Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 20

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 20
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 20

ம.செந்தமிழன், படம்: சி.சுரேஷ் பாபு

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 20

ம.செந்தமிழன், படம்: சி.சுரேஷ் பாபு

Published:Updated:
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 20
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 20
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 20

வாழும் உரிமை, ஒவ்வோர் உயிருக்கும் உண்டு. உயிர் வாழ்வதும், நலமாக வாழ்வதும் அரசுகள் அளிக்கும் சலுகைகளால் அல்ல. நல்ல வாழ்க்கை வேண்டும் என்பதற்காக, நாம்தான் அரசுகளை உருவாக்கி வைத்திருக்கிறோம். நலமான வாழ்க்கை, சரியான உணவு, தரமான சூழல் ஆகிய மூன்றும் நிறுவனங்கள் வழங்கும் சேவைகள் அல்ல. நாம்தான் அந்த நிறுவனங்களை வாழவைத்துவருகிறோம். எல்லா அண்டங்களையும் படைத்த பேராற்றலால்தான் நாமும் படைக்கப்பட்டுள்ளோம். எவருடைய கருணையிலும் நாம் வாழவில்லை, எவருடைய கண்டுபிடிப்புகளாலும் நாம் மூச்சுவிடுவது இல்லை.

`முதலில், உங்களை தனி உயிராக உணரத் தொடங்குங்கள்’ என்ற கருத்தை உங்களிடம் பதிவுசெய்ய விரும்புகிறேன். மனிதர்களைத் தவிர மற்ற எல்லா உயிர்களும் இவ்வாறுதான் சுதந்திரமாக வாழ்கின்றன. நவீன மனிதர்களின் பெரும் பகுதியினர் இந்தச் சுதந்திரத்தை முற்றிலும் இழந்து நிற்கின்றனர். இதைக் காட்டிலும் மோசமான அடிமைத்தனம் வரலாற்றின் முன்பகுதிகளில்கூட நிலவவில்லை.

ஒரு கவளம் சோறு உங்கள் வயிற்றுக்குள் நுழைவதற்குக் கூட, பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கப்பம் செலுத்த வேண்டியுள்ளது. நவீன விவசாயிகளால், தமக்கான விதைகளைக்கூட சொந்தமாகச் சேர்த்துவைக்க முடிய வில்லை. விதைப்பில் தொடங்கி, பராமரிப்பு, அறுவடை, சேகரிப்பு, விற்பனை வரையில் நஞ்சுக்களின் ஆதிக்கம் மிகுந்த செயல்முறைகள் எல்லா உணவுகளிலும் இருக்கின்றன.

ஒருவர் இன்று எவ்வளவு படித்திருந்தாலும், எவ்வளவு செல்வம் வைத்திருந்தாலும், அதிகாரம் படைத்திருந் தாலும், மருத்துவமனைகள், மருந்துகள் துணையுடன்தான் இருக்கிறார். என்ன சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும், எப்போது படுக்க வேண்டும், எப்போது மலம் கழிக்கலாம், சிறுநீர் கழிக்கலாம் போன்ற முடிவுகளை எல்லாம் மருத்துவர்களிடம் ஒப்படைத்த மனிதர்கள், உங்களைச் சுற்றிலும் இருப்பதைக் கவனியுங்கள்.

உறங்குவதற்கு மாத்திரை, உடலுறவுக்கு மாத்திரை, பசிக்கு மாத்திரை, உணவு செரிக்க மாத்திரை, வாந்தியைத் தடுக்க மாத்திரை, மலம் கழிக்கவும் மருந்து, மலத்தை இறுகச்செய்யவும் மருந்து, மாதவிலக்கு வெளியாக ஊசி, மாதவிலக்கு உதிரத்தை அடைத்துவைக்க ஊசி என, எல்லாம் மருந்துமயம் ஆகியதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா? இப்போதைய மனிதர்கள், பழம் சாப்பிட அஞ்சுகிறார்கள்; மாத்திரைகளை கவலையே இல்லாமல் விழுங்குகிறார்கள். மனிதகுல வரலாற்றில் இந்த மாதிரியான அவலச் சூழல் நிலவியதே இல்லை.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 20

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாழ்க்கையை வாழும் சுதந்திரத்தின் மீது உங்களுக்கு விருப்பம் வேண்டும். நம் அனைவருக்குமான நல்ல உணவு இங்கே படைக்கப்பட்டுள்ளது. நம் அனைவருக்குமான நோய் எதிர்ப்பாற்றல், அந்த உணவுகளிலும் நம்மைச் சுற்றி வாழும் சக உயிர்களிலும் பொதிக்கப் பட்டுள்ளது. \தாவரங்களின் மூச்சுதான் நமக்கு உயிர்க் காற்று. கடல்களின் சுவாசம்தான் பூமிக்கான உயிர்க் காற்றையும் மழையையும் உற்பத்தி செய்கிறது. நமக்கான நீர், வானில் இருந்து எல்லா சத்துக்களையும் உள்ளடக்கி வந்து விழுகிறது. இவை போதும் நமக்கு.

இவ்வாறான கருத்துக்களைப் படிக்கும்போது எல்லாம் நவீனர்களின் சிந்தனையில் ஒரு மாயத் தகவல் வந்து அமர்கிறது. அந்த மாயக் கருத்துதான் கடந்த நூற்றாண்டின் பாவங்களை எல்லாம் ஆகச்சிறந்த புண்ணியங்கள் என நம்பவைக்கிறது. `நவீன அறிவியல் மற்றும் மருத்துவத்தினால்தான் மனிதர்களின் ஆயுள் அதிகரித்துள்ளது’ என்பதுதான் அந்த மாயக் கருத்து.

`சான்றுகளின் அடிப்படையிலான முடிவு’ (Evidence based decision) என்ற வாசகத்தை நவீன மேதைகள் எல்லா துறைகளிலும் பரவவிட்டிருக்கிறார்கள். மரபுவழிப்பட்ட எந்தக் கருத்தை முன்வைத்தாலும் ‘இதற்கெல்லாம் சான்றுகள் இருக்கின்றனவா?’ எனக் கேட்பது அவர்களது பகுத்தறிவுப் பண்பு. `நவீனக் கொள்கைகளால்தான் மனிதர்களின் ஆயுள் அதிகரித்துள்ளது’ என்ற மாயக் கருத்தையும் அவர்கள் ஒரு புள்ளிவிவரத்தால் நிறுவிக்கொண்டுள்ளர். இந்தப் புள்ளிவிவரத்தை நீங்கள் நிச்சயமாகக் கடந்து வந்திருப்பீர்கள். ஏனெனில், இந்தப் புள்ளிவிவரத்தை வைத்துத்தான் அவர்கள் தமது வெறியாட்டங்களை எல்லாம் வெற்றிகரமாக நிகழ்த்திக்கொண்டுள்ளனர்.

`இந்தியாவில் 1960-ம் ஆண்டு மனிதர்களின் சராசரி ஆயுள் 40. 2016-ம் ஆண்டு, சராசரி ஆயுள் 68.’

அதாவது கடந்த 56 ஆண்டுகளில் நமது சந்ததியினரின் ஆயுளை ஏறத்தாழ 28 ஆண்டுகளுக்கு உயர்த்தி இருக்கிறார்கள் நவீன மேதைகள். இந்தப் புள்ளிவிவரத்தின் மீது ஒரே ஒரு கேள்விகூட கேட்காமல் படித்த சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

நாம் உண்மையான அறிவை நாடுவோம். `எப்பொருளை எவர் கூறினாலும் அப்பொருளில் மெய்ப்பொருளைத் தேடுவதற்குப் பெயர்தான் அறிவு’ என்ற திருவள்ளுவரின் வழி நின்று இந்தத் தகவலைப் பார்ப்போம்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 20

ஒரு காகிதத்தை எடுத்துக்கொண்டு, உங்கள் பெற்றோர், பாட்டன் – பாட்டி, உங்கள் சொந்த ஊரில் வாழ்ந்த முதியோர் பெயர்களை எல்லாம் எழுதுங்கள். நினைவில் உள்ள எவரையும் விட்டுவிடாமல் அனைவரது பெயர்களையும் எழுதுங்கள். இந்தப் பட்டியலில், இறந்துபோனவர்கள் பெயர்களை மட்டும் அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள். அந்தப் பெயர்களுக்கும் அருகே, அவர்கள் இறக்கும் போது என்ன வயது என்பதைக் குறிப்பிடுங்கள். நவீன மேதைகளின் மாயக் கருத்தின்படி, உங்கள் பட்டியலில் 40 வயதில் இறந்தோர் எண்ணிக்கைதான் மிகையாக இருக்க வேண்டும். அப்படி இருக்கிறதா எனப் பாருங்கள்.

அடுத்ததாகச் செய்யவேண்டியதுதான் நமது மெய்யறிவு நாடுதலின் முக்கியமான செயல். உங்கள் பட்டியலில் உள்ள இறந்தோர் பெயர்களின் கீழே, அவர்களுடைய இறப்புச் சான்றிதழ் (Death Certificate) பதிவு எண்ணைக் குறிப்பிடுங்கள்.

1960-ம் ஆண்டும் அதற்கு முன்னரும் இறந்தோரின் பெயர்களோடு அவர்களது இறப்புச் சான்றிதழை இணைப்பது எளிதில் இயலாத செயல். ஏனெனில், அந்தக் காலத்தில் கிராமங்களில் இறந்தோருக்கு இறப்புச் சான்றிதழ் பெறும் வழக்கமே இல்லை. வெகுசிலர் விதிவிலக்காக அந்தச் சான்றிதழை வாங்கினர். அவர்களிலும் பெரும்பாலானோர் அரசின் நலத்திட்டங்களுக்காக மட்டுமே சான்றிதழ் பெற்றனர். இயற்கையான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்து, நவீனத்தின் சாயல் இல்லாமல் வாழ்ந்த நமது முன்னோரில் எவருக்கு இறப்புச் சான்றிதழ் உள்ளது?

குடும்ப அட்டைகளைக்கூட வாங்காமல் வாழ்ந்தவர்கள் அந்தக் காலத்தில்தான் அதிகம் இருந்தனர். எந்த மானியமும் வேண்டாம், இலவசமும் வேண்டாம் என்ற மரபுத் திமிருடன் வாழ்ந்த சமூகம் நம்முடையது என்பதை நினைவில்கொள்ளுங்கள். அரசாங்கத்தின் பதிவுகளுக்குள்ளேயே வராத மக்கள் மிகுதியாக வாழ்ந்த காலம் அது. குழந்தை பிறந்ததும் ‘பிறப்புச் சான்றிதழ்’ வாங்குவதும், மரணத்தின் போது ‘இறப்புச் சான்றிதழ்’ வாங்குவதும் இந்தக் காலச் சமூகத்தின் நடைமுறைகள். ஏனெனில், இப்போது பிள்ளைகள் பிறப்பதும் மருத்துவமனைகளில், மரணங்கள் நிகழ்வதும் மருத்துவமனைகளில் என்றாகிவிட்டது.

50 ஆண்டுகளுக்கு முன்னால், இந்த நாட்டில் எத்தனை மருத்துவமனைகள் இருந்தன? அந்தக் காலத்தில் பிறந்த பிள்ளைகளின் எண்ணிக்கையை முழுமையாக அரசுப் பதிவுகளுக்குள் கொண்டுவர இயலவில்லை. எந்தப் பதிவுகளிலும் வராத மக்கள் அதிகமாக இருந்த காலத்தில், `சராசரி ஆயுள் 40 ஆண்டுகள்தான்’ எனக் கூறுவதற்கு துணிச்சல் வேண்டும். நவீன மேதைகளின் துணிவுக்கு எல்லையே இல்லை.

நான் ஊகம் செய்து எழுதவில்லை. நேரடியாகவே கேட்கிறேன், நீங்களும் நேரடியான கேள்விகளை எழுப்புங்கள். `எனது ஊர் ஆச்சாம்பட்டி. கடந்த 1960 முதல் 2015 வரையிலான காலத்தில் என் ஊரில் வாழ்ந்து மறைந்த மனிதர்களின் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வேண்டும்’ என அரசிடம் முறையிட்டால், என்ன நடக்கும்? இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்து மறைந்தோர் அனைவரின் சான்றிதழ்களையும் அதிகாரிகள் முன்வைப்பார்களா என்ன? அவ்வாறான சான்றுகளே இல்லை என்பதுதான் நடைமுறை உண்மை.

பல இடங்களில், விளைநிலங்களை விற்பனை செய்வதற்கு முன்னர், நிலத்தின் உரிமையாளர் பெயரைப் பார்த்தால், 30 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்தவர் பெயர் இருக்கிறது. அவரது பெயரை மாற்றி, அந்த நிலத்தின் உரிமையாளர்களாக அவரது பிள்ளைகள் பெயர்களைச் சேர்ப்பதற்கு ஏராளமான நடைமுறைகள் உள்ளன. பத்திரப்பதிவு அலுவலகங்களிலும், வட்டாட்சியர் அலுவலகங் களிலும் சென்று பாருங்கள். முன்னோர்களின் இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான கூட்டம் அலைமோதுகிறது. ஏனெனில், எவருக்கும் இறப்புச் சான்றிதழ் இல்லை. அவ்வாறான நடைமுறை அந்தக் காலத்தில் இல்லை.

இறப்புச் சான்றிதழே அதிகம் இல்லாத காலத்தில், மக்களின் ஆயுள்காலம் எத்தனை ஆண்டுகளாக இருந்தது எனக் கூறுகிறார்களே, இவர்களது பகுத்தறிவு எவ்வளவு மேன்மையானது. `சராசரி ஆயுள் காலத்தை நாங்கள்தான் உயர்த்திக்கொண்டுள்ளோம்’ எனக் கூறும் அனைவரும், அந்தக் கருத்தை நிறுவுவதற்கான சான்றுகளை முன்வைக்க வேண்டும் அல்லவா?

நவீனப் பகுத்தறிவாளர்களுக்கும் நவீனச் சிந்தனையாளர்களுக்கும் இறை நம்பிக்கையின் மீது வெறுப்பு உண்டு. ‘உங்கள் இறையியல் கருத்துக்கள் எல்லாம் வெறும் நம்பிக்கைகள்தான். அவற்றுக்கு என சான்றுகள் இல்லை’ என்பார்கள். இறையியலில் ஊறித்திளைத்த நமது மரபின்வழி நின்று அவர்களிடம் நாம் கேட்போம், ‘நவீனத்தினால்தான் மனிதர்களின் ஆயுள் அதிகரித்துள்ளது என்கிறீர்களே… இந்தக் கருத்து அறிவியலா அல்லது நம்பிக்கையா? அறிவியல் தான் என்றால், அதற்கான சான்றுகளைக் காட்டுங்கள்!’

சராசரி ஆயுள் குறித்த அவர்களது கருத்து முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படை யிலானது. நிச்சயமாக அவர்களிடம் இதற்கான சான்று ஆதாரங்கள் இல்லை. ஆனாலும் அவர்களால் எப்படி இவ்வளவு அழுத்தமாகப் பேசவும் எழுதவும் முடிகிறது என்றால், இந்த 50 ஆண்டு காலத்தில் நமது சமூகம் அவர்களிடம் ஒருமுறைகூட கேள்வி கேட்கவில்லை என்பது தான் காரணம். ஏதேனும் ஒரு புள்ளிவிவரத்தை முன்வைத்தால், அதை அப்படியே நம்பிவிடும் மூடநம்பிக்கையைத்தான் நவீனம் வளர்த்துள்ளது.

காடுகளில் 90 வயதில் மாடு மேய்க்கும் மனிதர்களையும், 80 வயதில் மலை ஏறும் மூதாட்டிகளையும் நான் காண்கிறேன். இன்னும் நவீனம் சென்றடையாத கிராமங்களில் இவ்வாறான மனிதர்களை உங்களாலும் எளிதில் காண இயலும். மாநகரங்களில் பிறக்கும் குழந்தைகூட மூச்சுத்திணறித் தவிக்கிறது. இங்கே வாழும் முதியோரில் பெரும்பகுதியினர் மாத்திரைகளையும் மருத்துவமனைகளையும் நம்பி வாழ்கிறார்கள்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 20

மாநகரங்களின் பேரிரைச்சலில் மருத்துவ மனைகளில் தயாராகும் இறப்புச் சான்றிதழில் அச்சு இயந்திரங்களின் ஓசையும் கலந்திருக்கிறது. வீட்டுக்கு வீடு இப்போது பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் இருக்கின்றன; மருந்துகள் உள்ளன; ஆயுள்காலம் குறித்த புள்ளிவிவரங்கள் உள்ளன. அங்கு எல்லாம் நிம்மதியாக நீண்ட ஆயுளுடன் வாழும் மனிதர்களைக் காணவில்லை.

நவீனத்தின் தாக்குதல்களுக்கு முந்தைய நமது சமூகங்களில், எந்தச் சான்றிதழும் இல்லை; நோய்களும் இல்லை. நமது முன்னோர், மரபுவழிப்பட்ட உணவுப்பழக்கங்களையும் மரபு மருத்துவமுறைகளையும் கற்றவர்கள்.

இந்தக் காலச் சமூகம் இவை இரண்டையும் வீசிவிட்டு, போலித்தனமான அறிக்கைகளைக் கட்டிப்பிடித்தவாறு உறங்கச் செல்கிறது. `நான் சுதந்திரமான மனிதராக வாழ வேண்டும். எந்த மருந்துக்கும் எந்த நிறுவனத்தின் உணவுக்கும் ஆய்வறிக்கைகளுக்கும் நான் அடிமை இல்லை’ என்ற கருத்தை மனதில் பதித்துக்கொள்ளுங்கள். இந்தக் கருத்தின் மீதான விருப்பம், உங்களை விடுதலை செய்யும்.

- திரும்புவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism