Published:Updated:

ஆசை... - நான் சொன்னதும் மழை வந்துச்சா..!

ஆசை... - நான் சொன்னதும் மழை வந்துச்சா..!
பிரீமியம் ஸ்டோரி
ஆசை... - நான் சொன்னதும் மழை வந்துச்சா..!

பரிசல் கிருஷ்ணா, படங்கள்: உ.கிரண் குமார்

ஆசை... - நான் சொன்னதும் மழை வந்துச்சா..!

பரிசல் கிருஷ்ணா, படங்கள்: உ.கிரண் குமார்

Published:Updated:
ஆசை... - நான் சொன்னதும் மழை வந்துச்சா..!
பிரீமியம் ஸ்டோரி
ஆசை... - நான் சொன்னதும் மழை வந்துச்சா..!
ஆசை... - நான் சொன்னதும் மழை வந்துச்சா..!

‘மழை  எப்பவுமே எனக்குப் பிடிக்கும். ஆனா,  ஆசைப்படுற அளவுக்கு நான் நனைஞ்சதே இல்லை. நான் நனையணும்னா, நான் சொன்னதும் மழை வரணும்... வருமா?’ - இது அக்‌ஷயா, aasai@vikatan.com-க்கு அனுப்பிய குட்டிச் சுட்டி ஆசை.

`மழைதானே... வரவெச்சுடலாம்’ என்று தயார் ஆனோம்.

அக்‌ஷயாவுக்கு, சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணி. அம்மா வளர்மதி, ஹோம் மேக்கர். அப்பா,  பிசினஸ்மேன். ஒரே தம்பி காருண், பத்தாவது படிக்கிறார்.

அக்‌ஷயாவின் ஆசைக்கு `ஓ.கே’ சொல்லிவிட்டாலும், அதற்குப் பிறகு மழை ஏற்பாடுகளைச் செய்வ தற்குள் நிஜமாகவே கண்களில் மழை வந்துவிடுமோ என கலங்கடித்துவிட்டன வேலைகள். 

`‘ரெய்ன் எஃபெக்ட்டா சார்... என்ன படம், எவ்ளோ நாள் ஷூட்டிங்?, `சாங்’னா சொன்னதைவிட அதிக நாளாகுமே, லொக்கேஷன் சென்னையா... வெளியூரா?’’ - கேள்வி மேல் கேள்வி கேட்டுத் தொப்பலாக நனைத்துவிட்டார் ‘ரெய்ன் எஃபெக்ட்’ ஏழுமலை.

ஆசை... - நான் சொன்னதும் மழை வந்துச்சா..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘`நாளைக்குக் காலையில பெசன்ட் நகர்  வாங்க... சொல்றோம்’’ என்றோம்.

பெசன்ட் நகர், கலாக்ஷேத்ரா காலனி, பார்வதி தெருவில் இருக்கிறது அக்‌ஷயாவின் அப்பார்ட்மென்ட். ‘ஞாயிறு அன்னைக்குக்கூட, யார் இது?’ என்ற சலிப்போடுதான் கதவைத் திறந்தார் அக்‌ஷயா. ``மழை வரணும்னு ஆசைப்பட்டீங்கள்ல... ரெடியா?’’ என்றோம். வெளியே அடிக்கிற வெயிலை எட்டிப் பார்த்துவிட்டு, `‘என்னது இப்ப மழை வருமா?’’ என்றார் ஆர்வமாக.

``இருங்க வர்றேன்’’ என்று குதித்தோடி உள்ளே போனவர் உடைமாற்றிக்கொண்டு (ஆமாம்... மழையில நனையிறதுக்கு மேக்கப் எதுக்கு?) சுற்றுமுற்றும் பார்த்தபடியே வந்தார். யாரையோ போனில் அழைத்தார். கொஞ்ச நேரத்தில் ஒரு பெண் எதிரில் வந்தார்.

‘`ப்ரியா ஆன்ட்டி... இப்ப மழை வரணுமா?’’ என்றார். `‘வந்தா நல்லாத்தான் இருக்கும்’’ என்றவர் நம்மைப் பார்த்துவிட்டு அக்‌ஷயாவிடம் ‘`என்ன நடக்குது?’’ என்றார். `‘இப்ப நான் சொன்னா மழை வரும்’’ என்ற அக்‌ஷயாவிடம்,

‘`இரு, ஜஸ்மிதாவைக் கூப்பிடுறேன்’’ என்று விளையாடிக்கொண்டிருந்த மகளை அழைத்தார்.

கொஞ்ச நேரத்தில் குழந்தைகள் சிலர் ஓடி வந்தனர்.  என்ன விஷயம் என்று விசாரித்துத் தெரிந்துகொண்டு, `‘மழை வரப்போகுதாம். இந்த அக்கா சொன்னா வருமாம்’' என்று  உற்சாகமானார்கள். `‘இரு... நான் சஹானாவைக் கூப்பிடுறேன். அவளுக்கு மழைன்னா ரொம்பப் பிடிக்கும். நீரஜ் எங்கேடா... நந்தினி அக்கா எங்கே, டேய் ராஉல்... (பேரு தப்புனு நினைக்காதீங்க பாஸ். அவர் ராஉல்தான்... ராகுல் அல்ல)’’ என்று ஒரு கல்யாண மண்டப மூடுக்கு செட்டாகிவிட்டனர் குட்டீஸ்.

வீடியோ கேமராவைப் பார்த்ததும், `‘சும்மா மழை வரும்னு எடுத்துட்டு கிராஃபிக்ஸ்ல மழை வர்ற மாதிரி பண்ணுவாங்கடா’’ என்றது ஒரு வாண்டு. `‘ஐ... கேமராவா? நான் `தெறி’ படத்துல நடிச்சிருக்கேன்’’ என்றார் ஒரு சுட்டிப்பெண்.  ``சும்மா... தூரமா கூட்டத்துல நின்னா அங்கிள்’’ என்று கலாய்த்தது இன்னொரு சுட்டி.

ஆசை... - நான் சொன்னதும் மழை வந்துச்சா..!

அதற்குள் மழைக்கு லொக்கேஷன் பார்க்க ஆரம்பித்தார் அக்‌ஷயா.

``நிஜம்மா சொல்றீங்களானு தெரியலை. இருந்தாலும் எங்கே மழை வரணும்னு நான் இடம் பார்க்கிறது... ஜாலியா இருக்கு’’ என்று வெளியில் வந்து நின்றவர், `‘இங்கே வந்தா நல்லா இருக்குமா?’’ என்றார். `‘அதை நீங்கதான் முடிவுபண்ணணும்’’ என்றோம். உடனே ஒரு குட்டி ‘`ஐ... இங்கே ஓ.கே’’ என்று பெர்மிஷன் கொடுக்க ‘`அச்சச்சோ... அப்பா கார் கவர் போடாம நிக்கிதே... இங்கே மழை வந்தா அப்பா திட்டுவாரே’’ என்றது ஒரு சுட்டி.

ரெய்ன் எஃபெக்ட் ஏழுமலை, யாருக்கும் தெரியாமல் எங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தார். அக்‌ஷயா ஓர் இடத்தில் நிலை கொள்வதைப் பார்த்ததும் அவசரமாக, அவருக்குத் தெரியாமல்  ரெய்ன் எஃபெக்ட்  முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். காருக்குப் பின்னால் மோட்டாரை செட் செய்தார்.

அக்‌ஷயா நின்ற இடம்  நடுரோடு. மேலே பார்த்தார். வெயில் சுளீரென முகத்தில் அடித்தது.  ``இப்படி வெயில் அடிக்கிறப்ப, ச்சில்னு மழை பெய்யணும்னு நிறையத் தடவை நினைச்சிருக்கேன்’’ என்றார். மீண்டும் மேலே பார்த்தவர், ‘`வெயில் ஜாஸ்தியாகுது. நிஜம்மா இப்ப மழை வருமா?’’ என்று டவுட்டானார்.

``சரி போதும்... மழையைக் கூப்பிடுங்க’’ என்றதும், சிரித்துக்கொண்டே மேலே பார்த்தார். சரசரவென மழை பொழிய ஆரம்பித்தது. நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் உற்சாகத் துள்ளல் போட ஆரம்பித்தார். சற்றுத் தள்ளி நின்றிருந்த சுட்டீஸை `‘வாங்க... வாங்க...’’ என்று அழைத்தார். அவ்வளவுதான். அனுமதி கிடைத்ததும் ‘ஓஓஓஓஓ’ என்று ஆர்ப்பரித்துக்கொண்டே மழைக்குள் புகுந்தனர் மழலைகள். கத்திக் கூப்பாடு போட்டுக் கொண்டே குதிக்க ஆரம்பித்தனர். ‘`மழை... மழை... ஏ... நிஜம்மா மழை பெய்யுதுடீ!’’ என்று கத்தினர். தூரத்தில் சுட்டிக்காட்டி ‘`ஏ... அங்கே மழை இல்லை... இங்கே இருக்கு. சூப்பர்ல?’’ என்றனர். அக்‌ஷயாவைச் சுற்றி ஓடி விளையாடினர். அக்‌ஷயாவைவிட அதிகமாக குட்டீஸ் மழையை ரசித்து விளையாட ஆரம்பித்தார்கள்.

நேரம் அதிகமாக, தெருவில் வாகன ஓட்டிகள் இரண்டு புறங்களிலும் நின்று ‘`எப்படி நடுரோட்ல மட்டும் மழை வருது?’’ என்று பார்க்க ஆரம்பித் தார்கள். கூட்டம் சேருவதுபோலிருக்கவே, ‘`நீங்க சொன்னாத்தான் மழை நிக்கும்’’ என்றோம். அதெல்லாம் காதில் விழவே விழாததுபோல குழந்தைகளோடு குழந்தையாகிவிட்டார் அக்‌ஷயா. சிறிது நேரத்தில் `‘அவனுக்கு கோல்டு... இவளுக்குக் காய்ச்சல் வந்துடப் போகுது’’ என்று அம்மாக்கள் வந்துவிட, அக்‌ஷயா `போதும்’ என்று சைகை காட்டினார். நின்றது மழை.

ஆசை... - நான் சொன்னதும் மழை வந்துச்சா..!

``மழையில நனையிறதுன்னாலே எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா என்ன... மழை வர்றப்ப ஆபீஸ்ல வேலை செஞ்சுட்டிருப்பேன். இல்லன்னா வீட்ல தூங்கிட்டிருப்பேன். நான் சொன்னா மழை வரணும்னு அடிக்கடி நினைக்கிறது உண்டு. வி.ஐ.பி சம்பந்தப்பட்ட ஆசைகள் மட்டும்தான், `ஆனந்த விகடன்’ல நிறைவேத்துவாங்கன்னு நினைச்சேன். இருந்தாலும் மெயில் அனுப்புவோமேன்னு அனுப்பினேன். இப்படி உடனேயே நிறைவேத்துவாங்கன்னு நினைக்கலை. ரொம்ப ஹேப்பியா இருக்கு. இந்தத் தீபாவளி எனக்கு ரொம்ப ஸ்பெஷலாகிடுச்சு. ஆனந்த விகடனுக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப தேங்கஸ்!’’ என்று மழையில் நனைந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார் அக்‌ஷயா.

ஒருவித தயக்கத்தோடு ஓரத்தில் நின்று கொண்டிருந்த பெண்கள் ‘நாமளும் நனைஞ்சிருக்கலாமோ?’

 என்று நினைத்துக் கொண்டிருப்பது அவர்களின்  முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. மழை எப்படியும் எப்போதும் வரலாம். ஆனால், அதில் நனைந்தாடும் மனது ஒரு சிலருக்குத்தானே வாய்க்கிறது.

மனமிருந்தால் மழை உண்டு!

வாசகர்களே... இதுபோல உங்களுக்குள்ளும் சின்னச்சின்ன ஆசைகள் ஒளிந்திருக்கலாம். ஜாலியான, ரசனையான, காமெடியான ஆசைகளை எழுதி அனுப்புங்கள். ஆசிரியர் குழுவினரின் பரிசீலனையில் தேர்வாகும் ஆசைகளை, விகடன் நிறைவேற்றித் தருவான். உங்கள் ஆசைகளை அனுப்பவேண்டிய முகவரி...

ஆசை,
ஆனந்த விகடன்,
757, அண்ணா சாலை,
சென்னை - 600 002.
இ-மெயில்: aasai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism