Published:Updated:

தமிழ்நாடு - வயது 60

தமிழ்நாடு - வயது 60
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்நாடு - வயது 60

ப.திருமாவேலன்

தமிழ்நாடு - வயது 60

ப.திருமாவேலன்

Published:Updated:
தமிழ்நாடு - வயது 60
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்நாடு - வயது 60

வம்பர் 1 - தமிழ்நாட்டுக்குப் பிறந்த நாள். அதுவும் இந்த நவம்பர் 1, வைர விழா ஆண்டு. `‘இது தமிழ்த் தேசியப் பெருநாள்’' என உதிரம் கொதிக்க ஜீவா சொன்னது இந்த நாளைத்தான்.

‘தமிழ் கூறும் நல்லுலகத்து...’ என்று தொல்காப்பியமும், ‘தென் தமிழ் நன்னாடு...’ என இளங்கோவடிகளும், ‘தமிழ்ப் பூமி...’ என அடியார்க்கு நல்லாரும், ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்...’ என மனோன்மணியம் சுந்தரனாரும், ‘திராவிட உத்கல பங்கா...’ என ரவீந்திரநாத் தாகூரும் சொன்ன தமிழ்நாடு, 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி உதயமானது.

தமிழ்நாடு - வயது 60
தமிழ்நாடு - வயது 60

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``இந்த அவையில், தெலுங்கு நாட்டுக்காரர் இருக்கிறார்கள்; கன்னடர் இருக்கிறார்கள்; கேரள தேசத்தவர் இருக்கிறார்கள்; தமிழ்நாட்டுக்காரர்களும் இருக்கிறார்கள். நவம்பர் முதல் தமிழ் நாட்டுக்காரர்கள் மட்டுமே இருக்கப் போகிறார்கள் என்பதை நினைக்க, எனக்குப் பெருமையாக இருக்கிறது” என்று அன்றைய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் தோழர் ஜீவானந்தம் சொன்னபோது, அண்ணாமலைப்பிள்ளை என்கிற உறுப்பினர், ‘`ஆந்திராவைச் சேர்ந்தவர்களைத்தான் நாங்கள் இதுவரை முதலமைச்சர்களாக ஏற்றுக்கொண்டோம். அப்படி இருந்தும் இவர்கள் `பிரிய வேண்டும்' என்கிறார்கள். உங்களிடம் நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், எங்கள் நாட்டை எங்களிடம் விட்டுவிடுங்கள் என்பதுதான்” என்று கேட்டுக்கொண்டார். நமது நாட்டை நம்மிடம் விட்டுவிட்டு, ஆந்திரா தனி மாநிலமாகவும், கேரளா தனி மாநிலமாகவும், கர்நாடகா தனி மாநிலமாகவும் பிரிந்து, 60 ஆண்டுகள் ஆகிவிட்டன.

அந்தக் காலத்தில் நமக்கு ‘மதராஸ் ஸ்டேட்’ எனப் பெயர். `சென்னை ராஜதானி' என்றும் சிலர் செப்புவார்கள். இன்றைய ஆந்திரா, அதில் முழுமையாக இருந்தது. மைசூர் நீங்கலாக கர்நாடகம், கொச்சி நீங்கலாக கேரளா என, பல பகுதிகள் இதனுடன் இருந்தன. அனைத்தும் சேர்ந்த அன்றைய சென்னை மாகாணத்துச் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 420. இவர்கள் பிரிந்துபோன பிறகு, தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 234.

தென் இந்தியாவின் முக்கியப் பகுதியே சென்னை மாகாணம்தான். ஆங்கிலேயர் முதலில் உருவாக்கிய மூன்று முக்கிய மாகாணங்களில் சென்னையும் ஒன்று என்பது நம்முடைய சிறப்பு. தமிழில் இருந்து பிறந்த கிளை மொழிகள் என்பதால், கன்னடமும், கலி தெலுங்கும், கவின் மலையாளமும் என நாம் நினைத்தோம். ஆனால், அவர்கள் நினைக்கவில்லை. எந்தக் கட்சியாக இருந்தாலும், சென்னை மாகாண அரசியலில் கோலோச்சியவர்கள் தெலுங்கு மொழியினர். ஆனால், இனமாறு பாடு கண்டு அல்லது இனவேறுபாடு கொண்டு தனி ஆந்திரம் கேட்டவர்களும் அவர்களே!

மொழிவாரியாக முதலில் தனி மாகாணம் கண்டது ஆந்திரம். `சென்னையும் வேண்டும், சித்தூரும் வேண்டும், திருத்தணியும் வேண்டும்' என ‘விசால ஆந்திரப் பிரதேசம்’ அமைக்கத் துடித்தார்கள். ம.பொ.சி நடத்திக்காட்டிய வடக்கு எல்லைப் போராட்டம் சென்னையையும் திருத்தணியையும் நமக்கு வாங்கிக் கொடுத்தது. திருவாலங்காடு கோயிலும் ஓசூரும் கிடைத்தன. திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ், திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்புகளின் போராட்டத்தால் தென் தமிழகத்தில் தோவாளை, அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, கல்குளம், செங்கோட்டை ஆகியவை நமக்குக் கிடைத்தன. செங்கோட்டை வனமும், தேவிகுளம், பீர்மேடும் கேரளாவுக்குப் போய்விட்டன. தென் தமிழகப் போராட்டம் நடக்காமல்போயிருந்தால், இன்றைய கன்னியாகுமரி மாவட்டமே தமிழகத்தில் இருந்திருக்காது. நிறைய இழந்தோம். ஓரளவாவது பெற்றோம். தமிழன் என்கிற இன உணர்வும், ஒன்றுபட்ட போராட்டங்களும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒரு தமிழ்த் தேசத்தை இந்திய எல்லைப்பரப்பில் உருவாக்க அடிப்படையாக அமைந்தன.

`‘ `தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டினால், உலகத்துக்குத் தெரியாது'’ என்று அன்றைய காங்கிரஸ் நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் சட்டமன்றத்தில் சொன்னார். ‘மதராஸ் ஸ்டேட்’ எனச் சொன்னால்தான் உலகம் அறியும் என்பது அவரது எண்ணம். அதனால்தான் 10 ஆண்டுகாலம் (1956 - 1967) `தமிழ்நாடு' எனப் பெயர் சூட்ட மறுத்தது காங்கிரஸ் அரசு. `‘தமிழ் என்பது, ஒரு கட்சி சம்பந்தப்பட்டது அல்ல. எல்லா கட்சிகளுக்கும் தமிழ் சொந்தம்’' என்று ஜீவா சொன்னதை, காங்கிரஸும் கேட்கவில்லை; காமராஜரும் ஏற்கவில்லை.

பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக வந்த பிறகுதான் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டப் பட்டது. தமிழ்நாட்டை உலகம் மறந்துவிட்டதா? தமிழ்நாடு அறியாத உலகம்தான் உண்டா? அழியா மொழிகளின் பட்டியலில் தமிழ் உள்ளது. அனைத்துலக நாடுகளின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கை இருக்கிறது. தமிழன் வாழா நாடு, உலக வரைபடத்தில் இல்லை. ஈழத்தமிழராக இருந்தாலும், மலேசியத் தமிழராக இருந்தாலும் மங்கோலியத் தமிழராக இருந்தாலும், தமிழ்நாட்டை தங்கள் தொப்புள் கொடி உறவுகள் வாழும் நாடாக நினைக்கிறார்கள்; போற்று கிறார்கள்; வந்து போகிறார்கள்; நம்மைப் பெருமையாக மதிக்கிறார்கள். ஆனால், நாம் பெருமையாக வாழ்கிறோமா?

காவிரிக்காக கர்நாடகாவிடம் கையேந்தி, முல்லைப் பெரியாறுக்காக கேரளாவிடம் மடியேந்தி, கிருஷ்ணா, பாலாறுக்காக ஆந்திராவிடம் பிச்சையெடுத்து நிற்கிறது தமிழ்நாடு. சென்னை ராஜதானியாக இருந்தபோது நம் வரிப்பணத்தால் பிழைத்த பகுதிகள் இவை. இன்று நம்மையே வதைக்கின்றன. கர்நாடகாவும் கேரளாவும்  அடிமைப் பிரதேசத்தைப்போல அச்சுறுத்து கின்றன. ஓசூரில் வந்து சேர்பவர்கள் ஓலமிடு கிறார்கள். ‘பாண்டிய நாட்டுக்காரனை விடாதே!’ எனத் துரத்துகிறது கேரளா. தட்டிக்கேட்கத்தான் யாரும் இல்லை. பல்வேறு முரண்பாடுகள் இருந்தாலும், சில ஏற்ற-இறக்கங்கள் இருந்தாலும் ம.பொ.சி., ஜீவா, பெரியார், அண்ணா ஆகியோர் ஒரே நேர்கோட்டுக்கு வந்தார்கள் அன்று. ஆனால் இன்று, சாண் ஏறினால் முழம் இழுக்கும் மனிதர்களின் கையில் கட்சிகளின் தலைமைப் பதவி சிக்கிக்கிடக்கிறது.

எல்லா கட்சிகளும் கர்நாடகாவிலும் கேரளாவிலும் ஒரே மேடையில் இருக்கின்றன. கர்நாடக காங்கிரஸ் சித்தராமையாவை, தமிழ்நாடு காங்கிரஸ் திருநாவுக்கரசு கண்டித் திருக்க வேண்டும். பா.ஜ.க எடியூரப்பாவை, பா.ஜ.க தமிழிசை செளந்தரராஜன் தட்டிக் கேட்டிருக்க வேண்டும். எங்கேயாவது போய் எம்.பி ஆனால் போதும் என, ப.சிதம்பரமும் இல.கணேசனும் நினைக்கும் நாட்டில், உரிமைகளை எப்படிப் பெற முடியும்? தேசியக் கட்சிகள், தேய்நிலைச் சிந்தனைகளில் இருப்பதால்தான், பாகிஸ்தான் படையால் கொல்லப்படும் குஜராத் மீனவன் இந்திய மீனவனாகவும், சிங்களப் படையால் கொல்லப் படும் தமிழக மீனவன் தமிழ் மீனவனாகவும் அடையாளம் குறுக்கப்படுகிறான். கடந்த 30 ஆண்டுகாலத்தில் 400-க்கும் மேற்பட்ட மீனவர்களை சிங்களக் கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது. எந்த இந்திய ரத்தமும் துடிக்கவில்லை. தமிழ்நாட்டுத் தெருவில் காந்தியும் நேருவும் உண்டு. தமிழன் வீட்டில் போஸும் பகத்சிங்கும் உண்டு. உ.பி-யில் வ.உ.சி உண்டா? கொல்கத்தாவில் காமராஜ் உண்டா? ராஜஸ்தானில் பாரதி உண்டா? திரிபுராவில் திருவள்ளுவர் உண்டா? இல்லை. ஏன் இல்லை? நாமே இவர்களை மதிக்கவில்லை. ‘ஜி’ போட்டு அழைத்துக்கொள்வதாலேயே  இந்தியனாகிவிட்டதாக தேசியக் கட்சி உறுப்பினர்கள் நினைப்பதை என்ன சொல்ல?

தமிழ்நாடு - வயது 60

மாநிலக் கட்சிகள்... குறிப்பாக, திராவிடக் கட்சிகள் பற்றிச் சொல்லித் தெரியவேண்டியது இல்லை. `கபாலி' படத்தில் எல்லா காட்சிகளிலும் ரஜினி இருப்பதுபோல், எல்லா இடங்களிலும் கருணாநிதியும் ஜெயலலிதாவும்தான். அண்ணா ஆரம்பித்த கட்சியை கருணாநிதியும், எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சியை ஜெயலலிதாவும் தங்களது பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக மாற்றி விட்டார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் எதை எல்லாம் பேசினாரோ, அதை எல்லாம் காவுகொடுத்தே வந்தார் கருணாநிதி. எந்த அடித்தட்டு மக்களுக்காக எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கினாரோ, அவர்களுக்கு தொடர்பு இல்லாமல் கோடீஸ்வர, லட்சாதிபதிகளின் கையில் கட்சியை ஒப்படைத்தார் ஜெயலலிதா. கொள்கை அரசியலையும் ஆட்சியையும் இவர்கள் நடத்தவில்லை. கருணாநிதி தந்தவை வெறும் நலத்திட்ட உதவிகள். ஜெயலலிதா தந்தவை இலவச உதவிகள். வாக்காளர்களைக் கவர்வதில் இவர்களுக்குள் இதற்குத்தான் போட்டி. காங்கிரஸ், பா.ஜ.க-வின் தயவை யார் முந்திப்பெறுவது என்பதிலும் போட்டி. கருணாநிதி, ஜெயலலிதாவை மிரட்டிப் பணியவைப்பதில் யார் கில்லாடி என்பதில்தான் காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் போட்டி. இந்தப் போட்டி அரசியலில், தமிழனின் வேட்டி கிழிந்து தொங்குகிறது.

இந்தக் கட்சி அரசியல்தான் தங்களைப் போலவே மக்களை உருவாக்குகிறது. ஒரு பக்கம் கல்வியில், பொருளாதாரத்தில் தமிழ்நாடு  வளர்ந்தது. இன்னொரு பக்கம் வறுமையில், வேலையில்லாத் திண்டாட்டத்தில் தமிழ்நாடு தளர்ந்தது. இந்த முரண்பாடு, தமிழகத்தை மூச்சுத் திணறவைக்கிறது. கல்வியில், பொருளாதாரத்தில் வளர்ந்தவர்கள் சமூகத்தைவிட்டு விலகியும், வறுமையில், வேலையில்லாத் திண்டாட்டத்தில் உழல்பவர்கள் சாதி மற்றும் மத மயக்கங்களில் அமுங்கியும் போய்க்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் இரண்டு கால்களிலும் வீக்கம் ஏற்பட்டு வருவது இதனால்தான்.

என்ன வளம் இல்லை? எல்லா இயற்கை வளங்களும் இருக்கின்றன. அதைவிடக் கூடுதலாக மனிதவளமும் இருக்கிறது. ஆனாலும் தமிழ்நாடு பக்கவாதத்தில் கிடக்கிறது. காரணம், ஒட்டுமொத்த இலக்கு இல்லை.

`தமிழனாகப் பிரிந்துவிடக் கூடாது என்பதால், மதமாகச் சேர்ந்தார்கள்.

தமிழனாகச் சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, சாதியாகப் பிரிந்தார்கள்'
- என்றார் அறிவுமதி.

இத்தகைய பிரிவினைகளில் இருந்து விடுபடுவதே வெள்ளிவிழா ஆண்டின் சபதமாக இருக்க முடியும். தமிழ் நிலம் சேர்ந்தோம். தமிழ்க் குணம் சேர்த்தோம் இல்லை. தமிழ்நாடு எனப் பேரு வைத்தோம். தமிழ்ச் சிந்தனைக்குச் சோறு வைத்தோம் இல்லை. தமிழ்நாட்டின் பெருமை, வார்த்தைகளில் இல்லை... வாழ்வதில் இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism