Published:Updated:

கலைடாஸ்கோப் - 62

கலைடாஸ்கோப் - 62
பிரீமியம் ஸ்டோரி
கலைடாஸ்கோப் - 62

எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

கலைடாஸ்கோப் - 62

எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

Published:Updated:
கலைடாஸ்கோப் - 62
பிரீமியம் ஸ்டோரி
கலைடாஸ்கோப் - 62
கலைடாஸ்கோப் - 62

ஃப்ரீ

``டாக்டர், எனக்கு எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுது” என்றான் தியாகராயன்.

“அதுக்கு நீங்க கண் மருத்துவரைத்தானே பார்க்கணும். நான் உளவியல் மருத்துவர்” என்றபடி அவரை விசித்திரமாகப் பார்த்தார் டாக்டர்.

“கண் டாக்டரைப் பார்த்துட்டேன். `கண்கள்ல எந்தப் பிரச்னையும் இல்லை'னு சொன்னவர், உங்களைப் பார்க்கச் சொன்னார்” என்றார் தியாகராயன்.

“ஓ.கே... பார்த்துடலாம்.”

ரிசல்ட்டுகளை ஆராய்ந்தபடி டாக்டர் சொன்னார், “இங்கே பாருங்க தியாகராயன், உங்க மூளையை அலசி ஆராய்ஞ்சுட்டேன். உங்களுக்கு வந்திருக்கிறது புதுப் பிரச்னை.”

“என்ன டாக்டர் சொல்றீங்க?” என்று அதிர்ச்சி காட்டினான்.

“இது தீபாவளி சீஸன் இல்லையா!”

“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் டாக்டர்?”

“இருக்கு. `ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம்’ போன்ற ஆஃபர் விளம்பரங்களை தொடர்ந்து அளவுக்கு அதிகமா பார்த்திருக்கீங்க. அது உங்க மூளையை பாதிச்சு, இப்போ எல்லாமே ரெண்டு ரெண்டா தெரிய ஆரம்பிச்சிருக்கு. நான்கூட இப்போ ரெண்டா தெரிவேனே..!” என்றார் டாக்டர்.

``ஆமா டாக்டர். இதுக்கு ட்ரீட்மென்ட் இருக்குல்ல?” என்றான் தியாகராயன்.

“இருக்கு. இதோ இந்த ரெண்டு மாத்திரைகளை எழுதித் தர்றேன். நேரா மருந்துக் கடைக்குப் போய் இதைக் காட்டி, இந்த முதல் மாத்திரையை மட்டும் வாங்கிக்கங்க” என்றார் டாக்டர்.

“அப்போ ரெண்டாவது மாத்திரை?”

டாக்டர் தொண்டையைக் கனைத்தபடி சொன்னார், “அது இலவசம். ஒண்ணு வாங்கினா இன்னொண்ணு ஃப்ரீ!”

கலைடாஸ்கோப் - 62

`முடி’சூடிய கலைஞி!

எண்பதுகளின் பெல்ஸ் பாட்டம் காலத்தில், அந்தக் கால இளைஞர்கள் முன்னந்தலையின் மீது முடியைச் சுருட்டி தூக்கணாங்குருவிக்கூடுபோல வைத்திருப்பார்கள். எல்விஸ் பிரெஸ்லி

கலைடாஸ்கோப் - 62

ஹேர்ஸ்டைலின் எக்குத்தப்பான லோக்கல் வெர்ஷன் அது என நினைக்கிறேன். பிரெஸ்லியைத் தெரியாதவர்கள் அதற்கு வைத்த  பெயர், `குருவிக்கூடு ஹேர்ஸ்டைல்'. ஆனால், ஜப்பானியக் கலைஞர் நாகி நோடா (Nagi noda)-வின் இந்தக் கூந்தல் சிற்பங்களில், குருவிக்கூடு அல்ல விலங்குகளின் காடே இருக்கிறது.

நாகி நோடா, ஒரு டிசைனர்; பாப் ஓவியர்; புகைப்படக்காரர்; விளம்பர இயக்குநர் என்று பன்முகக் கலைஞி. 2008-ம் ஆண்டு இளவயதில் நிகழ்ந்த வாகன விபத்தில் இறந்துபோன அசாத்திய கலைஞரான நாகி நோடாவின் இந்த அனிமல் ஹேர்ஸ்டைல் வரிசை, கலை ஆர்வலர்களால் இன்றும் மறக்க முடியாதது. பதினைந்துக்கும் மேற்பட்ட விளம்பர மாடல்களின் தலைகளில் கூந்தல்களை வாரி சேர்த்தும் பின்னியும் இவர் உருவாக்கிய படைப்புகள் ஏராளம்.

கலைடாஸ்கோப் - 62

`தலைவாரினால் படியவே மாட்டேங்குது' என நாம் சலித்துக்கொள்வோம். ஆனால், `நாகி இவ்வளவு நுட்பமாக விலங்குகளைப் பின்னியிருப்பது எப்படி?' என யோசித்தால் மலைப்பாக இருக்கிறது. நாகி நோடா, ஒரு `முடி’சூடிய கலைஞி!

கலைடாஸ்கோப் - 62

கிணறு

``கிணற்றைக் காணோம்” என்று வடிவேலு கலாய்த்தது ஜோக் அல்ல, உண்மை. முன்னர் எல்லாம் ஊரில் பெரும்பாலான வீட்டில் கிணறு இருந்தது. பஞ்சாயத்துக் கிணறு மட்டும் அல்ல, வீடுகளில் இருந்த கிணறுகள்கூட பொதுவுடைமையாகத்தான் இருந்தது. கிணறு இல்லாதவர்கள் பக்கத்து வீட்டில் சென்று நீர் எடுத்துக்கொள்வார்கள். கிணற்றடி என்பது, அம்மாக்களும் அத்தைகளும் ஊர்க்கதை பேசவும் ரகசியங்களைப் பங்குவைக்கவும் கிடைக்கும் வெளி.

எங்கள் விளவங்கோடு பக்கம் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்க, முன்னர் எல்லாம் பாக்குமட்டைகளால் செய்த `பாளை’களைப் பயன்படுத்துவார்கள். சிறிது நாட்களில் மக்கிப்போகும். அவற்றை, தாத்தாக்களே கைப்பட செய்து கொடுப்பார்கள். இரும்பில் வாளி வாங்குபவர்கள் ஊரில் வசதியானவர்களாக இருப்பார்கள். கப்பிகளில் கயிற்றை விட்டு கிணற்றில் இருந்து தண்ணீர் இறைப்பது சிறுவர்களுக்கு நீர் விளையாட்டு. சில நேரம் கயிறு அறுந்து வாளியோ, பாளையோ கிணற்றுக்குள் மூழ்கிவிடும். அதை எடுக்க, ஊரில் ஏதேனும் ஒரு வீட்டில்தான் `பாதாளக் கரண்டி’ இருக்கும். பெயரே சிந்துபாத் கதையில் வருவதுபோல் இருக்கிறது அல்லவா! கப்பல் நங்கூரம்போல நான்கு பக்கங்களிலும் கொழுவிகள் இருக்கும் ஓர் இரும்பு சாதனம். அதை கயிற்றில் கட்டி தண்ணீருக்குள் விட்டு குத்துமதிப்பாகத் துழாவி, அறுந்த வாளியை மிச்சக் கயிறுடன் வெளியே எடுப்பது சுவராஸ்யமாக இருக்கும்.

இன்று ஊரில் பெரும்பாலும் போர் போட்டு தண்ணீரை மொட்டைமாடி டேங்கில் ஏற்றுகிறார்கள். பஞ்சாயத்துத் தண்ணீர் கனெக்‌ஷன் வீட்டுக்கே வந்துவிட்டது. கதை பேசிக்கொண்டே நீர் இறைக்க யாரும் இல்லை. கிணறுகளே பெரும்பாலும் இல்லை. பாழுங்கிணறாக இருள் சூழ்ந்து கிடக்கிறது. பழங்கதையில் வந்த ஒரு சொல்லாக அது எஞ்சிவிட்டது.

கலைடாஸ்கோப் - 62

நடனம்

ஆதிபரன் ஆட அங்கை கனலாட
ஓதுஞ்சடை யாட உன்மத்த முற்றாட
பாதிமதி யாட பாரண்ட மீதாட
நாதமோ டாடினான் நாதந்த நட்டமே

- திருமூலர்


இசை பற்றி நிறைய எழுதுகிறோம். ஆனால், நடனக் கலை பற்றி தமிழில் படிக்க, குறைவாகவே கிடைக்கிறது. நட‌னக் கலையின் வரலாறு பற்றி தேடும்போது, `நடனம் எப்போது தோன்றியது என்பதை ஊகிக்க இயலவில்லை' என்பதே பதிலாக இருக்கிறது. பிரபஞ்சத்தின் இயக்கத்தையே மாபெரும் நடனமாக உருவகித்துக்கொள்ளும் மரபு நம்முடையது. நடராஜரின் ஆடலை, அணுவின் ஆற்றல் நடனத்தோடு ஒப்பிட்டார் விஞ்ஞானி பிரிட்ஜாப் காப்ரா. தேகத்தை, பிரபஞ்சத்தோடு ஒப்பிடுகிறது கீழை மரபு. நடனக் கலை தேகத்தையே ஊடகமாகக்கொண்ட கலை.

பழங்குடி சடங்குகளின் நடனம், இன்றும் நம் கிராமங்களில் இசக்கி அம்மனாகவும் சுடலைமாடனாகவும் பல உடல்களின் வழியாக நூற்றாண்டுகளைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. ஆழ்மனம், நடனம் வழியே வெளிப்பாடுகொள்ளும் தருணங்கள் அவை.

 `வால்இழையார் வினைமுடிய வேலனொடு வெறியாடின்று.'

கலைடாஸ்கோப் - 62

ஆநிரை கவரச் செல்லும் வெட்சி மறவர்களின் வெற்றி வேண்டி மறத்தியர்கள் வள்ளி வேடமிட்டு ஆடும் வெறியாட்டு பற்றி, சங்க இலக்கியத்தில் உள்ள ஒரு பாடல் வரி இது. தலைவியின் உளவருத்தம் போக்கவும் வேலன் வெறியாட்டு நடத்துவதாக சில பாடல்கள் குறிப்பிடுகின்றன.

இன்றும் சேனல்களில் விதவிதமான நடன நிகழ்ச்சிகள் பார்க்கிறோம். ஜட்ஜுகள் `மைண்ட் புளோயிங்' அல்லது `இன்னும் கொஞ்சம் வளைச்சு நெளிச்சு ஆடியிருக்கலாம்' என்றபடி மார்க் போடுகிறார்கள். நம் மரபில் இருந்த நடன வகைகள் பற்றி ஏற்கெனவே கலைடாஸ்கோப்பில் ஒரு பட்டியல் கொடுத்திருந்தேன். நடனம் பற்றி இன்னும் கொஞ்சம் சீரியஸாக யாராவது எழுதலாம்.

கலைடாஸ்கோப் - 62

டூத் பிக்

பேலியோ டயட் பற்றி எங்கும் பேசுகிறார்கள். `கண்டபடி நான்வெஜ் வெட்டலாம்' எனச் சொல்கிறார்கள். இதனால் டூத் பிக் தயாரிப்பாளர்களுக்குக் கொண்டாட்டம்தான்போல. வெஜிடேரியன்கள் கோபித்துக்கொள்ளக் கூடாது பேலியோவில் காய்கறிகளும் அடக்கம். என்ன... `ஆதிமனிதன் சாப்பிட்ட உணவுகள்' என்கிறார்கள். நாம் டூத் பிக் ஆதியைப் பார்க்கலாம்.

நம்ம ஆட்கள், ஈர்க்குச்சிகளிலேயே காரியத்தை முடித்திருப்பார்கள். சிலர் பல் குத்துவதைப் பார்த்தால், ஆயக்கலைகள் அறுபத்துநான்கில் இதுவும் அடக்கம் என்பதுபோல் இருக்கும். இன்று டூத் பிக்குகள் கடைகளில் பேக்கேஜாகக் கிடைக்கின்றன. மூங்கில் போன்ற மரங்களைப் பொடிசாக நறுக்கி, இரு முனைகளையும் கூர்மையாக்கி வைத்திருக்கிறார்கள். நியாண்டர்தால்கள்கூட பல்லைச் சுத்தப்படுத்தி இருக்கிறார்கள் என்று பற்களின் படிவத்தை ஆராய்ந்து `விளக்கு’கிறார்கள்.

`17-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உலோகத்தில் செய்த பல்குச்சிகள், வேலைப்பாடுகளுடன் ஆபரணங்களைப்போல சொகுசு சாதனமாக இருந்தன' என்கிறது ஒரு குறிப்பு. 1869-ல் மார்க் சிக்னோரல்லோ என்பவர், இந்த டூத் பிக்குக்கான பேடன்ட் வாங்கி இருக்கிறார். ஆனால், `அதைப் பரவலான மார்க்கெட்டுக்கு எடுத்துச் சென்று விற்பனையில் சாதனை படைத்த கில்லாடி!' என்று சார்லஸ் ஃபார்ஸ்டர் என்பவரைச் சொல்கிறார்கள். `பல்’லே பாண்டியன்போல..!