Published:Updated:

ஜென் Z - ப்ரியாவின் சக்தி!

இரா.கலைச்செல்வன்

பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - ப்ரியாவின் சக்தி!

“எங்க அப்பா, அம்மா ரெண்டு பேருமே ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் என்னைப் படிக்கவெச்சாங்க.அவங்களை பத்திரமா, சந்தோஷமாப் பார்த்துக்கணும். அதுக்காகத்தான், காலேஜ்

ஜென் Z - ப்ரியாவின் சக்தி!

முடிச்ச மூணே மாசத்துல அலைஞ்சு, திரிஞ்சு வேலையில் சேர்ந்தேன். இப்பதான் என் வாழ்க்கை ரொம்ப நல்லா போயிட்டிருக்கு. அதுக்குள்ள... அவன்... அந்த மிருகம் என்னை இப்படிப் பண்ணிடுச்சே!

வரணும் சார்... நான் திரும்பவும் வந்து வேலைக்குப் போய், நல்லா சம்பாதிச்சு, எங்க அப்பா-அம்மாவை நல்லா பார்த்துக்கணும்” - 2013-ம் ஆண்டு ஆசிட் வீச்சுக்கு ஆளாகி, தன் உயிரை இழந்த காரைக்கால் வினோதினி, கடைசியாகப் பேசிய சொற்கள் இவை.

நம்முடைய தோல், வெளிப்பகுதி, நடுப்பகுதி, உட்பகுதி என மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளது. அதன் மீது ஆசிட் வீசும்போது... அது வெளிப்பகுதியை உருக்கி, நடுப்பகுதியில் பலமாக இருக்கும் கொழுப்புகளையும் எரித்து, உட்பகுதியை ஊடுருவி உறுப்புகளைக் கிழித்து, கடைசியில் எலும்புகளையே அரித்துவிடுகிறது. ஆசிட் வீச்சில் பாதிக்கப்படுபவர் களின் வலியை நிச்சயம் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. ஆசிட்  வீச்சில் இருந்து மீண்டவர்களின் ஒரே தேவை, நம்பிக்கை. அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் ஒரு `சூப்பர் ஹீரோ' கதையை உருவாக்கியிருக்கிறார் அமெரிக்க - இந்தியத் திரைப்பட இயக்குநர் ராம் தேவினேனி.

ஜென் Z - ப்ரியாவின் சக்தி!

“பாலியல் வன்புணர்வுக்கு ஆளானவர்களுக்கும், ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு ஒன்று இருக்கிறது. ஆணாதிக்கச் சிந்தனை, சமூகக் களங்கம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீதான பார்வை... இந்தப் பிரச்னைகளை இவர்கள் இருவருமே ஒரே மாதிரியாகத்தான் எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது. மேலும், ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் தெரியும் வடுக்களின் காரணமாக, கூடுதலான புறக்கணிப்புகளைச் சந்திக்கிறார்கள்” என்கிறார் ராம் தேவினேனி. இவர், ஏற்கெனவே 2012-ம் ஆண்டில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிர்பயாவின் கதையை வைத்து ஒரு காமிக்ஸ் கதையை உருவாக்கியவர்.

இவருடைய காமிக்ஸில் வரும் `சூப்பர் ஹீரோ' கதாபாத்திரத்தின் பெயர் ப்ரியா. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ப்ரியாவுக்கு, கடவுளான `பார்வதிதேவி'யிடம் இருந்து ஓர் அதீத சக்தி கிடைக்கிறது. அதைக் கொண்டு பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை அவர் எப்படித் தட்டிக்கேட்கிறார் என்பதே இவருடைய காமிக்ஸ் வரிசைகளின் கதைக்களம்.

ஜென் Z - ப்ரியாவின் சக்தி!

`அஹங்கார்' (அகங்காரம்) என்கிற வில்லன், ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பல பெண்களை அடிமைகளாக வைத்துள்ளான். அவனை எதிர்த்துப் போராடி, அந்தப் பெண்களை மீட்டு, அவர்களுக்கான நம்பிக்கையை அளித்து, அவர்களை வாழவைக்கிறார் ப்ரியா. இந்தக் கதையில் ப்ரியாவின் ஆயுதமாக ஒரு பெரும் கண்ணாடி சித்தரிக்கப்பட்டுள்ளது. சமூகப் புறக்கணிப்பை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் ஆசிட் வீச்சுக்கு ஆளான பெண்கள், தங்களின் வெளித்தோற்றம் குறித்த கவலை களைக் கடந்து, தங்கள் திறமைகள் மூலம் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை பூடகமாக வெளிப்படுத்தும்விதத்தில் இந்தக் கண்ணாடி ஆயுதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

“இதை காமிக் வகையில் கொண்டு வருவதற்கான முக்கியக் காரணம், இந்தக் கதைகளை டீனேஜ் வயதினர் அதிகம் வாசிக்க வேண்டும் என்பதுதான். ஏனென்றால், பெண்களை சமமாக நடத்தும் எண்ணம், ஆணாதிக்கச் சிந்தனைகள் ஆட்கொள்ளாமல், தெளிவான மனநிலையில் அவர்கள் வளர்ந்தால்தான் அடுத்தடுத்த தலைமுறை களில் பெண்களுக்கு எதிரான இதுபோன்ற வன்முறைகளை ஒழிக்க முடியும்'' என்கிறார் இந்தக் கதையை ராமுடன் இணைந்து எழுதியிருக்கும் பரோமிதா வோஹ்ரா.

ஜென் Z - ப்ரியாவின் சக்தி!

“உண்மைக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதால் `ஆக்மென்டட் ரியாலிட்டி' அடிப்படையில் இதன் படங்களை உருவாக்கி யுள்ளேன். உலக அளவில் ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பல பெண்களைச் சந்தித்தேன். அவர்களில் சிலரின் நிஜ முகங்களை இதில் வரைந்துள்ளேன். இந்தச் சம்பவம் ஏதோ சில இடங்களில் மட்டுமே நடக்கிறது என்றுதான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். ஆனால், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், கம்போடியா, கொலம்பியா, மத்தியக் கிழக்கு நாடுகள், கொலம்பியா... அவ்வளவு ஏன்... ஐரோப்பிய நாடுகளில்கூட இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியாகிவிட்டேன்” என்கிறார் இந்த காமிக்ஸ் தொடருக்கான வரைகலைப் பணியை மேற்கொண்ட டான் கோல்ட்மேன்.

இந்த காமிக்ஸ் கதைகளை வணிக நோக்கில் வெளியிடாமல், இதை அனைவரும் இலவசமாகப் படிக்கும் வகையில், இணையத் திலேயே வெளியிட்டுள்ளனர்.

இந்த காமிக்ஸ் தொடரை வாசிக்க, 

http://www.priyashakti.com/#comics

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு