Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 7

ஆண்பால் பெண்பால் அன்பால் - 7
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்பால் பெண்பால் அன்பால் - 7

#MakeNewBondsஆதவன் தீட்சண்யா, படம்: அருண் டைட்டன்

வாழ்வின் ஆதாரமான ‘ஆண்-பெண் உறவுகளுக்குள் மட்டும் ஏன் இத்தனை வேறுபாடுகள்? தொழில்நுட்பங்கள் வளர வளர, விரிசல்களும் வித்தியாசங்களும் ஏன் இவ்வளவு அதிகரிக்கின்றன? சரிசெய்யவேண்டியது எங்கே? நம் குழந்தைகளுக்கு, ஆண்-பெண் மனங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை எப்போது கற்றுக்கொடுக்கப்போகிறோம்? காதல், நட்பு, உறவு, பிரிவு... என ஆண்-பெண் இடையே இருக்கும் இந்த இணைப்பைப் பலப்படுத்தும் அந்த ஒன்று எது?' விடைகளுக்கான விகடனின் தேடலே இந்தத் தொடர். வாரம் ஒரு பிரபலம் தங்களுடைய வாழ்வின் வழியே, கற்றலின் வழியே வெளிச்சம் பாய்ச்ச உள்ளனர்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 7

ருபாலினரையும் குறிப்பிடும்போது எல்லாம் `ஆண், பெண்' என்றுதான் நமக்குச் சொல்ல வருகிறதே தவிர, `பெண், ஆண்' எனச் சொல்ல வராது. ஆணுக்குப் பிறகுதான் பெண், ஆண்தான் முதல் பாலினம் என்பதே இயல்பு என மனதார நம்புகிறோம். ‘எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை’ என்பதும்கூட, ஒருவகையில் பெண் அடையவேண்டிய இலக்கு ஆண்தான் என்றே சுட்டுகிறது. ஆண் என்கிற முழுமையை நோக்கி அவள் நகர்ந்தாக வேண்டும் என்கின்றன மத இலக்கியங்கள். இந்தச் சமூகத்தின் பொது உளவியலுக்குள் தங்கியுள்ள இவ்வாறான கருத்துக்களை உள்வாங்கி வளர்பவர்களே நம்மில் பலரும்.

பள்ளி ஒன்றில் தங்கிப் படிக்கும் எனது நண்பரின் மகனையும் மகளையும் பார்க்கப் போயிருந்தோம். அடுத்தடுத்த வகுப்பறையில் படிக்கும் அவர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ள முடியாதாம். அக்கா-தம்பிதான் என்றாலும் அந்த வளாகத்தைப் பொறுத்தவரை அவர்கள் வெவ்வேறு பாலினத்தவர். எனவே, பேசினால் பிரம்படியோடு அபராதமும் விதிக்கப்படுமாம். `நேருக்குநேர் பார்த்துக்கொண்டால் என்ன செய்வீர்கள்?' என்று கேட்டேன். `ஆசிரியர்கள் யாரும் கவனிக்காதபட்சத்தில் சிரித்துக்கொள்வோம். இல்லையேல், பிறரது கவனத்தை ஈர்க்காதபடி சைகையால் ஏதேனும் விசாரித்துக்கொள்வோம். மற்றபடி பேசிக்கொள்ள முடியாது' என்றார்கள். அந்தப் பள்ளிக்கூடம் மட்டும் அல்ல, பல தனியார் கல்லூரிகள்கூட ஒழுக்கம், கட்டுப்பாடு என்ற பெயரில் இவ்வாறான தடைகளையும் தண்டனைகளையும் அபராதங்களையும் கடைப்பிடிக்கின்றன.

`பெண்கள், சபலபுத்தி கொண்டவர்கள். தந்தை, சகோதரன், மகன் யாராக இருந்தாலும் அவளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்ற மநுஸ்மிருதியின் துர்போதனையை இன்றளவும் கடைப்பிடிக்கும் கேவலம் கல்வி நிலையங் களிலேயே நீடிக்கிறது என்றால், அதற்கு பெற்றோர்களும் கல்வித் துறையும் அரசும் உடந்தை என்றுதானே பொருள்!

ஒரு பெண்ணும் ஆணும் பேசிக்கொண்டாலே அடுத்த காட்சியில் அவர்களை படுக்கையறைக்குள் தள்ளிவிட்டு, `பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் பற்றிக்கொள்ளும்தானே!' என்கிற தமிழ் சினிமாவின் பழங்கஞ்சிப் பார்வைக்குள்தான் இந்தச் சமூகம் மொத்தமும் ஊறி நொதித்துக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, கணவன்மார்களைத் தாக்குவதில் எகிப்தியப் பெண்கள் உலக அளவில் முதல் இடத்தில் உள்ளதாகத் தெரிவித்தது. கடந்த சில ஆண்டு களாக பெண்கள் மீது தொடர்ந்து அதிகரித்து வந்த வன்கொடுமைகளைச் சகித்துக்கொள்ள முடியாமல், கணவன்மார்களின் அராஜகத்துக் கான எதிர்வினையே இந்தத் தாக்குதல் என்பதை இந்த ஆய்வுகள் வசதியாக மறந்துவிடுகின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆண்பால் பெண்பால் அன்பால் - 7

காற்றின் சலசலப்புக்குக்கூடக் கலங்கிவிடும் மெல்லிதயம் படைத்தவர்களாக அல்லது அதிகாரம் எவ்வளவு நுண்ணியதாக வெளிப் பட்டாலும் அதை எதிர்க்கக் கூடியவர்களாகக் காட்டிக்கொள்ளும் பலர், மனைவியை உளவியல் ரீதியாகவும் உடல்ரீதியாகவும் தாக்கித் துன்புறுத்து வதில் தம்மிடம் எந்த முரணையும் காண்பது இல்லை. காரணம், மனைவியை அடித்து உதைப் பதை அவர் தனது உரிமையாகக் கருதுகிறார். ‘ஆம்பளைன்னுகூட பார்க்காம சரிக்குச் சரி எதுத்துப் பேசிக்கிட்டே இருந்தா, நானும் எவ்வளவுதான் பொறுமையா இருக்கிறது? அதான், பொட்டச்சிக்கு இவ்வளவு வாயான்னு போட்டேன் நாலு’ என்று தன் செயலை நியாயப்படுத்துகிறார்.

குடும்பத்துக்குள்ளும் பொதுவெளியிலும் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. பெண் குழந்தைகளை பெற்றுக்கொள்வதிலும் வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டாத நாம், பெண்களைத் தாக்குவதிலும் கொல்வதிலும் தீவிர வெறியோடு இருக்கிறோம். இதே நிலை நீடிக்குமானால், இன்றைக்கு இந்தியாவில் 1,000 ஆண்களுக்கு 944 பெண்கள் என்று உள்ள விகிதம், இனி வரும் காலங்களில் அஞ்சத்தக்க வகையில் மோசம் அடையக்கூடும்.

இன்றைக்கும் `ஜல்லிக்காரிச்சி' என்றே ஊர்க்காரர்களால் நினைவுகூரப்படும் எனது தாத்தம்மா (அப்பா வழிப் பாட்டி) மாரிமுத்தம்மாள், நூறு பேருக்கும் குறையாத ‘கேங்’குடன் ஜல்லி உடைக்கவும், அதைக்கொண்டு தார்ச்சாலை போடவும் தமிழ்நாடு முழுவதும் சுற்றி அலைந்தவர்.
இன்றைய தங்க நாற்கரச் சாலைகளுக்கு அடியில் மறைந்துகிடக்கும் பழஞ்சாலைகளில் அவரது உழைப்பும் புதைந்திருக்கிறது. காடு, மலை, ரோட்டோரம் என வேலைக்காடுகளில் கேங் ஆட்கள் முகாம் அடிக்கும்போது, தனக்கும் அங்கு ஒரு ‘சாளை’ (கொட்டகை) அமைத்து தங்கிக்கொள்வது அவர் வழக்கம். பள்ளிக்கூட விடுமுறை நாள் ஒன்றில், மஞ்சவாடிக் கணவாய் வேலைக்காட்டில் அவரைப் பார்க்கப் போனேன். அன்றிரவு அவரோடே சாளையில் தங்கியபோது, `பயமா இல்லையாம்மா?' என்று கேட்டேன். `எதுக்குப் பயப்படணும்?' என்று திருப்பிக் கேட்டார். ஆமாம், அவர் எதற்கும் பயப்பட்டு நான் பார்த்தது இல்லை.

கொத்துக்காரி என்கிற கித்தாப்பில் அதட்டி வேலைவாங்கிவிட்டு, உடல் நோகாமல் அதிகாரம் செய்யக்கூடியவராக அவர் ஒருபோதும் இருந்ததே இல்லை. வேலைக்கு ஆட்களைத் திரட்டுவது, முன்பணம் கொடுத்து அவர்களைத் தக்கவைத்துக்கொள்வது, கல் உடைப்பதற்கான குன்றுகளைத் தெரிவுசெய்வது, பாறைகளைப் பிளக்க கருவிகளையும் கரிமருந்தையும் கையாள்வது, கொட்லான் பிடித்து ஜல்லி உடைப்பது, மால் வைத்து மட்டம் பிடித்து ஜல்லிக்குட்டானை அளப்பது, பதமாகத் தார்  காய்ச்சுவது, கலவையின் திடத்தைச் சோதிப்பது என, சாலை போடும் வேலையின் அத்தனை நுட்பங்களையும் அவர் அறிந்துவைத்திருந்தார்.

அனைத்தையும் அறிந்திருந்த அவர், நேரடி உழைப்பிலும் பங்கெடுப்பவராக இருந்தார். வாரச்சந்தை நாட்களில் வேலையாட்களிடம் பட்டுவாடா செய்வதற்கான பெருந்தொகையை பெல்ட் மாதிரி நீளமான ஒரு பையில் வைத்து இடுப்பைச் சுற்றிக் கட்டி, அதன் மீதே சீலை கட்டுவார். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், கான்ட்ராக்டர் என யாரிடமும் அச்சத்துடனோ, தயக்கத்துடனோ பேசக்கூடியவர் அல்ல.

கல் உடைத்தும் கலவையைத் தூக்கியும் தார்ச்சூட்டில் வெந்தும் தான் ஈட்டிய சொந்த சம்பாத்தியத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை வாங்கி என் தந்தைக்குக் கொடுத்திருந்தார். வெற்றிலை, புகையிலை காரமும் தார் நெடியும் கலந்த வாசனையோடு தன் வாழ்நாளின் பெரும்பகுதியை சாலையோரங்களில் கழித்த அவர், பின்னாளில் அந்த வேலையைக் கைவிட்டுவிட்ட பிறகும்கூட அதே மிடுக்கோடு உழைத்து வாழ்ந்து மறைந்தார்.

என் தாத்தம்மாவை நினைவுகூரும் எவர் ஒருவரும் அவரை, ‘ஆம்பிளையாட்டம் உழைக்கக் கூடியவள். பத்து ஆம்பளைங்களுக்குச் சமமானவள். நெஞ்சை நிமிர்த்தி ஆம்பளையாட்டம் நடக்கிற தைரியசாலி. வீராதிவீரன்கூட அவகிட்ட நாலடி தள்ளிதான் நிற்கணும்’ என்று ஆண்களோடு ஒப்பிட்டுத்தான் சொல்வார்களே தவிர, அவர் தன் சுயத்தில் தேர்ந்த வாழ்க்கையை வாழ்ந்தார் எனச் சொல்லி நான் கேட்டது இல்லை.

தாத்தம்மா யாரையாவது முன்மாதிரியாகக் கொண்டிருந்தார் என்றால், அது அவருடைய தாயார். ஏனென்றால், ஆண்களை முன்மாதிரியாகக் கொண்டு ஆண் போலவே வாழவேண்டும் என்பது அல்ல அவரது தெரிவு. அவரைப்போலவே இன்னும் பல பெண்கள் தாம் தேர்ந்துகொண்ட வாழ்க்கையை சமரசம் இன்றி தன்மதிப்போடு வாழ்ந்துகொண்டிருக் கிறார்கள். ஆனால், அவர்களை ‘விதிவிலக்குகள்’ என முத்திரை குத்தி, சமூகத்துக்கு வெளியே நிறுத்திவிடும் தந்திரத்தைக் கையாள்கிறோம்.

ஒரு பெண் கிளம்பிப் போய் மாப்பிள்ளையைப் பார்த்து முடிவெடுக்கும் நிலை, இப்போதுபோலவே 1993-ம் ஆண்டிலும் இல்லை. எனவே, நான்தான் அரூருக்குப் போய் மீனாவைப் பார்த்து இறுதிப்படுத்தினேன். அந்த நாளில் இருந்தே மீனாவை நான் ‘அவள்’ என்றும், மீனா என்னை ‘அவர்’ என்றும் சொல்லப் பழகி இருந்தோம். திருமணம் முடிந்து ஒரு வாரம் கழித்து நான் வேலை பார்க்கும் ஓசூருக்குக் கிளம்பி வந்தோம். சோற்றை வடித்து தக்காளியை வதக்கிக் கொட்டினால் தக்காளிச் சோறு ரெடி என்கிற அளவில் எனக்கு சமையல் தெரியும். மீனாவின் சமையல் அறிவும் மோசம் எனச் சொல்ல முடியாது. வெந்நீர் வைக்கவும் முட்டையை வேகவைக்கவும் தெரிந்திருந்தது. எனவே, பரஸ்பரக் கருணையின் அடிப்படையில் சமைக்கும் முடிவை இருவருமே கைவிட்டோம். முதல் இரண்டு நாட்கள் கடைச் சாப்பாடு. அதைவிட அப்படி ஒன்றும் மோசமாகச் சமைத்துவிட மாட்டோம் என்ற நம்பிக்கையில் சமைக்கத் தொடங்கினோம். மிகக் குறுகிய காலத்திலேயே `உன் கைப்பக்குவமே தனி ருசி!' எனப் பாராட்டத்தக்க அளவுக்கு அவர் மிகத் தேர்ந்த சமையலராக மாறியிருக்க, நானோ வெறும் டீ, காபி மாஸ்டராக ஆகியிருக்கிறேன்.
சமைக்கும் வேலையில் இருந்து பின்வாங்கிக் கொண்டதைப்போலவே துணி துவைப்பது, வீட்டைத் துப்புரப்படுத்துவது, குழந்தையைப் பார்த்துக்கொள்வது போன்ற வேலைகளையும் மீனாவிடம் தள்ளிவிடுவதற்கு நான் பெரிதாக ஏதும் மெனக்கெடவில்லை.

ஆண், அதுவும் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் ஆண் என்கிற அடையாளம் இவை அனைத்தையும் எனக்கு எளிதாக சாதித்துக் கொடுத்திருக்கிறது. (வறட்சி மிகுந்த மாநிலங்களில் நெடுந்தூரம் அலைந்து தண்ணீர் கொண்டு வந்து ஊற்றுவதற்காகவே ‘தண்ணீர் மனைவிகள்’ என்ற பெயரில் பலரைத் திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் இருக்கிறது.)

வேலை நேர நிர்ணயம் இல்லாமல், ஓய்வொழிச்சல் இல்லாமல் மீனா செய்து கொண்டிருக்கும் நச்சரிப்பான இந்த வீட்டு வேலைகளுக்கு ஊதியம் நிர்ணயிப்பதாக இருந்தால்? நிச்சயம் அது எனது ஊதியத்தை விட கூடுதலாகத்தான் இருக்கும். ஆனாலும் அவர் வீட்டில் சும்மாதான் இருக்கிறார் என்கிற நினைப்பில் இருந்து நான் முற்றாக விடுபட்டுவிட்டதாகச் சொல்விவிட முடியாது. ஏனென்றால், சம்பளம் என்று ஈட்டித்தராத எந்த வேலையையும் `வேலை' என்று மதிப்பதற்கான பழக்கமோ, பயிற்சியோ நமக்கு இல்லை.

என்னுடைய அரசியல்ரீதியான பிரக்ஞை மட்டும்தான் மீனாவை சமமாகப் பார்க்க வைக்கிறதே தவிர, இயல்பில் ஒரு சராசரி ஆணாகவே மிஞ்சுகிறேன்.

பள்ளிக்கூடத்தை எட்டிப்பார்த்ததற்காகவே `பள்ளிக்கூடத்தாள்' என்ற செல்லப்பெயர் பெற்ற என் அம்மாவும், பட்டதாரியான என் இணையரும் `பெண்' என்ற வகையில் ஒரே மாதிரியான வாழ்க்கையைத்தான் பெற்றிருக்கிறார்கள். எனக்குள்ளும் என் தந்தைக்குள்ளும் இயங்குவது ஒரே ஆண்தான் என்றால், கால மாற்றம், தலைமுறை இடைவெளி, கல்வி, அரசியல் புரிதல் என்பனவற்றுக்குப் பொருள்தான் என்ன?

1849-ம் ஆண்டில் பிரசவம் பார்ப்பவராக பணியாற்றும் ஜீன் டெராயின் என்கிற பெண், பிரெஞ்சு நாடாளுமன்றத்துக்குப் போட்டியிடுகிறார். ஆண்களில் பலரும் அவரைக் கேலி செய்கின்றனர். ‘ஒரு பெண் சட்டசபை உறுப்பினராக இருப்பது என்பது, குழந்தைகளுக்குப் பாலூட்டும் வேலையில் ஒரு ஆண் இருப்பதற்கு சமமாகும்’ என்கிற விநோதமான வாதத்தை முன்வைத்து, அவரது வேட்புமனுவை நிராகரிக்கிறார் பியர் ஜோசப் ப்ரூதான் என்பவர்.

அவருக்குத் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் ஜீன் டெராயின் ‘இந்த வர்ணனையை நான் ஏற்றுக்கொள்கிறேன். எங்களால்தான் பிரசவிக்க முடியும். எங்கள் உடல்வாகு அப்படி. ஆனால், ஆண் உடலில் எந்தப் பகுதி நாடாளு மன்ற உறுப்பினராவதற்குத் தேவைப்படுகிறது என்று பியர் ஜோசப் எனக்குச் சொல்லட்டும்’ என்று கேட்டிருக்கிறார். உடலையும் உறுப்பையும் வைத்து சகஜீவியின் ஆளுமையையும் உரிமைகளையும் மதிப்பிடுவதற்கு எதிராக ஜீன் டெராயின் போன்றோர் எழுப்பிவந்த இப்படியான கேள்விகள்தான் இன்றைக்கு உள்ளாட்சி தொடங்கி குடியரசுத் தலைவர் வரையிலான பொறுப்புகளை பெண்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றன. ஆனால், கண்டம் கடந்து காலம் கடந்து இன்னமும் பல பியர் ஜோசப்கள் ‘நின்னுக்கிட்டே சுவர் மேல ஒண்ணுக்கு அடிக்க என்னால் முடியும். உன்னால் முடியுமா?’ என்று நாயிடம் கேட்கவேண்டிய கேள்வியைத் தவறாக பெண்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 7

லிவிங்ஸ்மைல் வித்யா ஒருமுறை ‘மாற்றுப் பாலினத்தவரை `மூன்றாம் பாலினத்தவர்' எனக் குறிப்பிடுகிறீர்களே, முதல் பாலினம் யார் என்று முடிவுசெய்துவிட்டீர்களா?’ என்று எழுப்பிய வன்மையான கேள்வி, இந்தச் சமூகத்துக்கு உறைக்கவே இல்லை. `பெண் பின்னமானவள், ஆண் என்கிற முழுமையை நோக்கி அவள் நகர்ந்தாக வேண்டும்' என்கின்றன மத இலக்கியங்கள். சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்பதன் மூலம் பெண்ணானவள் மீட்டர்கணக்கில் வளர்ந்தாலும் பயன் இல்லை என்றாகிறது. இந்தச் சமூகத்தின் பொது உளவியலுக்குள் தங்கியுள்ள இவ்வாறான கருத்துக்களை உள்வாங்கி வளர்பவர்களே நம்மில் பலரும்.

நமக்கான ஆண், பெண் முன்மாதிரிகளை நாம் குடும்பத்தில் இருந்தே பெறுகிறோம். எனில், குடும்ப அமைப்பு எப்படி இருக்கிறது? அரிதான ஒன்றிரண்டைத் தவிர, பெரும்பாலான குடும்பங்களில் தம்பதியர் சம வயதினர் இல்லை. அவர்களுக்கு இடையில் குறைந்தபட்சம் ஐந்து வருட வயது வித்தியாசம் பேணப்படுகிறது. கர்ப்பம், பிரசவம், பாலூட்டல் போன்ற ‘தாய்மைச் செயல்பாடுகளால்’ உடற்கட்டு குலைந்து, கணவனைவிட மூத்தவள் போன்ற தோற்றத்தைப் பெறாமல் இருப்பதற்கு ஆணைவிட பெண் இளையவளாக இருத்தல் அவசியம் என வியாக்கியானம் சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, மனைவியைவிட மூத்தவன் என்ற நினைப்பே ஆணுக்குக் கூடுதல் பலத்தைக் கொடுக்கிறது.

அடிப்படையிலேயே குடும்பம் என்பது, ஆணின் சௌகர்யம் சார்ந்ததாக - ஆணை மையப்படுத்தியதாக இருக்கிறது. இது ஏதோ புராண காலத்து விஷயம் என்பதாகப் புரிந்துகொள்ளக் கூடாது. வயதான பெற்றோரை விட்டுப் பிரிந்து `தனிக்குடித்தனம் போகலாம்' என, கணவனை வற்புறுத்துவது குரூரமானது என்றும், அத்தகைய மனைவியை விவாகரத்து செய்ய கணவனுக்கு உரிமை உள்ளது என்றும் கொந்தளிக்கும் நமது நீதிமன்றங்கள், இதுகாறும் நம் நாட்டுப் பெண்கள் தம் பெற்றோரைப் பிரிந்துதான் வேறு ஒரு குடும்பத்தில் வாழ்நாள் முழுக்க இருந்து மடிவது தொடர்பாகவோ, அவளது பெற்றோரும் முதுமையில் தனிமையில் ஆதரவின்றி அல்லாடுவது குறித்தோ வாய் திறக்காமல் இருப்பதற்கு, இந்த ஆண் மையச் சிந்தனைதான் காரணம்.

மனைவியை ஒருமையிலோ, கண்ணியக் குறைவாகவோ விளிப்பது, கடுஞ்சொற்களால் திட்டுவது, தாக்கி வன்முறைக்கு ஆட்படுத்துவது, வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வது, ஓயாத வீட்டுவேலைகளைச் சுமத்துவது, குழந்தை வளர்ப்பு, முதியோர் நலம் பேணல், நோயாளி களைப் பராமரித்தல், தண்ணீர் எரிபொருள் சேகரிப்பு, சமையல் ஆகியவற்றை அவளது தனிப்பொறுப்பாக மாற்றுவது, அவளுக்கு என தனித்த ஆர்வங்களும் தேவைகளும் செலவுகளும் பொழுதுபோக்கும் இருப்பதை ஏற்க மறுப்பது, அவளது கையில் பணப்புழக்கம் இல்லாமல் தடுப்பது, அவளது வருமானத்தை அபகரித்துக் கொள்வது, எந்தவொரு விஷயத்திலும் அவளிடம் கலக்காமலே தன்னிச்சையாக முடிவு எடுப்பது, அவளாக முன்வந்து சொல்லும் யோசனைகளையும் இளக்காரத்துடன் நிராகரிப்பது என ஆணின் கை ஓங்கியுள்ள குடும்பங்களே இங்கு மிகுந்துள்ளன. இந்த ஆதிக்கத்தை அதட்டி உருட்டி மட்டுமே செய்யவேண்டிய தேவையின்றி, அன்பின் பேராலும் ஓர் ஆணால் நிலைநிறுத்திக் கொள்ள முடிகிறது. இத்தகைய சூழலுக்குள் வளரும் குழந்தைகள் எந்தவிதத் தனித்த போதனையோ பயிற்சியோ இன்றி, தத்தமக்கான இடத்தைக் கண்டடைகின்றனர்.
பெண் என்பவள், இரண்டாம்பட்சமானவள்; குடும்பச் சொத்தில் பங்குபெற உரிமையற்றவள்; ஆணின் விருப்பத்துக்கு அடங்கி நடக்க வேண்டியவள் என்பதை இன்றைய குழந்தைகள் வெகு இயல்பாக உள்வாங்கிக் கொள்கின்றன.

இந்த நிலையை மேலும் மேலும் இறுக்கிப் பிணைக்கும் வகையில் வீட்டுக்குள் அவர்களது புழங்கிடம், உடை, உணவு, கல்வி, நட்புவட்டம், நடமாட்ட நேரம், பங்கெடுக்கும் நிகழ்வுகள், விளையாட்டுக்கள் போன்றவற்றை குடும்பம் தீர்மானிக்கிறது. அவர்கள் வளர்ந்து உருவாக்கும் அடுத்த தலைமுறை குடும்பங்கள், முன்சொன்ன குடும்பத்தின் நகல்களாக தன்னியல்பாகவே மாறிவிடுகின்றன. விதிவிலக்காக சற்றே ஜனநாயகத்தன்மையுடனும் சமத்துவப் பார்வையுடனும் நடந்துகொள்ள முயற்சிக்கும் ஆண்கள்கூட `பொண்டாட்டிதாசன்' என்பதான ஏளனத்துக்கு அஞ்சும் மானஸ்தர்களாகி, தம்முடைய இயல்பான நிலைக்குத் திரும்பிவிடுகிறார்கள்.

`உங்க வீட்டில் சிதம்பரமா... மதுரையா?' எனக் கேலியாகக் கேட்கும் வழக்கம் எல்லாம், `நீ ஆம்பளையா... இல்லையா?' என முண்டா தட்டச் சீண்டிவிடுவதுதான். ஆண் தன் நிலையில் இருந்து சற்றே விலகினாலும், ஆளை மயக்கி, முந்தானையில் முடிந்தவள், குடும்பத்தைப் பிரிப்பவள் போன்ற அவதூறுகளுக்கு பெண்கள் ஆளாக்கப்படுவதை இதன் தொடர்ச்சியில் வைத்தே விளங்கிக்கொள்ளவேண்டியுள்ளது.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 7

குடும்பத்துக்கு வெளியேகூட ஆணைவிட பெண் தாழ்வானவள், பலம் குன்றியவள், தீட்டானவள், ஆணைச் சார்ந்தே காலம் தள்ளவேண்டியவள், ஆணின் போகத்துக்காகவே படைக்கப்பட்டவள், பெற்றோர் பார்த்து எவ்வளவு குணக்கேடான ஒருவனைக் கட்டி வைத்தாலும் மனம் கோணாது ஏற்றுக்கொண்டு அவன் வழியாக (கவனம், அவன் வழியாக) குழந்தைகளைப் பெற்று, வளர்த்து வாழ்ந்துவிட்டு, பூ பொட்டுடன் போய்ச் சேர்வதுதான் ஒரு பெண்ணின் வாழ்க்கை லட்சியம் என்ற போதனையை, குழந்தைகள் இடைவிடாது பெறு கிறார்கள். கல்விக்கூடங்கள், பாடத்திட்டங்கள், வழிபாட்டுத் தலங்கள், மதங்கள், சடங்குகள், போக்குவரத்து வாகனங்கள், பணியிடங்கள், ஊடகங்கள், கலை இலக்கியம், அரசுத் திட்டங்கள், விளம்பரங்கள் போன்றவை இந்த போதனையை செவ்வனே செய்து பெண் மீதான ஆணின் உரிமையை நிலைநிறுத்துகின்றன. ஏனென்றால், இந்தத் தளங்களில் இயங்கும் நான் உள்பட பலரும் இதே கருத்தியலால் பீடிக்கப்பட்டவர்கள் தான்.

இருபாலரும் தம்மைப் பற்றியும் பிறரைப் பற்றியும் கொண்டிருக்கும் பார்வையும் அதன் பேரிலான நடத்தையும் தனிப்பட்ட மனிதர்களின் குணாதியசங்கள் அல்ல. இன்றைய சமூக அமைப்பு வடிவமைக்கும் கருத்துக்களையே அவர்கள் தமது சொந்தக் கருத்துபோல பாவித்துக் கடைப்பிடிக்கிறார்கள்.

எல்லா வகைகளிலும் ஏற்றத்தாழ்வைப் பேணும் சமூகத்தில், இதன் அடிப்படை அலகான குடும்பத்துக்குள் மட்டும் சமத்துவம் நிலவும் என எதிர்பார்க்க முடியாது. சொந்த சாதிக்குள் மணம் முடித்து ரத்தத் தூய்மையையும், சாதிப் புனிதத்தையும் காப்பாற்றுவதே மானமுள்ள குடும்பத்தின் கடமை என்றாகிவிட்ட சூழலில், அதன் முழுப் பொறுப்பும் பெண் மீது சுமத்தப்பட்டுள்ளது. அதன் பொருட்டு அவள் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும்படுகிறாள்.

அவளை நோக்கி காதலோடு பூங்கொத்தை நீட்டும் `பிற சாதிக்காரன்', தனக்குத்தானே மலர்வளையம் வைத்துக்கொள்ளும் நிலைக்குச் சாய்க்கப்படுகிறான்.

பெண் என்பவள், தன்னளவில் சுதந்திர மானவள். ஆணின் தேவைகளை நிறைவேற்று வதற்காக அவள் பிறக்கவில்லை. தான் விரும்பியபடி வாழ்வதற்கான முழு உரிமையும் அவளுக்கு உண்டு. ஆணோடு ஒப்பிட்டுக் கொள்ளும் அவசியம் ஏதும் இன்றி, தனக்கான தேவைகளைத் தானே தீர்மானிக்கவும் தேடிக்கொள்ளவும் சக்தி உள்ளவள். இந்தக் கட்டுரை உள்பட எதுவொன்றையும் கிளுகிளுப் பாக்கும் கச்சாப்பொருள் அல்ல `அவள்' - என்பதான கருத்தியலை, குடும்பமும் சமூகமும் கடுமையாக எதிர்கொள்கின்றன.

நாமும் அதே குடும்பத்துக்குள்ளும் சமூகத்துக் குள்ளும்தான் இருக்கிறோம் என்ற உண்மை, இப்போது ஏன் நினைவுக்கு வந்துதொலைக்க வேண்டும்?

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

ஆண்பால் பெண்பால் அன்பால் - 7

பாலினப் பாகுபாடும் சமூக அடையாளங்களும் - வ.கீதா கிறிஸ்டி சுபத்ரா

பாலினச் சமத்துவம் என்று நான் நினைத்திருப்பது எவ்வளவு மேலோட்டமானது, அதில் பாசாங்கான அம்சங்கள் எவை, எனக்குள் இருக்கும் ஆண் ஆதிக்கக்கூறுகள், கருத்து அளவில் உடன்பாடு என்றாலும் சமத்து வத்தைக் கடைப்பிடிப்பதில் அக்கறையற்று இருக்கும் போக்கு, என்பதை எல்லாம் அறிந்துகொள்ள இந்தப் புத்தகமே எனக்கு உதவியது. ஆண்தன்மை, பெண் தன்மை குறித்த பொதுவான விளக்கங்களைப் பரிசீலிக்கிறது. பால் வேறுபாடு சார்ந்த பாகுபாடு வரலாற்றில் எந்தக் கட்டத்தில் எழுந்தது, காலந்தோறும் அது எவ்வாறு மாறி இன்று நம் மனங்களை ஆள்கிறது, மரபான கருத்தாக்கங்களில் இருந்து விடுபடுவதற்கான முயற்சிகள் என விரிவாகப் பேசுகிறது.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 7

அம்பேத்கர் தொகுப்பு நூல்கள்

இந்து மதம் பெண்ணுக்கு வழங்கியுள்ள இடம் எது, பெண் ஏன் இழிவாகக் கருதப்படுகிறாள், வர்ணம் - சாதி ஆகியவற்றின் தூய்மையைப் பாதுகாக்கும் பொறுப்பு பெண்கள் மீது சுமத்தப்பட்டதன் நோக்கம் - சாதியம் கண்டுபிடித்த அகமணமுறை எவ்வாறு சாதியை மறுஉற்பத்தி செய்து பாதுகாக்கிறது - சொத்துரிமை, தத்தெடுக்கும் உரிமை, மணவிலக்கு உரிமை ஆகியவை பெண்களுக்கு ஏன் தேவை என்பவற்றை இந்தியச் சூழலுக்குள் வைத்து அம்பேத்கர் விளக்கியுள்ளார்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 7

மநுஸ்மிருதி - தமிழில்: திருலோக சீதாராம்

மதங்களும் மத இலக்கியங்களும் பெண்ணை எவ்வாறு இழிவாகப் பார்க்கின்றன, சமூகத்தின் உளவியல் மீது இவற்றின் கருத்தியல் செல்வாக்கு என்ன என்பதை அறிவதற்கு இந்த நூல் ஓர் உதாரணம்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 7

குடும்பம், தனிச்சொத்து, அரசு - ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ்

பாலின அரசியல் குறித்த மார்க்ஸியப் பார்வை, இந்த நூலில் இருந்தே பெரிதும் எடுத்தாளப்படுகிறது. தாய்வழிச் சமூகம் தந்தைவழிச் சமூகமாக மாறுவதற்கும் தனிச் சொத்துடைமைக்கும் உள்ள தொடர்பு, சொத்துடைமைக்கு நேரடி ரத்தவாரிசுகளின் தேவை, அதற்குத் தேவையான குடும்பம் - மனைவி, கட்டற்றப் பாலுறவில் இருந்து ‘தம்பதிகள்’ உருவாகும் கட்டம் என்பனவற்றை வரலாற்றுரீதியாக விளக்கும் நூல்.