Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 19

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 19
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 19

ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி ஓவியங்கள்: ஹாசிப்கான்

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 19

ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி ஓவியங்கள்: ஹாசிப்கான்

Published:Updated:
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 19
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 19
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 19

ல்லாம் வல்ல இறைக்கு எனத் தனி உருவம் இல்லை. எல்லா உருவங் களும் இறையின் வெளிப்பாடுகள் தான். இறைவன் அல்லது இறைவி மனித உருவில் தோன்றியதாகக் கூறப்படும் சேதிகள், புராணங்கள் எல்லா சமூகங்களிலும் உள்ளன. ‘நன்மையைக் காக்கவும் தீமையை அழிக்கவும்’ மனித உருவெடுத்து வருவது இறையின் குணம் என்பதுதான் இவ்வாறான சேதிகளின் பின்னால் இருக்கும் கருத்து. தீபாவளி எனும் விழா, தமிழர் மரபில் இருந்ததற்கான தடயங்கள் இல்லை. ஆனாலும், இவ்விழாவின் நாயகரான திருமால் வழிபாடு, தமிழ் மரபில் மிகத் தொன்மையானது.

திருமால் எனும் பெயர் பிற்காலத்தில் சூட்டப்பட்டது. ஏறத்தாழ 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் பரிபாடல் எனும் சங்க இலக்கியத் தொகுப்பில், மாயோன் எனும் பெயரால் திருமால் போற்றப்பட்டுள்ளார்.

அதே பரிபாடலில்தான் செவ்வேள் எனும் பெயரில் முருகன் வழிபாடும் மிகச் சிறப்பாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இறையின் உருவங்களும் வடிவங்களும் கால ஓட்டத்தில் மாறிக்கொண்டுள்ளன. ஆனால், இறைச் செயல்களில் மாற்றம் இல்லை.

திருமால் எனும் இறைவடிவத்தின் சிறப்பு இயல்பு, ‘காத்தல்’ தொழில் செய்வது. உயிர்களின் அமைதியான வாழ்வுக்கு எதிராக இருக்கும் அனைத்தையும் அழிப்பது திருமால் எனும் இறைவடிவின் குணம். இந்தப் பணிக்காகப் பல்வேறு உயிர் வடிவங்களில் திருமால் தோன்றியதை அவதாரம் என்றழைத்தனர். ‘தீமைகள் மிகும்போது எல்லாம் நான் உருவெடுத்து வந்து அவற்றை அழிப்பேன்’ என்பது கீதையில் கண்ணன் அளித்த வாக்குறுதி.

நரகாசுரனுடன் போர் புரிந்தபோது, கண்ணனுக்குத் தேரோட்டியாக வந்தவர் அவரது மனைவி சத்யபாமா. முற்பிறவித் தொடர்பின்படி, சத்யபாமா என்பவர் நரகாசுரனின் தாய். `என் அன்னையால் மட்டுமே என் உயிரைப் பறிக்க முடியும்’ என்ற வரத்தை இறைவனிடம் வேண்டிப் பெற்றவர் நரகாசுரன். கண்ணன் நடத்திய போரிலும் நரகாசுரனை எளிதில் வெல்ல இயலவில்லை. கண்ணன் சோர்வடைந்து மயங்கிய வேளையில், நரகாசுரன் மீது தாக்குதல் தொடுத்து வீழ்த்தியவர் தேரோட்டியாக வந்த சத்யபாமாதான். கொற்றவை, காளி ஆகிய தெய்வங்களும் இவ்வாறான அழிப்புச் செயல்களுக்கான இறைவடிவங்களே.

பூமி எனும் நிலமகளின் குறியீடுதான் காளி, கொற்றவை, பாமா ஆகிய தெய்வ வடிவங்கள். நிலமகளாகிய தாய் தனக்குள் வாழும் உயிரினங்களின் வாழ்வைச் சிதைக்கும் எவரையும் அழிக்கிறாள் என்பது நமது தொன்மங்களின் கருத்து.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 19

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனிதர்கள் மட்டும் அல்லாமல் பல்வேறு உயிரினங்களும் நிம்மதியாக வாழவியலாத சூழல் இப்போது பூமியில் நிலவுகிறது. ஐம்பூதங்களில் காற்று, நீர், நிலம் ஆகிய  மூன்றும் நஞ்சாகிக் கொண்டுள்ளன. இந்த மூன்றும் மிக மோசமான பொருளாதாரச் சுழலிலும் சிக்கியுள்ளன. சென்னை, கடலூர், கோவை, தூத்துக்குடி ஆகிய நான்கு நகரங்களும் உயிர்க் காற்று சீரழிந்த பகுதிகள். பெங்களூருவில் வீசும் காற்றில் கரியமிலம் மிகுந்து அங்கே வசிக்கும் மக்களில் கணிசமானோர் நுரையீரல் நோயாளிகளாகி உள்ளனர். சென்னை, கடலூர் ஆகிய இரு நகரங்களில் தோல் நோயாளிகளின் எண்ணிக்கையை எவராலும் கணிக்கவே இயலாது. அந்த அளவுக்குச் சூழல் நாசம் அடைந்துவிட்டது.

ஓர் ஆய்வு முடிவை உங்கள் முன்வைத்தால் நிலைமையின் தீவிரம் புரியும். கடந்த ஆண்டு சென்னையில் பெய்த மழை நீரின் மாதிரியைச் சோதனைக்கு அனுப்பினோம். மழை நீர்தான் அமுதம் என்றார் ஆசான் திருவள்ளுவர். மழைநீரில் இருந்துதான் உயிர்கள் உற்பத்தியாகின்றன. மழைநீர்தான் உயிர்களுக்குத் தேவையான சத்துகளையும் நோய் எதிர்ப்பு ஆற்றல்களையும் தாங்கிவருகிறது. அந்த மழைநீரை ஆய்வுக்கு அனுப்பியபோது, ‘இது குடிநீராகத் தகுதியற்ற நீர்’ என்ற முடிவு ஆய்வகத்தில் இருந்து எங்களுக்கு வந்தது. ‘கரிமத்தில் (carbon) உயிர் வாழக்கூடிய சில்லுயிரிகள் (microorganisms) மழை நீரில் பெருகிவிட்டன’ என்பதுதான் காரணம்.

வாகனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட நவீன சாதனைகளின் புகையில் இருந்து வெளியாகும் கரியமிலக் காற்றின் அளவு இப்போது அபாயக் கட்டத்தில் உள்ளது. குறிப்பாக, சென்னை போன்ற பெருநகரங்களுக்கு மேலே உள்ள வளிமண்டலம் (atmosphere) கரிமங்களின் கடல்போல் மாறியுள்ளது.

இயற்கையான செயல்பாடுகளின் வழியாக கரிமக் காற்று வெளியேறினால், தாவரங்கள் அந்தக் காற்றை உட்கொண்டு உயிர்க் காற்றை வெளியிடுகின்றன. தாவரங்கள் மட்டும் அல்லாமல் நம்மைச் சுற்றிலும் வாழும் கோடானுகோடி ஒரு செல் உயிரிகளும் நமக்கான தூய காற்றை உருவாக்கித் தருகின்றன. இவற்றைக் காட்டிலும் அதிகமாக, பூமியில் உள்ள கடல் நீர் கரிமக் காற்றை உள்ளிழுத்து, உயிர்க் காற்றை வெளியே தள்ளிக்கொண்டுள்ளது.

இவை யாவும் இயற்கையான கரிமங்களுக்குத்தான் பொருந்தும். அதாவது நமது மூச்சுக் காற்று, இயற்கைப் பொருட்களின் நெருப்பில் இருந்து வெளியாகும் புகை, எரிமலைப் புகை போன்றவற்றை தாவரங்களும், ஒரு செல் உயிரிகளும் கடல் நீரும் சுத்திகரித்துவிடும். இப்போது வெளியாகும் கரிமங்கள் இந்த நிலைக்கு நேர் எதிரானவை. இவை அனைத்தும் செயற்கையான வேதிப்பொருட்களை உள்ளடக்கியவை என்பதால், பூமியின் பாதுகாப்புக் கவசங்கள் செயல் இழந்துவருகின்றன. இதனால், நமது வளிமண்டலம் சுத்திகரிக்கப்படாத கரிமங்களால் நிரம்பி வழிந்துவருகிறது.

மழை நீர் கீழே விழும்போது, வளிமண்டலத்தில் உள்ள கரிமங் களைத் தனக்குள் இழுத்துக்கொண்டு வந்து சேர்கிறது. இதன் விளைவாக, பூமியின் உயிரின வகைகளில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்துகொண்டுள்ளது. கரிமங்களை உணவாகக்கொண்டு வாழும் ஒரு செல் உயிரிகள் இப்போது அதிகரித்துள்ளன.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 19

ஓர் உடலில் கரிமங்களை உணவாகக் கொள்ளும் செல்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அந்த உடல், புற்று நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு மிக அதிகம். நமது உடலில் கரிமங்களின் அளவு இயற்கை விதிகளுக்குப் புறம்பாக அதிகரிக்கக் கூடாது. பிழையான உணவுப் பழக்கங்கள், பல்வேறு வேதிப் பொருட்கள் கலக்கப்பட்ட உணவுப் பொருட்கள், வேதி மருந்துகள் மற்றும் சில பழக்கங்களின் வழியாக உடலில் கரிமம் மிகுந்துவிடுகிறது. இந்தக் கரிமத்தை உணவாக்கிக்கொள்வதற்காக சில்லுயிரிகள் உற்பத்தியாகின்றன. நாளடைவில், கரிமத்தின் அளவு குறைந்தால், அந்தச் சில்லுயிரிகளும் மறைந்துவிடும். மாறாக, கரிமத்தின் அளவு கூடிக்கொண்டே போனால் அவற்றில் பெருகும் சில்லுயிரிகளும் அதிகரிக்கும். இதுதான் தீவிரமான நோய்களின் மூலம்.

உடலில் நிகழும் அனைத்தும் பூமியில் நிகழும். ‘அண்டமே பிண்டம்’ என்றார் நம் ஆசான் திருமூலர்.

`சென்னை மழை நீரில் கரிமச் சில்லுயிரிகள் மிகையாக இருப்பதாக’ எங்களுக்குக் கிடைத்த ஆய்வறிக்கை கூறியது. தொழில் வளர்ச்சி அடைந்த எல்லா பகுதிகளிலும் இதுதான் நிலைமை. ஏற்கெனவே குடிநீரில் பல்வேறு வேதி நஞ்சுகளைக் கலந்துகொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மழை நீர் மட்டும்தான் ஒரே வாழ்வாதாரமாக உள்ளது. அந்த மழைநீரிலும் கரிமச் சில்லுயிரிகள் அதிகரித்துவிட்ட நிலையில், நோயற்ற வாழ்வை வாழ்வது கனவாகுமோ என்ற கவலை என் போன்றோருக்கு அதிகரித்துள்ளது. இப்போதும் மழைநீர் சேகரிப்புதான் நமக்கான தீர்வு என்பதில் ஐயம் வேண்டாம். மழை நீரைச் சேமிக்கும்போதே சில பாதுகாப்புகளைச் செய்து வடிகட்டினால், நன்னீர் கிடைக்கும். நிலைமையின் தீவிரத்தை உணர்த்துவதற்காக அந்த ஆய்வைப் பற்றி குறிப்பிட்டேன்.

ஐம்பூதங்களின் செயல்பாட்டில் ஒரு கணக்கு உண்டு. காற்று சீர்கெட்டால், நீர் சீரழியும். நீரின் கேடுகள், நிலத்தைச் சிதைக்கும். நிலம் கெட்டால், நீர் கெடும். நீரின் கேடுகள், காற்றைப் பாதிக்கும். இப்போது நவீன சமூகம் நேரடியாக காற்றையும் நிலத்தையும் நாசம் செய்துவருகிறது.

இந்தப் பூமியில் கொட்டப்படும் நெகிழிக் கழிவுகள், நதிகளில் கலக்கப்படும் வேதிப் பொருட்கள், கடலில் கலக்கும் அணுக்கழிவுகள், வளிமண்டலத்தையே கரிமக் கடலாக்கிவிட்ட நச்சுப் புகைகள், வெட்டிச் சாய்க்கப்படும் மரங்கள், குண்டுகளால் தகர்க்கப்படும் மலைகள் என ஐம்பூதங்களின் மீது நவீன மனிதர்கள் நடத்திவரும் போர் ஈவிரக்கமற்ற நிலைக்குச் சென்றுள்ளது.

இவற்றை எல்லாம் நிலமாகிய காளி ஒரே நாளில் சரிசெய்துவிடுவாள். ஆனால், அந்தப் பணியில் அவள் ஈடுபடும்போது ஏற்படும் அழிவுகளை மனிதகுலத்தினால் தாங்க இயலாது. கடந்த ஐந்து ஆண்டுகளில் உருவாகியுள்ள நிலநடுக்கங்கள், வெடித்த எரிமலைகள், கொந்தளித்த ஆழிப்பேரலைகள் ஆகியவற்றின் எண்ணிக்கையை இணையத்தில் தேடுங்கள். புவி எங்கும் பெய்துவரும் பெருமழைகளையும், வீசும் புயல்களையும்கூட பட்டியலிடுங்கள். இதற்கு முன், பூமி இவ்வாறு சீற்றம் கொண்டது இல்லை.

பணம், புகழ் ஆகிய இரண்டே இரண்டு பேராசைகளுக்காக பூமியின் இயக்கத்தையே மாற்றிவரும் நவீன அரக்கர்களுக்கு நரகாசுரர்கள் என்றும் பெயர் சூட்டலாம். இவ்வாறான கொடுமைகளுக்கு எதிராகப் போராடுவோருக்கு, கண்ணன் என்றும் சத்யபாமா என்றும் பெயரிடலாம். பெயர்களும் வடிவங்களும் காலத்துக்கு ஏற்ப, இடத்துக்கு ஏற்ப மாறத்தக்கவை. ஆனால், உயிர்களைக் காப்பதற்காக நல்லவர்கள் போரிட வேண்டும் என்ற கருத்து எக்காலத்துக்கும் மாறுவது இல்லை.

தீபாவளியின் பேரால், அளவுக்கு அதிகமான ஆடைகளை வாங்கும்போது, நொய்யல் எனும் நதியின் மரணம் உங்களுக்கு நினைவில் வரவேண்டும். ஆடைத் தொழிற்சாலைகளின் கழிவு நீராலும், செல்வாக்குமிக்கவர்களின் வளைப்புகளாலும் கண்ணெதிரே காணாமல் போன நதி அது. காவிரி நீரில் அன்றாடம் கலக்கப்படும் ஆடைத் தொழிற்சாலைக் கழிவுகளைப் புத்தாடை உடுத்தும்போது எல்லாம் மனதில் கொள்ளுங்கள். தமிழக எல்லைக்கும் மேலே உள்ள மலைகளுக்குச் சென்று, காவிரி நதியின் கண்ணாடி போன்ற தெளிவில் முகம் பார்த்துப் புரண்டு விளையாடுபவன் நான். அதே நதி, ஈரோட்டில் கறுப்பு வண்ணத்தில் மாற்றம் அடைகிறது.

பட்டாசுகள், புத்தாடைகள் ஆகிய இரண்டும் இப்போதைய சூழலில் நன்மைகளைவிட தீமைகள் கூடுதலாக உள்ள பொருட்கள்தான். ஆனால், தீமையை அழித்த நாளில் இந்த இரண்டு பொருட்களும்தான் சமூகம் முழுமையையும் ஆட்கொள்கின்றன.

தீபாவளி எனும் விழாவைக் காட்டிலும் அந்த விழாவின் பின்னால் இருக்கும் கருத்தை நான் மதிக்கிறேன். உங்களுக்கும் இவ்வாறான புரிதல் இருந்தால், தீபாவளியை புவியைச் சீரழிக்காத வகையில் கொண்டாடுங்கள். தேவைக்கு அதிகமாக ஆடைகள் வாங்காதிருங்கள். இயன்றவரை பட்டாசுகளைத் தவிர்த்திடுங்கள். பட்டாசுப் புகையும் வாகனப் புகையும் அதிகரித்த பின்னர், ஈசல்கள் அழிந்துவிட்டன. ஈசல்களை உணவாக்கும் பல்வேறு சிறு பறவையினங்கள் குறைந்துவிட்டன.

தீபாவளி என்பதே, மரணத்தைக் கொண்டாடும் நிகழ்வுதான். அந்த விழாவின்போது இப்போதைய சமூகம், நதிகளின் மரணத்தையும் பல்வேறு உயிரினங்களின் மரணத்தையும் கொண்டாடு வதாகத்தான் நான் நினைக்கிறேன். தீபாவளி எனும் தொன்ம நிகழ்வின் பின்னால் உள்ள நற்சேதிகளை எல்லாம் மறைத்து, வெற்றுக் கூச்சலுக்கும் ஆடம்பரச் செலவுகளுக்குமான நிகழ்வாக அதை மாற்றிவைத்துள்ளன வணிக நிறுவனங்கள்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 19

உங்களுக்கு உண்மையிலேயே கண்ணன் மீதும் சத்யபாமா மீதும் நம்பிக்கையும் பற்றும் இருந்தால், தீபாவளி நாளை தீமைகளுக்கு எதிராகக் கொண்டாடுங்கள். தர்க்கபூர்வமான காரணங்களைக் கூறி, தீபாவளியை நிராகரிக்கும் நாத்திகர்கள்தான் உண்மையிலேயே அந்த நாளில் தீமைகளுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என நம்புகிறேன். அவர்கள் பட்டாசு வெடிப்பது இல்லை; ஆடை வாங்குவது இல்லை.

மிகக் குறைவாக ஆடைகளில் செலவிடுங்கள்; பட்டாசுகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, வீடுகளில் சமைத்த பலகாரங்களை மட்டும் உட்கொள்ளுங்கள்.
கடவுள் மனிதராகப் பிறப்பதைக் காட்டிலும், மனிதர்கள் கடவுளாக மாறுவது எளிதான செயல்!

 - திரும்புவோம்...