Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 6

ஆண்பால் பெண்பால் அன்பால் - 6
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால் - 6

#MakeNewBondsதமிழ்நதி - படம்: அருண் டைட்டன்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 6

#MakeNewBondsதமிழ்நதி - படம்: அருண் டைட்டன்

Published:Updated:
ஆண்பால் பெண்பால் அன்பால் - 6
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால் - 6
ஆண்பால் பெண்பால் அன்பால் - 6

வாழ்வின் ஆதாரமான ‘ஆண்-பெண் உறவுகளுக்குள் மட்டும் ஏன் இத்தனை வேறுபாடுகள்? தொழில்நுட்பங்கள் வளர வளர, விரிசல்களும் வித்தியாசங்களும் ஏன் இவ்வளவு அதிகரிக்கின்றன? சரிசெய்யவேண்டியது எங்கே? நம் குழந்தைகளுக்கு, ஆண்-பெண் மனங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை எப்போது கற்றுக்கொடுக்கப்போகிறோம்? காதல், நட்பு, உறவு, பிரிவு... என ஆண்-பெண் இடையே இருக்கும் இந்த இணைப்பைப் பலப்படுத்தும் அந்த ஒன்று எது?' விடைகளுக்கான விகடனின் தேடலே இந்தத் தொடர். வாரம் ஒரு பிரபலம் தங்களுடைய வாழ்வின் வழியே, கற்றலின் வழியே வெளிச்சம் பாய்ச்ச உள்ளனர்.

தன்
குஞ்சுகளுக்கு இரை கிடைக்காதபோது, தன்னுடைய நெஞ்சை அலகினால் கீறி அதில் இருந்து வழியும் ரத்தத்தை உணவாகக் கொடுத்து குஞ்சுகளின் பசியை ஆற்றும் பெலிக்கான் பறவையைப் பற்றிய பௌராணிகக் கதை மனதை உருக்கும். நம் சமூகத்தில் பெரும்பாலான பெண்கள், பெலிக்கான் பறவைகளே...

எங்கள் வீட்டிலும் ஒரு பெலிக்கான் பறவை இருந்தது. இப்போது அதன் சிறகுகள் வயோதிகத்தினால் தழைந்துபோய்விட்டன. பானையில் அன்றைய சாப்பாட்டுக்கு அரிசி இருக்கிறதா... இல்லையா என்பதைப் பற்றி என்றைக்கும் கவலையுறாத தந்தைக்கும், அரிசியைப் பற்றி மட்டுமே கவலையுறும் தாய்க்கும் மகளாகப் பிறந்தவள் நான். எனது அப்பா, நன்கு படித்தவர்; முற்போக்குச் சிந்தனைகள் கொண்டவர்; புத்தகங்களால் நிறைக்கப்பட்டிருந்த அவரது உலகில், சாதி, மத, பால், இன வேற்றுமைகளுக்கு இடம் இல்லை. அம்மாவோ எதிர்மாறு. ஊராரின் வாய்க்கும் கண்களுக்கும் பயந்த, மரபார்ந்த பெண். அரசுப் பணியில் ஓரளவு நல்ல பதவியில் இருந்த எனது தந்தை, வேலையைத் தொலைத்துவிட்டு வந்து நின்றபோது, குடும்பமே அதிர்ந்துபோய் நின்றது. அதுவரை அனுபவித்து வந்த மத்தியதர வாழ்வின் வசதிகள் கண் முன்னால் சரியக் கண்டோம். ஆனால், அம்மா அசரவில்லை!

அம்மாவின் கால்கள் எங்கெங்கு அலைந் தனவோ, உதடுகள் எவர் எவரைக் கெஞ்சினவோ, திரும்பி வரும்போது நெல் மூட்டை ஒன்றை தலைச்சுமையாகச் சுமந்து வருவார். நெருஞ்சி முட்கள் சேலையைப் பிடித்து இழுக்கும் காட்டுக்குப் போய், விறகு வெட்டி வருவார். அந்த நாட்களில் அரைப் பட்டினி, கால் பட்டினி என்று இருந்தோம். ஆனால், முழுப்பட்டினியாக ஒருநாளும் கிடந்ததே இல்லை. ஆனால், இந்தச் சமூகமும் உறவுகளும் எனது தந்தைக்கு வழங்கிய மரியாதையைத் தாய்க்கு அளிக்கவே இல்லை. ஏழ்மை அளித்த சிறுமைகளை எல்லாம் தாங்கிக்கொண்டு, தன் பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்த அந்த மெலிந்த உருவத்தின் பக்கமே  எல்லா சந்தர்ப்பங்களிலும் நான் நிற்பது அதனால்தான். ஆனால், அப்பாவின் ஜனநாயகத் தன்மையை, விஷயங்களைக் குறித்த பரந்த பார்வையை அவை குறித்த பிரக்ஞை இன்றியே பின்தொடர்ந்திருக்கிறேன் என்பதை இப்போது உணர்கிறேன். குறிப்பாக, கலாசாரம் என்ற பெயரிலான பொய்மைகளை அம்மா என் மீது சுமத்தியதுபோல், அப்பா என்றுமே சுமத்தியது இல்லை.  

கல்வியின் நிமித்தமாக தொலைநகரம் ஒன்றில் தங்கியிருக்கவேண்டி இருந்ததால், வீடு விதித்த கட்டுப்பாடுகளில் இருந்து 17 வயதிலேயே வெளியேறிவிட்டேன். தோழிகளோடு தங்கி இருக்கும் அறை வாழ்வு பரிச்சயமானது. பிறகு, ஒருபோதும் ‘வீட்டுப் பெண்’ணாக நான் திரும்பிச் செல்லவில்லை. விடுமுறைகளின்போது வீட்டுக்குச் சென்றபோதும் இடைத்தங்கச் சென்ற விருந்தாளியின் ஒட்டுதலற்ற மனநிலைதான். தீவிரமான வாசகியாக மாறியது அந்த நாட்களில்தான். புத்தகங்கள், என்னை யதார்த்தத்தில் இருந்து கனவுகளை நோக்கிச் செலுத்தின. கனவுகளின் பாதை வழக்கம்போல் காதலில் சென்று முடிந்தது.

1991-ம் ஆண்டு, எனது காதலர் கொழும்பில் தங்கியிருந்தார். சில பாதுகாப்புக் காரணங்களால் அவர் வெளியே சுற்றுவது குறைவு. அவரைச் சந்திப்பதற்காக வவுனியாவில் இருந்து புறப்பட்டுச் செல்வேன். வழக்கமாக நான் செல்லும் புகையிரதம் இரவு எட்டு மணி தாண்டிய பின்னரே கொழும்பைச் சென்றடையும். புகையிரதத்தினுள் ஏறியதில் இருந்து அந்தப் பெட்டியில் உள்ளவர்களை நோட்டமிட ஆரம்பிப்பேன். ஓரளவு நம்பகமானவர்போல காட்சியளிக்கும் இளைஞனைத் தேர்ந்தெடுத்து உரையாட ஆரம்பிப்பேன். பாதி தூரத்தைக் கடப்பதற்குள் அவரிடம்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 6

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓர் உறுதிமொழியை வாங்கிவிடுவேன். அதாவது, புகையிரதத்தில் இருந்து இறங்கியதும் எனது காதலரிடம் என்னைப் பாதுகாப்பாகக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட வேண்டும் என்பதே அந்த உறுதிமொழி! அவரும் ‘குந்துமணி சேதாரம் இல்லாமல்’ கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவார். இப்படி, பதினைந்து தடவையாவது நடந்திருக்கும். ஆனால், அந்த இளைஞர்களில் ஒருவர்கூட என்னிடம் ஒருபோதும் தரக்குறைவாக நடந்தது இல்லை. இரவு நேரம். அந்நிய நகரம். ஏது நடந்தாலும் கேட்பார் இல்லை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்படி ஒரு வேண்டுகோளை முன்வைத்தவுடன், அதுவரை இளகி இருந்த அந்த  இளைஞர்களின் முகங்கள் இறுகி, கண்களில் பொறுப்பு உணர்வும் அக்கறையும் தோன்றிவிடும். இப்போது நினைத்துப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. அவர்கள் எனக்குத் தீங்கு இழைக்க மாட்டார்கள் என, என்னை நம்பத் தூண்டியது எது? ‘இவளைப் பாதுகாப்பாகக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டுமே!’ என்ற ஆதுரத்தை அவர்களிடம் ஏற்படுத்தியது எது? அது சக உயிர்களுக்கு இடையிலான எழுதப்படாத ஒப்பந்தமா?

கனவுக் காலம் திருமணத்தில் முடிந்த பிறகு, ஏறத்தாழ பத்து ஆண்டுகாலம் ‘காவிய’க் காதல். உறங்கிக்கொண்டிருக்கும் என்னை எழுப்பிவிடக் கூடாதே என்ற கவனத்தோடு ‘பூனை நடை’ நடந்து சமையலறைக்குச் சென்று காலை உணவைத் தயாரித்து, தான் சாப்பிட்டப் பிறகு எனக்கான உணவை மேசையில் மூடிவைத்துவிட்டு வேலைக்குப் போகிற கரிசனம் உள்ள கணவர்.

பிறகு வந்ததோ, காத்திருப்பின் காலம். அந்நிய நிலத்தின் தனிமை, பனிப்புயல்போல என்னைத் தாக்கியது அப்போதுதான். இலைகளை இழந்த மொட்டை மரங்கள் குளிர் தாளாது நடுங்குவதான பிரமை தரும் பனிக்காலத்தில், முன்னறையின் திரைச்சீலையை விலக்கிப் பிடித்தபடி, பனிபொழிந்து கிடக்கும் வீதியையே எதிர்பார்ப்பின் விழிகளால் வெறித்தபடி நிற்கும் பெண்ணாக சில ஆண்டுகள் வாழ்ந்தேன். சாலையில் வாகனத்தின் ஒளி படரும்போது எல்லாம், அது அவருடைய கார்தான் என்று மனம் படபடக்கும். சில நாட்களில் அதிகாலை வரைகூட அவ்வாறு நின்றிருக்கிறேன். அவர் வேலைக்குப் போய்தான் ஆகவேண்டியிருந்தது. தவிர, அவருக்கு நண்பர்களும் அநேகர். ஓர் ஆண் எதிர்பார்த்த வெளிக்கும், ஒரு பெண் விழைந்ததலுக்கும் இடையில் நடந்த இழுபறிகளின் நீட்சியாக பிரிவு வந்து சேர்ந்தது. கணவர்,  நண்பரானார். இந்தச் சமூகத்தில் ஒரு பெண்ணுக்கான பாத்திரம் காதலி, மனைவி இவை மட்டும் அல்ல என்பதை, உணரக் கிடைத்த வாய்ப்பு அது. பிறரில் தங்கியிருந்தவளை பிறரைத் தாங்குபவளாக மாற்றிய ‘மகத்தான’ பிரிவு அது.

ஆனால், எந்தப் பிரிவும் அவற்றின் வழி நான் அடைந்த துயரும் ஆண்கள்பால் வெறுப்பைத் தூண்டவில்லை. `ஆண்களை எனக்குப் பிடிக்காது’ எனச் சொல்லும் பெண்கள், எனக்கு உண்மையில் ஆச்சர்யமூட்டுகிறார்கள். ஆண்-பெண் நேசம்  கொள்ளாத வாழ்வில், என்ன சுவை இருக்கப்போகிறது? அப்படி ஓர் உலகு இருக்கும் எனில், அது பாழ்வெளியே! 

எனது கணவராக இருந்து, பிற்பாடு நண்பராக மாறியவர், என்னால் எழுதப்பட்ட ஒவ்வொரு படைப்பையும் கொண்டாடுபவராக இருந்தார்; இப்போதும் இருக்கிறார். வாசிப்பின் இடையில் பிடித்த பகுதிகளை அடிக்கோடிட்டு வைத்துக்கொண்டு, நான் எங்கு இருந்தாலும் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டும் அளவுக்கு என் எழுத்தை நேசிப்பவர். 

போர் நிலத்தில், ஆண்-பெண் உறவில் அரசியல் சூழல் பெரிதும் செல்வாக்கு செலுத்தும்.

என்னுடைய பதின்பருவத்தில், அகதியாக பல காலம் அலைந்திருக்கிறேன். கணுக்கால் வரை நீரோடும் வாய்க்கால்கள், பாம்புகளும் கொடிய விலங்குகளும் நிறைந்த காடுகள், கோயில்கள், தெருவோரங்கள்... இங்கு எல்லாம் பசித்த வயிற்றுடனும் பயம் தோய்ந்த கண்களுடனும் மரணத்தின் காலடி ஓசைக்கு அஞ்சி மறைந்து இருந்தோம். அப்போது எல்லாம் ஆண்-பெண் பால்பேதம் அழிந்து, ‘அகதி’ என்ற ஒருபாலாகத்தான் இருந்தோம். காடுகள் உள்ளும் கோயில்கள் உள்ளும் ஆணும் பெண்ணுமாக அருகருகே படுத்துக்கிடந்தாலும், கண்ணியக் குறைவாக ஆண்களில் எவரும் நடந்துகொண்டது இல்லை. 1983-ம் ஆண்டு ஜூலைக் கலவரத்தின் பிற்பாடு, காற்றுபோல அச்சம் எங்களைச் சூழ்ந்திருந்தது. இனவாதிகள், கிராமங்களுக்குள் புகுந்து தமிழர்களை வெட்டிச் சரித்துக் கொண்டிருந்தார்கள். அந்த நாட்களில், பெண்களும் குழந்தைகளும் வீடுகளில் தங்கியிருக்க, வாள்கள், தடிகள் சகிதம் இளைஞர்கள் இரவிரவாக தெருக்களில் சுற்றித் திரிந்து காவல் காப்பார்கள். ‘எமது பெண்கள்... எமது குழந்தைகள்’ என்ற உணர்வே அவர்களிடம் இருந்தது. அப்போது நாங்கள் `ராணுவம்’ என்ற பொது எதிரிக்கே அஞ்சினோம். குடும்ப, பாலியல் வன்முறைகள், ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தன.

விடுதலைப்புலிகள் வன்னிப் பெருநிலப்பரப்பில் ‘நிழல் அரசு’ நடத்திய காலத்தில், பாலியல்ரீதியான வன்கொடுமைகள் இன்றி பெண்கள் மிகவும் பாதுகாப்பாக வாழ்ந்தார்கள். இருள் அடர்ந்த பின்னாலும் சைக்கிள்களில் தெருவை அடைத்து வரிசையாகச் செல்லும் இளம்பெண்களைக் கண்டிருக்கிறேன். நேசத்துக்குரிய துப்பாக்கிகளின் நிழல் மடியில் நிம்மதியாக உறங்கிய காலங்களாக அவை இருந்தன.

2004-ம் ஆண்டின் ஏதோவொரு மாதத்தில், வன்னியில் உள்ள விசுவமடுவுக்கு, எனது உறவினர் வீட்டுக்குப் போயிருந்தேன். அவர்களது வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இரவிரவாக ஒரே சச்சரவு. ஒரு பெண்ணின் அழுகுரல். `என்ன?’  என வினவியபோது, அந்த வீட்டுக் ‘குடும்பத் தலைவர்’ கடுந்தண்ணிக்காரர் எனத் தெரிந்தது. அவர் மாபெரும் குடிமகனாம்! நள்ளிரவு கடந்தும் அந்தப் பெண்ணின் விசும்பல் விட்டுவிட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது. பிறகு, நான் உணராக் கணம் ஒன்றில் உறக்கத்தில் ஆழ்ந்துபோனேன். விழித்தெழுந்தபோது காலை குளிர்ந்துபோய்க் கிடந்தது. பக்கத்து வீட்டுப் பெண்ணோ முற்றத்தில் நின்று ஓசை எழுப்பாது அழுதுகொண்டிருந்தார். “இன்னமுமா சண்டை ஓயவில்லை?” என்று எனது உறவினரிடம் கேட்டேன். “குடித்துவிட்டு அடித்த கணவரை விடுதலைப்புலிகளின் காவல் துறை வந்து பிடித்துக்கொண்டு போய்விட்டது. அதுதான் மனைவி அழுகிறார்” என்று பதில் வந்தது. பெண்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்ப வர்களுக்கு விடுதலைப்புலிகள் கடுமையான தண்டனைகளை அந்த நாட்களில் வழங்கினார்கள்.

அண்மைக்காலமாக, எனக்கு நெருங்கிய பெண்களில் சிலர், அடி வாங்கும் இடங்களில் தற்செயலாக இருக்கும்படி நேர்ந்துவிட்டது. குடும்ப வன்முறைக்கு என் ஒரேயொரு சகோதரியைப் பலிகொடுத்தவள் என்ற வகையில், அவ்வாறான சூழல் என்னைப் பதற்றத்துக்கு ஆளாக்குகிறது. இன்னோர் உடலை நோகச் செய்வதை, காயப்படுத்துவதை எந்தவிதத் தயக்கமும் இன்றி ஆண்கள் செய்வதைக் காணும்போது மனம் பதைக்கிறது. உதைபடுவதற்காகவே காலடியில் காத்திருக்கும் பந்து என, பெண் தரையில் அமர்ந்திருக்கும் காட்சியை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? பயத்தில் உறைந்து நிலைத்த அந்த விழிகளைப் பார்த்த சில நாட்களுக்கு என்னால் உறங்க முடியவில்லை. அவ்வளவு மன அவஸ்த்தையும் சம்பந்தப்பட்ட ஆண்கள்பால் அருவருப்பையும் ஊட்டுவதாக இருந்தன அந்தக் காட்சிகள்.
 
சர்ச்சைகளில் தலையிட்டுத் தீர்த்துவைக்க முற்படும்போது ``இது குடும்ப விஷயம்’’ என்ற பிரம்மாஸ்திரத்தை ஆண்கள் எம்மை நோக்கி வீசுகிறார்கள். அல்லது ``புத்தகத்திலைப் படிச்சதை இஞ்சை கதைக் காதையுங்கோ’’ என்கிறார்கள். மனைவியை, மகளை, சகோதரியை அவளுக்கு உரித்தான மரியாதையோடு நடத்தத் தவறும் ஆண்கள், ஒரு விஷயத்தை என் போன்றோருக்கு பூடகமாக உணர்த்த முற்படுவது உண்டு. குடும்பம் என்ற அமைப்பின் விதிமுறை களுக்குக் கட்டுப்பட்டு, மரபார்ந்த வாழ்க்கை வாழாத பெண்களுக்கு, எப்படி வாழ்வது என்று பிறருக்கு அறிவுறுத்தும் தகுதி இல்லை என்ற செய்தியே அது. அதை அவர்கள் வெளிப்படுத்தும்போது அந்த உடல்மொழியில் பொதிந்திருக்கும் இளக்காரத்தைக் காண கண்ணிரண்டு போதாது! அஃது அவ்வளவு அமர்த்தலோடு இருக்கும்.

“நீங்கள் எப்பவும் பொம்பிளையளின்ரை பக்கந்தான்” என்ற குற்றச்சாட்டை, எனது அக்காவின் மகன்கள் என் மீது அடிக்கடி சுமத்துவார்கள். பொதுவெளி உரை யாடல்களிலும் இத்தகைய குரல்களுக்குப் பஞ்சம் இல்லை. தார்மீக நியாயங்களை எடுத்துப் பேசும் பெண்களை மேற்படி ஆண்கள் தடாலடியாக பெண்ணியவாதிகளாக்கி விடும் ‘அசம்பாவிதமும்’ நேரத்தான் செய்கிறது. `பெண்ணியவாதி’ என்பது, ஒரு வசைச்சொல் போன்றே சிலரால் பிரயோகிக்கப்படுகிறது. மேலும், அவர்கள் எல்லோரும் ஆண்களை வெறுப்பவர்கள் என்றொரு பிம்பத்தையும் வலிந்து கட்டமைக் கிறார்கள். இந்தப் பெண்ணியப் பட்டம் சூட்டும் படலத்தை, சமூக வலைதளங்களில் அதிகமாகக் காண முடியும். தவிர, பெண் வெறுப்பாளர்களாகிய ஆண் எழுத்தாளர்களில் ஒருசிலரும், இந்த முத்திரை குத்தும் உத்தியை அவ்வப்போது கையாள்வது உண்டு. எல்லா கற்பிதங்களையும்போல, பெண்ணுரிமை பேசுபவர்கள் எல்லோரும் ஆண்களை வெறுப்பவர்கள் என்பதும் ஒரு கற்பிதம்தான் என்பதை அவர்கள் அறியவில்லை. எதிர் பால் வெறுப்புப் பெண்ணியத்தில் எனக்கும் நம்பிக்கை இல்லை.

என் நண்பர்களும்கூட தங்களது ஆண் அதிகாரத்தை என் மீது பிரயோகித்தது இல்லை. தன்னியல்போடுகூடிய மனித உயிராக அவர்கள் என்னை மதிக்கிறார்கள். அத்தகையோருடனான ஆரோக்கியமான உரையாடல் மற்றும் விவாதங் களால் புடம்போடப்பட்டது என்னுடைய எழுத்து எனச் சொல்லிக்கொள்வதில் எனக்கு ஒரு தயக்கமும் இல்லை. தவிர, அவ்வாறான தொடர் விவாதங்களும், நண்பர்களால் பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களுமே, அரசியலை உணர்ச்சிபூர்வமாக அல்லாது அறிவார்த்தமாக அணுகும்படி எனக்குக் கற்பித்தன.

எழுத்துக்கு இணையாக பயணங்களும் என்னைக் கூப்பிட்டுக்கொண்டே இருக்கின்றன. “இப்போது எங்கே இருக்கிறீர்கள்?” என்ற கேள்வியுடனே நண்பர்கள் என்னோடு உரையாடலைத் தொடங்கு கிறார்கள். என்னால் இரண்டு மாதங்களுக்கு மேல் ஓர் இடத்தில் தரித்திருக்க முடிவது இல்லை. ‘எதற்காக இப்படி அலைந்து திரிகிறேன்?’ என அயர்ச்சியோடு என்னை நானே சில நேரங்களில் கேட்டுக்கொள்கிறேன். பதிலாக, ‘சொந்த நிலம் என ஒன்று பாத்தியப்படாத துயரமே என்னை இங்ஙனம் அலைக்கழிக்கிறது’ எனக் கூறிக்கொள்கிறேன்.

இந்தச் சமூகத்தின் அச்சில் வார்க்கப்பட்ட இன்னொரு பெண்ணாக இல்லாமல் இருப்பதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. போகும் இடங்களுக்கு எல்லாம் வீட்டைச் சுமந்து செல்லும் பெண்ணாக இல்லாமல், போகும் இடங்களை எல்லாம் வீடெனக்கொள்ளும் பெண்ணாயிருப்பதும் ஒரு கொடுப்பினையே. அது என் சகதோழிகளுக்கும் வாய்க்கட்டும்!
 
- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

குமாரத்தி

ஆண்பால் பெண்பால் அன்பால் - 6

என் தந்தையரின் வாயில்கள்
எப்போதும் எனக்காகத் திறந்தே கிடக்கின்றன.
துன்பங்களின் வாசனையோடு
விளக்குத் திரிகளின் பித்தளை வெளிச்சத்தோடு
கருங்கற் படிகளோடு
என் தந்தையரின் வாயில்கள் எப்போதும்
திறந்தே கிடக்கின்றன.
வெளி முற்றத்திலிருந்து
நான் தொடுத்த வில்லுக்கும்
ஊர்க்கோடியில் இருந்து,
அதற்கும் அப்பால், அப்பால் இருந்து
நான் எய்த அம்புகளுக்கும்
பதில் எதுவுஞ் சொல்லாது
என் தந்தையரின் வாயில்கள் எப்போதும்
திறந்தே கிடக்கின்றன
ஆழிப் பெருமௌனத்துடன்.

-  ஆழியாள்

உடல் எனது என்றாலும்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 6

உடலை நெருக்கடிகள் தின்கின்றன
பாவையைப்போல ஆராதித்த நாட்களில்
உடல் எவ்வளவு சிறு கனவாய் இருந்தது
இன்று நீர் முட்டிவரும் கண்களில்
பாதரசம் மிதக்கும்
நட்சத்திரங்களும் உடலைக் கிள்ளுகின்றன.

- குட்டி ரேவதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism