Published:Updated:

புலி ஆடு புல்லுக்கட்டு - 14

டாக்டர் ஆர்.கார்த்திகேயன், ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

பிரீமியம் ஸ்டோரி
புலி ஆடு புல்லுக்கட்டு - 14

#பேய்

தைசொல்லிகள் குறைந்து வருகின்றனர். நிஜமான வாழ்வில் யார் கதையையும் கேட்க, நமக்கு நேரமும் இல்லை; சொல்ல பலருக்கு ஆளும் இல்லை.

`ஸ்டோரி டெல்லிங்' எனச் சதாய்த்துக் கொண்டிருந்த வெள்ளைக்காரர் சொல்லும் டெக்னிக் எதுவும் மனதில் போகவில்லை. கோவிலடி மாமாதான் நினைவுக்கு வந்தார்.

என் அத்தையை மணம் முடித்துக்கொண்ட அவருக்கு, கல்லணைக்குப் பக்கத்தில் சொந்த ஊர். சின்ன வயதில் திருக்காட்டுப் பள்ளியில் நைட் ஷோ பார்த்துவிட்டு சைக்கிளில் வரும்போதுதான் பேய் கதைகளைச் சொல்லத் தொடங்குவார். எல்லா கதைகளிலும் புளியமரத்துப் பேய், பில்லியன் ரைடரைத்தான் தாக்கும்; வண்டியை ஓடவிடாமல் பிடித்து இழுக்கும். பின்னால் திரும்பிப் பார்க்க எனக்கு ஆர்வமாகவும் அதேசமயம் பயமாகவும் இருக்கும். இருபுறங்களிலும் காவிரியும் கொள்ளிடமும் ஓசை படாமல் ஓடிக் கொண்டிருக்கும்.

வாழ்க்கையில் அதன் பிறகு எத்தனை பேய் படங்கள் பார்த்திருந்தும் அந்த திகில் உணர்வு கிடைக்கவே இல்லை. மாமா, இன்று இல்லை; நதிகளும் காய்ந்துவிட்டன. கதைகள் மட்டும் ஈரம் காயாமல் உள்ளே பத்திரமாக உள்ளன.

புலி ஆடு புல்லுக்கட்டு - 14

#மானசரோவர்

அசோகமித்திரன் கதைகள் என்றால், எனக்கு அலாதி பிரியம். அவரது ஏமாறக்கூடிய எளிமையும், மறைந்து ததும்பும் நகைச்சுவையும், சொல்லாமல் தெரியப்படுத்தும் சோகத்தையும் குறிப்பாகச் சொல்லலாம். சினிமாத் துறையில் பணியாற்றியவர். அவரின் ‘கரைந்த நிழல்கள்’ ஒரு கிளாசிக். அது சினிமா பற்றிய கதை அல்ல; சினிமாவில் உள்ள மனிதர்களின் கதை. ஆனால், எனக்கு அதைவிட அதிகம் பிடித்த நாவல் `மானசரோவர்'.

இதுவும் சினிமா மனிதர்கள் பற்றியதுதான். மதராஸில் உள்ள தமிழ்க் கதாசிரியனுக்கும் மும்பையில் உள்ள இந்திப் படக் கதாநாயகன் ஒருவனுக்குமான நட்பு பற்றிய அற்புதமான கதை. இலக்கிய வாசிப்பில் அப்ரென்ட்டிஸாக இருந்த காலத்தில் படித்தேன். கடைசி சில பக்கங்களில், முக்கியமான கதை நிகழ்வை போகிறபோக்கில் சொல்லியிருப்பார். மேம்போக்காகப் படிப்பவர்கள், நிச்சயமாக கதையையே கோட்டைவிட்டிருப்பார்கள்.கதை எழுத ஆசைப்படுபவர்கள், அசோகமித்திரன் கதை ஒன்றைப் படித்துவிட்டு லட்சியத்தைத் தொடரப் பரிந்துரைக்கிறேன்.

`தமிழில் தீவிரமான படிப்பாளிகள் (பெரும்பாலும் நாற்பது ப்ளஸ்) தவிர, மற்றவர்கள் ட்விட்டரில் வந்தால் தான் கதை படிப்பார்களோ!' எனச் சந்தேகிக்கிறேன். ஆனால், தலையணை சைஸ் ஹாரி பாட்டரும் தமிழ்நாட்டில் விற்கிறது. என் சிற்றறிவுக்கு இதைப் புரிந்து கொள்ள சிரமமாக உள்ளது.

ஹாலிவுட் ஸ்டைல் திரைக்கதைபோலவே, ஆங்கிலத்தில் பியுஷ் ஜா என்பவர் க்ரைம் கதைகள் எழுதுகிறார். சென்னையிலும் நன்கு விற்கிறது. தமிழ்நாட்டில் நம்ம பசங்களை தமிழில் படிக்கவைக்க, கொஞ்சம் `out of box' உத்திகள் தேவைப்படுகின்றன.
பேசாமல் மணிரத்னத்தைத்தான் தமிழில் நாவல் எழுதச் சொல்லணும்!

 #குரு

மணிரத்னத்தின் ‘குரு’ படம் எனக்குப் பிடிக்காவிட்டாலும், அம்பானியின் வாழ்க்கைச் சரிதம் பற்றி நிறைய யோசித்திருக்கிறேன். எவ்வளவு உண்மைகள் என்னை வந்து சேர்ந்தன எனத் தெரியாது. ஆனால், மிகப் பெரிதாக ஆசைப்பட்டு சாதித்த மனிதர் என்ற மரியாதை அவர் மீது உண்டு.
நவிமும்பையில் உள்ள ரிலையன்ஸ் வளாகத்துக்கு சமீபத்தில் சென்றிருந்தேன். அத்தனை பெரிய காம்ப்ளெக்ஸில் தொலையாமல் தன் இடத்துக்குச் செல்வதே கலைதான். என் நண்பர், ஜியோவில் பெரிய பதவி வகிக் கிறார். முகேஷ் அம்பானியின் working style பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். நாடு முழுவதும் திட்டமிட்ட ஜியோ கடைகளின் லேஅவுட் பற்றி விசாரித்தாராம். சுமார் 180 கடைகளின் வடிவமைப்பைக் கேட்டு வாங்கிய பிறகு, நள்ளிரவு 12:30 மணிக்கு மீட்டிங் முடிந்ததாம். அதிகாலையில் மெயில் பாக்ஸைத் திறந்தால் ஒவ்வொரு கடையிலும் திருத்தம் தெரிவித்து, பதில் வந்திருந்ததாம். மனிதர் எப்போது தூங்குவார் எனத் தெரியவில்லை!

`பணம் சம்பாதித்தால் லைஃபை என்ஜாய் பண்ணலாம்' என்பவர்கள், பணம் பண்ணுவது இல்லை.

புலி ஆடு புல்லுக்கட்டு - 14

#ஆலிவ் ஆயில்

ருஜுதா திவேகர், தன் வி.ஐ.பி க்ளையன்ட்டால் புகழ்பெற்றவர். முகேஷ் அம்பானியின் பருத்த மகனை இளைக்கவைத்ததாக இவரைக் கொண்டாடுகிறார்கள். இன்று, பல பிரபலங்கள் நாடும் வி.ஐ.பி டயட்டீஷியன். `ஓடியே உடம்பைக் குறைத்தார்' என ஒருபுறமும், `அறுவைசிகிச்சையால் குறைத்தான்' என மறுபுறமும் மக்கள் பேசிக்கொண்டாலும், ருஜுதாவின் பங்களிப்பு முக்கியம் என்றுதான் சொல்கிறார்கள்.

சைஸ் ஜீரோ பைத்தியத்தில் எல்லோரும் எதை எதையோ தின்ன ஆரம்பிக்கும் சூழலில், ருஜுதாவின் அறிவுரை, இளசுகளுக்கு அவசியம் என நினைக்கிறேன்.

`உங்களின் பாரம்பர்ய உணவுகள் மட்டும் உண்ணுங்கள். ஒன்றும் ஆகாது. அதுதான் நல்லது' எனச் சொல்கிறார். `கிரீன் டீ, ஆலிவ் ஆயில், புரோகோலி என, பிடிக்காததை அதிக விலை கொடுத்து வாங்கி உண்ணுதல் தேவை இல்லை. மூன்று வேளைகளும் சோறு தின்னலாம். உடல் எடைபோடாது' என அவர் சொல்வது கவனிக்கத்தக்கது. சுருக்கமாகச் சொன்னால், உங்கள் தாத்தா-பாட்டி உண்ட உணவை மட்டும் உண்ணுங்கள்.

ஆனால், சாதத்துடன் நாம் உண்ணும் சைட் டிஷ்கள் கருத்தில்கொள்ளவேண்டியவை. `சும்மா லைட் ஸ்நாக்' என நாம் உடன் நொறுக்கும் சிப்ஸ்தான் நிஜமான பிரச்னை.

 #மறைமுகம்

அவ்வளவு குறுகலான சாலைகளை என் வாழ்வில் நான் பார்த்தது இல்லை. மும்பை நெரிசல், கார் ஓட்டிகளைப் பித்துப்பிடித்ததுபோல எல்லா வழிகளிலும் நுழைந்து முன்னேற வைக்கிறது. இரவு வீடு சேர வெறித்தனமாக காரை ஓட்டிவந்த நண்பர் அந்தக் குப்பத்தில் நுழைந்தபோது, எனக்கு இன்னோர் இந்தியாவை ஞாபகப்படுத்தியது. `மிருகங்களைவிடக் கொடிதாக அடைந்து வாழும் அந்த மக்கள், எந்த அரசாங்கம் வந்தாலும் அங்கு இருந்து மீள முடியாது' எனத் தோன்றியது.

இதேபோல டெல்லியில் ஆர்.கே.புரம் அருகே மேம்பாலத்துக்குக் கீழே பட்டி கட்டிய ஆடுகளைப்போல நூறு பேராவது படுத்துக் கிடப்பதைப் பார்த்திருக்கிறேன்.

கடைக்கண் பார்வை படாமல் கடந்துபோகும் நாம் தரும் மறைமுகமான சம்மதம்தான் இவர்களை இங்கேயே தங்கவைத்துவிட்டதோ!

- மற்றவை நெக்ஸ்ட் வீக்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு