Published:Updated:

ரெடி... ஸ்டெடி... க்ளிக்!

ரெடி... ஸ்டெடி... க்ளிக்!
பிரீமியம் ஸ்டோரி
ரெடி... ஸ்டெடி... க்ளிக்!

இரா.கலைச்செல்வன்

ரெடி... ஸ்டெடி... க்ளிக்!

இரா.கலைச்செல்வன்

Published:Updated:
ரெடி... ஸ்டெடி... க்ளிக்!
பிரீமியம் ஸ்டோரி
ரெடி... ஸ்டெடி... க்ளிக்!
ரெடி... ஸ்டெடி... க்ளிக்!
ரெடி... ஸ்டெடி... க்ளிக்!

மெதுவாக நடக்கத் தொடங்குகிறார்கள். சிலர் கழுத்தில்... சிலர் கைகளில் என, வெவ்வேறு இடங்களில்... வெவ்வேறு வடிவங்களில் கேமராக்கள். இந்த நொடி முதல் அவர்களுக்கு கண்கள் கிடையாது. பார்வை, கேமராவின் மூலம் மட்டுமே! சில அடிகள் நடந்ததும் ரோட்டின் ஓரமாக ஒரு முதியவர் உட்கார்ந்திருக்கிறார். அவரிடம் போட்டோ எடுக்க அனுமதி கேட்க, சின்னச் சிரிப்புடன் பாக்கெட்டில் இருந்த சீப்பை எடுத்து, தன்னுடைய தலை, மீசை, தாடியைச் சீவிக்கொள்கிறார். எடுத்த

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரெடி... ஸ்டெடி... க்ளிக்!

போட்டோவை அவரிடம் காட்ட, அப்படி ஒரு சிரிப்பு. மீசையை மீண்டும் முறுக்கிக்கொள்கிறார். அவரை மகிழ்ச்சிப்படுத்திய மகிழ்வுடன் நம்மிடம் பேசத் தொடங்குகிறார் ராமசாமி. சென்னை போட்டோ வாக் கிளப்பின் நிறுவனர்களில் ஒருவர் இவர்.

``நாங்க ஐந்து நண்பர்கள். வெவ்வேறு துறைகள்ல இயங்கினாலும் போட்டோகிராஃபியில் எல்லோருக்குமே செம பேஷன். 2007-ம் வருஷம், பெசன்ட்நகர் கடற்கரைப் பக்கம் நடந்துகொண்டிருந்தோம். காலில் மண் படாமல் இருக்க, ஒரு குழந்தைக்கு ஷூ மாட்டிவிட ஒரு அம்மா பையில் இருந்து ஷூவை எடுத்து வைத்திருந்தார். அதன் அருகே, தான் அணிந்திருந்த ரப்பர் செருப்பைக் கழட்டிட்டு வெறும் கால்ல ஓடினான் ஒரு சிறுவன். அந்த ஷூவும் செருப்பும் பக்கம் பக்கமே இருந்தாலும், அதனுடைய இடைவெளி ரொம்ப அதிகமானது. இந்த மாதிரியான சின்னச்சின்ன உணர்வுகள், விஷயங்கள் நாம நடக்கும்போதுதான் கவனிக்க முடியும். சரி... நாமே ஏன் இதுபோன்ற விஷயங்களைப் பதிவுசெய்ய நடைப்பயணங்கள் போகக் கூடாதுன்னு தொடங்கியதுதான் இந்தச் `சென்னை போட்டோ வாக் க்ளப்'. ஐந்து பேருடன் ஆரம்பித்த இதில் இன்று 12,500 உறுப்பினர்கள்'' என்று சொன்னபடியே, அங்கு வண்ணமய மாகத் தெரிந்த கோலிசோடாக் களைப் படமெடுக்க நகர்கிறார் ராமசாமி. 

ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் ஞாயிற்றுக்கிழமை களில் சென்னை நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை நடந்தபடி கடந்து போட்டோக்களைப் பதிவு செய்கிறார்கள் இந்தக் குழுவினர். மொபைல் கேமரா, டிஜிட்டல், எஸ்.எல்.ஆர் என எந்த கேமரா வைத்திருப்பவரும் இதில் பங்கேற்கலாம். வெறும் போட்டோ எடுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், இடங்களின் வரலாறுகளை அறிந்துகொள்வது, எளிய மக்களின் வாழ்வைப் புரிந்துகொள்ள முனைவது எனப் பல விஷயங்களையும் செய்து வருகிறது இந்த போட்டோ வாக் கிளப்.

ரெடி... ஸ்டெடி... க்ளிக்!

``ஒருமுறை ஃபேஸ்புக்கில் எங்கள் போட்டோக்களைப் பார்த்த பிரிட்டனைச் சேர்ந்த மிஷ்ஷெல் என்பவர், சுதந்திரத்துக்கு முன்னரான காலத்தில் தன் தாய் பிறந்து வளர்ந்த வீடு, பிராட்வே பகுதியில் இருப்பதாகச் சொன்னார். அதன் போட்டோ கிடைத்தால், அது தங்களின் குடும்பத்துக்கே பெரிய பொக்கிஷமாக இருக்கும் எனக் கேட்டிருந்தார். நானும், பெரும் சிரமத்துக்குப் பிறகு அதைக் கண்டுபிடித்து அந்த போட்டோவை எடுத்து அனுப்பினேன். அவர் அவ்வளவு மகிழ்ச்சியடைந்தார்'' என, தன் நெகிழ்வான அனுபவத்தைப் பகிரும் பாலசுப்ரமணியத்துக்கு வயது 62.

ரெடி... ஸ்டெடி... க்ளிக்!

பத்து வயது குழந்தைகள் முதல் 75 வயது முதியவர்கள் வரை பலரும் போட்டோ வாக்கில் பங்கேற்கிறார்கள். இதில் சென்னை வரும் உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர்களும் அடக்கம். ஒருமுறை சென்னை போட்டோ வாக்கில் பிரெஞ்சுப் புகைப்படக்காரர் கிளவுட் ரெனால்ட்டும் பங்கேற்றிருக்கிறார்.

ரெடி... ஸ்டெடி... க்ளிக்!

நடந்தபடியே பாரீஸ் அர்மேனிய தேவாலயம் அருகில் வந்தடைகிறார்கள். அங்கு சில புகைப்படங்களை எடுத்ததும் சில வரலாறுகளை விவாதிக்கிறார்கள். 1900-களின் தொடக்கத்தில் 15 லட்சம் உயிர்களைப் பலி வாங்கிய அர்மேனிய இனப்படுகொலை குறித்துப் பேசுகிறார்கள். ``முதலாம் உலகப்போர் குறித்த பேச்சின்போது, `நந்தம்பாக்கம் அருகே இருக்கும் போர் சமாதியில் தன் தாத்தாவின் நினைவுக் கல் இருப்பதாகவும் அதைப் படம் எடுத்து அனுப்ப முடியுமா?' என்றும் ஒரு பிரிட்டீஷ் இளைஞர் என்னிடம் கேட்டிருந்தார். நானும் எடுத்து அனுப்பினேன். அதைப் பார்த்து அழுது, உணர்ச்சிவசப்பட்டுப் பேசியதை என்னால் மறக்கவே முடியாது. நாம் இங்கு எடுக்கும் ஒரு போட்டோ உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒருத்தரை மகிழ்ச்சிப்படுத்துகிறது என்பதை நினைக்கும்போது, ஒருவிதமான இனம் புரியாத உணர்வு ஏற்படுகிறது'' என்கிறார் ஆனந்த்.

ரெடி... ஸ்டெடி... க்ளிக்!

பறவைகள் வலசை வரும் காலத்தில், பள்ளிக்கரணை கோயில் விழாவின்போது, மயிலாப்பூர், விநாயகர் சதுர்த்தி நெருக்கத்தில் குயவர்பேட்டை என ஒவ்வொரு காலச் சூழலுக்கு ஏற்ற மாதிரி தங்களின் பயண இடங்களைத் தேர்வுசெய்கிறார்கள். கேமரா நுணுக்கம் தெரிந்தவர்கள், புதியவர்களுக்கு வகுப்புகளும் எடுக்கிறார்கள்.

ரெடி... ஸ்டெடி... க்ளிக்!

நேரமாகிவிட்டதால் அடுத்து ஜார்ஜ் கோட்டைக்கு அருகே போக, பேருந்தில் ஏறுகிறார்கள்.

``ஒரு விஷயத்தை நம் கண்களில் பார்ப்பதற்கும் கேமராவில் பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. சமீபத்தில் பெசன்ட்நகர் அருகே ஒரு பிச்சைக்காரர், அவருக்கு ஒரு கால் முட்டிக்கு கீழ் இல்லை. கோயிலுக்கு வெளியே நின்றுகொண்டிருந்தார். சரியாக அவருக்குப் பின்பக்கம் இன்னொருவர் வந்து நின்று சாமி கும்பிட்டார். நான் நின்ற இடத்தில் இருந்து அதைப் பார்க்க, கால் இல்லாதவர்... கோயில்... கால் கிடைக்கிறது. இப்படி ஒரு விஷயத்தை நான் பதிவுசெய்தேன். இதுபோன்ற ஆச்சர்யத் தருணங்கள் இந்தப் பயணங்களில் நிறையவே கிடைக்கும்'' என்று சொல்லும் சுஷ்மா சதீஷ், தனியார் மருத்துவமனை ஊழியர்.

ரெடி... ஸ்டெடி... க்ளிக்!

பேருந்து துறைமுகம் நோக்கிச் செல்ல, இவர்கள் நடத்துனரிடம் கேட்கிறார்கள். இவர்கள் FORT எனக் கேட்டதை, அவர் PORT எனப் புரிந்துகொண்டு டிக்கெட் கொடுக்க,  அங்கு ஒரே கலகலப்பு. பேருந்து நிறுத்தப்பட்டு அனைவரும், சிரித்தபடியே கீழே இறங்குகிறார்கள்.

அங்கு ஓரம் நிறுத்தப்பட்டிருக்கும் ஆட்டோவில் தெத்துப்பல் சிரிக்க உட்கார்ந்திருக்கும் சின்னப் பெண், உடைந்துபோன மயில் பொம்மை, காலில் மிதிபட்டுக் கசங்கிய நிலையில் இருந்த ரோஜா, கேமராவைக் கண்டு வெட்கப்பட்டுச் சிரித்த பூக்கார அக்கா என, ஆளுக்கொரு பக்கமாகச் சென்று க்ளிக்கத் தொடங்கினர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism