Published:Updated:

ஆசை - ஜகத்காரணி... பூரணி... யாழினி!

ஆசை - ஜகத்காரணி... பூரணி... யாழினி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆசை - ஜகத்காரணி... பூரணி... யாழினி!

பரிசல் கிருஷ்ணா - படங்கள்: கே.ராஜசேகரன்

ஆசை - ஜகத்காரணி... பூரணி... யாழினி!

`என் மகள் யாழினிக்கு, பாடல்கள் என்றால் ப்ரியம். தம்பி மல்லீஸ்வரன் கார்ட்டூன் சேனல் பார்த்தால், அமைதியாக எழுந்து அறைக்குள் சென்றுவிடுவாள். பாடல்கள் போட்டால் அவள் அறையில் இருந்து வந்து முன்னறையில் அமர்வாள். மயிலாப்பூரில் ஒருமுறை ஒரு சபாவில் நித்யஸ்ரீ மகாதேவன் கச்சேரிக்குச் சென்றிருந்தபோது, அவரது குரலைக் கேட்ட மாத்திரத்தில் யாழினி இயல்புக்கு அதிகமாகவே உற்சாகம் அடைந்தாள். அதனால் தொடர்ந்து  வீட்டிலேயே நித்யஸ்ரீயின் சி.டி-க்களை, யாழினிக்காக வாங்கிக் கேட்க ஆரம்பித்தோம். 
 
நித்யஸ்ரீ மகாதேவன் மேடத்தோட குரல் கணீர்னு இருக்கும். கேட்டாலே, உடனடியா யாழினி முகத்தில் துள்ளலும் உற்சாகமும் தெரியும். அவளுக்காக நித்யஸ்ரீ அவர்களை சந்திக்க முடிந்தால், அதைவிட எங்களுக்குச் சந்தோஷம் எதுவும் இல்லை’ இது, சென்னை முகப்பேரைச் சேர்ந்த யாழினியின் அம்மா அபிராமி aasai@vikatan.com-க்கு அனுப்பிய மின்னஞ்சல்.

யாழினி... ஒலிகளுக்கு மட்டுமே எதிர்வினை செய்பவர். பன்மெய்ப்புல சவால்கொண்டவர் (Multiple Disability). 15 வயதுக்கான புரிதல் இல்லை. விழித்திறன் சவால் உடையவர். வாய் பேச மாட்டார்.  பெற்றோருக்கு அடுத்து ஒலிகள் மட்டுமே அவரது தோழமை. கையில் அணிந்திருக்கும் வளையல்களை, காது அருகே கொண்டுபோய் அசைத்து அசைத்துக் கேட்கிறார். காதில் மாட்டியிருக்கும் ஜிமிக்கியை விரலால் தட்டிவிட்டுக் கேட்டு ரசிக்கிறார். அம்மாவின் பர்ஸை காதுக்கு அருகில் கொண்டுபோய் ஆட்டிக்கொண்டே ‘ச்சப்ப்... ச்சப்ப்... ச்சப்ப்...’ என உதடுகள் அசைத்து, சின்னச்சின்னதாக ஒலி எழுப்புகிறார்.

ஆசை - ஜகத்காரணி... பூரணி... யாழினி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நித்யஸ்ரீயிடம், விகடன் வாசகர் குடும்பத்தின் இந்த ஆசையைச் சொன்னதும் ஒரு நொடிகூடத் தாமதிக்காமல், ‘நிச்சயம் கூட்டிட்டு வாங்க’ என நேரம் ஒதுக்கினார். அவரிடம் சொல்லும்போது யாழினிக்கு இருக்கும் விழித்திறன் சவாலை மட்டும்தான் பகிர்ந்திருந்தோம்.  
யாழினியின் அப்பா விசாகனுக்கு தனியார் நிறுவனத்தில் பணி. எப்போதும் உதட்டில் ஒரு புன்னகையுடனேயே இருக்கிறார் அம்மா அபிராமி. யாழினியின் தம்பி மல்லீஸ்வரன் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். நாங்கள் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, யாழினி ஒருவித உற்சாக மனநிலையில் இருந்தார்.

‘` `உன்னை ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போறோம்'னு சொல்லியிருக்கேன். என்ன புரிஞ்சதுனு தெரியலை. ஹேப்பியாவே இருக்கா’’  என்றார் அம்மா அபிராமி.

‘`கண் தெரியலைன்னாலும், வீட்டுல அவளுக்கு எல்லா இடங்களும் பழக்கம். தண்ணி வேணும்னா, டைனிங் டேபிள்கிட்ட போய் எடுத்துக் குடிச்சுப்பா. `யாழினி எழுந்து வா’னு கூப்பிட்டா, எழுந்து நாம இருக்கிற இடத்துக்கு வருவா. கடவுளின் குழந்தை அவள். கடவுளின் குழந்தையை வளர்க்கிற நாங்கதான் ஸ்பெஷல் பேரன்ட்ஸ். அவகிட்ட இருந்து தினம்தினம் நாங்க நிறைய விஷயங்களைக் கத்துக்கிறோம்’’ என உற்சாகமாகப் பேசுகிறார் விசாகன்.

வழி எங்கும் கேட்கும் சின்னச்சின்னச் சத்தங்களுக்கும் சிரிக்கிறார் யாழினி. நித்யஸ்ரீ வீட்டை அடைந்து காலிங் பெல்லை அழுத்தியதும், அவரது இளைய மகள் தனுஜஸ்ரீ  வரவேற்று உட்காரவைத்தார்.

ஆசை - ஜகத்காரணி... பூரணி... யாழினி!

கொஞ்ச நேரத்தில் நித்யஸ்ரீ வந்தார். அறிமுகத்துக்கு முன்னர், `‘முதல்ல யார் யாருக்கு என்ன வேணும்?’’ என உபசரித்தார். மல்லீஸ்வரன் ``பால்’’ என்றான். யாழினியைப் பார்த்தவர் பக்கத்தில் உட்கார்ந்து, `‘இதுதான் யாழினியா... யாழினிக்கு என்ன வேணும்?’’ என்று கேட்டார். ‘`இல்லைங்க.. அவ பேச மாட்டா’’ என அபிராமி சொன்னதும் ஒரு நொடி நிதானித்து, `‘பால் சாப்பிடுவா இல்லையா?’’ எனக் கேட்டு, உள்ளே சென்று சொல்லிவிட்டு வந்து எல்லோரோடும் பேச ஆரம்பித்தார்.

``ஏதோ சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்த மாதிரி இருக்கு. உங்ககூட நேர்ல உட்கார்ந்து பேசுவோம்னு எதிர்பார்க்கவே இல்லை’’ என விசாகன் சொல்ல, நித்யஸ்ரீ சிரித்தபடியே ‘`குழந்தைக்கு இப்படி இருக்குனு உங்களுக்கு எப்ப தெரிஞ்சது?’’ எனக் கேட்டார்.

``பிறந்து 15 நாள் கழிச்சுத்தான் பார்வைக் குறைபாடு இருக்குனு தெரிஞ்சது. கஷ்டமாத்தான் இருந்தது.  மனசைத் தேத்திக்கிட்டோம். அப்புறமா மூணு வயசுக்கு மேல பேச்சு வரலை. ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜுக்குப் போனப்ப, அங்கே எல்லா சோதனைகளும் பண்ணிப்பார்த்தாங்க. அப்பதான் `யாழினிக்குப் பேச்சும் வரலை, வயசுக்குத் தகுந்த வளர்ச்சியும் இல்லை’னும் சொன்னாங்க. அவங்க சொல்லித்தான் மயிலாப்பூர் க்ளார்க் ஸ்கூலில் (Clarke Schools For Hearing and Speech) யாழினியைச் சேர்த்தோம். இப்போது அவள் நொளம்பூர் பிரைட் சிறப்புப் பள்ளியில் படிக்கிறாள்’’ என்றார் அபிராமி.

ஆசை - ஜகத்காரணி... பூரணி... யாழினி!

``இந்த மாதிரி குழந்தைகளின் பேரன்ட்ஸ் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவங்க. நீங்க எவ்ளோ ஸ்பெஷலா இருந்திருந்தா, இவ உங்ககிட்ட வந்திருப்பா?’’ என நித்யஸ்ரீ  சொன்னதை ஆமோதித்தார் அபிராமி.

நித்யஸ்ரீ பேசிக் கொண்டிருக்கும்போதே அவரது இளைய மகள் தனுஜஸ்ரீ, யாழினியிடம் பேசிக் கொண்டிருந்தார். `‘இந்த டிரெஸ் நல்லாருக்கே... யாழினி சாக்லேட் சாப்பிடுவாளா?’’ என்று அவர் கேட்டதற்கு, தலையாட்டிக் கொண்டே இருந்தார் யாழினி.  கொஞ்ச நேரத்தில்  நித்யஸ்ரீயின் மூத்தமகள் தேஜஸ்ரீயும் சேர்ந்து கொண்டார். யாழினி கொஞ்சம் கொஞ்சமாகத் தலையை அப்படியும் இப்படியும் ஆட்டிக் கொண்டே துள்ளலாக இருந்தார். ‘தந்தான தந்தனா... தந்த தந்த தா’ என்று ஏதோ ஒரு ட்யூனில் யாழினி  என்னமோ ஹம் பண்ணிக் கொண்டிருந்ததை கவனித்த நித்யஸ்ரீ, ``நல்லா ஹம் பண்றாளே. பாடுவா போல இருக்கே’' என்று மகிழ்ந்தார்.

`‘இப்படி எப்பவாச்சும்தான் அவ உதட்டுல இருந்து சத்தம் வரும். இப்ப உங்க குரல் கேட்டதும் ரொம்பவே ரியாக்ட் பண்றா. நிறையப் பேர் அவளுக்காகக் கூடியிருக்கோம்னு அவளுக்குத் தெரியுது மேடம்'' என்ற விசாகன், சந்திப்பு முழுவதுமே நெகிழ்ந்துபோய் அமர்ந்திருந்தார்.

`‘யாழினி ஹேப்பியா?’’ என்று நித்யஸ்ரீ கேட்டதும் ‘`ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்’’ என்று கீழே பார்த்துக் கொண்டே தலையாட்டுகிறார்.

பேசிக்கொண்டே இருந்த நித்யஸ்ரீ, சட்டென்று ‘`நாம இப்ப யாழினிக்காக ஒரு பாட்டு பாடலாமா?’’ என்று கேட்டு  ‘ஜனனி ஜனனி ஜனனி... ஜகத்காரணி பூரணி நாரணியே’ என்று ஆரம்பித்ததும் யாழினியின்  அதிக உற்சாகத்தை அவர் உடல்மொழி வெளிப்படுத்தியது. முழுப்பாடலையும் பாடினார் நித்யஸ்ரீ. பாடி முடிக்கும்போது விசாகன், அபிராமி இருவர் கண்களும் நீரால் நிறைந்திருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அந்தக் குடும்பத்தோடு கழித்தார் நித்யஸ்ரீ.

`‘எத்தனையோ ஊர்ல, எத்தனையோ பேருக்கு முன்னால கச்சேரியில் பாடுறோம். இன்னைக்கு யாழினிக்காகப் பாடியதை மறக்கவே முடியாது. இது உங்களுக்கு இல்லை. எனக்கு ஸ்பெஷல் டே’’ என்றார் நித்யஸ்ரீ. அவரது சி.டி-க்கள் அடங்கிய பெரிய பை ஒன்றை யாழினிக்கு அன்புப் பரிசாகக் கொடுத்தார்.

`‘என் மகளுக்காக இந்த நாளை இவ்ளோ ஸ்பெஷலாக்கின விகடனுக்கு நன்றி’’ என்று நெகிழ்ச்சியோடு சொன்னார்கள் விசாகனும் அபிராமியும்.

``எனக்குப் பின்னால் என் பொண்ணு யாரையும் சார்ந்து இருக்கக் கூடாதுனு நான் நினைக்கிறேன். அதனால, இந்த மாதிரி குழந்தைகளுக்கான ஒரு அமைப்பு ஆரம்பிக்க லாம்னு இருக்கேன். எப்ப, எப்படினு எந்த ஐடியாவும் இல்லை. அதுக்காகத்தான் இப்ப அபிராமி, ஸ்பெஷல் எஜுகேட்டருக்கான பி.எட். படிக்கிறாங்க. இந்த மாதிரி குழந்தைகள் குறித்த விழிப்புஉணர்வு  இன்னும் நிறைய வளரணும்’’ என்றார் விசாகன்.

இரவு 9 மணி. காரைவிட்டு இறங்கி, அம்மாவின் கையைப் பிடித்து மாடி ஏறுகிறாள் யாழினி. வீட்டுக் கதவு திறந்ததும் லைட் எங்கே என்று நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம். ஆனால், முன்அறையைக் கடந்து சென்று கொண்டிருந்தார் யாழினி.

யாழினியின் உலகில் இருட்டே இல்லை! 

வாசகர்களே... இதுபோல நெகிழ்ச்சியான, ஜாலியான, ரசனையான, காமெடியான ஆசைகளை எழுதி அனுப்புங்கள். ஆசிரியர் குழுவினரின் பரிசீலனையில் தேர்வாகும் ஆசைகளை, விகடன் நிறைவேற்றித் தருவான். உங்கள் ஆசைகளை அனுப்பும்போது அலைபேசி எண்ணை மறக்காமல் குறிப்பிடுங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி...
‘ஆசை’,
ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,
சென்னை - 600 002.
இ-மெயில்: aasai@vikatan.com