Published:Updated:

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 11

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 11
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 11

டாக்டர். ஆர்.கார்த்திகேயன், ஓவியம்: காமேடி

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 11

டாக்டர். ஆர்.கார்த்திகேயன், ஓவியம்: காமேடி

Published:Updated:
ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 11
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 11

 #பக்குவம்

சுக்கு, மிளகு, திப்பிலி என்பதுபோல பிச்சுப் பிச்சு வரும் வாட்ஸ்அப் வீடியோக் களின் தொல்லை தாங்க முடியவில்லை. சமீபத்தில் ஒரு போலீஸ்காரர் மாணவிகளிடம் சைபர் கிரைம் பற்றி உரையாற்றியதைக் காண நேர்ந்தது. எதுவும் ரகசியம் அல்ல என எச்சரித்ததும், சில தற்காப்பு நடவடிக்கை களைப் பரிந்துரைத்ததும் சரிதான். ‘உங்கள் மகள், இரவு 9 மணிக்கு மேல் மொபைலில் தனியாகப் பேசினாலே, அவள் கெட்டுப் போகிறாள் எனப் பொருள். 2,000 ரூபாய் போன் போதும். அதற்கு மேல் மொபைல் வாங்கினால், நீங்கள் பிள்ளைகளைக் கெடுக்கிறீர்கள்’ என்றெல்லாம் கொளுத்திப் போட்டார்.

இப்படி parent ego-வில் இருந்து சொல்லும் அறிவுரைகள் எடுபடுவது இல்லை என்பதைவிட, நேர்மாறாக வேலை செய்யும். ‘தள்ளி இரு. குற்றம் நடக்காது’ என்பது பாதி உண்மை. தொழில்நுட்பம் என்னும் ராட்சசனைக் கட்டவிழ்த்து விட்டுவிட்டோம். அதில் இருந்து தள்ளி இருப்பது சாத்தியம் இல்லை. பழகி, பக்குவமாக வழிக்குக் கொண்டுவரத் தெரிதல் முக்கியம். 

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 11

  #ஒழுங்கு

`பெண் படிக்கப் போனாலே, சோரம் போவாள்' என்றார்கள். `இரவு வேளையில் பெண் வேலைக்குப் போனால் அவ்வளவுதான்' என்றார்கள். எல்லா கருத்துக்களையும் மென்று செரித்து எச்சமாக வெளியே தள்ளும் சக்தி, காலத்துக்கு உண்டு.

பெண்ணை `ஒழுங்கு' என்ற பெயரில் ஒடுக்குவதைவிட, அவளை வலிமையாக்குவது முதிர்ச்சியான செயல்.

30 வருடங்களுக்கு முன்னர் பாரதிராஜாவின் `புதுமைப்பெண்' படத்தில் ஒரு பாடல் வரும், `ஓ... ஒரு தென்றல் புயலாகி வருமே...' என்று. ரேவதி ஃப்ரேமுக்கு ஃப்ரேம் பல வேலைகள் செய்து கணவனுக்காகப் போராடுவார். `காலதேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே...' பாடலுக்கு `ஆ... ஆ... ஆ...' என பயங்கரமாக கோரஸ் வரும்.

அப்படி என்ன புரட்சி? ஒரு பெண், வேலைக்குப் போகிறாள். அவ்வளவுதான். இன்று இதைப் பார்த்தால், ‘இது என்ன பெரிய விஷயம்?’ என வேடிக்கையாகத் தோன்றும். ஆனால் அன்று, அது ஓர் உத்வேகப் பாடல்.

20 வருடங்கள் கழித்து, தன் பிள்ளைகளிடம் இப்படித்தான் இன்றைய யுவதி சொல்லிக்கொண்டிருப்பாள். ``யு நோ... அந்தக் காலத்தில ஸ்மார்ட்போன்னு ஒண்ணு இருக்கும். அதை இரவு நேரத்துல எடுத்தாலே எங்க அம்மா அப்படித் திட்டுவாங்க!” பிள்ளைகள் புரியாத ஜந்துவைப்போல் விநோதமாகப் பார்ப்பார்கள்.

  #செங்கிஸ்கான்

“சினிமாப் பாட்டை எங்க வீட்டுக்குள் பாட முடியாது. ஏன்... ரேடியோவுலகூட கேட்க அனுமதி இல்லை. அவ்வளவு ஆச்சாரமான குடும்பம்!” என்பார் என் பழைய பேராசிரியர் ஒருவர். `சினிமா பார்த்தால் கெட்டுப்போவார்கள்' என்பது, நான் வளர்ந்த காலத்தில் அடிக்கடி கேட்டது உண்டு.
“ `நூறாவது நாள்' படம் பார்த்த பிறகுதான் ஒன்பது கொலைகளைச் செய்தேன்!” என்று சொன்ன ஜெயப்பிரகாஷின் வார்த்தைகள் அப்போது மிகப் பிரபலம். சினிமாவால் குற்றங்கள் பெருகுகின்றன என சினிமாவை இடிப்பார்கள். அப்போது எல்லாம் நான் சினிமாவுக்கு வக்காலத்துவாங்கி நிறைய வாக்குவாதம் செய்வது உண்டு.

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 11

`நூறாவது நாள்' படம் பார்த்த அனைவரும் கொலை செய்தார்களா என்ன? ஜெயப்பிரகாஷுக்கு கொலை செய்யும் எண்ணம் இருந்தது. படத்தை ஒரு காரணமாகச் சொன்னான்.

செங்கிஸ்கான், எந்தப் படத்தைப் பார்த்து கொலைகள் செய்தான்? அவன் கொலைகள் புரிய திரைப்படம் தேவைப்படவில்லை.

தொடர்ந்து வன்முறையைப் பார்த்தால், வன்முறை பழகாது? பழகும். நம் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்து நிறையப் பழகிவிட்டோம். நிஜ வாழ்க்கையில், சினிமாவைக் காட்டிலும் வன்முறைகள் பன்மடங்கு அதிகம்.

#உந்துதல்

1971-ம் ஆண்டில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் ஃபிலிப் ஜிம்பார்டோ ஓர் ஆய்வு நடத்தினார். `Stanford Prison Experiment' என அழைக்கப்பட்ட அந்த ஆய்வில், தன் துறை வளாகத்திலேயே ஒரு சிறை போன்ற அரங்கம் அமைத்து, தன் மாணவர்களை இதில் பங்குபெறச் செய்தார். சிலரை சிறைக் கைதிகளாகவும், சிலரை சிறை அதிகாரிகளாகவும் நடிக்கவைத்தார். இது ஆய்வு எனத் தெரிந்து, நடிப்பு எனப் புரிந்து, தக்க வடிகட்டல்களுக்குப் பிறகு தினசரி வருமானத்துடன்தான் மாணவர்களும் பங்குபெற ஒப்புக்கொண்டனர். இரு வார ஆய்வுக்கு, தக்க பயிற்சிக்குப் பிறகுதான் தயாராகின்றனர்.

ஆனால், ஆறாம் நாள் ஆய்வு முடக்கப்பட்டது. நடந்தது என்ன? சிறை அதிகாரிகள் தங்கள் வேடங்களில் ஊறிப்போய் கைதிகளை உடலாலும் மனதாலும் சித்ரவதை செய்ய ஆரம்பிக்கின்றனர். மனஉளைச்சல் காரணமாக இருவர் ஆறாம் நாள் வெளியேற, ஆய்வு நிறுத்தப்பட்டது.

மனித மனதில், குற்றம் செய்ய ஒரு பகுதி தயாராக இருக்கிறது. அதற்கு உள்ளும் புறமும் உந்துதல் வரும்போதுதான் அந்தக் குற்றம் நடைபெறுகிறது. சாதாரண மாணவர்களைக் கொண்டு இந்தச் சிறை ஆய்வு செய்ததையே மனித உரிமை மீறல் என, ஜிம்பார்டோ மீது கடுமையாக ஆட்சேபனை செய்கிறார் கிரிஸ்டினா மேலெச் என்கிற மாணவி. சிறையின் மூத்த அதிகாரியாக இந்த ஆய்வில் பங்குபெற்று குற்றங்கள் நடக்கக் காரணமானவர் யார் தெரியுமா? ஜிம்பார்டோவேதான்!

   #குழு மனம்

மனித மனம், குற்றம் செய்யும் சந்தர்ப்பங் களுக்காகக் காத்திருக்கிறது. அதனால்தான் கூட்டத்தில் அத்துமீற துணிகிறது. இருட்டில் ஆபாசமாக நடந்துகொள்ள வைக்கிறது.

சமூக விரோதிகள் என லேபிள் ஒட்டப்பட்ட ஆள் எவரும் இல்லை. தலைவர்கள் இறந்தாலோ, சிறை சென்றாலோ நடக்கும் வன்முறையில் ஈடுபடுபவர்களில் பலர் எந்தக் கட்சிக்கும் விசுவாசிகள் அல்ல. கிடைத்த சந்தர்ப்பத்தில் தங்கள் குரோத மிருக மனதை வெளியேவிட்டு இளைப்பாறுபவர்கள்.

காவிரிக்காக கர்நாடகத்தில் வெறியாட்டம் போட்டவர்களில், எத்தனை பேர் பாதிக்கப்பட்ட விவசாயிகள்? அது mob behavior எனச் சொல்லப்படும் குழு மனம். அதற்கு சாதி, மதம், இனம், மொழி கிடையாது. குற்றம் செய்ய, கொஞ்சம் குரூர மனமும் கொஞ்சம் சந்தர்ப்பமும் போதும்.

சரி, ஜிம்பார்டோ மீது புகார் செலுத்திய அந்த மாணவி யார் தெரியுமா? அவர் காதலி, பின்னாளில் மனைவி.

என்ன ட்விஸ்ட்?

ஸ்டான்ஃபோர்டு சிறை, ஹாலிவுட்டில் ஆய்வுப் படமாக வந்துவிட்டது. தமிழில்? கமல்ஹாசன் முயற்சிக்கலாம். “நான் என்னை குற்றவாளின்னா சொன்னேன்? குற்றம் செய்யாம இருந்தா, இன்னும் நல்லவனா இருப்பேன்னுதான் சொல்றேன்!” என்ற வசனத்தை, கற்பனைசெய்து பார்க்கிறேன். நாயகி நயன்தாராவாக இருக்கட்டுமே. என்ன இப்போ?

- மற்றவை நெக்ஸ்ட் வீக்...