Published:Updated:

தோனிக்கு என்ன ஆச்சு?

தோனிக்கு என்ன ஆச்சு?
பிரீமியம் ஸ்டோரி
தோனிக்கு என்ன ஆச்சு?

தா.ரமேஷ்

தோனிக்கு என்ன ஆச்சு?

தா.ரமேஷ்

Published:Updated:
தோனிக்கு என்ன ஆச்சு?
பிரீமியம் ஸ்டோரி
தோனிக்கு என்ன ஆச்சு?
தோனிக்கு என்ன ஆச்சு?

ந்திய கிரிக்கெட் அணிக்குள் மீண்டும் ஓர் அசாதாரண சூழல். டெஸ்ட் அணிக்கு கேப்டன் கோஹ்லி; ஒரு நாள், 20-20 அணிக்கு கேப்டன் தோனி என்ற பாகப்பிரிவினை நடந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், `எதற்கு இப்போது இரண்டு கேப்டன்கள்?’  என்ற கேள்வி எழுந்திருக்கிறது. `இந்தியாவை உலகின் நம்பர் 1 அணியாக கோஹ்லி கொண்டுவந்துவிட்டார். மீண்டும் தோனி எதற்கு?’ என்பதுதான் விமர்சகர்கள் கேட்கும் கேள்வி. உண்மையிலேயே ஒரு நாள், 20-20 போட்டிகளுக்கு மட்டும் தலைமைதாங்க தோனி வேண்டுமா?

கேப்டன் சார்!

நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாள், தர்மசாலா மைதானத்தில் இந்திய அணி பயிற்சி செய்துகொண்டிருந்தது. நெட் பிராக்டிஸ் எடுத்துக்கொண்டிருந்தார் ஒரு நாள் அணியின் கேப்டன் தோனி. போலீஸாரும் துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்களும் மட்டுமே, அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்... அதுவும் ஆர்வம் இல்லாமல்.

திடீரென ``ஹமாரா கேப்டன் சாப் ஆகயா!'' (நம்ம கேப்டன் வந்துட்டார்) என செக்யூரிட்டி ஒருவர் கத்த, அவர் கை நீட்டிய திசையில் பார்த்தால்... விராட் கோஹ்லி. சட்டென மாறியது சூழல். டெஸ்ட்டில் நியூஸிலாந்தை ஒயிட்வாஷ் செய்து, உலக அரங்கில் இந்திய அணியை நம்பர் 1 வரிசையில் அமர்த்தியதன் எதிரொலி அது. அந்த செக்யூரிட்டிக்குத் தெரியவில்லை... தோனிதான் ஒரு நாள் போட்டிகள் அணியின் கேப்டன், கோஹ்லி அல்ல என்று.

கவாஸ்கர்... அவருக்குப் பிறகு கபில்தேவ், சச்சின், தோனி... இப்போது கோஹ்லி என சீஸன் மாறிவிட்டது என்பதுதான் இதன் அர்த்தம். ராகுல் டிராவிட்டின் வார்த்தைகளில் சொல்வதானால், `இட் ஹேப்பன்ஸ்!’

தோனிக்கு என்ன ஆச்சு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தோனிக்கு என்ன ஆச்சு?

கேப்டனாக நீடிக்க வேண்டும் என்பதைவிட, ஒரு வீரராக அணிக்குள் தன் இடத்தைத் தக்கவைக்கவே போராடுகிறார் தோனி.  கடந்த ஆண்டு உலகக்கோப்பை அரை இறுதி வெளியேற்றத்துக்குப் பிறகு, வங்கதேசம், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளிடம் தோனி தலைமையில் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. இந்த நிலையில்தான் இந்தியா வந்த நியூஸிலாந்து அணியை, டெஸ்ட் தொடரில் 3-0 என கோஹ்லி ஓடவிட, 5-0 என ஒரு நாள் தொடரைக் கைப்பற்றவேண்டிய கட்டாயம் தோனிக்கு. ஆனால், இரண்டாவது போட்டியே தோனியின் ஆசையில் மண்ணை வாரிப் போட்டுவிட்டது. அந்தப் போட்டியின் தோல்விக்கு, தோனியே ஒரு காரணம் ஆகிவிட்டதுதான் சோகம்.  

பலங்களே பலவீனம்!

பெஸ்ட் ஃபினிஷர் என்பதுதான் தோனியின் அடையாளம். ஆட்டம் தோல்வியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தாலும், கூலாக நிற்பார் தோனி. ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் சிக்ஸரும் பௌண்டரியுமாக விளாசி வெற்றிபெறவைப்பது தோனி ஸ்டைல். ஆனால், அந்த ஃபினிஷிங் டச் இப்போது தோனியிடம் இல்லை. மாறாக வெற்றி என்றால் வெற்றி மட்டும்தான் என, ஆட்டத்தில் ஏற்றம் இறக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்வது கோஹ்லி ஸ்டைல். வெற்றிக்காக ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆடுவார்; பெளலர்களை மாற்றுவார்; விக்கெட்டுகள்  தொடர்ந்து விழுந்துகொண்டே இருக்கும். இந்த அப்ரோச்தான் கோஹ்லி தலைமையிலான அணி டெஸ்ட்டில் வெற்றிபெறக் காரணம். எதிர் அணி பேட்ஸ்மேன் தவறுசெய்யும் வரை பொறுத்திருந்து விக்கெட்டை வீழ்த்தும் தோனியின் அணுகுமுறை கோஹ்லியிடம் கொஞ்சமும் கிடையாது. ஆரம்பத்தில் இருந்தே அட்டாக்தான்.

 வேகப்பந்தில் கவனம்!

இவ்வளவு திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இருக்கிறார்களா என சந்தேகத்தை எழுப்பியுள்ளது, நியூஸிலாந்துக்கு எதிரான பெர்ஃபாமன்ஸ். அஷ்வினும் ஜடேஜாவும்தான் டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்றுத்தந்தார்கள் என்றாலும் ஷமி, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் ஆகியோர் தோனியின் கேப்டன்ஸியில் சிறப்பாகப் பந்து வீசியதைவிட, கோஹ்லியின் கேப்டன்ஸியில் கெத்துகாட்டியிருக்கிறார்கள். இஷாந்த் ஷர்மா இலங்கையில் பேய்வேகம் காட்டியதும், ஷமி கொல்கத்தாவில் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களைக் கதறடித்ததும் கோஹ்லியின் கேப்டன்ஸியில்தான்.

தோனிக்கு என்ன ஆச்சு?

லீடருக்கு நடுக்கம்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கேப்டனாக கோஹ்லியின் பேட்டிங் பெர்ஃபாமன்ஸையும், கேப்டனாக தோனியின் பெர்ஃபாமன்ஸையும் முன்வைத்தால் முடிவுகள் கோஹ்லியின் பக்கமே.  கேப்டனாக கோஹ்லி பொறுப்பேற்று ஆடிய 17 டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லியின் மொத்த ரன்கள் 1,456. இதில் இரண்டு இரட்டை சதங்களும் அடக்கம். பேட்டிங் ஆவரேஜ் 53.92. கேப்டன் ஆவதற்கு முன்னர் கோஹ்லியின் பேட்டிங் ஆவரேஜ் 45.56 மட்டுமே.

மாறாக 5, 6, 7 என பேட்டிங் வரிசையில் மேலே ஏற முயற்சித்து கீழ் இறங்கிய தோனியின் 2016-ம் ஆண்டின் பேட்டிங் ஆவரேஜ் வெறும் 20.85. நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி வரை, 10 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள தோனியின் அதிகபட்ச ரன் எவ்வளவு தெரியுமா? வெறும் 39 மட்டுமே.

சர்ப்ரைஸ்கள் கிடையாது!


தோனியின் கேப்டன்ஸியில் எப்போதுமே சர்ப்ரைஸ்கள் இருக்கும். நன்றாகப் பந்து வீசும் அஷ்வின் திடீரென ஒரு போட்டியில் இருக்க மாட்டார். ஷிகர் தவானுக்குப் பதிலாக ரஹானே இருப்பார். திடீரென அவுட் ஆஃப் ஃபார்மில் இருக்கும் பேட்ஸ்மேன் டாப் ஆர்டரில் இறக்கிவிடப்படுவார் என சர்ப்ரைஸ்கள் கொடுப்பார் தோனி. இந்த அதிரடி முடிவுகள் 2011-ம் ஆண்டு ஒரு நாள் உலகக்கோப்பை வரை தோனிக்குப் பலன் அளித்தது. அதன் பிறகு கடந்த ஐந்து வருடங்களாக, அதிரடி மூவ்கள் எல்லாமே தோனிக்கு மட்டும் அல்ல இந்திய ரசிகர்களுக்கும் ஏமாற்றமே.

தோனிக்கு என்ன ஆச்சு?

வெற்றியே இலக்கு!

வெற்றிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எவ்வளவு பந்து வீச்சாளர்களை வேண்டுமானாலும் களம் இறக்கலாம், வெற்றி மட்டுமே இலக்கு என்ற ஆக்ரோஷ விதையை கோஹ்லி இந்திய அணிக்குள் விதைத்துவிட்டார். இனிமேலும் தோனியின் சாஃப்ட் அப்ரோச் அணிக்குள்ளேயே எடுபடாது என்பதையே ஒரு நாள் போட்டி முடிவுகள் காட்டுகின்றன.

கேப்டனாகப் பொறுப்பேற்று விளையாடிய 17 டெஸ்ட் போட்டிகளில் 10 போட்டிகளில் வெற்றியின் சுவையைக் காட்டியிருக்கிறார் கோஹ்லி. மாறாக தோல்வி அடைந்தாலும் பிரச்னை இல்லை. அடுத்த போட்டியில் பார்த்துக்கொள்ளலாம் என்ற பக்குவ பதார்த்தமாகவே தோனி தொடர்வது, அணிக்குள் பலவீனத்தை ஏற்படுத்துகிறது.

பாதியில் ஓய்வு!


டெஸ்ட் தொடரின் பாதியிலேயே ஓய்வை அறிவித்ததுபோல, ஒரு நாள் தொடரின் பாதியில்  தோனி ஓய்வை அறிவிக்கக் கூடாது என்பதுதான் ரசிகர்கள் அனைவரது விருப்பமும்.  இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராஃபிதான் தோனிக்குக் கடைசி சோதனையாக இருக்கும் எனச் சொல்லப்பட்டது. ஆனால், தோனி இந்த ஆண்டே அணியில் இருந்து கழற்றிவிடப்படுவாரோ என்ற அச்சம் இப்போது எழுந்திருக்கிறது. 

கடந்த மார்ச் மாதம் 20-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததும், பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் தோனி. அப்போது ஆஸ்திரேலிய நிருபர் ஒருவர், `இந்தத் தோல்விக்குப் பிறகு தொடர்ந்து விளையாட விரும்புகிறீர்களா?' எனக் கேட்டார்.  இந்தக் கேள்வியை எதிர்பார்த்தே வந்த தோனி, அந்த நிருபரை மேடைக்கு அழைத்து அருகில் உட்காரவைத்து `ஓர் இந்திய நிருபர்தான் இந்தக் கேள்வியைக் கேட்பார் என எதிர்பார்த்தேன். ஆனால், நீங்கள் கேட்டுவிட்டீர்கள். நான் ஃபிட்டாக இல்லாதது போல் நினைக்கிறீர்களா? நான் ஓடுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 2019-ம் ஆண்டு ஒரு நாள் உலகக்கோப்பை வரை, நான் அணியில் இருக்கத் தகுதியுள்ளவன் என நினைக்கிறீர்களா? என தொடர்கேள்விகள் கேட்டார். நிருபர், `யெஸ்... யெஸ்!, ’ என எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல, `கைகளை உயர்த்தி நீங்களே சொல்லிவிட்டீர்கள்’ என நிருபர்களைப் பார்த்துப் புன்னகைத்தார் தோனி.

2019-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணிக்குத் தலைமைதாங்கி கோப்பையை வென்றுதந்துவிட்டு, ஓய்வுபெற வேண்டும் என்பது தோனியின் கனவு. ஆனால் அது நிறைவேற தோனி கனவு கண்டால் மட்டுமே போதாது. இரண்டு உலகக்கோப்பைகள் வென்றுதந்த கேப்டன் என்றாலும், களத்தில் தன்னைக் கட்டாயம் நிரூபித்தால் மட்டுமே அவர் அணியில் தொடர்வார். இல்லை என்றால் இனி பயோ பிக்கில் மட்டுமே தோனியைப் பார்க்கவேண்டியிருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism