Published:Updated:

பாகிஸ்தானை என்ன செய்வது?

பாகிஸ்தானை என்ன செய்வது?
பிரீமியம் ஸ்டோரி
பாகிஸ்தானை என்ன செய்வது?

மருதன்

பாகிஸ்தானை என்ன செய்வது?

மருதன்

Published:Updated:
பாகிஸ்தானை என்ன செய்வது?
பிரீமியம் ஸ்டோரி
பாகிஸ்தானை என்ன செய்வது?
பாகிஸ்தானை என்ன செய்வது?

ன்னும் எத்தனை எத்தனை அத்துமீறல்களையும் அவமானங்களையும் நாம் அனுமதிக்கப்போகிறோம்? தொடர்ந்து கொல்லப்படும் இந்திய வீரர்களின் உயிர்களுக்கு மதிப்பே இல்லையா? நாம் ஏன் இன்னமும் ஒரு நோஞ்சான் தேசமாகவே இருக்க வேண்டும்? பாகிஸ்தான் சொல்வதையும் பயங்கரவாதிகள் சொல்வதையும் கன்னத்தில் கைவைத்துக் கேட்கத்தான் வேண்டுமா? கைகளைக் கட்டிக்கொண்டு எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பது தவிர, வேறு மார்க்கமே இல்லையா நமக்கு? சின்னஞ்சிறு பாகிஸ்தானை இத்தனை பெரிய இந்தியாவால் ஒன்றுமே செய்துவிட முடியாதா? விடை தெரியாத இந்தக் கேள்விகளைச் சுமந்துகொண்டு குழம்பித் தவிக்கிறது இந்தியா. அனைத்துக்கும் காரணம் உரி தாக்குதல்.

கடந்த செப்டம்பர் 18-ம் தேதி ஞாயிறு அன்று அதிகாலை 5:30 மணிக்கு, உரியில் உள்ள இந்திய ராணுவப் படையின் தலைமையகத்துக்குள் நான்கு பேர் அதிரடியாகப் புகுந்து, குண்டுகள் வீசி தாக்கத் தொடங்கினார்கள். முகாம்கள் பற்றி எரியத் தொடங்கின. கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் நீடித்த மோதலுக்குப் பிறகு நான்கு பேரும் கொல்லப்பட்டனர். ஆனால், அதற்குள் இந்தியத் தரப்பில் 17 பேர் மாண்டுபோயிருந்தனர். ஒருவர் மறுநாள் இறந்துபோனார். இவர்கள் ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, ஜம்மு, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வீரர்கள். இவர்கள் போக, 30 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள்.

ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஜீலம் நதிக்கரைப் பக்கத்தில் உள்ள ஒரு சிறிய பிரதேசம் உரி. இது இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள ஊர். தாக்குதலில் ஈடுபட்ட நால்வரும் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், பாகிஸ்தானின் பரிபூரண ஆதரவுடன்தான் இது நடந்திருக்கிறது என்றும் உடனடியாகவே அறிவித்துவிட்டது இந்தியா. அத்துடன் நில்லாமல், குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களையும் பாகிஸ்தானிடம் ஒப்படைத்துவிட்டது. ஜெய்ஷ் இதுவரை மேற்கொண்ட தாக்குதல்கள் அனைத்தும், உரியில் நடந்ததைப் போன்ற தற்கொலைத் தாக்குதல்கள்தான்.

பாகிஸ்தானை என்ன செய்வது?

பாகிஸ்தான், வழக்கம்போல் அனைத்தையுமே மறுத்துள்ளது. நியூயார்க்கில் கடந்த புதன் அன்று ஐ.நா சபையில் உரையாற்றிய அந்த நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரிஃப், `உரி தாக்குதலுக்கு பாகிஸ்தான் அல்ல, இந்தியாவே காரணம்' எனச் சொல்லியிருக்கிறார். குறிப்பாக, பிரச்னைக்கான காரணமாக அவர் காஷ்மீரைச் சுட்டிக்காட்டியிருக் கிறார். இந்திய ராணுவத்தினரால் கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதின் இயக்கத்தைச் சேர்ந்த புர்ஹான் வானியைப் பெயர் சொல்லிக் குறிப்பிட்டதோடு, அவரை ஓர் ‘இளம் தலைவர்’ என்றும் பாராட்டியிருக்கிறார் ஷெரிஃப்.

அவர் பேசி முடிப்பதற்காகவே காத்திருந்ததைப் போல் ஜெய்ஷ் இ முகமது அமைப்பும் இந்தியாவையே குற்றம்சாட்டியிருக்கிறது. `உரி தாக்குதலை, நாங்கள் நிகழ்த்தவில்லை. சம்பந்தப் பட்ட நால்வரும் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள்' என்று தனது இணையதளத்தில் அறிவித்திருக்கிறது.

 சிக்கல்களும் நெருக்கடிகளும்

உரியில் நடந்தது, இந்த ஆண்டின் மூன்றாவது தாக்குதல் சம்பவம். பிப்ரவரி மாதம் ஸ்ரீநகருக்கு வெளியிலும், ஜூன் மாதம் ஸ்ரீநகருக்கு உள்ளேயும் தாக்குதல்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆண்டு தொடங்கும்போதே பதான்கோட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இதே உரியில் டிசம்பர் 2014-ம் ஆண்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் இந்தியா 11 பேரை இழந்துள்ளது. கதுவா மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் மார்ச் 2015-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், 7 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு, அதே மாதம் சம்பா மாவட்டத்தில் மூன்று பேர் தற்கொலை தாக்குதலுக்குப் பலி ஆனார்கள். இந்த ஆண்டு என இல்லை, சென்ற ஆண்டு மட்டும் எட்டு தாக்குதல்களை இந்தியா எதிர் கொண்டது.

பாகிஸ்தானை என்ன செய்வது?

நரேந்திர மோடி, தன்னுடைய 2014-ம் ஆண்டு தேர்தல் பிரசாரங்களின்போது, மன்மோகன் சிங்கிடம் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டும் அம்சம் வலிமை என்பதை அழுத்தமாகவும் பெருமிதத்துடனும் பதிவுசெய்தார். ‘வலுவான ஒரு தலைவரால் மட்டும்தான், பாகிஸ்தான் பிரச்னையைச் சமாளிக்க முடியும்; பயங்கரவாதத்தை முறியடிக்கவும் முடியும்’ என்றார். ‘பாகிஸ்தானுக்கு அவர்களுக்குப் புரியும் மொழியில் பதில் அளிக்க வேண்டும். அவர்களுக்கு காதல் கடிதங்கள் எழுதுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்’ எனவும் முழங்கினார். 

இப்போது அதே எதிர்வினைகள் மோடியை நோக்கித் திரும்பியிருக்கின்றன. அவரை முன்னர் ஆதரித்த குழுவினரே, இப்போது அவர் மீது அதிருப்திகொண்டிருக்கின்றனர். பிரதமராகி கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் முடியப்போகின்றன. தொடர்ந்து பாகிஸ்தானும் அதன் ஆதரவு இயக்கங்களும் இந்தியாவைச் சீண்டிவரும் நிலையில், உயிர் இழப்புகள் அதிகரித்துவரும் நிலையில், ஏன் மோடியால் வலுவாகச் செயல்பட முடியவில்லை? ஏன் அவரும் மன்மோகனைப்போல் தன் கைகளைக் கட்டிக்கொண்டிருக்கிறார்? அவர் வந்த பிறகும் பாகிஸ்தானின் தாக்குதல்கள் ஏன் குறையவில்லை? வல்லரசு, வளர்ச்சி ஆகியவை வெறும் கோஷங்கள் மட்டும்தானா?

என்னென்ன வழிகள் உள்ளன?

உணர்ச்சிகளை ஒதுக்கிவிட்டு நிதானமாக யோசித்தால், பாகிஸ்தான் பிரச்னை என்பது வலிமை, பலவீனம் சம்பந்தப்பட்ட பிரச்னையே அல்ல என்பது புரியவரும். மோடிக்கு முன்னரே தொடங்கிவிட்ட பெரும் சிக்கல் இது. அநேகமாக மோடிக்குப் பிறகும் அது தொடரத்தான்போகிறது. அப்படியானால், இதில் இருந்து மீள என்னதான் வழி?

இந்தியா இதுவரை மூன்று வழிகளைக் கையாண்டிருக்கிறது. முதல் வழி, நேரடிப் போர். அதிகாரபூர்வமாக நான்கு முறை அந்த நாட்டுடன் இந்தியா போர் புரிந்து பார்த்துவிட்டது. போரில் வெற்றி கிடைத்தாலும், பிரச்னை தீரவில்லை என்பதையும் உணர்ந்துவிட்டது. இரண்டாவது, வெளிப்படையான மிரட்டல். டிசம்பர் 2001-ம் ஆண்டில் நாடாளுமன்றத் தாக்குதல் நடைபெற்ற போது, இந்தியா தன் படைகளை எல்லைக்கு அருகில் கொண்டுசென்று குவித்தது இந்த வகையைச் சேரும். இது அப்போது பலன் அளித்தது. 2008-ம் ஆண்டில் மும்பை தாக்கப் பட்டபோது இந்தியா சர்வதேச அழுத்தத்தைப் பயன்படுத்தியது. இது மூன்றாவது வழி. மும்பை தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்குமான தொடர்பை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்தியதன் மூலம், பாகிஸ்தானுக்கு நெருக்கடியை உருவாக்க இந்த வழிமுறை பயன்பட்டது.

இப்போது இந்த மூன்றில் இந்தியா எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? முதல் வழிமுறையான போர் இனி சாத்தியப்படாது. காரணம், இரு நாடுகளுமே அணுஆயுதத்தை வைத்திருக்கின்றன. மாபெரும் நாசத்தை ஏற்படுத்துவது தவிர, இன்னொரு போர் மூலம் எதையும் யாரும் சாதிக்க முடியாது. இதை இரு நாடுகளும் உணர்ந்திருக் கின்றன. அதனால்தான் மறைமுகமாக உரி போன்ற தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

சரி, முழுநீளப் போர்கூட வேண்டாம், அமெரிக்காவும் ரஷ்யாவும் சிரியாவில் செய்ததைப்போல் பாகிஸ்தான் வான் மீது பறந்து சில குண்டுகளைப் பொழிந்துவிட்டு வந்தால் என்னாகும்? பழி வாங்கிவிட்டோம் என தற்காலிக மனநிம்மதி அடையலாம். மற்றபடி, இனி பாகிஸ்தான் வாலைச் சுருட்டிக் கொண்டுவிடும் என எதிர்பார்க்க முடியாது. நிலைமை மேலும் சிக்கலாவதற்கு வேண்டுமானால் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே இந்திய வெறுப்புடன் தாக்கிவரும் சிறிய, பெரிய பாகிஸ்தான் ஆதரவு அமைப்புகளுக்கு, நாமே இன்னொரு வலுவான காரணத்தை ஏற்படுத்திக்கொடுத்துவிடுவோம். உரி போன்ற சம்பவங்கள் மேலும் அதிகரிக்கும்.

பாகிஸ்தானை என்ன செய்வது?

இரண்டாவது வழியான மிரட்டலைப் பயன்படுத்த முடியுமா? ஜம்மு-காஷ்மீரிலும் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலும் படைகளைத் திரட்டிக்கொண்டுபோய் நிறுத்த முடியுமா? நிறுத்தலாம். ஆனால், அதற்கு காஷ்மீர் ஒரு பெரும் தடையாக இருக்கும். ‘இரண்டு மாதங்களாக காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மரண எண்ணிக்கை உயர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் காஷ்மீரில் மீண்டும் ராணுவத்தைக் குவிப்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கும்’ என்கிறார் வாஜ்பாய் காலத்தில் ரா உளவு அமைப்பின் தலைவராக இருந்த ஏ.எஸ்.துலாத்.

மூன்றாவது வாய்ப்பு, சர்வதேச அழுத்தம். இதைச் செய்யலாம்தான். ஆனால், உள்ளூர் பிரச்னையைச் சர்வதேசப் பிரச்னையாக மாற்றியதற்காக இன்றும் இந்துத்துவர்களால் வசைபாடப்படும், நேருவின் வழியையே மோடியும் பின்பற்றியதாக ஆகிவிடும் அல்லவா? எனவே, வழியைச் சற்றே மாற்றி பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்னையாக அறியப்படும் பலுசிஸ்தானை முன்னரே கையில் எடுத்துப் பார்த்துவிட்டார் மோடி. எதிரிக்கு எதிரி நண்பன் என்னும் முறையில், `காஷ்மீரில் நீ தலையிட்டால், நான் பலுசிஸ்தானில் தலையிடுவேன்' என மறைமுகமாக சவாலும் விட்டுப்பார்த்தார். பலன் இல்லை.

உரி தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு பலுசிஸ்தானை மீண்டும் முயன்று பார்க்கவேண்டும் என சிலர் விரும்புகிறார்கள். ஆனால், இதுவும் பலன் தரப்போவது இல்லை. காரணம், இந்தியாவால் தொடர்ச்சியாகவும் நீடித்தமுறை யிலும் பலுசிஸ்தான் போராளிகளுக்கு உதவ முடியாது. அதனால் அதிகரிக்கும் பாகிஸ்தானின் தாக்குதல்களையும் சமாளிக்க முடியாது. இதைவிட முக்கியமாக, பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் ஆதரவு இருக்கிறது. குறிப்பாக, பலுசிஸ்தான் விவகாரத்தில், தான் பாகிஸ்தான் பக்கமே நிற்கப்போவதாக அமெரிக்கா சொல்லியிருக்கிறது. எனவே இதுவும் பயன்படப்போவது இல்லை.

பாகிஸ்தானை என்ன செய்வது?

மூன்று வழிகளும் வேண்டாம். பாகிஸ்தானுடனான வர்த்தக உறவுகளை முறித்துக் கொண்டு அந்த நாட்டைத் தனிமைப்படுத்த வேண்டும்; சர்வதேசத் துணையுடன் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வழிசெய்ய வேண்டும் என்கிறார்கள். இது சாத்தியமா? இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அதிகாரபூர்வமான நேரடி வர்த்தகத்தின் மதிப்பு 2.3 பில்லியன் டாலர். (மறைமுக வர்த்தக மதிப்பு கிட்டத்தட்ட இரட்டிப்பாக இருக்கும்). இந்த இழப்பைத் தாங்கிக்கொண்டு பாகிஸ்தானுடனான வர்த்தகத்தைத் துண்டிப்பது இந்தியாவுக்குச் சாத்தியமே. அவ்வாறு செய்தால் பாகிஸ்தானின் பொருளாதாரம் பாதிப்படையும் வாய்ப்பும் உள்ளது. ஆனால், அதை இந்தியாவால் செய்ய முடியாது. காரணம், பாகிஸ்தான் மட்டும் அல்ல; எல்லையில் உள்ள காஷ்மீரும் இதனால் சேர்த்தே பாதிக்கப்படும். பாகிஸ்தானுடனான வர்த்தகத்தின் மூலம் காஷ்மீர் அடைந்துவரும் ஆதாயத்தைத் தடுத்து நிறுத்துவது, அங்கு ஆட்சியில் இருக்கும் மெஹபூபா முஃப்தியையும் அவருடன் கூட்டணி வைத்திருக்கும் பா.ஜ.க-வையும் நேரடியாகப் பாதிக்கும்.

சர்வதேச அளவில் ஆதரவு பெற்று பாகிஸ்தான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கவேண்டும் என்றால், அதற்கு ஐ.நா-வின் பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், சீனா இந்தியாவுக்கு எதிராகவே வாக்களிக்கும். எனவே, அந்த வழியும் இப்போதைக்கு அடைக்கப்பட்டுவிட்டது. அடுத்து என்ன?

புதிய வழி, ஒரே வழி

பாகிஸ்தானுக்கு அவர்களுடைய மொழியில் பதிலளிப்பது நமக்கான தீர்வாக இருக்க முடியாது. பாகிஸ்தான், ஓர் உடைந்த தேசம்; ராணுவம், மதம் இரண்டையும் அரசியல் அதிகாரத்துக்காகப் பயன்படுத்திப் பார்த்துவிட்டு, இரண்டிலும் துன்பகரமான முறையில் தோல்வி அடைந்த நாடு அது. இந்தியாவோடு அல்ல ஒருவகையில் தன்னைத்தானே எதிர்த்தே சதா போரிட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெரும் குழப்பம் அது. அந்தக் குழப்பத்தை நாமும் பிரதியெடுக்க வேண்டியது இல்லை.

நம் கவனத்தை முழுக்க முழுக்க காஷ்மீரில் குவிக்கவேண்டிய தருணம் இது. ராணுவத்தையும் பெல்லட் குண்டுகளையும் கொண்டு காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட முடியாது. சமாதானத்துக்கான வழி நிச்சயம் போர் அல்ல. மனம் திறந்த உரையாடல் மூலம் மட்டுமே முரண்பாடுகளைத் தீர்க்க முடியும். அதற்கு காஷ்மீர் மக்களிடம் வெளிப்படையாக நாம் உரையாடத் தொடங்க வேண்டும்.