Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 17

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 17
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 17

ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி ஓவியம்: பிரேம் டாவின்ஸி

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 17

ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி ஓவியம்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 17
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 17
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 17

‘வான் நின்று உலகம் வழங்கிவருகிறது’ என்றார் திருவள்ளுவர். நாம் வாழும் இந்த நிலவுலகுக்குத் தேவையானவை அனைத்தும் வானில் இருந்து வழங்கப்படுகின்றன. ஓர் அதிகாரத்தின் தலைப்பையே ‘வான் சிறப்பு’ என அமைத்தார். அந்த அதிகாரத்தில் மழையைப் பற்றிய சேதிகள் உள்ளதால், பல உரையாசிரியர்கள் அதை ‘மழைச் சிறப்பு’ என விளக்குகிறார்கள். `வான்’ என நம் ஆசான் குறிப்பிடுவது, மழையையும் உள்ளடக்கிய ஆகாயத்தை என்பது என் உணர்தல். ஏனெனில், வானில் இருந்து இறங்கிக்கொண்டுள்ள ஆற்றல் வகைகள்தான் பூமியில் உள்ள எல்லா உயிரினங்களையும் வளர்க்கின்றன, வாழவைக்கின்றன.

`நிலத்தில் நிலைபெற்று, வான் அளிக்கும் கொடைகளை உட்கொண்டு வாழ்வீர்’ என்பதுதான் படைப்பாற்றலின் வரம். எல்லா உயிரினங்களுக்கும், நிலம் உணவு வழங்குவது இல்லை. நிலத்தின் வழியாக உணவு வழங்கப்படுகிறது.

வோன் ஹெல்மோன்ட் (Von Helmont) என்கிற அறிவியலாளர், 17-ம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டில் வாழ்ந்தவர். `வில்லோ' எனப்படும் ஒரு மரக்கன்றை, ஒரு தொட்டியில் நடவுசெய்தார். அந்தத் தொட்டியில் எவ்வளவு மண் இருக்கிறது என்பதையும், வில்லோ செடியின் எடையையும் அளந்துகொண்டார். ஐந்து ஆண்டுகள் கழித்து வில்லோ செடி, ஓரளவுக்கு வளர்ந்து மரமாகி இருந்தது. அந்த மரத்தை வேரோடு வெட்டி எடுத்து எடை போட்டார். பின்னர் மரம் வளர்ந்திருந்த தொட்டி மண்ணை நன்கு உலரச்செய்து, அந்த மண்ணையும் எடைபோட்டார்.

நடவு செய்தபோது செடியின் எடை ஏறத்தாழ 2 கிலோ 200 கிராம். ஐந்து ஆண்டுகள் கழித்து வெட்டப்பட்டபோது, அதன் எடை ஏறத்தாழ 77 கிலோ.

மரத்தின் எடை இவ்வளவு அதிகமாகக் கூடியிருந்தபோதும், மரம் வளர்ந்த மண்ணின் எடை குறையவில்லை. அவரது கணக்குப்படி மண்ணின் எடை 57 கிராம் குறைவாக இருந்தது.

‘தாவரங்கள், வளர்ச்சியடையத் தேவையானவற்றை நிலத்தில் இருந்து எடுப்பது இல்லை; நீரில் இருந்துதான் எடுத்துக்கொள்கின்றன. ஏனெனில், என் சோதனையில் நான் ஊற்றிய நீர்தான் வில்லோ மரத்தின் எடையைக் கூட்டியது’ என்ற கருத்தை இந்த ஆய்வின் வழியாக அவர் அறிவித்தார். இப்படி பல ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அவர் மீது வழக்குகள் பதியப்பட்டு, வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் வோன் ஹெல்மோன்ட். வீட்டுச் சிறையில் இருந்து செய்ததுதான் வில்லோ மரத்தின் மீதான ஆய்வு.

உயிரினங்களின் வளர்ச்சிக்குத் தேவையானவை, வானில் இருந்தும் வான் தரும் மழையில் இருந்தும் கிடைக்கின்றன என்ற உண்மையை வெளிப்படையாக அறிவித்துவிட்டால், உணவு, மருத்துவத் துறைகளில் நிகழும் பொருளாதார வேட்டையைப் பொதுமக்கள் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விடுவார்கள். அதனால்தான், ‘ஊட்டச் சத்துகள்’ எனும் பொய்மையை நவீன மேதைகள் வலுவாகக் கட்டி எழுப்புகிறார்கள்.

நமக்கு உரிய இயல்பான உணவு வகைகளை உட்கொண்டாலே, நமக்குத் தேவையான அனைத்து ஊட்டங்களும் கிடைக்கும். ஊட்டச் சத்துக்களுக்காக தனித்தனியான ஆய்வுகளையும், அவற்றின் பேரால் பரிந்துரைக்கப்படும் உணவுகளையும் தேடித்தேடி உண்ணும்போது விளையும் நன்மைகளைவிட தீங்குகள்தான் அதிகம். பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும், தமக்கான உணவை மட்டும் உட்கொள்கின்றன. அந்த உயிரினங் களின் உடலில் நிகழும் பல்வேறு செயல்பாடுகளால், உணவுப் பொருட்கள் சத்துக்களாக மாற்றப்படுகின்றன. இந்தத் தகவலைத்தான் நீங்கள் சற்று ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

லூயி கார்வரான் (Louis kervran) என்கிற பிரெஞ்சு உயிரியலாளரைப் பற்றி, ஐயா நம்மாழ்வார் அடிக்கடி குறிப்பிடுவார். லூயி கார்வரானுடைய ஆய்வுகளின் சுருக்கம் என்னவெனில், ‘உணவுப் பொருட்கள் உடலுக்குள் செரிமானம் ஆகும்போது, உடலுக்குத் தேவையான சத்துக்களாக தாமாகவே மாற்றம் பெற்றுவிடுகின்றன. உதாரணமாக, மாடுகள் புல்லைத்தான் முக்கியமான உணவாக உட்கொள்கின்றன. புல் மற்றும் வைக்கோல் போன்ற உணவுகளில் அதிகமாக இருப்பது மக்னீசியம் எனும் சத்து. ஆனால், மாடுகளின் உடலிலும் பாலிலும் சுண்ணாம்புச்சத்துதான் கூடுதலாக உள்ளது. மாடுகளின் உணவில் இவ்வளவு சுண்ணாம்புச் சத்து இல்லையே!

அதேபோல, கோழிமுட்டைகளின் மஞ்சள் கருதான் கோழிக்குஞ்சாக மாற்றம் அடைகிறது. அந்த மஞ்சள் கரு என்பது புரதச்சத்துதான். முட்டைக்குள் வளரும் கோழிக்குஞ்சுக்கு எனத் தனி உணவை எவரும் கொடுப்பது இல்லை; கொடுக்கவும் இயலாது. முட்டைக்குள்ளே வளரும் அந்தக் குஞ்சு, முட்டையின் ஓட்டை உடைத்து வெளியே வரும்போது பல்வேறு சத்துக்கள் நிறைந்ததாக மாறிவிடுகிறது. இவ்வளவு சத்துக்கள் அந்தக் குஞ்சுக்கு எங்கு இருந்து வந்தன? விடை என்னவெனில், உணவு எதுவாக இருப்பினும், அந்த உணவின் உள்ளடக்கத்தைத் தனக்குத் தேவையான சத்துக்களாக மாற்றிக்கொள்ளும் வல்லமை உடலுக்கு உண்டு. இது லூயி கார்வரானின் மிக நீண்ட ஆய்வறிக்கையின் எளிய விளக்கம்.

மாடுகள் தமக்கான உணவை மட்டும் உட்கொண்டால், அவற்றுக்கு மருத்துவர் தேவை இல்லை. கோழிகள் தமக்கான இரையை மட்டும் மேய்ந்து, இயற்கை முறையில் அடைகாத்தால், அவற்றின் குஞ்சுகளைப் பொரிப்பதற்கு இயந்திரங்கள் தேவை இல்லை. மனிதர்களும் தமது வாழ்விடத்தில் விளையும் உணவுகளை மட்டுமே உட்கொண்டால், எந்த ஊட்டச்சத்து வலையிலும் சிக்கத் தேவை இல்லை.

உடலுக்குப் புரதம் தேவையெனில், புரதத்தை நேரடியாக உட்கொள்ளத் தேவை இல்லை. அவரவர் தமது மரபுவழிப்பட்ட உணவுகளை மட்டும் உட்கொண்டால், அந்த உணவுகளில் இருந்து உடலால் புரதத்தையும் மற்ற ஊட்டங்களையும் தயாரித்துக்கொள்ள முடியும். எல்லா உயிரினங்களும் அதிகாலையில் விழிப்பதைக் கவனித்திருப்பீர்கள். வானில் இருந்து இறக்கப்படும் அதிகாலைக் காற்றும் வெப்பமும்தான், எல்லா உயிரினங்களுக்குமான அடிப்படையான ஊட்டம்.

நம் முன்னோர், அதிகாலை கண் விழித்தலையும் வாழும் சூழலில் விளையும் உணவுப்பழக்கத்தையும் வாழ்வியலாகக் கொண்டிருந்தனர். ஆறு அடி நீளம் இருந்த வாளை வீசிப் போர்புரியும் அளவுக்கு அவர்களின் உடலில் பலம் இருந்தது. இன்றைய நவீன உணவு மேதைகள், தனது பயணப் பைகளைக்கூட சர்க்கரம் வைத்து உருட்டுகிறார்கள். மரபு வாழ்வியலைக் கடைப்பிடித்தோர்தான், கோயில்களின் விமானத்தில் பல்லாயிரம் கிலோ எடைகொண்ட பாறைகளை அடுக்கினர்.

`இந்த உணவில் புரதம் உள்ளது. ஆகவே, இதை உட்கொள்ளுங்கள்’ என அறிவிப்பவர்களிடம் `இந்தப் புரதம் எங்கு இருந்து எடுக்கப்பட்டது?’ எனக் கேளுங்கள். இந்தக் கேள்வி, உணவு மற்றும் மருத்துவ நிறுவனங்களை அசைத்துப்போடத்தக்கது.

புரதம் என்பது, நவீன அறிவியல் கண்டறிந்துள்ள சத்துக்களில் ஒன்று. பெரும்பாலான உணவுகளிலும் உயிரினங் களின் உடல்களிலும் புரதம் உள்ளது. பாம்புகளின் நஞ்சு என்பதே புரதம்தான். தேள், நட்டுவாக்காலி உள்ளிட்ட உயிரினங்களின் நஞ்சும் புரதம்தான். ஓர் உணவுப்பொருளைக் காட்டி, ‘இதில் புரதம் உள்ளது’ எனக் கூறுபவர்கள், அந்த உணவுப் பொருளில் உள்ள புரதம் எந்த உயிரினத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதைக் கூறட்டுமே!

மாட்டு எலும்புகளில் இருந்து அதிகப்படியான சுண்ணாம்புச்சத்து உறிஞ்சப்பட்டு, உணவுகளில் கலக்கப்படுகின்றன. பல்வேறு சத்துணவு மற்றும் தின்பண்ட நிறுவனங்களின் தயாரிப்புகளில் விலங்குக் கொழுப்புகள் இருக்கின்றன. சில நிறுவனங்கள் தம் உணவில், ‘தாவரக் கொழுப்பு’ உள்ளதாகக் கூறுகின்றன. எந்தத் தாவரத்தில் கொழுப்பு உள்ளது என்பதை வெளிப்படையாகக் கூறட்டுமே!

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 17

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

துப்பாக்கித் தோட்டாக்களில் பன்றிக்கொழுப்பும் பசுவின் கொழுப்பும் கலக்கப்பட்டது, பிரிட்டன் வல்லாதிக்கத்துக்கு எதிராக நிகழ்ந்த சிப்பாய்க் கலகத்துக்கான காரணங்களில் ஒன்று. இப்போது உள்ள ஊட்டச்சத்து உணவுகளில் கலக்கப்படும் கொழுப்புகளின் உண்மைநிலை மட்டும் வெளியே கசிந்தால், கட்டுப்படுத்த முடியாத கலகங்கள் வெடிக்கும். அந்தத் தகவல்கள் எல்லாம் `பன்னாட்டு வணிகச் சட்டங்களினால்’ பாதுகாக்கப்படும் தொழில் ரகசியங்கள்.

மனிதத் தலைமுடியில் ஏராளமான புரதம், அமினோ அமிலங்கள் உள்ளன. பல்வேறு திருத்தலங்களில் சேகரிக்கப்படும் தலைமுடிகள், பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. அவை எல்லாம் பல்வேறு நிறுவனங்களின் கிடங்குகளைச் சென்றடைகின்றன. `தலைமுடியில் இருந்து எடுக்கப்பட்ட புரதத்தைத்தான் உங்கள் தயாரிப்பில் பயன்படுத்துகிறீர்கள்’ என, எந்த உணவு நிறுவனத்தையும் குறிப்பிட்டு எழுதவோ, பேசவோ முடியாது. சட்டம் அவர்களைத்தான் பாதுகாக்கிறது.

இவ்வாறான செயல்முறைகளால் மனித உடலில் உருவாகும் மோசமான மாற்றங்களைப் பற்றிய கவலை, நவீன உணவு மற்றும் மருத்துவத் துறையினருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. வைட்டமின் மாத்திரைகளை எழுதித் தரும் மருத்துவர்களுக்கு, இந்த மாத்திரைகளில் உள்ள வைட்டமின் எந்த உயிரினத்தில் இருந்து எடுக்கப்பட்டது எனத் தெரியுமா அல்லது தெரிந்துகொள்ளும் விருப்பம்தான் அவர்களுக்கு உள்ளதா?

இயற்கையான உணவைத் தவிர, வேறு எந்த வகையிலும் உடலுக்குள் செலுத்தப்படும் சத்துக்களை உடல் ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது. இந்த விதியைப் புரிந்துகொள்ளாததன் விளைவைத்தான் நமது சமூகம் இப்போது பல்வேறு நோய்களின் பேரால் அனுபவிக்கிறது.

மழலைகள் மற்றும் சிறுவர்களுக்கான ஊட்டச்சத்து உணவுகளைப் பாருங்கள். அவற்றின் புட்டியில் குறிப்பிடப்படும் பல்வேறு சத்துக்களை அந்தக் குழந்தைகளின் உடல் செரிப்பது இல்லை. இதனால்தான் இப்போதைய குழந்தைகளில் மிகப் பெரும்பாலானோருக்கு சளித் தொல்லை நீடிக்கிறது. பிறந்த சில நாட்களில் தொடங்கும் சளித் தொல்லை, ஒவ்வோர் ஆண்டும் அதிகரிக்கிறதே தவிர, குறைவது இல்லை. கணிசமான குழந்தைகளின் நுரையீரல் செயல்திறன் குறைந்து, மூச்சிரைப்பு நோயாளிகளாக மாற்றப்படுகின்றனர்.

நம் வீட்டுப் பிள்ளைகளின் உணவுப் பட்டியலில், ஊட்டச்சத்துப் பொருட்கள் குவிந்துகிடக்கின்றன. அதே குழந்தைகளின் மருத்துவப் பட்டியலோ, அதைக்காட்டிலும் பெரியதாக இருக்கிறது. `பிறந்த நாளில் இருந்தே ஊட்டச்சத்து ஊசிகள், மருந்துகள், உணவுகள் கொடுக்கிறோமே. நம் பிள்ளைகள் ஏன் இவ்வளவு மோசமாக நோயுற்றுத் தவிக்கிறார்கள்?’ என்ற அடிப்படையான கேள்வியைக்கூட நீங்கள் எழுப்புவது இல்லை.

நாகப்பட்டினத்தில் நண்பர்களுடன் கடல் பயணம் சென்றபோது, எங்களுடன் படகில் வந்த ஒரு சிறுவனை மீனவர்கள் கடலில் தள்ளிவிட்டனர். நாங்கள் கரையில் இருந்து வெகுதொலைவில் இருந்தோம். அந்தச் சிறுவனுக்கு பத்து வயது இருக்கும். நடுக்கடலில் அவன் தனி ஒருவனாக நீந்தி விளையாடிய அழகைப் படம்பிடித்தோம். துளியும் அச்சமின்றி, சோர்வின்றி அவன் அந்த ஆழக் கடலில் நீந்தினான். படகில் ஏறிய பின்னர், ‘விளம்பரங்களில் காட்டப்படும் ஊட்டச்சத்து உணவுகளை உனக்குக் கொடுக்கிறார்களா?’ என அவனிடம் நான் கேட்டேன். அந்தச் சிறுவனுக்கு, நான் குறிப்பிட்ட ஊட்டச்சத்து உணவுகளின் பெயர்கூடத் தெரியவில்லை.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 17

நமது உடலும் மனமும் அளப்பரிய ஆற்றல்கொண்டவை. நாம் வாழும் நிலத்தில் என்ன உணவுகள் இயற்கையாகக் கிடைக்கின்றனவோ, அவற்றில் இருந்து, தமக்குத் தேவையான சத்துக்களை உறிஞ்சிக்கொள்ளும் வரம் நமக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து எனும் கருத்து, நவீன அறிவியலுக்குச் சொந்தமானது. நமது மரபு, `நிலத்தின் வளமையைத் தீர்மானிக்கும் ஆற்றல் வானில் உள்ளது’ என்ற மெய்யறிவை முன்வைத்தது. விலங்கு எலும்புகளின் சுண்ணாம்புச்சத்தும், தலைமுடியின் புரதமும், விலங்குகளின் கொழுப்பும் நமக்குத் தேவை இல்லை. நமது நிலத்தில் கிடைப்பவற்றை உண்போம், வானில் இருந்து இறங்கும் ஆற்றல் பெற்று வளர்வோம்!

- திரும்புவோம்...