மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 21

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 21
பிரீமியம் ஸ்டோரி
News
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 21

ம.செந்தமிழன்படம்: வி.பால் கிரேகோரி, ஓவியம்: ஹாசிப்கான்

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 21

ண்மைக்கும் பொய்மைக்குமான வேறுபாட்டைக் காண்பது மிக எளிது. எது எளிமையாகவும் அமைதியாகவும் இருக்கிறதோ, அது உண்மையின் உறுபொருள். எவை எல்லாம் பகட்டுகளிலும் ஆரவாரங்களிலும் தம்மை வெளிப்படுத்திக்கொள்கின்றனவோ, அவை பொய்மையின் வெளிப்பாடுகள்.

இந்தப் பேரண்டத்தில் உண்மை ஒன்றே ஒன்றுதான். `படைக்கப்படும் யாவும் காக்கப்படும்; காக்கப்படும் யாவும் நீக்கவும் படும்’. பொய்மையோ, பல பரிமாணங்களைக்கொண்டது. ‘நான்தான் உன்னை உருவாக்குகிறேன். நானே உன்னைக் காக்கிறேன். நானே உன்னை அழியாமல் பாதுகாப்பேன். நீ என்னைத்தான் நம்ப வேண்டும். என்னைத் தவிர, உனக்கு வேறு கதி இல்லை. என்னைக் காட்டிலும் மேலான ஆற்றல் ஏதும் இல்லை’ போன்ற கருத்துக்கள் எல்லாம் பல்வேறு துறைகளில் பொய்மையை வீசி விளையாடும் வாசகங்கள்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 21

நவீன மருத்துவத் துறைக்கு, மேற்கண்ட வாசகங்கள் மிகவும் பொருத்தமானவை என்பது என் கருத்து. பூமியின் எல்லா பகுதிகளிலும் அந்தந்தப் பகுதிகளுக்கான மருத்துவ முறைகள் இருக்கின்றன. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை, மருத்துவம் என்பது எல்லா சமூகங்களிலும் உள்ள சமயங்களின் ஒரு பிரிவாகத்தான் இருந்தது. அந்தக் காலத்தில், எகிப்திலும் கிரேக்கத்திலும் மருத்துவர்களை மக்கள் சந்திக்க வேண்டுமானால், ஆலயங்களுக்குத்தான் செல்லவேண்டியிருந்தது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலைமை. குறிப்பாக, நம் தமிழர் மரபில் மருத்துவம் என்பது இறையியலாளர்களின் பணிகளில் ஒன்றாகத்தான் இருந்தது.

இயேசு, நபிகள் நாயகம் போன்றோரும் மருத்துவத்தின் வழியாகத்தான் மக்களைச் சந்தித்தார்கள். எல்லா சித்தர்களும் ஆழ்வார்களும் மருத்துவம் அறிந்தவர்கள்தான். திருஞானசம்பந்தர், ‘மந்திரம் ஆவது நீறு...’ எனப் பாடியவாறு பாண்டிய மன்னனுக்கு மருத்துவம் பார்த்தார். வள்ளலார் தமிழ் மரபின் தொன்மையான மருத்துவக் குறிப்புகளை எல்லாம் தம் காலத்துக்கு ஏற்ப தொகுத்துக் கடைப்பிடித்தார். மருத்துவம் என்பது, முழுக்க முழுக்க பகுத்தறிவுவயப்பட்ட செயல் அல்ல என்பதைத்தான், உலகின் மருத்துவ வரலாறு சொல்கிறது.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 21



மனித அறிவுக்கு அப்பாற்பட்ட பேராற்றல்தான் உயிரையும் உடலையும் காப்பதில் முன்னிலையில் உள்ளது என்பதுதான், பூமியின் முன்னோடி மருத்துவ முறைகள் அனைத்துக்கும் அடிப்படையாக உள்ளது.
 
`நவீன மருத்துவம்தான் பகுத்தறிவின் அடிப்படையில் செயல்படுகிறது. இதுவே மனிதகுலத்தின் மீட்புக்கான மருத்துவ முறை’ என்ற நம்பிக்கை இப்போது வேரூன்றிவிட்டது. மரபுவழிப்பட்ட மருத்துவமுறைகளைப் பற்றி எவரேனும் பேசினாலோ, எழுதினாலோ, அவர்களை எல்லாம் ‘மூடநம்பிக்கையாளர்கள் அல்லது பிற்போக்குவாதிகள்’ என முத்திரை குத்துவது நவீனர்களுக்கு மிகவும் உவப்பான விளையாட்டு. மரபு மருத்துவமுறைகளை ஆதரிப்போரை நோக்கி கேலியான சொற்களை வீசுவதும், போகிறபோக்கில் அவமதிப்பதும் பல்வேறு தளங்களில் இப்போதும் நிகழ்வதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

நமது மரபுவழிப்பட்ட மருத்துவ உன்னதங்களைப் பற்றி உங்களோடு பகிர்ந்துகொள்ள நிறைய செய்திகள் உள்ளன. அவற்றுக்கு முன்னர் எந்த நவீன மருத்துவம் மரபுகளைக் கேலிசெய்கிறதோ, அந்த நவீன மருத்துவத்தின் `தந்தை’யை உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.

கிரேக்கத்தில் ஏறத்தாழ 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் ஹிப்போக்ரட்ஸ் என்கிற மருத்துவர். இவரைத்தான் நவீன மருத்துவ உலகம் தமது முன்னோடி என அழைக்கிறது. நவீன மருத்துவம் கற்போரின் பாடப்புத்தகங்களில் இவர் இருக்கிறார். ஹிப்போக்ரட்ஸின் புகழ்மிக்க வாசகங்களில் சிலவற்றை  இங்கே  பதிவு செய்கிறேன்.

‘உணவே மருந்தாகவும் மருந்தே உணவாகவும் இருக்க வேண்டும்.’

‘நமக்குள் உறையும் இயற்கை சக்திகள்தான், எல்லா நோய்களையும் குணப்படுத்தும் உண்மையான மருத்துவர்கள்.’

‘மருத்துவர்களே... உங்களால் நன்மைசெய்ய முடியாமல்போனால் ஒன்றுமே செய்யாமல் இருங்கள். ஏனெனில், தீமையாக ஏதேனும் செய்வதைக்காட்டிலும் ஒன்றும் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது.’

`சரியான உணவுகளையும் அவற்றுக்கு ஏற்ற உடல் உழைப்புகளையும் ஒரு மனிதருக்குக் கற்றுக் கொடுத்துவிட்டால், அவரது உடல்நிலையைப் பாதுகாக்கும் மிகச்சிறந்த வழியை அவருக்குக் காட்டிவிட்டதாகப் பொருள்.’
இவற்றைக் காட்டிலும் மிக முக்கியமான கருத்து ஒன்றையும் ஹிப்போக்ரட்ஸ் பதிவுசெய்தார்.

`சோதிடம் பற்றிய அறிவு இல்லாத எவரையும் `மருத்துவர்' என அழைக்காதீர்கள்’ என்றார் அவர்.

வானியலுக்கும் மனித உடல் மற்றும் மனதுக்குமான உறவு, அந்தக் காலத்தில் இருந்த மெய்யறிவாளர்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இறையியலுக்கும் மருத்துவத்துக்கும் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை என்பது போன்ற புனைவு இப்போது பின்னப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக்கு ஆதரவான சான்றுகளை மனிதகுலத்தின் வரலாற்றில் நவீனர்களால் முன்வைக்கவே இயலாது. அதேவேளை, மருத்துவப் பணிகளில் ஈடுபடாமல், வெறுமனே வேண்டுதலில் மட்டுமே ஈடுபடுவதை எந்த ஆதி மருத்துவமுறையும் கடைப்பிடிப்பது இல்லை.

‘நோயாளிக்காக வேண்டுவது முக்கியமானதுதான். ஆனால், துன்பத்தில் இருப்போருக்காகக் கடவுளை அழைக்கும்போது, மனிதர்களாகிய நீங்கள் உங்கள் கைகளையும் நீட்டி உதவுங்கள்’ என்பதும் ஹிப்போக்ரட்ஸின் கருத்துதான்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 21

2,000 ஆண்டுகளுக்கு முன்னரே, ‘மருந்து’ எனும் தலைப்பில் உடல்நலனுக்கான அடிப்படைகளைப் பதிவுசெய்த திருவள்ளுவரும் ஆதி மருத்துவம் அறிந்தவர்தான்.

‘நோயுற்றவர், மருத்துவர், மருந்து, நோயாளியின் அருகே இருந்து ஆறுதல் அளிப்பவர் ஆகிய நான்கு காரணிகளும் இணைந்துதான் நோயாளியை நலப்படுத்துகின்றன’ என்ற உண்மையை, திருக்குறள் தாங்கி நிற்கிறது.

‘ஆதிபகவன் முதற்றே உலகு...’ என்ற கருத்தைத் தொடக்கத்திலேயே பதிவுசெய்து, கடவுள் வாழ்த்து பாடிய திருவள்ளுவர்தான் மேலே உள்ள கருத்தைக் கூறினார். ‘நோய் வந்தால் கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள். வேறு எதுவும் செய்ய வேண்டாம்’ என அவரோ, வள்ளலார் வரையில் தோன்றிய எந்தப் புனிதரோ கூறவில்லை.

மரபுவழி மருத்துவம் என்பது, கடவுளை வேண்டிக்கொண்டு கிடக்கும் மூடநம்பிக்கை அல்ல; பிரபஞ்சத்தின் இயல்பு, பூமியின் குணம், நீரின் குணம், காற்றின் தன்மை, உடலின் நிலை ஆகியவற்றை அறிந்துகொண்டு இவற்றுக்குத் தகுந்த வகையில் மருந்துகளையும் உணவுகளையும் பரிந்துரைக்கும் மேலான அறிவியல். இந்த மருத்துவமுறைகளைக் கடைப்பிடித்த காலத்தில்தான் நமது முன்னோர் நீண்ட ஆயுளுடனும் வலிமையான உடலுடனும் வாழ்ந்தனர். இப்போதும் நவீன மருத்துவம் நுழையாத பழங்குடிகளிடம் நீண்ட ஆயுளும் நோயற்ற வாழ்வும் இருப்பதை நீங்கள் காணலாம்.

இப்போது கடைப்பிடிக்கப்படும் நவீன மருத்துவமுறைகளின் அடித்தளமாக இருப்பது, கண்மூடித்தனமான பகுத்தறிவு. எல்லாவற்றையும் வெறும் அறிவாகப் பார்ப்பது இந்த முறையின் மாற்ற இயலாத போக்காக இருக்கிறது. இந்த முறையின் தந்தை, `உடலின் இயற்கை சக்திகள்தான் உண்மையான மருத்துவர்கள்’ எனக் கூறியதை, அவரது வாரிசுகள் ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள்.

இரு கேள்விகள், எல்லா மருத்துவ நிலையங் களிலும் அலைந்து திரிந்துகொண்டுள்ளன. அந்தக் கேள்விகள் இரண்டும், அந்த மனிதர்கள் கேட்கவேண்டியவைதான். ஆனால், அவற்றைக் கேட்பதற்கு ஆள் இல்லாததால், அவை மருத்துவமனையின் மூலைமுடுக்குகளிலும், மருந்துக் கடைகளிலும், பிணவறைகளிலும் அலைகின்றன. அந்தக் கேள்விகள்...

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 21

‘இந்த மருந்தை நான் உட்கொள்வதால், எனக்கு நோய் குணமாகுமா?’

‘இந்த மருந்தை உட்கொள்வதால் வேறு தீய விளைவுகள் ஏற்படுமா?’

இவற்றைக் கேட்பதற்கு, பெரிய பட்டம் தேவை இல்லை. ஏறத்தாழ எல்லோருடைய மனங்களிலும் இந்தக் கேள்விகள் உருவாகிக்கொண்டுள்ளன. ஆனால், இவற்றைக் கேட்கும் துணிவு பலருக்கும் இல்லை. அந்த அளவுக்கு, மருத்துவ நிலையங்கள் தம்மை அதிகார மையங்களாக மாற்றிவைத்துள்ளன. அவற்றை எதிர்த்து, எவரும் கேள்விகேட்க முடியாது; குரல் எழுப்ப முடியாது; மாற்றுக் கருத்தைப் பதிவுசெய்யக்கூட முடியாது.

இந்த நாட்டில் பிரதமரை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியும்; குடியரசுத் தலைவரை எதிர்த்துப் பேச முடியும்; உச்ச நீதிமன்ற நீதிபதியைக்கூட கேள்விகேட்க இயலும். ஆனால், நவீன மருத்துவத் துறையின் மருத்துவர்களை மட்டும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது. இவ்வாறான நிலைமையை அவர்கள் அழுத்தமாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

நோயாளியை மருத்துவமனையில் அனுமதிக்கும் போது, ஒரு படிவத்தை உங்களிடம் நீட்டி அதில் கையெழுத்துக் கேட்கிறார்கள் அல்லவா! அந்தப் படிவத்தைப் படித்துப் பார்த்துவிட்டு அதன் பிறகு கையொப்பம் இடுவோர் உங்களில் எத்தனை  பேர்? ஒருவேளை அதைப் படித்தால் உங்களுக்கு அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது புரியுமா?

‘மருத்துவ அனுமதிப்படிவங்கள், தாய்மொழியிலும் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும்’ எனச் சட்டம் கூறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் இந்தப் படிவங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும். ஆனால், நிலைமை என்னவென்று உங்களுக்கே தெரியும்.

இந்திய அரசின் மருத்துவ ஒழுங்குமுறை விதிகளின்படி, ஒவ்வொரு மருந்தை உங்களுக்குப் பரிந்துரைக்கும் முன்னரும், ‘இந்த மருந்தின் தீய விளைவுகள் இவை எல்லாம்’ என்று உங்களிடம் எடுத்துரைக்க வேண்டும். அதன் பின்னரும் நீங்கள் சம்மதித்தால்தான் அந்த மருந்துகளை நோயாளிக்கு வழங்க வேண்டும். இப்படித்தான் நடக்கிறதா என்பதையும் நீங்களே அறிவீர்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இந்திய அரசு 330 அலோபதி மருந்துகளைத் தடை செய்தது. இந்த மருந்துகள் யாவும், ‘ஆபத்து விளைவிக்கின்றன’ என இந்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த மருந்துகளின் பட்டியலைப் பார்க்கும்போது வார்த்தைகளால் விவரிக்க இயலாத அச்சமும் பதற்றமும் எனக்குள் உருவாகின்றன. ஏனெனில், இந்தச் சமூகத்தில் மிக அதிகமான மனிதர்கள் அன்றாடம் உட்கொண்ட மருந்துகள் அவை. தலைவலி, காய்ச்சல், வயிற்றுவலி, சளி, சிறுநீர்ச் சிக்கல், சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டு உள்ளிட்ட தொல்லைகளுக்கான மருந்துகள் அந்தப் பட்டியலில் மிகுதியாக இருக்கின்றன.

`இந்த மருந்துகள் எல்லாம் உயிருக்கு இடர் உருவாக்கும் தன்மைகொண்டவை’ என்றால், இவ்வளவு காலம் அவற்றைப் பரிந்துரைத்த மருத்துவத் துறையினரிடம் எந்தக் கேள்வியும் இல்லையா? இந்த மருந்துகளைத் தயாரித்தவர்கள் மீது எந்தச் சட்டமும் பாயாதா?'

இந்த மருந்துகளால் உடல்நலம் சீரழியும் என்றால், இதனால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மனிதர்களின் வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் பதில் கூறுபவர் எவர்?

இந்தக் கேள்விகள் என் மனதில் எழுகின்றன. ஆனால், இந்தக் கேள்விகள் எல்லாம் மேற்கண்ட மருந்துகளை உட்கொண்டோருக்கு அல்லவா எழ வேண்டும்? அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரே ஒரு மருந்து தடை செய்யப்பட்டால்கூட, மக்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகள் எழுகின்றன.

இங்கேயோ ஒன்று அல்ல... இரண்டு அல்ல 330 மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன. `அவற்றால் தீய விளைவுகள் உருவாகின’ என அரசாங்கமே அறிவிக்கிறது. அந்த மருந்துகளை எழுதித் தள்ளிய மருத்துவ வல்லுநர்களிடமும் வாங்கி விழுங்கிய மனிதர்களிடமும் எந்தச் சலனமும் இல்லை.

‘எனது கண்களின் பார்வையைப் பறித்துக்கொண்டாய் இறைவா. நான் துன்பத்தில் உழல்கிறேன். நீ மட்டும் நன்றாக வாழ்வாய்!’ (தேவாரம் – `வாழ்ந்து போதீரே...’ பாடல்) என இறைவனிடம் கோபப்பட்ட சுந்தரர், நம் மரபின் முன்னோடிகளில் ஒருவர். பின்னர் அவருக்குப் பார்வை மீண்டது வரலாறு. நம் முன்னோர் இறைவனிடம்கூட கேள்வி கேட்கச் சொன்னார்கள். இந்தச் சமூகமோ, நவீன மேதைகளிடம் எந்தக் கேள்வியும் இல்லாமல் சரணடைவது சரியா?

- திரும்புவோம்...