Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 16

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 16
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 16

ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 16

ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி

Published:Updated:
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 16
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 16
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 16

கேள்விகளுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கை வைப்பதை, நவீன பகுத்தறிவுவாதம் மிகக் கடுமையாக எதிர்க்கிறது. இறை நம்பிக்கை, மரபு வாழ்வியல் எல்லாம் ‘வெறும் நம்பிக்கைகள்’ என்பது அதன் குற்றச்சாட்டு. அதே நவீனப் பகுத்தறிவு செய்துவரும் `அறிவுபூர்வமான தொழில்’ ஒன்றைப் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

ட்டச்சத்து தொழில்நுட்பம் எனும் துறை, மனிதர்களின் உடல்நலத்துடன் ஆடும் விளையாட்டுக்களுக்கு அளவே இல்லை. ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்னர், தைராய்டு எனும் சுரப்பியில் உருவாகும் நோய்களைப் பற்றி, நவீன மருத்துவத் துறை பேசத் தொடங்கியது. அந்தக் காலத்தில், தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. நமது மக்களில் பெரும்பகுதியினருக்கு, தைராய்டு எனும் சொல்லே தெரியாது. `அயோடின் சத்து குறைபாட்டினால், தைராய்டு நோய்கள் வரும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, உணவுக்கான உப்பில் அயோடின் கலக்க வேண்டும்’ என்ற அறிவிப்பு இந்திய சுகாதார அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டது.

`இனி உணவுக்கான உப்பு, அயோடின் கலக்கப்பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும்’ என்ற சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. ஏறத்தாழ 20 ஆண்டு களாக, அயோடின் கலக்கப்பட்ட `அறிவுபூர்வமான’ உப்பைத்தான் நாம் சாப்பிடுகிறோம். உங்கள் குடும்பத்திலும் சுற்றத்திலும் தைராய்டு மாத்திரை விழுங்குவோரின் பெயர்களை ஒரு தாளில் எழுதுங்கள். எவ்வளவு பெரிய பட்டியலாக இருக்கிறது!

இது மட்டுமா? தைராய்டு அறுவைசிகிச்சை செய்துகொண்டோர், தைராய்டு புற்றுநோயால் இறந்துபோனோர், தைராய்டு சீர்கேடுகளால் உடல் பருமனுக்கு ஆளாகித் துன்புறுவோர், தைராய்டு மாத்திரையில் தொடங்கி கருப்பைச் சீர்கேடுகளுக்கும் சேர்த்து மாத்திரை விழுங்குவோரின் பெயர்களை, தனிப்பட்டியலில் எழுதுங்கள். இவ்வாறான பட்டியல்களை, அயோடின் உப்புக்களின் வருகைக்கு முன்னர் உங்களால் எழுதியிருக்க முடியாது.

உப்புத் தொழில் செய்வோரை, சங்க காலத்தில் `உமணர்' என அழைத்தனர். வலுவான எருதுகள் பூட்டப்பட்ட வண்டியில் உப்பு மூட்டைகளை அடுக்கிவைத்து உமணர் குழு பயணம் செய்த காட்சிகள், சங்க இலக்கியங்களில் விவரிக்கப் பட்டுள்ளன. எருதுகள் பூட்டிய அந்த வண்டிகளை, பெண்கள் ஓட்டினர்; ஆண்கள் வண்டியின் இருபுறங்களிலும் காவல் காத்தனர் என்ற விவரணை அந்தப் பாடல்களில் காணக்கிடைக்கிறது. அதே மரபுத் தொடர்ச்சியில் பிறந்த பெண்கள்தான், இப்போது தைராய்டு நோய் காரணமாக மருத்துவமனைகளில் மூச்சிரைக்க அமர்ந்திருக்கின்றனர்.
`அயோடின் பற்றாக்குறையை நீக்குவதற்காக உப்பில் அதைச் சேர்த்தீர்களே, அதன் பின்னர் ஏன் தைராய்டு நோயாளிகளின் எண்ணிக்கை இவ்வளவு மோசமாகப் பெருகியுள்ளது?’ என நாம் கேட்க வேண்டும். ஆனால், இதுவரை அந்தக் கேள்வியை எவரும் எழுப்பவில்லை.

வைட்டமின் (vitamin) எனும் மற்றொரு சத்துப்பொருளை, பல்வேறு விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள். வைட்டமின்-டி(Vitamin-D) எனும் அதன் ஒருவகையைப் பற்றிய `அறிவுபூர்வமான’ உடல்நல விளைவுகளைக் காண்போம்.

இந்த வைட்டமின்-டி, மனித உடலில் சுண்ணாம்புச் சத்துக்களைச் சேர்ப்பதற்கான வளர்சிதை மாற்றங்களை உருவாக்குகிறது. வைட்டமின்-டி குறைந்தால், எலும்பு மற்றும் பற்கள் தொடர்பான நோய்கள் உருவாகும். `ஆஸ்டியோமலாசியா' (Osteomalacia) என்பது, வைட்டமின்-டி குறைந்தால் உருவாகும் நோய்த் தொகுப்பு. ஆஸ்டியோமலாசியா எனும் சொல்லின் பின்னால் இருக்கும் நோய்களின் பட்டியல் மிகப் பெரியது. ‘எலும்புகள் உறுதி இழத்தல், எலும்புகளில் வலி, மூட்டுக்களில் வலி, முதுகு வலி, தசைகள் தளர்ச்சி அடைதல்’ ஆகியவை, அவற்றில் சில நோய்கள். பெரும்பாலான உணவு நிறுவனங்கள், தம் உணவில் வைட்டமின் சத்துக்களைச் சேர்த்துத்தான் விற்பனை செய்கின்றன. சுருக்கமாக, உங்கள் அன்றாட உணவுப் பட்டியலில் பெரும்பாலானவை வைட்டமின் சேர்க்கப்பட்டவைதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 16

மீண்டும் அதே தாளில் எழுதத் தொடங்குங்கள். ஆண்டுக்கணக்கில் மூட்டு வலி, பற்சிதைவு, முதுகு வலி ஆகியவற்றுக்காக மருத்துவமனைகளை நாடும் மனிதர்கள் உங்களைச் சுற்றிலும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை பதிவுசெய்யுங்கள். `வீடுகளில் தயாரிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே கூடுதலாக உட்கொண்ட காலத்தில், இவ்வளவு எலும்பு நோயாளிகள் இருந்தனரா?' எனச் சிந்தியுங்கள். நோயாளிகளின் பட்டியல் எழுதும் அந்தத் தாளைச் சற்று பெரியதாக எடுத்துக்கொள்ளுங்கள். வைட்டமின்-டியின் சாதனைகள் இன்னும் உள்ளன.

உடலில் வைட்டமின்-டி அதிகரித்தால் உருவாகும் நோய்கள்: `தீராத தலைவலி, பசியின்மை, செரிமானமின்மை, பேதியாகுதல், சிறுநீரகங்களில் சுண்ணாம்புக் கற்கள் உருவாகுதல், ரத்தநாளங்களில் சுண்ணாம்புக் கட்டிகள் அடைத்தல் இவற்றை எல்லாம்விட முக்கியமாக, இதயத்தில் சுண்ணாம்புக் கட்டிகள் அடைத்து மாரடைப்பு உருவாகுதல்.’

அதாவது, சிறுநீரகமும் இதயமும் செயலிழந்து மரணம் நேரும் சூழலைக்கூட மிகையான வைட்டமின்-டி எனும் ஊட்டச்சத்து உருவாக்கும். அந்தத் தாளில், மேலும் பலருடைய பெயர்களை இப்போது உங்களால் எழுத முடிகிறது அல்லவா!

உணவுப் பொருட்களில் சத்துக்களைச் சேர்த்தல் எனும் தொழில்நுட்பம் உருவாக்கியுள்ள நோய்களை, மனிதகுலத்தால் சமாளிக்கவே இயலாது. ஏனெனில், இந்தச் சத்துகள் யாவும் எப்போதோ ஒருமுறை அல்ல, நமது உடலுக்குள் அன்றாடம் இறங்கியவை.

வைட்டமின்-டி எனும் சத்து, வெயில் வழியாக ஒவ்வொரு கணமும் இந்தப் பூமியின் மீது இறங்குகிறது. வெயில், நம் மீது விழுகிறது; புல் மீது விழுகிறது; ஆடுகள் மீது, பயிர்கள் மீது, கோழிகள் மீது எல்லாம் விழுந்துகொண்டே உள்ளது. இவை அனைத்தினுள்ளும் வெயில் தனது ஊட்டச் சத்துக்களை எல்லாம் இறக்கிக் கொண்டுள்ளது.

மேலை நாடுகளில் வெயிலின் அளவு குறைவு என்பதால், அவர்களுடைய தோலில் வைட்டமின் டி-யின் அளவு மிகையாக இருக்கிறது. அதிகம் வெயில் அடிக்காத சூழல் அங்கே இருப்பதால், கிடைக்கும் வெயிலில் இருந்து வைட்டமின்-டியை அவர்களது தோல் சேமித்து வைக்கிறது. நம் நாட்டில் மிகுதியான வெயில் இறங்குகிறது. ஆகவே, நம்முடைய தோல் வைட்டமின்-டியை மிகக் குறைவாகச் சேமிக்கிறது.

‘மேற்கத்திய நாடுகளில் எவராவது கூச்சலிட்டால், அதுதான் உண்மையான இசை. அங்கே எவராவது கிறுக்கினால், அதுதான் சரியான ஓவியம். வெள்ளைக்காரர்கள் உளறினால், அதுதான் மந்திரம். மிக முக்கியமாக ஆங்கிலத்தில் ஏதேனும் எழுதப் பட்டால், அதுதான் அறிவியல்’ என்பது நவீனப் பகுத்தறிவின் அடிப்படைக் குணம்.

`இந்தியாவில் உள்ள சுமார் 70 சதவிகிதம் பேருக்கு, வைட்டமின்-டி சத்து குறைவாக உள்ளது’ என, ஓர் ஆய்வறிக்கை இப்போது வெளியாகியுள்ளது. இதுதான் இங்கே உள்ள நவீன மருத்துவத் துறைக்கும் உணவுத் துறைக்கும் காட்டப்படும் சமிக்ஞை. இதை, மருத்துவத் துறையும் உணவுத் துறையும் தெளிவாகப் புரிந்துகொண்டு செயலாற்றுகின்றன. `பாலில் வைட்டமின்-டி கலப்பதைக் கட்டாயமாக்க வேண்டும்’ என்ற குரல்கள் இப்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

வெயிலின் மூலம் அன்றாடம் கிடைக்கும் ஒரு சத்தை, உணவில் கலந்தால் உடலால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது. ஏற்கெனவே, தேவைக்கு அதிகமான சத்துக்களை உணவில் கலந்துதான் இப்போதைய சமூகம் மாரடைப்புக்கும் சிறுநீரகச் செயலிழப்புக்கும் இலக்காகிக்கொண்டுள்ளது.

தேவைக்கு அதிகமான சத்துக்களை நம்மிடம் வழங்கிவிட்டு, நம்மை நோயாளிகள் ஆக்குகின்றனர். பின்னர் அந்த நோய்களுக்கான மருந்துகளையும் இதர சிகிச்சைகளையும் முன்வைத்து நம் உடல்நலனையும் மனநிம்மதியையும் பொருளாதாரத்தையும் பறித்துக்கொள்கின்றனர்.

எலும்பு நோய்களுக்கான சிறப்பு மருத்துவமனைகளின் எண்ணிக்கையைப் பாருங்கள். சிறுநீரகச் சிறப்பு மருத்துவமனைகள், இதயநோய் சிறப்பு மருத்துவமனைகள் ஆகியவற்றின் எண்ணிக்கை உயர்வு அச்சுறுத்துவதாக இல்லையா உங்களுக்கு? `ஏன் நாம் இவ்வளவு மோசமாக நோயுற்றோம்?' என்ற கேள்வியை எழுப்புங்கள். மரபுவழிப்பட்ட நம் மெய்யறிவு, `எதையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்’ என்கிறது. `மெய்ப்பொருள் காண்பதே அறிவு’ என்ற அறிவுரையை ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உரைத்தவர் திருவள்ளுவர்.

நவீன உணவுத் துறையினர், ஊட்டச்சத்து தொடர்பான அறிக்கைகளை வழங்குகிறார்கள். மருத்துவத் துறையினர், அந்தச் சத்துக்களால் உருவாகும் நோய்களை வைத்துக் கொழிக்கின்றனர். இது நவீன அறிவியலின் கூட்டுச் செயல்திட்டம்.

நாம் எவற்றைச் சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற கணக்குகளை எல்லாம் அவர்கள்தான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவற்றை எல்லாம் சாப்பிட்டால் நமக்கு என்னென்ன நோய்கள் வரும் என்பதை அவர்கள் தெளிவாகத் தெரிந்துவைத்திருக்கிறார்கள்.

நமது உணவு வகைகளின் எண்ணிக்கை இப்போது சுருங்கிவிட்டது. ஒவ்வொரு குடும்பத்திலும் அன்றாடம் பயன்படுத்தும் காய்கள், தானியங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் சமைக்கப்படும் மரபு உணவில் ஏறத்தாழ 32 காய்கள் சேர்த்துச் சமைக்கப்படுவதை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டேன். நம்மிடம் ஏறத்தாழ 40 வகையிலான கீரைகள் இப்போதும் இருக்கின்றன. இவைபோக, ஒவ்வொரு கிராமத்துக்குமான காட்டுக் கீரைகளின் எண்ணிக்கையோ மிக அதிகம். நமது பொங்கல் சமையலில் ஏறத்தாழ 10 வகையான கிழங்குகள் பயன்படுத்தப்படுகின்றன. காய்களில் ஒவ்வொரு வகையிலும் எண்ணற்ற உட்பிரிவுகள் உள்ளன. கத்திரிக்காயில் மட்டும் ஏறத்தாழ 20 வகைகள் உள்ளன. இவற்றை எல்லாம் உணவாக்கினால், கிடைக்காத சத்துக்களை எந்த நிறுவனமும் தர இயலாது.

உயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உணவின் வழியே மட்டும் கிடைப்பது இல்லை. வானில் இருந்து இறங்கும் ஆற்றல் வகைகள், எல்லா உயிர்களையும் வளர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. விலங்கினங்களின் கொம்புகள் இவ்வாறான ஆற்றல் வாங்கிகள்தான். அதாவது, கொம்புகள் வழியாக வான் ஆற்றல் விலங்குகளுக்குள் இறங்குகிறது.

உம்பளச்சேரி காளைக் கன்றுகளின் கொம்பு களைத் தீய்க்கும் வழக்கம், நம் மரபில் உள்ளது. இயல்பாக, மிக அதிகமான ஆற்றல் கொண்ட உம்பளச்சேரிக் காளைகளின் கொம்புகளை வளரவிட்டால், கொம்புகள் வழியாக மேலும் ஆற்றல் சேகரமாகும் என்பதும், எளிதில் முட்டித் தள்ளும் என்பதும் காரணங்கள். இந்த முறையில், கொம்புகளின் வேர்களை அழிப்பது இல்லை. ஆற்றலானது, குறைந்த அளவு உள்ள கொம்புகள் வழியாக மாட்டின் உடலுக்குள் செல்ல வேண்டும் அல்லவா! அதற்காக, மிகச் சிறிய அளவில் அடிக்கொம்புகளை விட்டுவைப்பார்கள்.

இறந்த மாடுகளின் கொம்புகளை வெட்டி, அவற்றின் உள்ளே இயற்கை எருவை இட்டு, நிலத்தில் புதைத்து மிக வீரியமான எருவைத் தயாரிக்கும் தொழில்நுட்பமும் நமது மரபில் உள்ளது.
`வானில் இருந்து இறங்கும் ஆற்றல் வகைகள் உடலுக்குள் சேகரமாகின்றன’ என்ற உண்மையைத் தெரிந்துகொண்டதால். நம் மரபு தேர்தெடுத்த அறிவியல்பூர்வமான தொழில்நுட்பங்கள் இவை.

நவீன கால்நடைத் துறையினர் அயல்வகை மாட்டுக் கன்றுகளின் கொம்புகளை அழித்துவிட்டு, கொம்புகளின் வேரைத் தோண்டி எடுத்து விடுவார்கள். பின்னர், நிறுவனங்களின் தீவனங் களை அந்த மாடுகளுக்கு வாங்கித் தரும்படி பரிந்துரைப்பார்கள். கொம்புகள் அழிக்கப்பட்ட பின்னர் அந்த மாடுகளுக்கு, நிறுவனங்கள் வழங்கும் தீவனங்கள்தான் சத்துணவு. அந்தச் சத்துணவு மூட்டைகளில் வைட்டமின் பெயர்கள் எழுதப் பட்டிருக்கும். இயற்கையாகக் கிடைக்கும் ஆற்றலைத் தடுத்துவிட்டு, நிறுவனங்களைச் சார்ந்து வாழும் நிலைக்கு மாடுகள் தள்ளப்படுகின்றன.

நம் மனங்களில் இப்போதும் திமிலும் கொம்புகளும் உள்ளன. நிச்சயமாக நாம் நவீனத்தின் அடிமைகள் அல்லர். நம்மால், இயற்கையின் மடியில் பால் அருந்தவும் முடியும்; கதிரவன் ஒளியில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் முடியும்!

 - திரும்புவோம்...