Published:Updated:

ரஷ்யப் புரட்சி 100

ரீ.சிவக்குமார், ஓவியம்: ஹாசிப்கான்

பிரீமியம் ஸ்டோரி

1917 -ம் ஆண்டு நவம்பர் 7, பூமிக்கு மேலே ஒரு பூகம்பம் நிகழ்ந்த நாள்; மக்கள் எழுச்சி, மகத்தான மாற்றத்தை நிகழ்த்திக்காட்ட முடியும் என நிரூபித்த நாள்; ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை, உங்கள் கைவிலங்குகளைத் தவிர. ஆனால், உங்களுக்காக ஒரு பொன்னுலகு காத்திருக்கிறது’ என்ற கார்ல் மார்க்ஸின் வார்த்தைகளுக்கான நம்பிக்கை விதைகள் விதைக்கப்பட்ட நாள். ஆம்... அதுதான் `நவம்பர் புரட்சி' என அழைக்கப்படும் ரஷ்யப் புரட்சி நடந்த நாள். இந்த ஆண்டு நவம்பர் 7-ல் இருந்து, நவம்பர் புரட்சி நூற்றாண்டு தொடங்குகிறது.

புரட்சிக்கு முந்தைய ரஷ்யா, பழைமைவாதத்தின் பிடியிலும் பட்டினிக் கொடுமைகளிலும் சிக்கித் தவித்தது. ரஷ்யாவை ஆண்டுவந்த ஜார் மன்னனின் அலட்சியத்தாலும் அதிகாரத் திமிராலும் எளிய மக்களின் வாழ்வு சின்னாபின்னமாகிச் சிதைக்கப்பட்டது. ஒரு ரொட்டித் துண்டுக்காக ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் நிலை நிலவியது. நிலக்கரித் தட்டுப்பாட்டால் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ரஷ்ய அதிகார வர்க்கத்தின் அரண்மனையோ, ரஷ்புடின் என்கிற சாமியாரின் சொல்பேச்சு கேட்டு, ஆடாத ஆட்டம் ஆடியது. மக்களின் நிலை குறித்து கவலைப்படுவதற்கு ஜார் அரசுக்கு, நேரமோ மனமோ இல்லை. போதாக்குறைக்கு முதல் உலகப்போரில் மற்ற நாடுகளைவிட, ரஷ்யா சந்தித்த இழப்புகள் ஏராளம். அவ்வப்போது ஜார் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சியாளர்கள் தோன்றாமல் இல்லை. ஆனால், அவர்கள் உடனடியாகக் களையெடுக்கப் பட்டனர். ஜார் மன்னனுக்கு எதிராகச் செயல்பட்டதால் தூக்கிலிடப்பட்டவர்களில் ஒருவரான அலெக்ஸாண்டர், லெனினின் அண்ணன். அவர் கொல்லப்பட்டபோது லெனினுக்கு வயது 17.

ரஷ்யப் புரட்சி 100

உள்ளூர நெருப்பைச் சுமந்தபடி, பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது மார்க்சியச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டார் லெனின். அந்தச் சிந்தனைகளைப் பரப்பியதற்காக ஜார் அரசால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். சிறை தண்டனை முடிந்து, 1900-ம் ஆண்டில் ஜெர்மன் சென்றவர், அங்கே ஒரு பத்திரிகை நடத்தினார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு 1917-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மக்கள் ஜார் ஆட்சியின் கொடுங்கோன்மைக்கு எதிராக வீதிகளில் திரண்டனர். முதல் ரஷ்யப் புரட்சியின் மூலம் ஜார் ஆட்சி வீழ்த்தப்பட்டது. மிதவாத சோஷலிஸ்ட்களான மென்ஸ்விக்குகள் தலைமையில் ஆட்சி அமைந்தது. என்றாலும், மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு இல்லை. முதல் உலகப்போரில் ரஷ்யா ஈடுபடுத்தப்படுவதும் நிற்கவில்லை. 17 ஆண்டு களுக்குப் பிறகு தாயகம் திரும்பிய லெனின் தலைமையில் புரட்சிகரக் குழு, ரஷ்யத் தலைநகர் பெட்ரோகிராடைச் சுற்றிவளைத்தது. லெனின் தலைமையில் முதல் கம்யூனிசப் புரட்சி நிகழ்ந்தது. இடைக்கால அரசு வீழ்த்தப்பட்டு, உலகின் முதல் கம்யூனிச அரசு, புரட்சியாளர் லெனின் தலைமையில் அமைந்தது. ஆட்சிக்கு வந்த மறுநாளே நிலப்பிரபுக்களின் நிலங்களைக் கைப்பற்றி விவசாயிகளுக்குப் பிரித்துக்கொடுத்தார் லெனின். தொழிற்சாலைகள், அரசுடைமை ஆகின. 1922-ம் ஆண்டில் பல நாடுகளை இணைத்து சோவியத் யூனியன் உருவாக்கப்பட்டது.

உலக வரைபடத்தில் சிவப்பு வண்ணம் படரப் படர, மேற்கத்திய நாடுகள், ‘கம்யூனிச பூதம்’ என்று அலறின. உலக நாடுகள் அமெரிக்கத் தலைமையின் கீழும், சோவியத் யூனியன் கீழும் அணி பிரிந்தன. மார்க்ஸியத்துக்கான செல்வாக்கு உலகம் எங்கும் வலுக்கத் தொடங்கியது. ‘புரட்சி’ என்பது, இந்த நூற்றாண்டின் இணையற்ற எழுச்சிச் சொல்லானது. தமிழகத்தில் இலக்கியப் பரிச்சயம் உடைய எவரும், மொழிபெயர்க்கப்பட்ட சோவியத் இலக்கியங்களையோ கெட்டியான தாள்கள்கொண்ட ‘சோவியத் நாடு’ பத்திரிகையையோ மறந்துவிட முடியாது. தமிழகத்தில் பெரியார் தொடங்கி உலக அளவில் கம்யூனிசச் சிந்தனையால் ஈர்க்கப்பட்ட பல தலைவர்கள், சோவியத் யூனியனுக்குச் சென்று பார்த்து வந்தனர். விளையாட்டுத் துறையாக இருந்தாலும் விண்வெளித் துறையாக இருந்தாலும், சோவியத் யூனியன் பல சாதனைகளை நிகழ்த்தியது.

சோவியத் யூனியனின் சாதனைகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். கல்வி இலவசமாக்கப்பட்டது; சோவியத் ஒன்றியத்தில் இருந்த அனைத்து நாடுகளிலும் தாய்மொழிக் கல்வி வழங்கப்பட்டது; வேலை நேரம் 7 மணி நேரம் ஆக்கப்பட்டது. சுரங்கப் பணி, மருத்துவப் பணி போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கான வேலை நேரமோ 6 மணி நேரம்தான். குழந்தைப் பராமரிப்புக்கான தொகையை அரசு வழங்கியது. கல்வியைப்போலவே மருத்துவமும் இலவசம். ‘அனைவருக்கும் வீடு’ என்பது அரசியல் சட்ட உரிமையாக்கப்பட்டது. 1930-ம் ஆண்டு முதல் 1970-ம் ஆண்டு வரை 40 ஆண்டு காலம் போக்கு வரத்துக் கட்டணங்களில் மாற்றம் இல்லை. கூட்டுப்பண்ணைகள் உருவாக்கப்பட்டு உற்பத்தி அதிகரித்தது. இப்படி மதங்கள் வர்ணித்த சொர்க்கத்தை, மதநம்பிக்கை இல்லாத சோவியத் யூனியன் அரசுகள் மண்ணில் உருவாக்கின. நவம்பர் புரட்சியின் தாக்கத்தாலும் சோவியத் யூனியன் மீதான ஈர்ப்பாலும் உலகம் எங்கிலும் கம்யூனிச இயக்கங்கள் உருவாகத் தொடங்கின.

ரஷ்யப் புரட்சி 100

‘பாட்டாளிவர்க்கத் தலைமையில்தான் புரட்சி’ என்பதைச் சூத்திரம் ஆக்காமல், தன் நாட்டு நிலைமைகளுக்கு ஏற்ப, விவசாய வர்க்கத்தின் தலைமையில் சீனாவில் புரட்சியை நடத்திக்காட்டினார் மா சே-துங். தேசத்தின் எல்லைக்கோடுகளைத் தாண்டி புரட்சிக்காக உழைத்து, அமெரிக்க உளவு நிறுவனத்தால் கொல்லப்பட்ட புரட்சியாளர் சே குவேராவும், சின்னஞ்சிறு நாடாக இருந்தும் அமெரிக்காவின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிய ஃபிடல் காஸ்ட்ரோவும் இன்றளவும் புரட்சியையும் மக்களையும் நேசிக்கும் இளைஞர்களின் மகத்தான சாகச நாயகர்கள். வியட்நாமின் வீரம் செறிந்த போராட்டம், மக்கள் சீனத்தை உருவாக்கிய மாவோவின் புரட்சி, கியூபா புரட்சி என எல்லாவற்றுக்கும் முதல் விதையாக இருந்தது ரஷ்யப் புரட்சிதான்.

அதேநேரத்தில் ரஷ்யப் புரட்சிக்கு அடுத்து சீனாவில் மாபெரும் புரட்சியை நிகழ்த்திக்காட்டிய மாவோ, சோவியத் யூனியன் தலைமையோடு முரண்பட்டார். எப்படி உலக நாடுகள் அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் எனப் பிளவுபட்டு அணி திரண்டனவோ, அதேபோல் உலக அளவில் கம்யூனிஸ்ட்களும் சோவியத் யூனியன் அரசுகளை ஏற்பது, மறுப்பது என அணி பிரிந்தன.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் ‘ரஷ்யப் பாதையா... சீனப்பாதையா?’ என்ற கேள்வி எழுந்தது. சீனப் பாதையை முன்வைத்தவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்க, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் உடைந்தது. அதற்குப் பிறகும், ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் போலவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நாடாளு மன்றத் தேர்தல் பாதையில் தேங்கிவிட்டது.

மாவோயிசப் புரட்சியை முன்னுதாரணமாகக் கொண்டு, இந்தியாவிலும் ஆயுதப் புரட்சி நடத்தப்பட வேண்டும்’ என்ற குரல்கள் வலுக்கத் தொடங்கின. 1967-ம் ஆண்டில் ‘வசந்தத்தின் இடிமுழக்கம்’ என வர்ணிக்கப் பட்ட நக்ஸல்பாரி இயக்கம் தோன்றியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்து பிரிந்து மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் இயக்கத்தை உருவாக்கிய சாரு மஜூம்தார், ‘நிலப்பிரபுக்களை அழித்தொழித்து அவர்கள் உடைமைகளைப் பறிமுதல் செய்வதற்கான’ இயக்கத்தைக் கட்டியமைக்க அறைகூவல் விட்டார். அழித்தொழிப்பு இயக்கத்தில் ஈடுபட்ட நக்ஸல்பாரிப் போராளிகள் அரச வன்முறைக்குப் பலியாகினர். அவர்கள் நினைத்ததைப்போல ஒரு மாபெரும் மக்கள் புரட்சியை நிகழ்த்த முடியவில்லை. ‘மக்களை அரசியல்படுத்தி அணி திரட்டாமல், தனிநபர் வன்முறைகள் மூலம் மட்டும் புரட்சி செய்ய முடியாது’ என்ற முடிவுக்கு சுயவிமர்சனத்துடன் வந்தபோது மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் இயக்கமும் பல குழுக்களாக உடைந்துபோனது.

இப்படி இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டத்தில்தான், (1991-ம் ஆண்டில்) சோவியத் யூனியன் உடைந்தது. நவம்பர் புரட்சியின் மூலம் உருவாக்கப்பட்டு, 69 ஆண்டுகள் உலக அளவில் பல மாற்றங்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்திய சோவியத் யூனியனின் உடைவு, உலக அளவில் மார்க்சியச் சிந்தனையாளர்களுக்கும் புரட்சிகர இயக்கங் களுக்கும் மனச்சோர்வை ஏற்படுத்தியது.

ஸ்டாலின் காலத்திலேயே சோவியத் அரசு மற்றும் கட்சி நடைமுறை குறித்த விமர்சனங்கள் ரஷ்யாவின் உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் வந்தன. சோவியத் யூனியன் உடைவுக்குப் பிறகு புரட்சி, கட்சி, ஆட்சி, தத்துவம், நடைமுறை ஆகியன குறித்த பல விமர்சனப் பார்வைகள் முன்வைக்கப்பட்டு உலக அளவில் தீவிரமாக விவாதிக்கப்பட்டன. `வர்க்க பேதமற்ற சமுதாயம் உருவாக வேண்டும்' எனக் கனவு கண்ட மார்க்ஸ், அதை நிறைவேற்றுவதற்கான இடைக்கால ஏற்பாடாகத்தான் புரட்சியின் மூலம் உருவாக்கப் படும் அரசைக் கருதினார். ‘சோஷலிசச் சமூகத்தில் அரசு உலர்ந்து, உதிர்ந்துபோகும்’ என்பது மார்க்சியம். ஆனால், ரஷ்யா, சீனா உள்ளிட்ட பெரும்பாலான கம்யூனிச நாடுகளில் அரசோ இறுகிப்போனது. ‘பாட்டாளி வர்க்கச் சர்வதிகார அரசு என்பது கம்யூனிஸ்ட் கட்சி சர்வதிகார அரசாகி, பிறகு தனிநபர் சர்வதிகார அரசாக மாறியது’ என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் தனிநபர் சுதந்திரம் ஒடுக்கப் பட்டதாகவும் மாற்றுக் கருத்துக்களை முன்வைத்தவர்கள் நசுக்கப்பட்டதாகவும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இத்தகைய விமர்சனங்களை `முதலாளித்துவச் சதி’ என்றே இன்றளவும் பல கம்யூனிஸ்ட் இயக்கங்கள் சொல்கின்றன.

உலக அளவிலும் இந்திய அளவிலும் கம்யூனிச இயக்கங்களின் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனப் பார்வைகளைத் தொகுத்துக் கொள்ளலாம். புரட்சியும் பாட்டாளி வர்க்க அரசும் எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்குத் தனிநபர் சுதந்திரமும் கருத்துரிமையும் முக்கியம் என்ற விமர்சனம் முதன்மையானது. ரஷ்யப் புரட்சியையோ, சீனப் புரட்சியையோ அப்படியே இயந்திரத்தனமாக எல்லா நாடுகளுக்கும் பொருத்த முடியாது, ‘மண்ணுக்கு ஏற்ற மார்க்சியம்’ உருவாக்கப்பட வேண்டும்' என ஒரு சாரார் முன்வைக்கின்றனர். ‘இது திரிபுவாதம். மரபு மார்க்சியமே சரியானது’ என்ற தீவிரக் குரல்களும் அதை எதிர்த்து எழுகின்றன. வர்க்க அடையாளத்தின் அடிப்படையில் `வர்க்கப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தருவதைப் போலவே, பாலின அடிப்படையில் பெண்கள், நிற அடிப்படையில் கறுப்பர்கள் என ஒடுக்கப்பட்ட எல்லா பிரிவினர்களின் உரிமை களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்’ என்னும் மாற்றுக் குரல்கள் உலக அளவில் எழுந்தன.

இந்திய கம்யூனிஸ்ட்கள் மீது வைக்கப்பட்ட மிக முக்கியமான விமர்சனம், ‘அவர்கள் வர்க்கப் பிரச்னைகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை சாதியப் பிரச்னைகளுக்குக் கொடுக்கவில்லை’ என்பதுதான். இந்திய அளவில் அம்பேத்கரும் தமிழகத்தில் பெரியாரும் இத்தகைய விமர்சனங்களை முன்வைத்தனர். ‘சாதி என்பது, நிலப்பிரபுத்துவ முறையின் உற்பத்தி. வர்க்கப் புரட்சி நடக்கும்போது தானாகவே சாதி ஒழிந்துவிடும்’ என்று அன்றைய கம்யூனிஸ்ட்கள் வாதிட்டபோது இத்தகைய எதிர்க்குரல்கள் எழுந்தன. ஆனால், 1991-ம் ஆண்டில் அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டியும் அதற்கு முன்னர் எழுந்த தலித் அரசியல் எழுச்சியும், 1992-ம் ஆண்டு நிகழ்ந்த பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு எழுந்த இந்துத்துவ அரசியல், கம்யூனிஸ்ட்களின் அரசியல் செயற்பாட்டில் மறுபரிசீலனைகளை உருவாக்கின. அம்பேத்கரையும் பெரியாரையும் புதிய வெளிச்சத்தில் வாசித்து, சாதியத்துக்கும் இந்துத்துவத்துக்கும் எதிரான பேராயுதமாக ஏந்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

அதேபோல் தேசிய இனப் பிரச்னைகள் குறித்த இந்திய கம்யூனிஸ்ட்களின் அணுகுமுறையும் விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டன. ‘பிரிந்துபோகும் தன்மையுடன்கூடிய தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை’ என்பதை இந்திய கம்யூனிஸ்ட்கள் கருத்து அளவில் ஏற்றுக்கொண்டாலும், நடைமுறையில் தேசிய இனங்களின் உரிமைகளைக் கவனத்தில் கொள்ளாமல் இந்திய தேசியம் என்பதற்கே அழுத்தம் கொடுக்கின்றனர் என்னும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இரண்டு தேர்தல் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடுகள் இப்படி இருந்தாலும், மார்க்சிய லெனினியக் குழுக்கள் தேசிய இனப் பிரச்னை குறித்துத் தீவிரமாக விவாதித்து, தமக்கான நிலைப்பாடுகளை உருவாக்கியிருக்கின்றன என்பதையும் குறிப்பிட வேண்டும். ஆனால், அவர்களுக்குள்ளும் ‘தேசிய இன விடுதலையா, சுயநிர்ணய உரிமையா, அகில இந்தியப் புரட்சியா?’ போன்ற முரண்பாடுகள் இருக்கவே செய்கின்றன.

தேர்தல் பாதையில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள், மற்ற அரசியல் கட்சிகள் அளவுக்கு இல்லை என்றாலும் சில சமரசங்களையும் சந்தர்ப்பவாதங்களையும் மேற்கொள்வது, ஒட்டுமொத்த கம்யூனிஸ்ட்கள் மீதான அவநம்பிக்கையாகப் போய்விடும் அபாயமாக இருக்கிறது. தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமாக இருந்த காலத்தில் மக்களின் உணர்வுகளைக் கணக்கில் எடுக்காமல், ‘மொழி என்பது வெறுமனே தகவல் தொடர்புக்கான கருவிதான்’ என்ற வறட்டுத்தனமான நிலைப்பாட்டை கம்யூனிஸ்ட்கள் எடுத்தனர். 1952-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு பலத்துடன் இருந்த கம்யூனிஸ்ட் இயக்கம், இன்று சாதிக் கட்சிகளுக்கு இருக்கும் செல்வாக்கைக்கூடப் பெறவில்லை. எந்தத் திராவிடக் கட்சிகளைக் கடுமையாக விமர்சித்ததோ, அதே திராவிடக் கட்சிகளிடம் சில ஸீட்டுகளுக்காக வாசலில் காத்துக்கிடக்கும் நிலை. அதற்கும் ஒருபடி மேலே போய் எந்தக் கருத்தியல் தெளிவும், அரசியல் பாரம்பர்யமும் இல்லாத விஜயகாந்த்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கவேண்டிய அவலமும் சமீபத்தில் நிகழ்ந்தது. கட்டபஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் ஆகியவற்றை சில இடங்களில் காம்ரேட்களே மேற்கொள்வதை என்ன என்பது? சென்ற ஆட்சியில் தளி தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரன் மீது, கிரானைட் ஊழல் தொடங்கி பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் பழனியைக் கொலை செய்த வழக்கு என, பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் அடுத்த தேர்தலிலும் அதே தளி ராமச்சந்திரனை வேட்பாளராக நிறுத்தி, தன் முகத்திலேயே சேறு பூசிக்கொண்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

உச்சபட்சமாக சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அலுவலகம் கட்டப்பட்டதிலேயே முறைகேடுகள் நடந்ததாக சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர் களின் விமர்சனத்துக்கு உள்ளானது. கருத்துரீதியாக நிலைப்பாடுகள் எடுப்பதிலும் கம்யூனிஸ்ட் களிடம் முரண்பாடுகள். சர்வதேசியம் பேசவேண்டிய கம்யூனிஸ்ட்கள் முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் கேரளாவில் ஒரு மாதிரியாகவும் தமிழகத்தில் வேறு ஒரு மாதிரியாகவும் நிலைப்பாடு எடுப்பது வரலாற்று அவலம்.

ஈழப்பிரச்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு நிலைப்பாடு, மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒரு நிலைப்பாடு. 34 ஆண்டுகாலம் மேற்குவங்கத்தை ஆண்ட கம்யூனிஸ்ட்களின் வீழ்ச்சி, அவர்களின் தேர்தல் அரசியல் தவறுகளுக்கான ஒரு சான்று. ‘டாடா பிர்லா அம்பானி, பாட்டாளிக்குப் பகையாளி’ என முழக்கமிட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் அரசு, அதே டாடா கம்பெனிக்காக நந்திகிராமிலும் சிங்கூரிலும் போராடிய மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இவை எல்லாம் சிவப்பு இயக்கங்களின் மீதான கறுப்புப் புள்ளிகள்.

இத்தகைய விமர்சனங்கள் இந்திய கம்யூனிஸ்ட்கள் மீது வைக்கப்பட்டாலும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கங்களின் வரலாற்றுப் பாத்திரத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி உலகமய எதிர்ப்புப் போராட்டம் வரை கம்யூனிஸ்ட்களின் பங்கு அளப்பரியது. இன்றளவும் இருக்கும் அரசியல் கட்சிகளில் நேர்மையானவர்களாகவும் எளிமையும் அர்ப்பணிப்பும் கொண்டவர் களாகவும் கம்யூனிஸ்ட் தலைவர்களே இருக்கிறார்கள். ‘சாதியா... வர்க்கமா?’ என்னும் வாதத்தை ஒதுக்கிவைத்துப் பார்த்தால், கீழத் தஞ்சையில் சாணிப்பாலுக்கும் சவுக்கடிக்கும் எதிரான போராட்டம் தொடங்கி, உத்தபுரம் சுவர் இடிப்புப் போராட்டம் வரை சாதியக் கொடுமைகளுக்கும் தீண்டாமைக்கும் எதிராகக் களத்தில் நின்று போராடுபவர்கள் கம்யூனிஸ்ட்கள். ஸ்ரீரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம், தாமிரபரணி கோக் கம்பெனிக்கு எதிரான கங்கைகொண்டான் போராட்டம் தொடங்கி, ஜிண்டால், வேதாந்தா கம்பெனிகள் இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்கு எதிரான போராட்டம் வரை மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் இயக்கத்தவர்களும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.

ரஷ்யப் புரட்சி 100

உலகமயமாக்கலின் மூலம் உருவாக்கப் பட்டிருக்கும் நுகர்வுக் கலாசாரத்துக்கு அடிமையான மக்கள், அறிவியல் தொடங்கி அரச அதிகாரம் வரை நீளும் மூலதனத்தின் கொடுங்கரங்கள், பயங்கரவாதத்தைப் பாதையாகக்கொண்ட மதவாத அடையாள அரசியல் ஆகியவை உலக அளவில் கம்யூனிச இயக்கங்களுக்கு உள்ள சவால். ‘ஏகாதிபத்திய நாடுகள்’ என கம்யூனிஸ்ட் களால் வர்ணிக்கப்படும் அமெரிக்கா, பிரான்ஸ் அரசாங்கங்களுக்கு இன்று எதிரியாக இருப்பது ஐ.எஸ்.ஐ.எஸ்-தானே தவிர, வலுவான கம்யூனிச இயக்கங்கள் இல்லை என்பது கசப்பான நிதர்சனம். ‘ஆயுதப் போராட்டம்’ என்பது கடுமையாக எதிர்கொள்ளப்படுவது ஒருபுறம் என்றால், ஆயுதப் போராட்டத்தால் ஏற்படும் உள்முரண்கள் இன்னொரு புறம். இப்படியிருக்க ‘ஆயுதப் புரட்சி’ என்ற கம்யூனிஸ்்ட்களின் நிலைப்பாடு இன்றைக்குச் சாத்தியமா என்பதும் விவாதத்துக்கு உரிய விஷயம். சாதியமும் இந்துத்துவமும் இந்திய கம்யூனிஸ்்ட்கள் முன் உள்ள பிரத்யேகமான சவால்கள்.

புரட்சி தொடங்கிய ரஷ்யாவில் இன்று கம்யூனிச இயக்கம் வீச்சுடன் இல்லை. சீனா பெயர் அளவில் ஒரு கம்யூனிச நாடாக இருந்தாலும் மார்க்சியத் தத்துவ அளவுகோல்படி பார்த்தால், அது முழுமையான கம்யூனிச நாடாக இல்லை. அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த கியூபாவில் இப்போது அமெரிக்கத் தூதரகம் திறக்கப்பட்டுவிட்டது. உலக அளவில் முதலாளித்துவத்தின் கையே ஓங்கியிருக்கிறது. இந்தியாவில் மாநிலக் கட்சிகள் அளவுக்குக்கூட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடதுசாரிகளுக்கு இல்லை. மார்க்சிய-லெனினிய இயக்கத்தினர் சில பிரதேசங்களில் வலிமையுடன் திகழ்ந்தாலும், ஒட்டுமொத்தமாக மக்கள் செல்வாக்கு பெற்ற இயக்கங்களாக இல்லை. உலக அளவில் புரட்சி என்பது கானல்நீர் என்றும், கம்யூனிசம் என்பது இனி செல்லுபடியாகாத தத்துவம் என்பதும ்போன்ற தோற்றம் உருவாகியிருப்பது என்னவோ உண்மைதான். ஆனால், கம்யூனிசத்தை வீழ்த்திவிட்டதாகப் பெருமைகொள்ளும் முதலாளித்துவமும் நெருக்கடியில்தான் சிக்கித் தவிக்கிறது என்பதே யதார்த்தம். 2011-ம் ஆண்டில் நடைபெற்ற வால்ஸ் ட்ரீட் போராட்டமே அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

எத்தனை கருத்துமோதல்களும் முரண்பாடு களும் இருந்தாலும், உலகில் உள்ள எல்லா கம்யூனிஸ்ட் இயக்கங்களின் கடைசித் தீர்வாகவும் கனவுச் சொல்லாகவும் ‘புரட்சி’ இருக்கிறது. இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியில் அது சாத்தியமா எனக் கேட்டால், ‘மாற்றம் என்பதே மாறாத ஒன்று’ என்னும் மார்க்சின் வார்த்தைகளில் நம்பிக்கைகொண்டவர்கள் அல்லவா கம்யூனிஸ்ட்கள்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு