Published:Updated:

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 9

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 9
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 9

டாக்டர். ஆர்.கார்த்திகேயன், ஓவியம்: காமேடி

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 9

டாக்டர். ஆர்.கார்த்திகேயன், ஓவியம்: காமேடி

Published:Updated:
ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 9
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 9
ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 9

#குறட்டையிசம்

டால்ஸ்டாய் சொன்னார், `ஒன்று, உனக்கு நல்ல மனைவி கிடைக்கும். இல்லாவிட்டால் தத்துவஞானி ஆவாய்!' இது ஆணாதிக்கம் என உடனே கட்டையைத் தூக்க வேண்டாம். மனைவி என்பதை ‘வாழ்க்கைத் துணை’ என மாற்றிப் போட்டுவிட்டால், இருபாலருக்கும் பொருந்தும்.

அன்பும் அதிகாரப்பகிர்வும் கொள்ளும் எல்லா உறவுகளும் என்றும் சிக்கல்தான். அதனால்தான் எதிராளியை சதா தூற்றிக்கொண்டிருக்கிறோம்.

சின்ன விஷயங்கள்கூட பூதாகாரமாக மாறிவிடுகிறது. குறட்டைவிடுகிறார் என்று விவாகரத்துக் கேட்கிறார்கள் வெளிநாடுகளில். குறட்டைவிடும் துணையுடன் வாழ்க்கை முழுவதும் தூங்குதல் சாபக்கேடுதான்.

சமீபத்தில் ஒரு பயணத்தில், சீனியர் ஒருவருடன் அறையைப் பகிர்ந்துகொள்ள நேரிட்டது. நடுஇரவில் இரு விமானங்கள் மோதிக்கொள்வதுபோல பேரிரைச்சல். ஆங்கிலப் படம் பார்க்கையில் பாதியில் தூங்கி விழித்ததுபோல் இருந்தது. அப்படி ஒரு வித்தியாசமான குறட்டை. சிம்ஃபனி முதல் க்ளைமாக்ஸ் காட்சி அதிரடி வரை அனைத்தும் கேட்டேன். தூக்கம்போனது. அதிகாலையில்தான் கண் அசந்தேன்.

“குட் மார்னிங்!” என்று என்னை எழுப்பிய நண்பர் சொன்னார், “நல்ல தூக்கமா? செமயா குறட்டைவிட்டீங்க. உங்களாலதான் விடியற்காலையிலேயே எழுந்திட்டேன்.”

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 9

#கட்டிப்பிடிடா!

 உறவுகளை எப்படிக் கையாள வேண்டும் என நிறையப் புத்தகங்கள் வர ஆரம்பித்துவிட்டன ஆங்கிலத்தில். முன்னர் அதிகமாக வந்துகொண்டிருந்தவை தன்னம்பிக்கை சார்ந்த புத்தகங்கள். இப்போது அதிகம் விற்பவை வேலை மற்றும் உறவுகள் பற்றியவை. எல்லா காலங்களிலும் கொடிகட்டிப் பறப்பவை ஹெல்த் பற்றிய புத்தகங்கள்தான்.

அன்பை வெளிப்படுத்துவதில் சிக்கல் உள்ள மனிதர்களிடம் எப்படி அன்பு செலுத்துவது என ஒரு புத்தகம் பார்த்தேன். உள்ளடக்கத்தைவிட தலைப்புதான் சூப்பர்.

“How to hug a porcupine?”

#ரியல்_டரியல்

`ஆங்கில நாவல்கள் படிக்கும் பழக்கம் உண்டு' என இன்டர்வியூக்களில் யாராவது சொன்னால், அவர்கள் சேத்தன் பகத்தைப் படித்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.

தமிழில் சுஜாதாவின் கதைகள் காட்சிப்படுத்த எப்படி எளிமையாக இருந்தவையோ, அதுபோலத்தான் சேத்தன் பகத்தின் கதைகளும். `சினிமாவை மனதில் வைத்துக்கொண்டே எழுதுகிறாரோ!' என்ற சந்தேகமே எனக்கு உண்டு.

நாவலுக்கு டீஸர்விட்டு, முன்வெளியீட்டுச் சலுகை அறிவித்து, ஏக பந்தா பப்ளிசிட்டி செய்து பகத்தை செலிப்பிரிட்டியாக்கி புத்தகங்கள் விற்பது மகிழ்ச்சிதான். அதிகம் படிக்கப்படும் எழுத்தாளர் இன்று அவர்தான். ஆனால், திருமணத்துக்கு முன்னர் எல்லா பெண்களும் கட்டாயம் செக்ஸ் வைத்துக்கொள்வார்கள் என ஒவ்வொரு நாவலிலும் எழுதுவது, முதல் முறை நாவல் படிக்கும் யூத்களை  (அவர் வாசகர்கள் பலர் அப்படித்தான்!) தவறாக வழிநடத்தும்.\

இது டைரக்டர் ஷங்கர் படத்தைப் பார்த்து, சமூகத்தைத் திருத்தக் கிளம்புவதுபோல. மிகையாகச் சொல்லப்படும் பொய்யை நிஜமாக நினைக்கும் அபாயம் உண்டு.

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 9

#தமிழ்_தப்புமா

சமீபத்தில் நான் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில், இளைஞர்களிடம் தமிழ் குறைந்துவருகிறது என்ற கருத்தைப் பொய்யாக்கியதுபோல பல இளைஞர்கள் அருமையாகக் கவிதை வாசித்தார்கள். ‘இவர்கள் சிறுபான்மையினர்’ என்றார் நண்பர். `செங்கல்பட்டு தாண்டினால்தான் தமிழ் உண்டு' என்றார். சென்னையில் எல்லா தரப்புப் பள்ளிகளிலும் தமிழ் குறைந்துவருவது உண்மைதான். இந்தத் தலைமுறைக்கு தமிழ் படிக்கத் தெரிந்தால்தான் அடுத்த தலைமுறையில் தமிழ் தப்பும்.

ரஜினி `மகிழ்ச்சி' என பன்ச் சொன்னதுபோல எல்லா தொழில்களிலும் கொஞ்சம் தமிழைச் சேர்த்தால்தான் நம் இளைஞர்களிடம் தமிழ் தங்கும்.

#தட்றா_தட்றா

ரஜினி படம் பார்த்தால் கை தட்டுவீர்கள்; கிரிக்கெட் பார்த்தாலும் கை தட்டுவீர்கள். எது செய்தாலும் கை தட்டுவது நல்லது. கைகள் தட்டும்போது மூளையில் இருந்து சுரக்கும் ஆக்ஸிடாக்ஸின் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். மகிழ்ச்சியானால் கை தட்டுங்கள்; மகிழ்ச்சியடையவும் கை தட்டுங்கள்.

கைகள் தட்டுவதுபோல வெறுங்காலில் நடப்பதும் மூளையை சுறுசுறுப்பாக்கி உற்சாகமாக இருக்கவைக்கும். இதை ரொம்ப விவரித்தால், அக்குபஞ்சர் கட்டுரைபோல ஆகிவிடும். உங்கள் கால்கள், இயற்கையான மண்ணில் பட நடப்பது நல்லது. அது இயலாதபோது காலணி அவசியம். வீட்டுத் தோட்டமோ, ஆற்றங்கரை, குளக்கரை, கடற்கரை மண்ணோ எங்கு முடிகிறதோ அங்கு காலணி இல்லாமல் காலாற நடப்பது உங்களை pep up செய்யும்.

கடற்கரையின் கூடுதல் விசேஷம், உப்புநீர் உங்கள் கால்களைக் கழுவுதல். Pranic Healing-ல் இதை முக்கியமாகக் கூறுவர்.

#பட்டர்ஃப்ளை_எஃபெக்ட்

வயிற்றுப் பகுதி, உணர்வுகளுக்கு முக்கியப் பகுதி. `வயிற்றில் பட்டம்பூச்சி பறக்கிறது', `அடிவயிற்றில் பற்றி எரிகிறது' எனச் சொல்வது எல்லாம் வயிற்றுக்கும் மனதுக்கு உள்ள தொடர்பைக் காட்டுகின்றன.

Gut feeling என்ற சொல்லை ஆராய்ந்தாலே போதும், நிறையத் தெரியவரும். சுவாதிஷ்டான சக்ரா எனச் சொல்லப்படும் பகுதிதான் உறவுகள் மற்றும் உணர்வுகள் சார்ந்தவை.

`வயிறு குலுங்கச் சிரி' என்பது, அறிவியல் பூர்வமானது. சிரிக்கும்போது ஏற்படும் வயிற்றுச் சுருக்கம் மகத்தானது.

அதனால்தான் belly dancing செய்யும் பெண்களிடம் அழகான புன்னகையைப் பார்க்க முடிகிறதா? மத்தியப் பிரதேசம் பெருத்தவர்கள் பெல்லி டான்ஸிங் முயற்சிக்க வேண்டாம். அதற்குப் பதில் அப்டமின் எக்ஸர்சைஸ் செய்தாலே போதும்.


ஜிம்முக்குத் தொடர்ந்து செல்பவர்கள், ஒரு சாதனை உணர்வுடன் வெளியேறுவர். காரணம், ஜிம்முக்குப் போவதற்கு ஒரு will power அவசியம். உடலை உறுதிசெய்ய மனஉறுதி வேண்டும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் நல்ல உடல்வாகு பெறுவதற்கு முன்னர் நல்ல புன்னகை வாய்த்துவிடும்!

சென்ற வாரக் கேள்விக்கான விடை:

நடிகை பி.பானுமதி. நடிகை, பாடகி, எழுத்தாளர், பாடலாசிரியர், ஓவியர், இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என அஷ்டாவதாரம் செய்தவர்.

- மற்றவை நெக்ஸ்ட் வீக்