Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 18

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 18
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 18

ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 18

ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி

Published:Updated:
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 18
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 18
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 18

`ஏன்?' எனக் கேட்பது உயிரின் இயல்பு. ஒவ்வொரு செயலைச் செய்யும் முன்னரும், ‘இதை ஏன் செய்ய வேண்டும்?’ எனக் கேட்பவர் அந்தச் செயலைப் புரிந்துகொள்கிறார். அதன் பின்னர், அந்தச் செயலை அவர் சிறப்பாகச் செய்கிறார் அல்லது முற்றிலும் அதை நிராகரிக்கிறார். ஆனால், ஏன் செய்கிறோம் என்றே தெரியாமல் செய்யப்படும் எல்லா செயல்களும் பாவங்களின் குவியல்தான்!

காடுகளில் மேயும் மாடுகளைப் பாருங்கள். பலவகையான புற்கள், செடிகள், கொடிகள், புதர்ச்செடிகள் இருக்கும் காட்டில், அவை எல்லாவற்றையும் மேய்கின்றன. வயிறு நிரம்பினால் போதும் என்ற சிந்தனையில், ஒரே இடத்தில் இருக்கும் ஒரே வகையான தாவரத்தை அவை மேய்வதே இல்லை. ஏனெனில், அந்தக் காட்டில் முளைத்துள்ள பலவகையான செடிகளும் கொடிகளும் தமக்கான சரிவிகிதமான உணவுகள் மற்றும் மருந்துகள் என்ற புரிதல் அவற்றுக்கு உண்டு. எல்லா கால்நடைகளும் இவ்வாறுதான் நடந்துகொள் கின்றன. எளிதில் கிடைக்கிறது என்பதற்காக, ஒரே வகையான தீவனத்தை அவை உட்கொள்வதே இல்லை. அலைந்து திரிந்து விதவிதமான தாவரங்களை உண்பதுதான் தாவர உண்ணிகளின் குணம். அதனால்தான் காட்டில் மேயும் கால்நடைகளுக்கும் விலங்குகளுக்கும் கால்நடை மருத்துவர்கள் தேவைப்படுவதே இல்லை. இந்தக் காரணத்தினால் தான் காட்டில் திரியும் கால்நடைகள், பண்ணைகளில் வளர்க்கப்படும் கால்நடை களைக் காட்டிலும் பல மடங்கு வலுவாக உள்ளன.

காட்டில் மேயும் மாடுகளைக் கட்டிவைத்து தீவனம் மட்டும் போட்டால், அந்தத் தீவனத்தை அவை மிகக் குறைவாக உண்கின்றன. வேறு வழியே இல்லை, இந்தத் தீவனத்தைத்தான் உண்ண வேண்டும் என்ற நிலையை உருவாக்கினால், சற்று கூடுதலாக உட்கொள்கின்றன. புத்தம்புதிதாக ஓர் உணவுப் பழக்கம் அறிமுகமானால், மற்ற உயிரினங்கள் உடனடியாக ஏற்பது இல்லை. இயன்றவரை அந்த உணவுகளை நிராகரிக்கின்றன. காரணம், `இதை ஏன் நான் உண்ண வேண்டும்?’ என்ற கேள்வி அவற்றின் உணர்வில் பொதிந்துள்ளது.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 18

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`மனிதர்கள் மட்டும்தான் `ஏன்?’ எனக் கேட்பார்கள். மனிதர்களுக்கு மட்டும்தான் பகுத்தறிவு உள்ளது' என்பது போன்ற கதைகள் கடந்த நூற்றாண்டில் எழுதப்பட்டன. எல்லா உயிரினங்களுக்கும் பகுத்தறிவு உண்டு. மான்கள் மலம் தின்பது இல்லை. முயல்கள், எலிகளை வேட்டையாடுவது இல்லை. மூத்திர நாற்றம் அடிக்கும் வைக்கோலை மாடுகள் மேய்வது இல்லை. வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட இனிப்புகளை, எறும்புகள் சீண்டுவது இல்லை. கிடைக்கும் எல்லா மரங்களிலும் தூக்கணாங்குருவிகள் கூடு கட்டுவது இல்லை. ஒவ்வோர் உயிரினமும் தமக்கு எது தேவை, எது தேவை இல்லை என்பதை நன்கு பகுத்தறிந்துதான் வாழ்கிறது. யானைகளின் பகுத்தறிவைக் கண்டு, எல்லா விலங்கியலாளர்களும் வியக்கிறார்கள். நாய்களின் பகுத்தறிவு எவ்வளவு மேன்மையானது என்பது, நாய் வளர்ப்போர் அனைவருக்கும் தெரியும்.

மனிதகுலம் மட்டும் ஏன் துன்பங்களில் சிக்குகிறது... நோய்வாய்ப்படுகிறது என்றால், ‘ஏன்?’ என்ற கேள்வியைக் கேட்காத உயிரினமாக மனிதர்கள் மாறிப்போனதுதான் என்பது என் எண்ணம்.
உங்கள் வீட்டில் உள்ள சிறுவர்களுக்கான தின்பண்டங்கள் மற்றும் ஊட்டச்சத்துப் பொருட்களை எடுத்துப் பாருங்கள். அவற்றில் என்னென்னவோ எழுதப்பட்டுள்ளன. அவை எல்லாம் நன்மை தரக்கூடியவை என நினைக்கிறீர்கள்.

புரதம் (Protein) எனும் ஒரு சத்துப்பொருளை முதலில் அறிந்துகொள்வோம். `இதில் புரதம் உள்ளது’ என்ற வாசகம் உங்களுக்குப் பிடித்தமானது. அந்தப் பொருளில் உள்ள புரதம் உண்மையில் எங்கு இருந்து எடுக்கப்பட்டது என உங்களுக்குத் தெரியுமா? அதில் உள்ள புரதத்தின் அளவு உங்கள் குழந்தைக்குக் கூடுதலானதா... குறைவானதா எனத் தெரியுமா? எல்லாவற்றுக்கும் மேலாக, உங்கள் குழந்தை புரதக் குறைபாட்டால் அவதிப்படுகிறதா? `ஆம்' என்றால், புரதத்தை வழங்கக்கூடிய உணவுகள் நம்மிடம் இல்லை என நினைக்கிறீர்களா? உங்கள் குழந்தையின் உடலில் புரதக் குறைபாடு இல்லை என்றால், நீங்கள் வழங்கும் அந்த உணவு / தின்பண்டத்தில் உள்ள புரதம் குழந்தையின் உடலில் செய்யப் போகும் தீவினைகளைப் பற்றி அறிந்திருக்கிறீர்களா?

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 18
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 18

இவை எல்லாம் மனிதராகப் பிறந்த நாம் எழுப்பவேண்டிய கேள்விகள். இவ்வாறான கேள்விகளை எழுப்புவதும், இவற்றுக்கான விடை கிடைக்காவிட்டால் அந்தப் பொருட்களை நிராகரிப்பதும்தான் உண்மையான பகுத்தறிவு. `நவீன அறிவியல் மேதைகள் எதைச் சொன்னாலும் அது சரியானதுதான்’ என நம்புவது மூடநம்பிக்கை.

குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் தின்பண்டங்களில் நிகழும் ஊட்டச்சத்து விளையாட்டுக்களின் ஆபத்துக்களில் வெகுசிலவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

உடல் இயக்கத்துக்குத் துணை புரியும் அமிலங்களில் அமினோ அமிலம் (Amino Acid)என்பது ஒருவகை. ஏறத்தாழ 500 வகையான அமினோ அமிலங்களை இதுவரை நவீனர்கள் கண்டறிந்துள்ளனர். அவற்றில் வெகுசில வகைகள் மட்டும் மனித உடலில் உள்ளன. அமினோ அமிலங்களின் ஒரு வகையான கூட்டுச் சேர்க்கைதான் புரதம் எனும் சத்து. இந்த அமினோ அமிலக் கூட்டு, பல்லியில் உண்டு; பாம்புகளிலும் உண்டு. இந்தப் புரதச்சத்து கரப்பான் பூச்சியில் உண்டு; நத்தையிலும் உண்டு.

குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உணவுகளில் / தின்பண்டங்களில் கலக்கப்படும் புரதம், எந்த வகை உயிரினங்களில் இருந்து எடுக்கப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா! புரதம் என்பது, தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் செயற்கைப் பொருள் அல்ல; உயிருள்ள ஊட்டச்சத்து. புரதத்தின் மூலக்கூறுகளில் உள்ள அமினோ அமிலங்கள் மனித உடல் இயக்கத்துக்கு அடிப்படையானவை. `பிராய்லர் கோழியில் அதிகப் புரதம் உள்ளது’ என்று தொடர்ந்து விளம்பரம் செய்யப்படுகிறது. பிராய்லர் கோழியில் உள்ள புரதம், அந்தக் கோழியின் உடலை வெறும் 33 நாட்களில் பருமனாக்கிவிடுவதற்கான மூலக்கூறுகளைக் கொண்டது. அந்தப் புரதம் மனிதர்கள் உடலில் சேர்ந்தால், அதன் மூலக்கூறுகளில் நிகழும் மாற்றங்களை இதுவரை முழுமையாக அளந்தவர் எவரும் இல்லை. ஆனால், மேலைநாடுகளில் இவ்வாறான இறைச்சிகளை அதிகம் உண்போர், மிகவும் பெருத்து, கனத்த உடல்களுடன் அவதிப்படுவதைக் காண்கிறோம்.

சுண்ணாம்புச்சத்து (Calcium) என்ற பெயரில் கலக்கப்படும் பொருட்களைப் பற்றியும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். நரம்புகளின் இயக்கம், மூளை நரம்புகளின் வழியாகக் கடத்தப்படும் செய்தித் தொடர்புகள், கருப்பையில் கரு தங்குவதற்கான சூழல் ஆகியவற்றை சுண்ணாம்புச் சத்தின் ஒருவகை தீர்மானிக்கிறது. சுண்ணாம்புச்சத்துக்கள் மூன்று வகைகளில் கிடைக்கின்றன... கால்சியம் கார்பனேட், கால்சியம் பாஸ்பேட், கால்சியம் சிட்ரேட் ஆகியவை. இவற்றில் முதல் வகையான கால்சியம் கார்பனேட்தான் மிக அதிக அளவில் கிடைக்கிறது. சிப்பிகள், நத்தை ஓடுகள் போன்றவற்றில் இருந்தும் இன்னபிற உயிரினங்களின் உடல் உறுப்புகளில் இருந்தும் கால்சியம் கார்பனேட் உறிஞ்சப்படுகிறது. இந்தப் பொருளைச் சுத்திகரிப்பு செய்துதான் உணவில் கலக்க வேண்டும் என்பது, உலகெங்கும் உள்ள நல அமைப்புகள் வகுத்துள்ள விதி.

நன்கு சுத்திகரிக்கப்பட்ட சத்துதான் கால்சியம் சிட்ரேட். ஓரளவுக்குச் சுத்திகரிக்கப்பட்டது கால்சியம் பாஸ்பேட்.

நீங்கள் வாங்கும் தின்பண்டங்கள் மற்றும் உணவுகளில் உள்ள சுண்ணாம்புச்சத்து மேற்கண்ட வற்றில் எந்த வகையைச் சேர்ந்தது என உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், `சுண்ணாம்புச்சத்து இருந்தால்தான் குழந்தையால் நன்கு வளர முடியும்’ என்ற பரப்புரையை நீங்கள் நன்கு அறிவீர்கள். கால்சியம் கார்பனேட் எனும் வகை, மிகவும் விலை குறைவாகக் கிடைக்கிறது. ஆகவே, சுத்திகரிக்கப்படாத நிலையில் உள்ள இந்தச் சுண்ணாம்புச்சத்தை, தின்பண்டங்கள் மற்றும் உணவுப் பொருட்களில் கலப்பது பரவலாக உள்ள நடைமுறை.

‘ஒரு வேளைக்கு 500 மில்லிகிராம் சுண்ணாம்புச்சத்து மட்டும்தான் மனித உடலில் சேர வேண்டும். அதற்கும் கூடுதலாகச் சேர்ந்தால் மோசமான விளைவுகள் உருவாகும்’ என்பது நவீன மருத்துவத் துறையின் அறிவிப்பு.

நீங்கள் வாரி வழங்கும் பொருட்களில் எவ்வளவு சுண்ணாம்புச்சத்து உள்ளது எனப் பார்க்கிறீர்களா? 500 மில்லிகிராம் மட்டுமே உள்ள பொருளை, உங்கள் பிள்ளை சாப்பிடுவதாக வைத்துக் கொள்வோம். அதே தின்பண்டத்தை/உணவை அன்றாடம் சாப்பிட்டால், அந்தக் குழந்தையின் உடலில் சேரும் சுண்ணாம்புச்சத்தின் அளவை எப்படிக் கண்காணிக்க முடியும்?

ஒரு பொருளில் மட்டும் ஊட்டச்சத்துக்கள் இருந்தால், அதைத் தவிர்க்கலாம். இப்போதைய சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கான உணவுகளிலும் தின்பண்டங்களிலும் ஊட்டச்சத்துக்களின் பெயர்கள் நீக்கமற நிறைந்துள்ளன. இவ்வளவு பொருட்களில் இருந்தும் குழந்தைகளின் உடலில் சேகரமாகும் சுண்ணாம்பும் புரதமும் மற்ற சத்துக்களும் என்னென்ன விளைவுகளை உருவாக்கும் என்பதை நவீன மேதைகள் கண்டுகொள்வதே இல்லை. நமக்கு பகுத்தறிவு உள்ளது. நாம்தான் இவற்றைப் பற்றிய கேள்விகளை எழுப்ப வேண்டும். எல்லா உயிரினங்களும் படைப்பின் விதிகளை எவ்வாறு புரிந்துகொண்டு வாழ்கின்றனவோ, அதேபோல நாமும் வாழவேண்டும்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 18

சுண்ணாம்புச்சத்தும் புரதமும் மிகுந்த உடல்கள்தான் இப்போது பெருகியுள்ளன. கால்சியம் கார்பனேட் வகை சுண்ணாம்புச்சத்து, நீரில் எளிதாகக் கரையாது. இந்தச் சத்தை உணவிலும் தின்பண்டங்களிலும் கலந்தால், அவற்றைச் சாப்பிடும் பிள்ளைகளுக்கு, சிறுநீரக நோய்களும் கல்லீரல் தொல்லைகளும் மிகும். இந்த இரு உறுப்புகளும் சீரழியத் தொடங்கினால், பிள்ளையின் உடல் நலிவுற்று, நோய் எதிர்ப்பாற்றல் குறையும்.

நாம் நன்றாக வாழ்ந்த காலம் இருந்தது. அதிரசம், முறுக்கு, சீடை, தட்டை, சுழியம், கொழுக்கட்டை வகைகள், புட்டு வகைகள், எள் உருண்டை, கடலை உருண்டை, இலந்தை அடை, நெய்விளங்கா, கெட்டி உருண்டை உள்ளிட்ட பலகாரங்களும் உணவுகளும் நம்மிடம் கொட்டிக்கிடந்த காலம் அது. இயற்கையான முறையில் விளைந்த தானியங்களும் பயிர்களும் அப்போது நம்மிடம் இருந்தன. இயற்கையான முறையில் எண்ணெய் ஆட்டும் செக்குகள் இருந்தன.

எந்தப் பருவத்தில் என்ன வகையான தின்பண்டங்களை உண்ண வேண்டும் என்ற முறையைக் கடைப்பிடிக்கத் தெரிந்த முன்னோடிகள் நம்முடன் வாழ்ந்தார்கள்.

`பருவம் எய்தாச் சிறுமிகள் எள்ளில் செய்த பலகாரங்களை அதிகம் உண்ணக் கூடாது. செரிமானம் குறைவாக உள்ள பிள்ளைகள் கெட்டி உருண்டையும் கடலை உருண்டையும் அதிகம் தின்னக் கூடாது’ என்பது போன்ற அறிவுரைகளை, அந்த முன்னோடிகள் வழங்கினார்கள்.

அந்தக் காலத்தில் நம்மிடம் தின்பண்டங்களுக்கான நிறுவனங்கள் இல்லை. ஊட்டச்சத்துக்களுக்கான வணிக மருத்துவர்கள் இல்லை. அந்தக் காலத்தில் நம் பிள்ளைகள் சேற்றில் இறங்கி ஆடினார்கள்; மழையில் நனைந்தார்கள்; வெயிலில் அலைந்தார்கள். நோய்களும் இல்லை.

நீங்கள் விரும்பினால், அந்தக் காலத்தை மீட்டெடுக்க இயலும். இந்தச் சூழ்நிலையில் எனக்குத் தெரிந்த வழிகள் இரண்டு. ஒன்று, நவீன ஊட்டச்சத்து வல்லுநர்களிடம் கேள்விகளை எழுப்பி, தெளிவு பெறுவது. இன்னொன்று, நன்றாக வாழ்ந்த காலத்தை நோக்கிப் பயணிப்பது. உங்களுக்குப் பகுத்தறிவு உள்ளது. நீங்களே சுயமாக முடிவு எடுக்கலாம்.

- திரும்புவோம்...