Published:Updated:

கலைடாஸ்கோப் - 60

கலைடாஸ்கோப் - 60
பிரீமியம் ஸ்டோரி
கலைடாஸ்கோப் - 60

எண்ணம், வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

கலைடாஸ்கோப் - 60

எண்ணம், வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

Published:Updated:
கலைடாஸ்கோப் - 60
பிரீமியம் ஸ்டோரி
கலைடாஸ்கோப் - 60
கலைடாஸ்கோப் - 60

கறுப்பு-வெள்ளை கனவு!

ஜகார்த்தா நாட்டைச் சேர்ந்த ஓவியர் எலிசியா (Elicia Edijanto) வரையும் வாட்டர் கலர் ஓவியங்கள், சமீபத்தில் என்னைக் கவர்ந்தவை. நீர் வண்ண ஓவியங்கள் வழக்கமாக வண்ணமயமாக இருக்கும். ஆனால், இவருடைய ஓவியங்கள் கறுப்பு-வெள்ளை மட்டுமே. வாட்டர் கலர் ஓவியங்களின் ஸ்பெஷல், வெள்ளை நிறத்தை வரைய மாட்டார்கள்; காகிதத்தின் வெண்மையை அப்படியே விட்டுவைப்பார்கள் என்பதே. அப்படிப் பார்த்தால், எலிசியா கறுப்பு வண்ணத்தை மட்டுமே பயன்படுத்தி புகைப்படங்கள்போல வரைவது அற்புதம்.

கலைடாஸ்கோப் - 60
கலைடாஸ்கோப் - 60

அவருடைய எல்லா ஓவியங்களிலும் குழந்தைகளும் விலங்குகளும் மட்டுமே இருக்கின்றன.  “நமது குழந்தைகளின் உலகில் விலங்குகளுக்கு என்று தனி இடம் இருக்கிறது.  அவர்கள் விலங்குகள் பற்றி பாட்டு பாடுகிறார்கள், கதைகள் சொல்கிறார்கள். விலங்குகளைப் பொம்மைகளாக்கி

கலைடாஸ்கோப் - 60

விளையாடுகிறார்கள்; புத்தகங்களில் தேடுகிறார்கள், கனவுகளில் காண்கிறார்கள். நானும் அதையே இந்த ஓவியங்களில் கொண்டுவருகிறேன்” என்கிறார் எலிசியா.

``ஏன் கறுப்பு-வெள்ளையில் மட்டுமே வரைகிறீர்கள்?'' என்று கேட்டால், “வண்ணங்கள், பார்ப்பவரின் மனநிலையை அவர்களின் கற்பனைக்கு ஏற்ப சிதறடிக்கக்கூடியவை. அவை ஓவியத்துக்கு நல்லதா... கெட்டதா எனத் தெரியவில்லை. ஆனால், எனது இந்த‌க் கறுப்பு-வெள்ளை வண்ணம், பார்வையாளர்களைக் கவனச்சிதறல் இல்லாமல் ஓவியத்தின் எமோஷனை உள்வாங்கிக்கொள்ளச் செய்கிறது என  நம்புகிறேன்” என்றார். கனவுகள் கறுப்பு-வெள்ளையில்தான் வரும் என்கிறது ஒரு தியரி. எலிசியாவின் ஓவியங்களும் கனவுக்காட்சி போலவே இருக்கிறது.

கலைடாஸ்கோப் - 60

மார்

“வெல்கம். இண்டியன் ஜர்னலிஸ்ட்தானே?” என்றான் ஹென்றி நெஸ்ட்.

“யெஸ் சார்” என்றபடி எதிர் இருக்கையில் அமர்ந்தாள் அவள். இருவரையும் தவிர யாரும் இல்லாத குளிர் அறை.

“இந்த 31-ம் நூற்றாண்டில் இந்தியா ரொம்பவே மாறிவிட்டது. இந்தியப் பெண்களும்தான்” என்று புன்னகைத்த ஹென்றி, “உங்கள் கேள்விகளைக் கேட்கலாம்” என்றான்.

“பல‌ நூற்றாண்டுகளாக உங்கள் வர்த்தகம் இந்த அளவுக்கு வெற்றிகரமாகச் செல்ல காரணம் என்ன?” என்றாள்.

“குழந்தைகள். குழந்தைகள் பிறந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு தேவை. அதை நாங்கள் அளிக்கிறோம். குழந்தைகள்தான் எங்கள் மார்க்கெட். எங்கள் தாத்தாவுக்குத் தாத்தா காலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்த பிசினஸ் இது'' என்று சிரித்தான்.

“உங்கள் புராடெக்ட்டுகளை மார்க்கெட் செய்ய, பெண்கள் தாய்ப்பால் ஊட்டுவதை மறைமுகமாகத் தடுத்தீர்கள் என்று குற்றச்சாட்டு இருக்கிறதே!” என்றாள்.

“ `தாய்ப்பால் ஊட்ட வேண்டாம்' என, நாங்கள் எந்தப் பெண்ணிடம் சொன்னோம்?” என்று சிரித்தான் ஹென்றி.

“நீங்கள் நேரடியாக அதைச் செய்யவில்லை. ஆனால், அதற்கான எல்லா சாத்தியக்கூறுகளையும் மறைமுகமாக உருவாக்கினீர்கள். பாலூட்டத் தேவை இல்லாத மார்புகள், மெள்ளத் தேய்ந்து மறைந்துகொண்டிருக்கின்றன. போலி சிலிக்கான் மார்புகளுக்கான மார்க்கெட் தனியாக வளர்கிறது. இவை எல்லாம் உங்களுக்குத் தெரியும் அல்லவா?” கோபமாக எழுந்தாள்.

“தேவை இல்லாத கேள்விகள். நீ ஆயுதம் எதுவும் வைத்திருக்கிறாயா? நன்றாக செக் பண்ணித்தானே உள்ளே அனுப்பினார்கள்?” என்று கத்தினான். 

அவள் தன் மேலாடையின் பட்டன்களைக் கழற்றி மார்புகளில் ஒன்றைத் திருகி எடுத்து “இது சிலிக்கான் இல்லை. சூப்பர்சோனிக் டெட்டனேட்டர்” என்றபடி ஹென்றியின் மேல் வீசி எறிந்தாள்.
நெருப்பு மெள்ள பரவும் முன்னர், ஹென்றி கத்தினான் “உன் பெயர் என்ன‌?''

“கொற்றவை” என்றபடி திரும்பி நடந்தாள்.

கலைடாஸ்கோப் - 60

மார்க்கர்

`என்னை அழிக்க முடிந்தாலும் என் எழுத்தை அழிக்க முடியாது' என்று தமிழில் ஒரு கவிஞர் சொன்னார். பெர்மனென்ட் மார்க்கரும் அதையே சொல்லும். கவிதையின் சாகாத்தன்மைக்கு அதன் அழகியல் காரணம் என்றால், மார்க்கரின் நிரந்தரத்தன்மைக்கு  அதன் மையில் உள்ள‌ Glyceride Pyrrolidone போன்ற வேதியியல்தான் காரணம்.

இந்த பெர்மனென்ட் மார்க்கரை 1952-ம் ஆண்டில் கண்டுபிடித்தவர், நியூயார்க்கைச் சேர்ந்த‌ Sidney Rosenthal. ஆனால், அதற்கு முன்னர் `மார்க்கர்' என்னும் எழுதுபொருள் 1910-ம் ஆண்டில் லீ நியூமேன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் மேம்பட்ட வடிவத்தைத்தான் சிட்னி உருவாக்கி பேடன்ட் வாங்கினார்.

செக்யூரிட்டி மார்க்கர், எலெக்‌ஷன் மார்க்கர் என, ஏகப்பட்ட வகைகள் இருக்கின்றன. நம் ஊரில் `ஸ்கெட்ச் பென்' எனச் சொல்கிறோம். அது அடிப்படையில் மார்க்கர்தான். பிலிப்பைன்ஸ் நாட்டில் `பெண்டல் பென்', இந்தோனேஷியாவில் `ஸ்பைடல்', கொரியா, ஜப்பான் நாடுகளில் `ஃபெல்ட் பென்', ஆஸ்திரேலியாவில் `டெக்ஸ்டா' என, மார்க்கருக்கு அமெரிக்க கான்மேன் Frank Abagnale போல ஊருக்கு ஒரு பெயர் இருப்பது சுவாரஸ்யம்!

கலைடாஸ்கோப் - 60

உண்டியல்

சிறுவர்கள், முன்னர் எல்லாம் களிமண்ணால் செய்த பொம்மை உண்டியல்களில் அஞ்சு அல்லது பத்து பைசாக்களைப் போட்டுச் சேமிப்பார்கள். பண்டிகைக்குத் துணி எடுக்க, பலகாரம் வாங்க, பள்ளி திறந்தால் புத்தகம் வாங்க என, கணக்கு போட்டுவைத்திருப்பார்கள். அவசரத்துக்கு உண்டியல்களை உடைக்கும் அப்பா-அம்மாக்களிடம் யுத்தம் செய்வார்கள்.

திருவிழாக்களில், கடைவீதிகளில் உண்டியல்கள் கிடைக்கும். காய்கறிகள், விலங்குகள், குட்டிப் பானைகள் என ரசனையான வடிவங்களில் செய்து வண்ணம் பூசி வைத்திருப்பார்கள். வாங்கிவந்து வீட்டில் வைத்து அப்பா, அம்மா, மாமாக்களிடம் அடம்பிடித்து தினமும் காசு கேட்டு சில்லறைகளைச் சேமிப்பது ஒரு கலை. அடிக்கடி அதைக் குலுக்கியும் கைகளால் தூக்கி எடை பார்த்தும் சந்தோஷப்பட்டுக்கொள்வோம். அதன் சில்லறை சிணுங்கும் சத்தம் இசையாக ஒலிக்கும்.

இன்றும் கடைவீதிகளில் உண்டியல்களைப்  பார்க்கிறேன். ஆனால், அந்தப் பழக்கம் சிறுவர்களிடம் அரிது. சேமிப்பு என்பது, சிறு வயது முதலே ஒரு பழக்கமாகச் சொல்லித் தரப்பட்டது. சேமித்த காசில் தேவையானதை மட்டும் வாங்குவதுதான் நல்ல பண்பாடாக‌ இருந்தது. ஆனால் இன்று, தேவை இல்லாத பொருளை முதலில் வாங்கிவிட்டு, பிறகு கடனை அடைக்கும் இ.எம்.ஐ கலாசாரத்துக்குப் பழக்கமாகிவிட்டோம். உண்டியல்களை உடைத்துவிட்டு, சிறார்களின் கையிலும் கிரெடிட் கார்டைத்தான் கொடுக்கப்போகிறோம்!

கலைடாஸ்கோப் - 60

காகம்

கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண், காகங்களை ஓவியங்களாக வரைந்து தள்ளியிருக்கிறார். அரசியல்வாதிகளுக்கு அடுத்ததாக காகங்களை அவர் வரையக் காரணம் என்ன என்பது அவருக்கே வெளிச்சம். ஆனால், காகங்கள் அதிபுத்திசாலித்தனமான பறவை இனங்களில் ஒன்று. சிம்பன்சி மற்றும் மனிதர்களின் மூளையின் நியோகார்ட்டக்ஸ் பகுதிகளுக்கு இணையான நிடோபாலியம் என்னும் பகுதி காகங்களின் மூளையில் இருக்கிறது.

`கிளிகளைப்போல பயிற்சி கொடுத்தால், காகங்களும் மனிதக்குரலை நகல் எடுக்கும்' என்கிறார்கள். ஆனால், கிளிகள்போல அவற்றை சாதுவாக அடக்கி ஆள முடியுமா என்பது தெரியாது. `காகங்களின் நினைவுத்திறனும் அபாரமானது' என்கிறார்கள். தொடர்ந்து ஜன்னலோரம் உணவுகொள்ள வரும் காகங்களைப் பற்றி பலர் சொல்லியிக்கிறார்கள். சந்தேகம் என்றால் முயன்றுபாருங்கள்.

கலைடாஸ்கோப் - 60

joshua klein என்னும் அமெரிக்க டெக்னாலஜிஸ்ட், `காகங்களுக்குப் பயிற்சி கொடுத்து, குப்பைகளைச் சேகரிக்கவும் அப்புறப்படுத்தவும் பயன்படுத்தலாம்' என்றார். ஆனால், காகங்கள் உலகம் முழுக்க ஏற்கெனவே அதைத்தான் செய்துகொண்டிருக்கின்றன என்பது அவருக்குத் தெரியாதோ என்னமோ!

காகங்கள் பற்றிய சமீபத்திய ஆய்வுத்தகவல் ஒன்றை இணையத்தில் படித்தேன். பொதுவாக, கருவிகளைப் பயன்படுத்துவதில் (tool-using) மனிதன் முதல் இடத்தில் இருந்தாலும், மற்ற உயிரினங்களுக்கும் ஆர்வம் உண்டு. கருவிகள் என்றால், கட்டிங்பிளேயர் ரேஞ்சுக்கு எடுத்துக்கொள்ளாதீர்கள். கல்லோ, குச்சியோ கருவியாகப் பயன்படுத்துவதைத்தான் சொல்கிறார்கள். அதிலும் சில உயிரினங்கள்தான் கருவிகளை உருவாக்கத் தெரிந்தவையாம். அதில் காகமும் ஒன்று என்கிறார்கள். மொட்டைமாடி கொடியில் காயும் ஹேங்கர்களை எடுத்துச்செல்லும் காகங்களைப் பார்த்திருக்கிறேன். கூடுகட்டத்தான் என நினைத்திருந்தேன். ஹேங்கர்களை வைத்து வேறு ஏதேனும் செய்கிறதா என இப்போது சந்தேகம் வருகிறது.