
மற்ற எந்தப் பழக்கத்தையும்விட ஆபத்தானது சிகரெட் பழக்கம். அது நமக்கு மட்டும் அல்ல, நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் ஆபத்தானது. புகைப்பிடிக்கும் பலருக்கும் அதை கைவிடும் எண்ணம் இருக்கும். ஆனால், வழிகள் தெரியாது. அப்படிப்பட்டவர்களுக்கான சில வழிகளும் செயலிகளும்... செயலிகள் ஆயிரம் இருந்தாலும் செயல் ஒன்றே பலன் தரும்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
1. நீங்கள் புகைப்பழக்கத்தைக் கைவிடப்போகிறீர்கள் என்பதை, பப்ளிக்காக அறிவியுங்கள். குறிப்பாக, ஃபேஸ்புக் மாதிரி இடங்களில், வீட்டில் உள்ள உறுப்பினர்களிடம், நண்பர்களிடம் சொல்லுங்கள். இதன்மூலம் உங்களை பலரும் உற்சாகப்படுத்துவார்கள், உதவுவார்கள்.

2. ஒரு நல்ல சுபயோக சுபதினத்தைக் குறித்து வைத்துக்கொண்டு, அந்த நாளில் கைவிடுங்கள். இதன்மூலம் உங்கள் மூளை, `அந்த நாளில் இருந்து நாம் புகை பிடிக்க மாட்டோம்' என முடிவுசெய்து, உங்களை அதற்கு ஏற்ப தயார்செய்யும்.
3. நிறைய உடற்பயிற்சி செய்யுங்கள். குறிப்பாக, கார்டியோ பயிற்சிகள், யோகா, ஓட்டம்,

நடைப்பயிற்சி, சைக்கிளிங் மாதிரியான விஷயங்களில் ஈடுபடுவது உங்கள் உடலை வலுவாக்கும். அத்துடன் நிகோட்டினை எதிர்த்துப் போராடுவதற்கான மனவலிமையையும் கொடுக்கும்.

4. கொஞ்சம் கொஞ்சமாகக் குறைப்பது எல்லாம் சாத்தியமே இல்லை. விட்டால் ஒட்டுமொத்தமாக விட்டுவிட வேண்டும். `கோல்டு டர்க்கி' என்ற இந்த முறைதான் உலக அளவில் அதிகமான பலனைத் தரக்கூடியது. `ஒரே ஒரு பஃப்' எனத் தொடங்கினால் மீண்டும் பழையபடி ஆகிவிடும்.

5. இ-சிகரெட், பேட்ச், நிகோட்டின் கம் எல்லாம் முயற்சி செய்யலாம். ஆனால், நிகோட்டினை எந்த வகையிலும் எடுத்துக்கொள்ளாமல் தவிர்ப்பதே நல்லது. அதுதான் நீடித்த பலனை அளிக்கும். மற்ற எல்லாமே உங்களை நிகோட்டின் அடிமையாகவேதான் வைத்திருக்கும். மீண்டும் சிகரெட்டை நோக்கியே தள்ளும்.

6. நிகோட்டின், நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு நம் மூளையை ஆக்கிரமித்திருக்கும் சைத்தான். அதை அவ்வளவு எளிதில் கைவிட முடியாது. அதை எதிர்த்துப் போராடும் மனோபலத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். கைவிடும் முயற்சி தோல்வியில் முடிந்தாலும், மனம் தளராமல் திரும்பத் திரும்ப முயற்சிசெய்யுங்கள்.

7. சிகரெட் பழக்கத்தைக் கைவிட, பாக்கு போடும் பழக்கத்தையோ, சூயிங் கம் சாப்பிடும் பழக்கத்தையோ ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். பிறகு, பாக்குக்கு அடிமையாகிவிட நேரும். அதற்குப் பதிலாக கிரீன் டீ அல்லது வெறும் மிதவெப்பத் தண்ணீர்கூட அருந்தலாம்.

8. எப்போது எல்லாம் சிகரெட் பிடிக்க வேண்டும் எனத் தோன்றுகிறதோ, அப்போது எல்லாம் உங்களுக்கு நெருக்கமானவர்களை போனில் அழைத்து மொக்கை போடுங்கள். ஐந்து நிமிடங்களுக்குக் குறையாமல் பேசுவது நல்ல பலன்தரும்.
Stop Smoking Fast Hypnosis

எலிசபெத் ஹார்ஃபோர்டு என்கிற ஹிப்னோ தெரப்பிஸ்ட் ஒருவரால் உருவாக்கப்பட்ட ஆடியோவை, இந்தச் செயலி வழங்குகிறது. `இந்த ஆடியோவைக் கேட்பதால் நம்முடைய ஆழ்மனதில் புகைப்பழக்கத்தைக் கைவிடும் எண்ணம் விதைக்கப்படும்' என்கிறார்கள். இந்த ஆடியோவை கேட்டு பல ஆயிரம் பேர் புகைப்பழக்கத்தைக் கைவிட்டும் இருக்கிறார்களாம். ஆனால் இது ஆங்கில வடிவம் என்பதால், ஆங்கிலம் தெரிந்த புகையாளிகளுக்குப் பயனுள்ள செயலியாக இருக்கும்.
https://play.google.com/store/apps/details?id=com.successtrace.stopsmokingapp
Quit smoking - QuitNow!

புகைப்பழக்கத்தைக் கைவிட உதவும் வல்லுநர்களோடும், புகைப்பழக்கத்தைக் கைவிட்டு அதோடு போராடி வென்றுகொண்டிருப்பவர்களோடும் உங்களை இணைக்கும் செயலி இது. கிட்டத்தட்ட புகைப்பழக்கத்தைக் கைவிட்டவர்களுக்கான ஃபேஸ்புக். புகைப்பழக்கத்தைக் கைவிட்டவர்கள் தங்களுடைய சாதனையை இங்கே பறைசாற்றிக்கொள்ளலாம், லைக்ஸ் நிறையக் கிடைக்கும். கூடவே உங்களை உற்சாகப்படுத்தும் கமென்ட்களும் போடுவார்கள். குழப்பம், மனஉளைச்சல், புகைப்பிடிக்கத் தூண்டும் விஷயங்களில் இருந்து தப்புதல் என எந்தச் சந்தேகத்தைக் கேட்டாலும் உடனே பதில் கிடைக்கும்.
https://play.google.com/store/apps/details?id=com.EAGINsoftware.dejaloYa
Quit smoking - Smokerstop

புகைப்பிடிப்பதை நிறுத்தியவர்களை ஊக்கப்படுத்துவதற்காகவே இந்தச் செயலியை வைத்திருக்கிறார்கள். உங்களுடைய உடல் புகைப்பழக்கத்தைக் கைவிட்டப் பிறகு எப்படி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் அடையும், என்னென்ன மாற்றங்கள் உங்கள் உடலுக்குள் நிகழ்கின்றன என்பதை எல்லாம் இதில் விஷுவலாகப் பார்க்க முடியும்.புகைப்பழக்கத்தைக் கைவிடுபவர்களுக்கான நிறைய அறிவுரைகளும் இதில் உண்டு. புகைப்பழக்கத்தால் உங்களுக்கு அடிக்கடி உண்டாகும் தீமைகளைப் பற்றிச் சொல்லிச் சொல்லித் தொல்லை பண்ணியே உங்களை அந்தப் பழக்கத்துக்குத் திரும்பிச் செல்லவிடாமல் தடுக்கிறது இந்தச் செயலி.
https://play.google.com/store/apps/details?id=com.agt.smokerstop
Quit Now: My QuitBuddy

புகைப்பழக்கத்தைக் கைவிடுவதால் உங்களுக்குக் கிடைக்கும் பலன்களை தினமும் மறக்காமல் சொல்லி, உங்களை ஊக்கப்படுத்தும் செயலி இது. எதற்காக நீங்கள் புகைப்பழக்கத்தைக் கைவிடுகிறீர்கள் என்பதைப் பதிவுசெய்துவிட்டால், ஒருநாளில் பலமுறை அதை மெசேஜாக மொபைலில் கொடுத்து அதை நினைவூட்டிக்கொண்டே இருக்கும். சிகரெட் பிடிக்கும் எண்ணம் வந்தால், இதில் இருக்கும் ஜாலியான கேம் ஒன்றை ஆடிக்கொண்டிருக்கலாம். இந்தச் செயலியைப் பயன்படுத்தும் மற்ற பயனாளர்களிடமும் உரையாடி ஐடியாக்கள் பெறலாம்... கொடுக்கலாம்!
https://play.google.com/store/apps/details?id=com.theprojectfactory.quitbuddy