Published:Updated:

ஆயிரம் இளைஞர்கள்... அபார யோசனைகள்!

ஆயிரம் இளைஞர்கள்... அபார யோசனைகள்!

தெறிக்கவிட்ட #VikatanHackathon 2016விகடன் டீம், படங்கள்: தி.குமரகுருபரன்

ஆயிரம் இளைஞர்கள்... அபார யோசனைகள்!

தெறிக்கவிட்ட #VikatanHackathon 2016விகடன் டீம், படங்கள்: தி.குமரகுருபரன்

Published:Updated:
ஆயிரம் இளைஞர்கள்... அபார யோசனைகள்!
ஆயிரம் இளைஞர்கள்... அபார யோசனைகள்!

சென்னையில் வேலை பார்க்கும் ஓர் ஆள், கொடுமுடி பக்கத்தில் இருக்கும் தன்னுடைய நிலத்துக்கு, இங்கே இருந்தபடியே நீர் பாய்ச்சி, உரம் போட்டு விவசாயம் செய்ய முடிந்தால்... செமையா இருக்கும்ல? இதுதான் ஐடி இளைஞர் பிரேம்குமாரின் திட்டம். இந்த யோசனைக்கான செயல்வடிவத்தை உருவாக்கி, தொழில்நுட்பத்தின் உதவியோடு ஒரு தீர்வை உருவாக்கி இருக்கிறார் பிரேம்குமார். இதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது `விகடன் ஹேக்கத்தான்!'

இன்றைய இளைஞர்களுக்கும் சமூக அக்கறை உண்டு. தொழில்நுட்ப விஷயங்களை மக்கள் முன்னேற்றத்துக்கும் மாற்றத்துக்கும்கூட அவர்களால் பயன்படுத்த முடியும் என்பதே விகடனின் நம்பிக்கை. அப்படிப்பட்ட டெக்னாலஜி கில்லிகளை ஒன்றுதிரட்டி அவர்களைக்கொண்டு தொழில்நுட்பத்தின் உதவியோடு சமூகத்தின் அடிப்படையான பிரச்னைகளுக்கு என, சின்னச் சின்னத் தீர்வுகளைத் தேடியது விகடன்.

ஆகஸ்ட் மாதம் முதலே இந்தியா முழுவதும் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களை அடையாளம் கண்டோம். அவர்களுடைய அபாரமான 380 ஐடியாக்களுடன் விகடன் ஹேக்கத்தானின் முதல் கட்டம் தொடங்கியது.

120 ஐடியாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் இருந்து அபாரமான 39 ஐடியாக்கள், 133 பங்கேற்பாளர்கள் சல்லடையில் சலித்தெடுத்த பிறகு, ஹேக்கத்தானுக்கு பச்சைக்கொடி காட்டினோம்.

39 அணிகளில் ஓர் அணி நாசிக்கில் இருந்தும், 12 அணிகள் சென்னைக்கு வெளியே இருந்தும் இறுதிசெய்யப்பட்டன. செப்டம்பர் 23-ம் தேதி அத்தனை பேரும் ஒன்றுகூட, 3 நாட்கள் தரமணியில் உள்ள ThoughtWorks மென்பொருள் நிறுவன அலுவலகம் முழுவதும் ஹேக்கத்தான் களமாக மாறியது. மூன்று நாட்களும் பங்கேற்பாளர்களின் உணவு, தங்கும் இடம், பொழுதுபோக்கு என அத்தனை தேவைகளையும் Thoughtworks நிறுவனம் தனது பிரம்மாண்டமான அலுவலகத்திலேயே ஏற்படுத்திக்கொடுத்திருந்தது.

விவசாயம், கல்வி, சுற்றுச்சூழல் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் குடிமை வாழ்க்கை போன்ற பிரிவுகளின் கீழ் தொடர்ந்து 50 மணி நேரம் தங்களது புதுமையான யோசனைகளை மெருகேற்றத் தொடங்கினர். ஒவ்வோர் அணிக்கும் அதற்கு உரிய தொழிநுட்பம் மற்றும் வர்த்தக ரீதியிலான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

`தி ஸ்டார்ட் அப் சென்டர் '  நிறுவனர் விஜய் ஆனந்த் ஹேக்கத்தான் நிகழ்வின் திட்டமிடல் தொடங்கி நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்குவது  வரை பக்கபலமாக இருந்தார். தொழில்நுட்ப ரீதியிலான வழிகாட்டுதலுக்கு, `34 க்ராஸ் ஹசுரா' நிறுவனத்தின் துணை நிறுவனர் தன்மய் கோபால் மற்றும் அவரது டீம், தொழில் மற்றும் வர்த்தகரீதியிலான வழிகாட்டுதலுக்கு முருகப்பா குழுமத்தின் துணைத் தலைவர் எம்.எம்.முருகப்பன், கவின்கேர் நிறுவன மேலாண்மை இயக்குநர் சி.கே.ரங்கநாதன், ஸ்ட்ரைட்ஸ் ஷாசன் பாரமெடிகல்ஸ் நிர்வாக இயக்குநர் அபய்குமார் என இரண்டு அணிகள் வந்திருந்த இளைஞர்களுக்கு அறிவுரைகளை அள்ளி வழங்கினர்.

ஆயிரம் இளைஞர்கள்... அபார யோசனைகள்!

தொடக்க இரவில் பல அணிகளும் உறங்கவே இல்லை. தங்களுடைய யோசனைகளை விடிய விடிய டெவலப் செய்யும்வேலைகளில் பிஸியாக இருந்தனர். ஓர் அணி குடிநீர்க் குழாய் அமைக்க, நாசிக்கில் இருந்து வந்த அணி ஹெல்மெட் மீது எலெக்ட்ரானிக் சிப்களை பொருத்திக் கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம்,   கணினியில்   ஏதோ நோண்டிக்கொண்டிருந்தனர். ``என்ன பாஸ் ட்விட்டரா?'' என்று விசாரித்தோம். ‘`கோடிங் பாஸ். உங்களுக்கு கோடிங் தெரியுமா?’’ என சவால்விட, `ரைட்டு...' என அங்கு இருந்து நழுவினோம்.

கடைசி நாள், எல்லோர் முகங்களிலும் குறைவில்லா டென்ஷன். நடுவர் குழு, தனி அறையில் ஒவ்வொரு டீமுக்கும் ரிவ்யூ வைத்தனர். பின்னர், இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 11 ஐடியாக்களை வெளியிட்டனர்.

11 அணிகளின் தயாரிப்புகளையும் அவர்களுடைய விளக்கங்களையும் கேட்டு ஏஞ்சல் இன்வெஸ்டர் பத்மா சந்திரசேகரன், ஆச்சி மசாலா சேர்மன் A.D.பத்மசிங் ஐசக், ஆரஞ்சுஸ்கேப் சி.இ.ஓ சுரேஷ் சம்பந்தம், மேட்ரிமோனி டாட்காம் சி.இ.ஓ. முருகவேல் ஜானகிராமன், மேத்தா மருத்துவமனை இயக்குநர் சமீர் மேத்தா ஆகியோர் கொண்ட குழு, கவுன்ட்டர் கேள்விகளுடன் மதிப்பீடு செய்தனர்.
இறுதிக்கட்டமாக, நடுவர் குழுவே தீவிரமாக தனி அறையில் மீட்டிங் போட, ‘Dude... This is so exciting... Can’t wait!’ என நம் காதில் கிசுகிசுத்தார் நாசிக் நண்பர்.

கடைசியில் மூன்று வெற்றியாளர் களுக்குப் பதிலாக, நான்கு வெற்றியாளர்களை அறிவித்தது நடுவர் குழு.

- பெண்கள் சுயஉதவிக் குழுக்களை ஒருங்கிணைக்கும் `கிராமணி' என்ற திட்டமும், ஸ்மார்ட் ஹெல்மெட் என்ற திட்டமும் 3-வது இடத்தைப் பகிர்ந்துகொண்டன.

- தண்ணீர் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, அதைக் கண்ணாடியில் அளவிட்டுக் காட்டும் திட்டம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

- விவசாயத்துக்கு மிகக் குறைந்த செலவில் மின்சாரம் மற்றும் தண்ணீர் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் இரிகேஷன் சிஸ்டத்தைத் தயாரித்த பிரேம்குமாருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

இதுதவிர, இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய 11 அணிகளுக்குமே ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

``நான், சென்னையில் வேலை பார்க்கிறேன். கொடுமுடி பக்கத்தில் உள்ள மலையன்பாளையம் கிராமம்தான் சொந்த ஊர். 25 ஏக்கருக்கு மேல் நிலம் இருந்தும் விவசாயத்தில் பெரிய அளவில் வருமானம் இல்லை. சொட்டுநீர்ப் பாசனம் ஒருவகையில் நல்ல விஷயமாக இருந்தாலும், வால்வுகளைத் திறந்து மூட, மற்ற வயல்களுக்குத் தண்ணீரை மாற்றிவிடுவது என நிறையப் பிரச்னை. முன்புபோல வயல் வேலைக்கு ஆட்கள் கிடைப்பது இல்லை. விடுமுறை நாளில் மின்சாரம் தடைப்பட்டுவிடும். எந்த வேலையும் பார்க்க முடியாது. இதனால் விவசாயத்துக்கு வருமானம் வந்தாலும், இத்தகைய நிலையில் விவசாயத்தைவிட்டு வெளியே வர வேண்டும் என்றுதான் தோன்றும்.

ஆயிரம் இளைஞர்கள்... அபார யோசனைகள்!
ஆயிரம் இளைஞர்கள்... அபார யோசனைகள்!

தற்போது சொட்டுநீர்ப் பாசன முறை வந்துவிட்டது; ஆட்டோமெட்டிக் முறையில் இயக்கமும் வந்துவிட்டது. இதற்கான விலை அதிகம். எளிதில் பயன்படுத்துவது என்பதிலும் சிக்கல் இருந்தது. இதை எல்லாம் தவிர்த்து, `உட்கார்ந்தபடியே தண்ணீர்ப் பாசனத்தை மேற்கொள்ள என்ன தீர்வு?' என யோசித்தபோதுதான் விகடன் ஹேக்கத்தான் அறிவிப்பைப் பார்த்தேன்.

நம்ம பிரச்னை தீர்வுகண்ட மாதிரியும் இருக்கும்; விகடன் ஹேக்கத்தானில் கலந்துகொண்ட மாதிரியும் இருக்கும் என தனி ஆளாக இறங்கினேன். என்னுடைய இந்த `இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்' திட்டத்தின் மூலம் உலகத்தில் எங்கு இருந்தாலும் ஸ்மார்ட்போன் மூலம் வயலுக்குத் தேவையான அளவு நீரைப் பாய்ச்ச முடியும்; உரம் போட முடியும். விவசாயி, தனது குரல் வழியாகவே இயக்கவும் முடியும்.’' சாதித்துக்காட்டிய உற்சாகத்துடன் பேசினார் பிரேம்குமார். முதல் பரிசு பெற்ற பிரேம்குமாருக்கு 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

ஆயிரம் இளைஞர்கள்... அபார யோசனைகள்!

இரண்டாவது பரிசைப் பெற்ற சிவகுமார் ``என்னுடைய ஊர் வேலூர் மாவட்டம். எப்போதும் வெயில்தான். வெயிலோடு வாழ்ந்ததால் தண்ணீர்க் கஷ்டத்தை உணர்ந்தே வளர்ந்திருக்கிறேன். எல்லா இடங்களிலும் தண்ணீரைச் சேமியுங்கள் என வாசகங்கள் இருக்கின்றன. ஆனாலும், இதை யாரும் கவனத்தில் எடுத்துக்கொள்வது இல்லை. `இதை எப்படிப் பார்க்கவைப்பது?' என யோசித்த போதுதான், `எதைப் பார்க்கிறார்களோ, இல்லையோ நிச்சயமாக கண்ணாடியில் முகத்தைப் பார்ப்பார்கள். ஆக, முகம் பார்க்கும் கண்ணாடியில் மெசேஜ் போட்டால் என்ன?' என்ற ஐடியா ஃபிளாஷ் ஆனது. விகடன் ஹேக்கத்தான் விளம்பரம் பார்த்தவுடன் விண்ணப்பித்து இதற்கு என்னென்ன பொருட்கள் தேவை, இது வொர்க் ஆகுமா? எனத் தேடி ரிசர்ச் செய்ய ஆரம்பித்து விட்டோம். என்னுடைய குழுவில் கர்நாடகாவைச் சேர்ந்தவரும் இருக்கிறார், ஆந்திராவைச் சேர்ந்தவரும் இருக்கிறார். இந்தத் திட்டத்துக்காக பெங்களூருவில் இருந்து பஸ் ஓடாததால் நடந்து வந்து எல்லோரும் கலந்துகொண்டிருக்கிறார்கள். எங்களுக்குக் கிடைத்த இந்தப் பரிசையும் தண்ணீர் குறித்த ஆராய்ச்சிக்கே செலவிட உள்ளோம்'' என்று நெகிழ்ந்தார்.

மூன்றாவது பரிசை, கிராமணி குழுவும் ஸ்மார்ட் ஹெல்மெட் குழுவும் பெற்றனர். இரு அணிகளுக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. கிராமணி குழுவைச் சேர்ந்த செல்வராஜிடம் பேசினோம்.

ஆயிரம் இளைஞர்கள்... அபார யோசனைகள்!

``திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாசரேத் என்னுடைய ஊர். இங்கு சுயஉதவிக் குழுவினர் பலவிதப் பொருட்களைத் தயாரிக்கிறார்கள். ஆனால், இந்தப் பொருட்கள் சரியான அடையாளம் இல்லாமல் அப்படியே இருக்கின்றன. பொருட்களை விற்பனைசெய்யும் நிறுவனங்களையும் சுயஉதவிக் குழுக்களையும் இணைக்கும் வகையில் மொபைல் ஆப்பை உருவாக்கினோம். இதன் மூலம் சுயஉதவிக் குழுவையும் பொருட்கள் தேவைப்படுவோரையும் இணைக்க முடியும்'' என்றார்.

ஹெல்மெட்டும் கையுமாக நின்றுகொண்டிருந்த `ஸ்மார்ட் ஹெல்மெட்' அணியினரிடம் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டோம்.

``இப்போது சாலை விபத்துகளில் பெரும்பாலானவை இரு சக்கர வாகன விபத்துகளாக இருக்கின்றன. இதில் இளைஞர்கள் மரணத்தைத் தழுவுகிறார்கள். இதைத் தடுக்கும் வகையில் ஸ்மார்ட் ஹெல்மெட்டை உருவாக்கி இருக்கிறோம். இந்த ஹெல்மெட்டை அணிந்தால் மட்டுமே இரு சக்கர வாகனத்தை இயக்க முடியும். மேலும், மது அருந்தி இருந்தால் வண்டியை ஸ்டார்ட் செய்ய முடியாது. ஹெல்மெட் அணிந்தவர் விபத்தில் சிக்கினால் உடனே நண்பர்களுக்கு தகவல் சென்றடையும் வகையில் உருவாக்கியிருக்கிறோம். பெரும்பாலானோர், ஹெல்மெட்டைத் தவிர்ப்பது வியர்வையால்தான். வியர்வை இல்லாத வகையில் இந்த ஹெல்மெட் உருவாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம்'' என்றார்கள் மகிழ்ச்சியாக.

கலக்குங்க பாய்ஸ்!