Published:Updated:

துயரங்கள் தொடரக் கூடாது!

துயரங்கள் தொடரக் கூடாது!

பிரீமியம் ஸ்டோரி

மீனவர்களின் வாழ்க்கை என்பதே ஆழ்கடல் அபாயப் பயணம்தான். சுற்றியடிக்கும் புயல், சூறாவளிக் காற்று, ராட்சச அலைகள், பெருமழை போன்ற ஆபத்துக்கள் இயற்கையாக விளைபவை என்றால், இலங்கை ராணுவத்தின் அட்டூழியங்களோ இரக்கமற்ற மனித அபாயங்கள். கடந்த சில வருடங்களில் மட்டும் பல நூறு மீனவர்கள், இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மீன்பிடி வலைகள் அறுக்கப்பட்டிருக்கின்றன; படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் ஒவ்வொரு முறை துப்பாக்கிச் சூடு நடத்தும்போதும் தமிழ்நாடு முதலமைச்சர், பிரதமருக்குக் கடிதம் எழுதுவது, ‘இந்த உயிர் பலிகள் கவலையளிக்கின்றன' என மத்திய அமைச்சர்கள் சம்பிரதாய அறிக்கை வெளியிடுவது போன்ற நிகழ்வுகளே மீண்டும் மீண்டும் நடக்கின்றன. மீனவர்களின் உயிரோடு விளையாடும் இத்தகைய சலிப்பூட்டும் அரசியல் விளையாட்டுக்கள் பற்றிப் பலமுறை பேசிவிட்டோம்.

துயரங்கள் தொடரக் கூடாது!


இந்தச் சூழ்நிலையில்தான், மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கத்துடன் டெல்லியில் இந்தியா-இலங்கை அமைச்சர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டுக்கூட்டத்தில் ‘எல்லை தாண்டும் தமிழ்நாடு மீனவர்கள் மீது, இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தாது' என்று இலங்கை அரசின் சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டிருப்பது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

பாரம்பர்ய முறையில் மீன் பிடிக்கும் மீனவர்களின் வலைகளை, மடிவலையைப் பயன்படுத்தும் இழுவைப் படகுகள் அறுத்துவிடுகின்றன. பவழப்பாறைகள் பாதிக்கப்படுவதால், கடலின் சுற்றுச்சூழல் சமநிலை குலைகிறது. இதனால் இந்தக் கடல் பகுதியில் மீன்வளம் முற்றிலுமாக அற்றுப்போகும் அபாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதனால், `மீன் வளத்தையே முற்றிலுமாக அழிக்கக்கூடிய இரட்டைமடி வலை, சுருக்கு வலை, இழுவை வலை போன்றவற்றை தமிழ்நாடு மீனவர்கள் பயன்படுத்தும் வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வழிவகை காண வேண்டும்’ என்று இலங்கையின் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை இந்தியத் தரப்பு ஏற்றுக்கொண்டிருக்கிறது.

வெளியுறவுத் துறை அமைச்சகம், கடலோரக் காவல் படை மற்றும் கடற்படையின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவை ஏற்படுத்த இரு நாடுகளும் சம்மதித்து உள்ளன. ‘இந்தக் குழு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடும். மீன்வளத் துறை அமைச்சர்கள் இடையில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சந்திப்பு நடைபெறும்’ என முடிவெடுத்திருப்பதும் வரவேற்கக்கூடியதே.

பொதுவாக கமிட்டி, குழு போன்றவை எல்லாம் முடிவெடுக்க முடியாத பிரச்னையைத் தள்ளிப்போடுவதற்காக அரசு எடுக்கும் உத்திகளாகவே மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இதுவரையிலான அனுபவங்களும் அப்படியே அமைந்திருக்கின்றன. ஆனால், தமிழக மீனவர்களின் துயர்துடைக்க எடுக்கப்பட்டிருக்கும் இந்த முயற்சி, அப்படியான ஒரு முயற்சியாக இல்லாமல், இரு நாட்டின் அரசுகளும் உளப்பூர்வமாக எடுக்கும் முயற்சியாக இருக்க வேண்டும். எந்த ஒரு முயற்சியும், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தால்தான் வெற்றிபெறும்!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு