Published:Updated:

ஜென் Z - நான் அரோல் கொரேலி ஆனது எப்படி?

ஜென் Z - நான் அரோல் கொரேலி ஆனது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - நான் அரோல் கொரேலி ஆனது எப்படி?

சிபி, படம்: ப.சரவணகுமார்.

ஜென் Z - நான் அரோல் கொரேலி ஆனது எப்படி?

சிபி, படம்: ப.சரவணகுமார்.

Published:Updated:
ஜென் Z - நான் அரோல் கொரேலி ஆனது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - நான் அரோல் கொரேலி ஆனது எப்படி?
ஜென் Z - நான் அரோல் கொரேலி ஆனது எப்படி?

``சொந்த ஊர் தேனி. ஆனா, பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னைதான். படிப்பைத் தாண்டி, ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா ஆக்ட்விட்டியில் நல்லா வரணும்னு அப்பா நினைச்சார். அப்ப அவர் டிக் அடிச்சது மியூஸிக். எனக்கு இசையில் ஆர்வம் இருக்குனு முதலில் கண்டுபிடிச்சதே அப்பாதான்.

ஜென் Z - நான் அரோல் கொரேலி ஆனது எப்படி?டி.வி-யில் ஒரு சின்னப் பையன், கிடார் வாசிக்கிறதைப் பார்த்துட்டு, `நானும் கிடார் கத்துக்கணும்’னு அஞ்சு வயசுல சொன்னேன். உடனே, அப்பா வயலின் க்ளாஸில் சேர்த்துவிட்டார். நான் வயலினை, கிடார்னு நினைச்சு ஸ்டைலா வாசிக்க... தலையில தட்டி `இது கிடார் இல்ல... வயலின். இதை அப்படித்தான் வாசிக்கணும்'னு கத்துக்கொடுத்தாங்க. `நாம கத்துக்க ஆசைப்பட்டது இது இல்லையே?'னு யோசித்து முடிப்பதற்குள், வயலின் எனக்கு செட் ஆகிடுச்சு. ஆனா, அங்கே ஒன்லி கர்னாடக சங்கீதம்தான். சினிமா பாட்டு எல்லாம் வாசிக்கக் கூடாது. வீட்டுக்கு வந்தா விடியவிடிய சினிமா பாடல்களை பியானோவிலும் வயலினிலும் மாறி மாறி வாசிச்சுட்டிருப்பேன். `என் ஆசை... கனவு எல்லாமே மியூஸிக் மீது மாறினதும், இசைத் துறை சம்பந்தமா படிக்கிறேன்'னு வீட்டுல சொன்னேன். `மியூஸிக் ஒரு எக்ஸ்ட்ரா கரிகுலர்தான். படிப்புதான் சோறு போடும்’னு சொல்லி, என்னை பி.காம்., சி.ஏ-னு அப்பா படிக்கச் சொன்னார்.

சி.ஏ முடிச்சதும் உடனே நல்ல வேலை கிடைச்சது. மூணு வருஷம் பகல்ல அக்கவுன்டன்ட் வேலை, நைட் ரிக்கார்டிங்னு பிஸியாவே இருந்தேன். மூணு வருஷம் வேலைக்குப் பிறகு ஒருநாள், வேலையை விடுற முடிவைத் திடீர்னு எடுத்தேன். லட்சம் ரூபாயில் சம்பளம் வாங்கின வேலையை விட்டுட்டு, இனி நம் கனவைத் துரத்துறதுதான் வேலைனு முடிவு பண்ணினேன்.

வேலையை விட்டதை வீட்ல சொல்லலை. காலையில ஆபீஸ் கிளம்புற மாதிரியே கிளம்பி, நான் போட்டுவெச்ச டெமோ சி.டி-யை எடுத்துக்கிட்டு ஒவ்வொரு டைரக்டர் ஆபீஸுக்கும் தயாரிப்பாளர் ஆபீஸுக்கும் மாறி மாறிப் போய் போட்டுக் காமிப்பேன். `ஆல்பம் நல்லா இருக்கு. கூப்பிடறேன்'னு ஆறுதல் சொல்லி அனுப்புவாங்க. அப்படியே மூணு வருஷம் ஓடிடுச்சு. போராடி ஒரு படம் கமிட் ஆனேன். ஆனா, என்ன காரணத்தினாலே அது டிராப் ஆகிடுச்சு.

அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம ஹார்ட் ஆபரேஷன் செய்யவேண்டிய சூழல். வீட்டுல பண நெருக்கடி. நான் வேலைக்குப் போயே ஆகவேண்டிய கட்டாயம். மீண்டும் வேலைக்குப் போனா... காலம் முழுக்க இந்த வேலையிலேயே இருந்திடவேண்டியதுதான். மீண்டும் நான் வேலை செய்த கம்பெனியிலேயே வேலை கேட்டேன். `தர்றேன்' ஆனால், `ஆபீஸ் நிலைமை முன்னாடி மாதிரி இல்லை. நீ உன் இஷ்டத்துக்குப் போயிட்டு வர முடியாது. பியானோ, வயலின் வாசிக்கப் போகாமல் வேலையில் முழுக் கவனம் காட்டுறதா இருந்தால் உடனே வேலை தர்றேன்'னு சொன்னாங்க.

எதையோ இழந்த துக்கம். `நம் கனவைத் தொலைச்சுட்டோமா!’னு நடுராத்திரியில மெரினா பீச்ல அழுதுட்டே, அங்கே நிற்கும் படகுல படுத்துத் தூங்கிடுவேன். அப்பதான் `ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படம் ரிலீஸ் ஆச்சு. படமும் இசையும் வேற லெவல்ல இருந்தது. `70 வயசு உள்ள பெரியவர் இந்த வயசுலயும் இப்படி உழைக்கிறார்னா... உனக்கு என்னடா கேடு?'னு மனசு கேட்டுச்சு. `டைரக்டர் மிஷ்கின்கூட ஒருநாள் வேலை செய்யணும்டா'னு தோணுச்சு.

என் ஃப்ரெண்ட் மூலமாக மிஷ்கின் சாரைப் பார்க்கப் போனேன். மனசுக்குள்ள `இதுதான் நான் கடைசியா வாய்ப்பு தேடிப்போற ஆள்'னு நினைச்சுக்கிட்டேன். அவர் `உனக்கு இசையைப் பத்தி என்ன தெரியும்?

நீ படத்தைப் புரிஞ்சுக்கிட்டு மியூஸிக் பண்ணிடுவியா? இசைனா வேற...'னு சொல்லிட்டிருந்தார். எனக்கு ரொம்ப கஷ்டம் ஆகிடுச்சு. `ஒரு வாய்ப்பு கொடுத்துதான் பாருங்க சார்'னு பட்டுனு சொல்லிட்டேன். `அப்படியா நான் ஒரு தீம் சொல்றேன். அதுக்கு மியூஸிக் பண்ணிட்டு வா'னு சொன்னார். `காது கேட்காத ஒருத்தன் அருவியில இருந்து கொட்டுற தண்ணீரையும் பறக்கும் பறவைகளையும் மரத்துல இருந்து கத்தும் குருவிகளையும் பார்த்து ஒரு மியூஸிக் போடணும். ஆனா, அவனுக்கு காது கேட்காது. இந்த வலியை அவன் மியூஸிக் பண்றான். அது அவனோட வலியா இருக்கணும். இதைப் பண்ண, உனக்கு ஒரு மாசம் டைம் கொடுக்கிறேன்'னு சொன்னார்.

தேனி பக்கத்தில் இருந்த குரங்கனி அருவிக்குப் போனேன். அவர் சொன்ன சிச்சுவேஷன்ஸ் எல்லாம் அப்படியே அந்த அருவியில் இருந்தது. இரவு-பகலா ஒரு வாரம் உழைச்சு தீம் மியூஸிக் போட்டு அவர்கிட்ட கொடுத்தேன். கண்ணை மூடி கேட்டவர் அசந்துட்டார். எழுந்து வந்து கட்டிப்பிடிச்சுப் பாராட்டினார். `நீதான் என் அடுத்த படத்துக்கு மியூஸிக் டைரக்டர்'னு சொன்னார். `பிசாசு' படம் ஆரம்பிச்சு மியூஸிக் பண்ணி முடிச்சு, ஆடியோ ரிலீஸ் சமயத்துலதான் `பாலா சார் தயாரிப்பு, மிஷ்கின் சார் டைரக்‌ஷன்ல மியூஸிக் பண்ணியிருக்கேன்’னு எங்க வீட்டுல சொன்னதும் அவங்களுக்கு செம சர்ப்ரைஸ்.

நான்தான் மிஷ்கின் சார்கிட்ட `அருள்முருகன் பேருக்குப் பதிலா வேறு ஏதாவது பேரு வைங்க?’னு கேட்டேன். அவர்தான் கொரேலினு பெரிய இத்தாலியன் வயலினிஸ்ட் இருக்கார். அவர் பெயரை இணைத்து `அரோல் கொரேலி’னு பேர் வெச்சார். அப்பதான் அருள் முருகனா இருந்த நான் அரோல் கொரேலியா புதுசா பிறந்தேன்.

`பிசாசு' படம் ரிலீஸாகி நிறையப் பாராட்டுக்கள், விருது எல்லாம் வாங்கினதும்தான் எங்க வீட்டுல, பையனுக்குள்ள ஏதோ இருந்திருக்குனு முழுமையா நம்பினாங்க. அடுத்து `பசங்க 2' பண்ணினேன். அதுக்கும் நல்ல பேர். இப்ப `சவரக்கத்தி, `துப்பறிவாளன்', `அண்ணனுக்கு ஜே'னு இன்னும் சில படங்களுக்கு இசையமைச்சுட்டு இருக்கேன். கடைசி வரை கனவை முழு நம்பிக்கையோடு துரத்தியதால்தான் அதை நனவாக்கி அடைந்தேன்.''

``சக்சஸ் சீக்ரெட்''

``சின்சியரா ஒரு கனவு காணுங்க. அதை நோக்கி டிராவல் பண்ணுங்க.''

``பிடிச்ச இசைக்கருவி''

``பியானோ, வயலின் இரண்டுமே எனக்கு இரண்டு கை மாதிரி.''