Published:Updated:

நீ... நான்... நாம்... வாழவே!

நீ... நான்... நாம்... வாழவே!
பிரீமியம் ஸ்டோரி
நீ... நான்... நாம்... வாழவே!

பா.விஜயலட்சுமி, ஓவியம்: பிரேம் டாவின்ஸி

நீ... நான்... நாம்... வாழவே!

பா.விஜயலட்சுமி, ஓவியம்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
நீ... நான்... நாம்... வாழவே!
பிரீமியம் ஸ்டோரி
நீ... நான்... நாம்... வாழவே!
நீ... நான்... நாம்... வாழவே!

`என் காதல் உண்மையானது. என்னுடைய இந்த முடிவுக்கு, யாரும் காரணம் அல்ல.'

`என் அப்பா-அம்மாவே என்னைப் புரிந்துகொள்ளவில்லை. அதனால் இந்த உலகத்தைவிட்டே போகிறேன்.'

`வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. குடும்பத்துடன் சாவதைத் தவிர, எங்களுக்கு வேறு வழியே இல்லை'

  தற்கொலைச் செய்திகள், தினம் தினம் நம்மைக் கடந்துகொண்டே இருக்கின்றன.

தமிழகத்தில் மட்டும் தினமும் 44 பேர், தங்கள் உயிரை தாங்களே பறித்துக்கொள்கிறார்கள். இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் தற்கொலை செய்பவர்களின் பட்டியலில், தமிழகம்தான் முதல் இரண்டு இடங்களுக்கு போட்டிபோடுகிறது.

உலகிலேயே இந்தியாவில்தான் அதிக அளவிலான தற்கொலைகள் நிகழ்கின்றன. `தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் முடிவுகளின்படி, வருடந்தோறும் இந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை 1,35,000. குளோபல் ஹெல்த் எஸ்டிமேட்டின்படி, இந்த எண்ணிக்கை 2,45,000 என்கிறார்கள். இதில் 40 சதவிகிதத் தற்கொலைகள், 30 வயதுக்கு உள்ளிட்டவர்களால் மேற்கொள்ளப்படுகின்றன.

`புரிந்துகொள்ள முடியாத மனச்சிக்கல்களால் எடுக்கப்படும் முடிவே தற்கொலை' என்கிறார்கள் உளவியலாளர்கள். மன அழுத்தம், குடும்பப் பிரச்னைகள், மருத்துவப் பிரச்னைகள், கடன் தொல்லை, அளவுக்கு மீறிய போதை... என தற்கொலைக்கு இதுதான் காரணம் என்று எதுவும் இல்லை. எந்தக் காரணமும் இன்றி திடீரென தற்கொலை முடிவை நாடுபவர்களும் அதிகம் என்பதுதான் அதிர்ச்சித் தகவல்.

``தற்கொலைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, தீராத மன அழுத்தம். இன்னொன்று க்ளினிக்கல் டிப்ரஷன். க்ளினிக்கல் டிப்ரஷனுக்கு உதாரணம், ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸின் மரணம். எத்தனையோ பேரைச் சிரிக்கவைத்தவர் தற்கொலை செய்துகொள்ளக் காரணம், அவரது மூளையில் டிப்ரஷனைத் தூண்டக்கூடிய நொதிகள் அதிக அளவில் சுரந்ததுதான்.

இதைத் தாண்டி 97 சதவிகிதத் தற்கொலைகள், தீராத மன அழுத்தத்தால்தான் ஏற்படுகின்றன. அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை சரியாக எதிர்கொள்ள முடியாமல், மனதை வழிநடத்தக்கூடிய பக்குவம் இல்லாத நிலையில்தான் இந்தத் தற்கொலை முடிவுகள் எடுக்கப்படுகின்றன. சிறிய காயம் பட்டால்கூட அதற்கு உடனடியாக மருந்து போட்டு சரிசெய்ய முயலும் நாம், மனதில் ஏற்படும் வலிகளைத் தீர்க்க ஏன் முயற்சிப்பது இல்லை?

டீன்ஏஜ் பிள்ளைகளின் நிலையோ, இன்னும் பரிதாபம். 13-18 வயதில், யோசிப்பதற்கான கால அவகாசமோ, பின்விளைவுகள் குறித்த தெளிவோ இருக்காது. ஒரு நிமிடத்தில் ‘ஏன் வாழணும்?’ எனத் திடீரென ஓர் எண்ணம் இடறினால் உடனடியாக அதை நிறைவேற்றி விடுவார்கள். சோகமான நினைவுகளில் மூழ்கி, அதில் இருந்து வெளியே வர முடிந்தாலும் வெளியே வராமல், மாதக்கணக்கில் அதிலேயே உழன்று தற்கொலைப் பாதையில் செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

இதில் க்ளினிக்கல் டிப்ரஷனுக்கு மட்டுமே மருத்துவர்களின் ஆலோசனையும் மருந்துகளும் தேவை. எதிர்காலம் பற்றிய புரிதலை ஏற்படுத்தினாலே, தற்கொலை எண்ணங்களில் இருந்து மனம் மாறும். வாழ்க்கை குறித்த தெளிவான பார்வையை, உரையாடல்கள் மூலம் பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். வருத்தமான மனநிலையில் அழுது தீர்க்க முடிந்த நம்மால், அதில் இருந்து வெளிவரும் வழியையும் கண்டுபிடிக்கத் தெரிந்திருக்க வேண்டும்'' என்கிறார் தனியார் மன ஆளுமை வழிகாட்டி நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி கீர்த்தன்யா.

``எங்களுக்கு இண்டு பெண் குழந்தைகள்.அவங்களுக்கு நல்ல ஸ்கூல்ல மிகச்சிறந்த கல்வியைக் கொடுக்கணும்கிறதுலதான் எங்க கவனம் இருந்தது. `படி... படி...'னு டார்ச்சர் பண்றது இல்லைங்கிறதால, அவங்க சந்தோஷமா இருக்காங்கனு நாங்களாவே நினைச்சுக்கிட்டோம். அவங்க கேட்ட எல்லாத்தையும் வாங்கித் தரணும்கிற எண்ணத்துல அவங்களோடு நேரம் செலவிடாம, எப்பவும் வேலை... வேலைனு இருந்துட்டோம். அவங்களுக்கு என்ன பிரச்னைனு கேட்காமவிட்டதால், இப்போ எங்க ரெண்டு பெண் குழந்தைகளையும் இழந்துட்டு தவிக்கிறோம்'' என, கண்ணீரோடு பேசுகிறார்கள் பிரபாகரன் - சொர்ணலட்சுமி தம்பதி.

``பெரியவள் சுபா, சின்னவள் பெயர் சுபத்ரா. ரெண்டு குழந்தைகளுக்குமே படிப்பு, டிரெஸ்னு எதுலயுமே குறைவைச்சது இல்லை. நான் பிசினஸ் செஞ்சிட்டு இருந்ததால், வேலை... வேலை...னு ஓடிட்டே இருப்பேன். அவளோட அம்மாவும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்ததால் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க முடியலை. ரெண்டு பொண்ணுங்களுக்கும்  மூணு வயசுதான் வித்தியாசம்கிறதால் நண்பர்கள் மாதிரியேதான் சுத்துவாங்க. ஸ்கூல் முடிஞ்சு கல்லூரிக்குப் போன பிறகு, நல்லா படிச்சுட்டு இருந்த பெரியவளோட கவனம், மூன்றாவது வருஷத்துல குறைய ஆரம்பித்தது. நிறைய அரியர்ஸ் வைக்க ஆரம்பிச்சா. `அரியர்ஸ் எல்லாம் கல்லூரிப் படிப்பில் சகஜம்'னு, அதை நாங்க பெருசா எடுத்துக்கலை. பொங்கல் பண்டிகைக்காக ரெண்டு பேரும் கேட்ட டிரெஸ் எல்லாம் ரொம்ப சந்தோஷமா எடுத்துட்டு வந்தோம். ராத்திரி தூங்கிட்டு காலையில் எழுந்து பார்த்தப்போ, எங்க ரெண்டு பொண்ணுங்களுமே உயிரோடு இல்லைங்க’' என்று அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் பிரபாகரன் கதறி அழ, சொர்ணலட்சுமி தொடர்ந்தார்.

தமிழக நகரங்களில் தற்கொலைகள் (2014)

தமிழ்நாட்டில் நடந்த மொத்த தற்கொலைகளின் எண்ணிக்கை 16,122. இதில் ஆண்கள் 10,964 பேர்; பெண்கள் 5,155 பேர்; திருநங்கைகள் 4 பேர்.

(தெளிவாக படிக்க படத்தை க்ளிக் செய்யவும்)

நீ... நான்... நாம்... வாழவே!

ஆதாரம்: தேசியக் குற்ற ஆவணக் காப்பகம்
இன்ஃபோகிராஃபிக்ஸ்: ஆரிப் முகம்மது

`‘சுபா காலேஜ்ல ஒரு பையனை விரும்பி இருக்கா. ஆனா, அவன் சுபாவுக்குத் தெரியாம சுபத்ராவையும் விரும்பி இருக்கான். இவங்க ரெண்டு பேருக்கும் நாம ஒருத்தனையேதான் காதலிக்கிறோம்கிற விஷயம் தெரியலை. ஒருகட்டத்தில் இந்தக் கொடுமை சுபாவுக்குத் தெரியவர, கடுமையான மன உளைச்சலிலும், `இப்படி ஒரு அயோக்கியன்கிட்ட தங்கச்சியும் மாட்டிக்கிட்டுத் தவிக்கிறாளே!'ங்கிற ஸ்ட்ரெஸ்ஸும் சேர்ந்து அவளை அரிச்சிருக்கு. சுபத்ராவிடம் இதுபற்றிப் பேசினதும் அவளுக்கும் பெரிய ஷாக். பிறந்ததில் இருந்தே கைவிடாமத் திரிஞ்சதுங்க. எங்களோடு இருந்ததைவிட, அதுங்க ரெண்டும் ஒண்ணா இருந்ததுதான் அதிகம். ரெண்டு பேரும் அந்தப் பையன்கிட்ட இருந்து விலக ஆரம்பிச்சாங்க. உடனே அந்தப் பாவி அவங்களை மிரட்ட ஆரம்பிச்சிருக்கான். ‘உங்க லட்சணத்தை வீட்ல சொல்லிடுவேன்’னு டார்ச்சர் பண்ணியிருக்கான். எங்க எங்களுக்கு விஷயம் தெரிஞ்சு அவமானமாகிடுமோங்கிற பயத்துல, ரெண்டு பேருமே அன்னைக்கு ஃபுல்லா எங்ககூட சந்தோஷமா இருந்துட்டு, நைட்டு இதை எல்லாம் எழுதிவைச்சுட்டு பாலில் பூச்சி மருந்தைக் கலந்து குடிச்சுட்டிருக்காங்க.

`அவங்களுக்குப் பெருசா ஒண்ணும் பிரச்னை இருக்காது, அவங்களே சமாளிச்சுப்பாங்க. நாமதான் எல்லா தேவைகளையும் பண்ணிக்கொடுத்துடுறோமே'னு அலட்சியமா இருந்ததுதான் எங்கள் குழந்தைகள் எங்களைவிட்டுப் போகக் காரணம்'' என்று சோகத்தை வார்த்தைகளுக்குள் விழுங்கும் சொர்ணலட்சுமி, ``இப்படி ஒரு நிலை யாருக்குமே வரக் கூடாதுங்க. அது கொடூரம். இப்போ நாங்க உயிரோடுதான் இருக்கோம். ஆனால், ஒவ்வொரு நிமிடமும் சாவை எதிர்பார்த்துட்டு இருக்கோம்'' என அடக்க முடியாமல் அழுகிறார்.

நீ... நான்... நாம்... வாழவே!

``தற்கொலைகளால் அதிக பாதிப்புக்கு உள்ளாவது குழந்தைகள்தான். கணவன் - மனைவி சண்டைகள் பெரும்பாலும் குழந்தைகள் முன்னிலையில்தான் நடக்கின்றன. தற்கொலை முயற்சிகளை, குழந்தைகளுக்கு பெற்றோரே இலவசமாகக் கற்றுத்தருகிறார்கள். சாதாரணமான குடும்பச் சண்டைகளுக்கு எல்லாம் கத்தியை வைத்து கையை அறுத்துக்கொள்வது, கயிற்றை வைத்து கழுத்தை நெரித்துக்கொள்வது என சினிமாவைத் தாண்டி வீடுகளிலும் நேரடியாகப் பார்க்கும் குழந்தைகளின் மனம் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகிறது.

சமீபத்தில் `சென்னை குரோம்பேட்டையில் 14 வயது சிறுவனை, `செல்போனில் கேம் விளையாடக் கூடாது' எனப் பெற்றோர் கண்டித்ததற்காக குளியல் அறைக்குள் டவலால் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்துகொண்டான்' என்று செய்தி வந்தது. உண்மையில், அந்தச் சிறுவனுக்கு இப்படி உயிரைப் பறித்துக் கொள்ளலாம் என்கிற எண்ணம் எப்படி வந்திருக்கும்? நாம் வேறு யாரையோ பயமுறுத்துவதற்காக `சும்மா'கூட தற்கொலை முயற்சிகளை எடுக்கலாம். ஆனால், இதைப் பார்க்கும் குழந்தைகள் அதைச் செய்யும்போதுதான் அதன் விபரீதம் பெற்றோருக்குப் புரியும்'' என்கிறார் மன நல ஆலோசகர் ரஜினி நந்தகுமார்.

``தமிழகத்தில், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். 42 சதவிகிதம் பேர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார்கள். விஷம் அருந்தி தற்கொலை செய்துகொள்பவர்கள் 26 சதவிகிதம் பேர். தீ வைத்து தற்கொலை செய்துகொள்பவர்கள் 7 சதவிகிதம் பேர். நீர்நிலைகளில் விழுந்து இறப்பவர்கள் 5.6 சதவிகிதம் பேர்'’ என்கிறார். தமிழகம் முழுவதும் தற்கொலைகள் சம்பந்தமான புள்ளிவிவரங்களைத் திரட்டிவரும் `எவிடன்ஸ்' கதிர்.

 ``14 முதல் 30 வயது வரையிலான காலகட்டம், பெண்களுக்கு மிகக் கடினமானது. தற்கொலைகளைப் பொறுத்தவரை 30 வயது வரையிலான பெண்களின் எண்ணிக்கையே அதிகம் உள்ளது. ஆனால், 30 வயதுக்குப் பிறகு பெண்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவிடும் நிலையில், ஆண்களின் எண்ணிக்கையில் மட்டும் மாறுபாடு ஏற்படுவது இல்லை. அதற்கான முக்கியக் காரணம், திருமணம் ஆகிவிட்ட பெண்களுக்கு, பெரும்பாலும் குழந்தை, குடும்பம் மீதான பிடிப்பு, அவர்களை தற்கொலை எண்ணத்தில் இருந்து வெளிவரச் செய்துவிடுகிறது'’ என்கிறார் தற்கொலைகள் குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் ‘சிநேகா’அமைப்பின் தலைவரான மருத்துவர் லட்சுமி விஜயகுமார்.

‘`என்னிடம் ஒரு மாணவி வந்தார். படிப்பு, விளையாட்டு, பேச்சுத் திறமை என அவர் ஆல்ரவுண்டர். ஆனால், அவருக்குள் முளைத்த ஒரு காதல் அவரை நொடித்துவிட்டது. `என்னை எல்லாருக்கும் பிடிக்கும். பல  விளையாட்டுக்களை எனக்குச் சொல்லிக்கொடுத்தாங்க. படிக்க சொல்லிக்கொடுத்தாங்க. ஆனா, ஏமாற்றத்தில் இருந்து எப்படி வெளிவருவது என்பதை யாருமே சொல்லிக்கொடுக்கவில்லை' எனக் கதறிவிட்டார். பேர், பணம், படிப்பு, பதவி, புகழ் போன்றவற்றைச் சம்பாதிக்கச் சொல்லிக்கொடுக்கும் நாம், அன்பு, விட்டுக்கொடுத்துப் போகும் தன்மை, பொறுமை, தன்னம்பிக்கை என நற்குணங்களை சரியாகச் சொல்லிக்கொடுக்கத் தவறியதுதான் இன்றைய ஒவ்வொரு தற்கொலைக்கும் காரணம்’' என்கிறார் மருத்துவர் லட்சுமி.

அதிகரித்துக்கொண்டே வரும் தற்கொலைகளின் எண்ணிக்கையும், குடும்ப வாழ்வியல் சிக்கல்களும் நம்மை பயமுறுத்துகின்றன. மனம் திறந்த உரையாடல்களும், வாழ்வின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதும்தான் தற்கொலைகளைத் தடுக்க ஒரே வழி.

நீ... நான்... நாம்... வாழவே!

வேண்டாம் தற்கொலை!

1.    வாழ்க்கையில் ஏற்படும் சின்னச்சின்னப் பிரச்னைகளைச் சமாளிக்கும் திறனை, குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே மனதில் விதைக்கவேண்டியது அவசியம்.

2.    எதிர்பாராத மனக்குழப்பங்கள் ஏற்படும்போது, உங்களது மனதுக்கு நெருக்கமானவர்களிடம் மனம்விட்டுப் பேசுங்கள்.

3.     சோகமான சந்தர்ப்பங்களில் நன்றாகச் சாப்பிடுங்கள். மூளைக்கான சுறுசுறுப்பையும் உடனடி உற்சாகத்தையும் அளிக்க உணவால் மட்டுமே முடியும்.

4.    மனநல மருத்துவரை ஆலோசித்து, மருந்துகள் மூலம் தற்கொலை எண்ணங்களைக் கட்டுப்படுத்த முயற்சிசெய்யுங்கள். ஆரம்பக்கட்ட ஆலோசனைகளும், மன அழுத்தத்துக்கான சிகிச்சைகளும் தற்கொலை நோக்கிய எண்ண மாற்றத்தைத் தவிர்க்க உதவும்.

5. கூடுமானவரையில் தனிமையைத் தவிர்த்துவிடுங்கள். நண்பர்களுடனோ, மனதுக்குப் பிடித்தவர்களுடனோ நேரம் செலவழிக்கத் தொடங்குங்கள்.

6.     உடல்ரீதியான நோய்கள் ஏற்படும்போது அதற்கான உரிய மருத்துவ சிகிச்சைகளைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும். தள்ளிப்போட வேண்டாம்.

7. எப்போதும் மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இழந்துபோன ஒன்றையோ, தவறவிட்ட ஒன்றையோ நினைத்துக்கொண்டே இருக்காமல் அடுத்த இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும்.

8. நண்பர்களோ, உறவினர்களோ தங்களைச் சார்ந்தவர்களின் நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அதைக் கண்டறிவதுடன், அவர்களிடம் மனம்விட்டுப் பேசி காரணத்தைத் தெரிந்துகொள்ள முயற்சிப்பது நல்லது.

9. நேர்மறையான சிந்தனை உடையவர்களுடன் பழகத் தொடங்குங்கள். பிரச்னைகள் வரும்போது எல்லாம் அவற்றைக் கையாள்வதற்கான உத்வேகத்தை நேர்மறையான எண்ணங்கள் உங்களுக்கு கொடுக்கும்.

10. யோகா, உடற்பயிற்சி போன்றவற்றில் தொடர்ச்சியாக ஈடுபடத் தொடங்குங்கள். மனதையும் உடலையும் சமநிலைக்குக் கொண்டுவரும் இதுபோன்ற பயிற்சிகள், தற்கொலை எண்ணம், இயலாமை, சோர்வு ஆகியவற்றையும் தடுக்கக்கூடிய திறன் பெற்றவை.