து, பெட்டியில் உள்ள பொருட்களை சரிபார்க்கிறார்.

ஏதோ ஒரு பொருள் இல்லாததை கவனித்து, கணவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் மனைவி.

“உன் ஞாபகமா அது மட்டுமாவது என்கிட்ட இருக்கட்டுமே” என, ஏறக்குறைய யாசகம் கேட்பதுபோல் கெஞ்சுகிறார் அவர்.

தன் கோபத்தைக் கொஞ்சமும் குறைத்துக் கொள்ளாமல் கணவரை முறைக்கிறார்.

வேறு வழி இல்லாமல் தன் சட்டைப்பையில் இருந்து அந்தத் திருமண மோதிரத்தை எடுத்துக் கொடுக்கிறார் கணவர்.

அத்தனை வருடங்கள் சேர்ந்து வாழ்ந்ததற்கான எந்தத் தடயமும் இன்றி, அந்த இடத்திலேயே கலைந்துபோகிறது குடும்பம்.

சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இதுபோன்ற காட்சிகள் தினம் தினம் நடந்துகொண்டே இருக்கின்றன. திருமணம் முடிந்து ஒரு வாரமே ஆன தம்பதியினர் தொடங்கி, 60 வயதுடைய தம்பதியினர் வரை விவாகரத்துக்காக குடும்பநல நீதிமன்றங்களில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். விவாகரத்து பெறும் தம்பதிகளின் எண்ணிக்கை, முன் எப்போதையும்விட கணிசமான அளவில் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

`முப்பது நாள் சேலன்ஜ்... மூன்று மாத சவால்!' என ஸ்டேட்டஸ் போட்டுக் கொண்டாடும் அளவுக்கு, சவாலாக மாறியிருக்கிறது திருமண உறவு. நம்மைச் சுற்றி நடக்கும் மாற்றங்கள், விவாகரத்துக் கான காரணங்களை முற்றிலுமாக மாற்றி அமைத்துள்ளன. முன்னர் எல்லாம் வெகு சில காரணங்களுக்காக மட்டுமே பிரிவை நாடிய நாம், இன்று எதிர்பாராத பிரச்னை களையும், தீர்வுகாண முடியாத பிணக்குகளையும் உருவாக்க ஆரம்பித்தி ருக்கிறோம்.

பிரிவதுதான் தீர்வா?

``90-களின் இறுதி வரையில்கூட வரதட் சணை, உடல்ரீதியிலான துன்புறுத்தல்கள், மாமியார் கொடுமை என்ற மூன்று காரணங்கள்தான் விவாகரத்துகளின் மிக முக்கியக் காரணிகளாக இருந்தன. `சரிவரலை... இனிமே வேண்டாம்' எனப் பக்குவமாக முடிவெடுத்து, மியூச்சுவலாகப் பிரியும் தம்பதிகள் மிகவும் அரிதாகவே இருந்தனர்.

ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக விவாகரத்துக்கு விநோதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. மனைவியுடன் தாம்பத்திய உறவைத் தவிர்த்தல், இதில் ஒரு மிக முக்கியக் காரணம். நம்முடைய பொருளாதாரத் தேடல், தொழில்நுட்ப வளர்ச்சி, ஆக்கிரமித்திருக்கும் வாழ்க்கைமுறை என, காரணங்கள் மாறிவிட்டன'' என்கிறார் வழக்குரைஞர் அருள்மொழி.

விவாகரத்து பெறுவோரைப்போலவே, சட்டரீதியிலான எந்தவித முன்னெடுப்பு களும் இல்லாமல், `இனி சேர்ந்து வாழ வேண்டாம்' என விலகிப்போகிறவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகமாகிவருகிறது. பிரிந்துவிட நினைப்பவர்களில் மூன்றில் இரண்டு பேர், இப்படித் தனித்து வாழ்கிறார்கள்.

பிரிவதுதான் தீர்வா?

``விவாகரத்துக்களால் அதிகப்படியான பாதிப்புகளைச் சந்திப்பவர்கள் அப்பாவிக் குழந்தைகளும், பெற்றோரும்தான். குறிப்பாக, குழந்தைகள் சந்திக்கும் உளவியல் சிக்கல்கள் மிக அதிகம். சென்னை உயர் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடக்கும் தம்பதிகளின் குழந்தை களுக்காகவே டே கேர் சென்டர் ஒன்று இருக்கிறது. குழந்தைகளை அங்கே விட்டுவிட்டு, வழக்குக்கு வருகிறார்கள். இந்தச் சூழலைச் சந்திக்கும் குழந்தைகள், கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். 30 வயதுக்குள் பிரியும் தம்பதிகளின் எண்ணிக்கை, எதிர்பாராத வகையில் அதிகரித்து வருகிறது. மாமனார், மாமியாரால் ஆரம்பித்த சண்டைகள் போய், இன்று தனிக்குடித்தனம் நடத்தும் தம்பதியினர் `கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிகிறோம்' என நீதிமன்றங்களில் நிற்கிறார்கள். பைப்பில் தண்ணீர் வரவில்லை, கணவனுக்கு உடனடியாக முடிவெடுக்கத் தெரியவில்லை, மனைவி, பெர்சனல் ஸ்பேஸ் கொடுக்க மறுக்கிறாள். இனி சேர்ந்து வாழவே முடியாது எனச் சின்னச்சின்னப் பிரச்னைகளுக்குப் பெரிய சண்டைகள் போடுகிறார்கள்'' என்கிறார் வழக்குரைஞர் ஆதிலட்சுமி.

பிரிவதுதான் தீர்வா?

பெங்களூருவைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் மற்றும் எழுத்தாளர் அஸ்வினி ஜெய்சிம். `சிங்கிள் மதர்ஸ் ஆஃப் பெங்களூரு' என்கிற ஒரு ஃபேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்து, விவாகரத்து ஆன அம்மாக்களின் அனுபவங்களையும் ஆலோசனை களையும் பகிரச் செய்கிறார். அவரிடம் பேசினேன். ``விவாகரத்துக்குப் பிறகு ஒரு சிங்கிள் மதர் ஆக ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளும் சவால், மரண அவஸ்தைக்குச் சமம். இந்த விஷயங்கள், குழந்தைகளுக்கு முதல்ல பயங்கர அதிர்ச்சியா இருக்கும். சில நேரம், `நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?'னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க. `அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக்கிட்டே இருந்தா, நான் சோகமாகிடுவேன். அப்புறம் `உங்ககிட்ட என்னால ஜாலியா இருக்க முடியாது. அதனாலதான்'னு என் குழந்தைக்கு எடுத்துச் சொல்லி சொல்லிப் புரியவெச்சேன்'' என வலிகளை வென்ற புன்னகையோடு பேசுகிறார் அஸ்வினி.

பிரிவதுதான் தீர்வா?

விவாகரத்து எண்ணிக்கை அதிகரிப்பதன் பின்னணியில் கூட்டுக்குடும்பங்கள் சிதைந்துபோனதுதான் முக்கியக் காரணமாக முன்வைக்கப்படுகிறது. தேவையான விஷயங்களுக்குக்கூட அறிவுரை சொல்லித் திருத்த, எந்த வீட்டிலும் இன்று பெரியவர்கள் இல்லை. இதனால் குடும்பத்தில் சிக்கல் என வரும்போது, ஆயிரங்களைக் கொட்டிக் கொடுத்து ஆலோசகர்களின் அப்பாயின் மென்ட்டுக்காகக் காத்திருக்கவேண்டிய நிலை உண்டாகிறது. அப்படி காசு கொடுத்து கவுன்சலிங் வரும் தம்பதியரின் மனநிலை எப்படி இருக்கிறது?

``இரண்டுவிதமான கவுன்சலிங் உண்டு. தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வது ஒன்று. கோர்ட்டில் கொடுக்கப்படும் ஸ்பெஷல் கவுன்சலிங் மற்றொன்று. வழக்கு போட்ட நபர், `கவுன்சலிங் எல்லாம் வேணாம்'கிற மனநிலையோடும், `சேர்ந்து வாழணும்'னு நினைக்கும் எதிராளி, `கவுன்சலிங் மூலமா இன்னொரு வாய்ப்பு கிடைக்காதா'ங்கிற தவிப்போடும் வருவதைப் பார்க்கலாம்'' என்கிறார் சென்னையின் மூத்த குடும்பநல ஆலோசகர் நப்பின்னை.

பிரிவதுதான் தீர்வா?

இந்தியாவில் ஒரு தம்பதியர் விவாகரத்து செய்கிறார் என்றால், மூன்று தம்பதியர் சட்டரீதியிலான நடவடிக்கைகள் வேண்டாம் எனத் தனித்தனியே பிரிந்து வாழ்வதையே விரும்புகிறார்கள்.

``கவுன்சலிங் வரும்போது பிரச்னைக்குத் தீர்வு வேணும் என நினைக்காமல், கணவனும் மனைவியும் ஒருத்தர் மீது ஒருத்தர் புகார்களை அடுக்குவார்கள். `மூணாவது மனுஷங்ககிட்ட போய், நம்ம அந்தரங்கப் பிரச்னையைப் பேசணுமா!'னு நினைக்கிறவங்களும் இருக்காங்க. அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு அந்த எண்ணம் அதிகமாவே இருக்கிறது. `நீதான் குடும்பத் தலைவன்,  உனக்கு எல்லாம் தெரியும்'னு சொல்லியே வளர்க்கப்படும் ஆண்கள், பிரச்னை என்று வரும்போது, மூன்றாவது நபர் மூலமாக தீர்வு தேடுவதை விரும்புவது இல்லை. எனக்கு எல்லாம் தெரியும்னு நினைக்கிறார்கள். கோர்ட்டுக்குப் போவதற்கு முன்னரே தனிப்பட்ட முறையில் கவுன்சலிங் போகிறவர்கள் ஓரளவுக்குச் சிந்திக்கிறார்கள். ஆனால், போலீஸ், பஞ்சாயத்து, வக்கீல், கோர்ட்டு எனச் சென்றுவிட்டால், கணவன்-மனைவிக்குள் இடைவெளி அதிகமாகிவிடுகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கவுன்சலிங் பெரிய அளவில் உதவுவது இல்லை'' என்கிறார் நப்பின்னை.

பிரிவதுதான் தீர்வா?

`இன்னும் அடுத்தடுத்த தலைமுறைகளில் விவாகரத்து எண்ணிக்கை அதிகரிக்குமே தவிர, குறையாது' என்பதே புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை. விவாகரத்துகள் குறைய வேண்டும் என்றால், திருமணம் பற்றியப் புரிதலை இளம் தலைமுறையினரிடம் உருவாக்க வேண்டும். அதற்கு ஆண்-பெண் என இரண்டு பேரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மிக முக்கியம். அதுதான் இந்த விவாகரத்துக்களைக் குறைக்கும்.

`இனியும் சேர்ந்த வாழ வழியே இல்லை!' என்ற நிலையில், விவாகரத்து நிச்சயம் ஏற்றுக் கொள்ளத்தக்கதே. ஆனால், சின்னச் சின்னச் சீண்டல்களுக்கும், வென்றெடுக்க முடியும் ஈகோவுக்கும்கூட நீதிமன்றங்களை நாடுவது நமக்கு மட்டும் அல்ல, நம்மைச் சார்ந்து வாழும் குழந்தைகளுக்கும் அவர்களின் எதிர்காலத்துக்குமே தீங்கானது. 

விவாகரத்து செய்துகொள்ளும் பெண்கள், வாழ்வை எதிர்கொள்வதில் பல சவால்கள் உண்டு. வருடங்கள் கடந்தும் அந்தச் சிக்கல்களை தைரியமாக எதிர்கொண்டு போராடிக்கொண்டிருக்கிறார் பார்கவி மணி. சின்னத்திரையில் முன்னாள் பிரபலமான இவர், இன்று பிசினஸ் உமன்.

பிரிவதுதான் தீர்வா?``ஒரு நல்ல மனைவியா, மருமகளா, அம்மாவா என்னோட எல்லா ரோல்களையும் நல்லா பண்ணணும்கிற சராசரி எண்ணமும் எதிர்பார்ப்பும் எனக்கும் இருந்தது. பாடகி, நடிகைனு மீடியாவுல பிரபலமா இருந்தேன். நான் மீடியாவுல இருக்கிறது தெரிஞ்சுதான் என்னைப் பொண்ணு கேட்டு வந்தாங்க. நிச்சயம் ஆனதும் அவங்களோட டிமாண்ட் வேற மாதிரி இருந்தது. `எல்லாத்தையும்விட்டு ஒதுங்கிடணும்'னாங்க. `இந்தக் கல்யாணம் வேணாம்... நிறுத்திடலாம்'னு அப்பாகிட்ட சொன்னேன். ஆனா, அப்போ அது அவங்களுக்கு கெளரவப் பிரச்னையா இருந்தது. `நீதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப்போயேன்'னு அட்வைஸ் பண்ணினாங்க. கல்யாணமும் முடிஞ்சது.

புகுந்த வீட்டுக்காரங்களுக்கு, நான் எது பண்ணினாலும் தப்பாவே தெரிஞ்சது. என்னோட எக்ஸ் ஹஸ்பண்ட் என் தரப்பு நியாயங்களைக் கேட்க, என்னைக்குமே தயாரா இல்லை. அவங்க அம்மா, அப்பா என்ன சொன்னாலும் அது சரியாத்தான் இருக்கும்னு சாதிக்கிற டைப். `சரியாகிடும்'னு சகிச்சுக்கிட்டேன்.

லீடர்ஷிப் குவாலிட்டியோடு, கலகலப்பானவளா, தன்னம்பிக்கையோடு இருந்த என்னை, அவமானத்துல கூனிக்குறுக வெச்சாங்க என் புகுந்த வீட்டு மனுஷங்க. ஒருகட்டத்துல `நிஜமாவே நாம எதுக்கும் லாயக்கு இல்லையோ, நமக்கு அறிவே இல்லையோ'னு நானே ஃபீல் பண்ண ஆரம்பிச்சுட்டேன். இன்னைக்கு சரியாகிடும்.... நாளைக்கு சரியாகிடும்னு கிட்டத்தட்ட  ஒன்பது வருடங்கள் ஓடினதுதான் மிச்சம். உச்சக்கட்ட ஸ்ட்ரெஸ்ல நான் எக்கச்சக்கமா வெயிட்போட்டு 100 கிலோவுக்கு வந்தேன்.

என்னோட எக்ஸ் ஹஸ்பண்ட் கெட்டவர் இல்லை. அவரோட வளர்ப்பு முறை அப்படி. அதில் இருந்து மீண்டு வந்து, யதார்த்தத்தைப் புரிஞ்சுக்க அவர் தயாரா இல்லை. டைவர்ஸுக்கு ஃபைல் பண்ணிட்டு கவுன்சலிங் போனேன்.

`முதல்முறை நீ அடக்கப்பட்டபோதே... அவமானப் படுத்தப்பட்டபோதே உன் எதிர்ப்பைக் காட்டியிருந்தா, இன்னைக்கு உனக்கு இந்த நிலைமை வந்திருக்காது'னு சொன்னாங்க. அந்த ஒன்பது  வருடங்களில் எனக்கும் என் எக்ஸ் ஹஸ்பண்டுக்கும் பெரிய சண்டைகள் வந்தது இல்லை. ஆனால், அவருக்கு அவங்க அம்மா, அப்பாவோட பிரஷர் அதிகமா இருந்தது.

தனியாவே கோர்ட்டுக்குப் போனேன்; தனியாவே டிவோர்ஸ் வாங்கிட்டு வந்தேன். மேல படிச்சேன். என் திறமைகளை வளர்த்துக்கிட்டேன். டிசைன் ஸ்டுடியோ ஒன்று ஆரம்பித்தேன். வாழ்க்கையில் ஏதாவது பண்ணுவோமானு இருந்த நான், பிசினஸைக் கொஞ்சம் கொஞ்சமா டெவலப் பண்ணினேன். என்னோட நெகட்டிவ் எனர்ஜியை எல்லாம் பாசிட்டிவா மாத்திக்கிட்டேன். என்னைச் சுற்றி நல்ல மனிதர்கள் வந்து சேர்ந்தாங்க. நிறைய நல்ல நட்பு கிடைத்தது.

`எல்லாம் முடிஞ்சு ஆறு வருடங்கள் ஆச்சு. இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோயேன்'னு கேட்காத ஆளே இல்லை. இழந்த நம்பிக்கையும் தைரியமும் 100 சதவிகிதம் மீண்டும் எனக்கு என்னைக்குக் கிடைக்கிறதோ, அன்னைக்குதான் அடுத்த வாழ்க்கையைப் பற்றி யோசிப்பது என்ற முடிவில் இருக்கிறேன். இப்போது எனக்கு யார் மீதும்  கோபமோ, வருத்தமோ, ஏமாற்றமோ இல்லை'' என்கிறார் பார்கவி மணி!