Published:Updated:

‘அவர்களை சுட்டுத்தள்ளுங்கள்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘அவர்களை சுட்டுத்தள்ளுங்கள்!”
‘அவர்களை சுட்டுத்தள்ளுங்கள்!”

மருதன்

பிரீமியம் ஸ்டோரி
‘அவர்களை சுட்டுத்தள்ளுங்கள்!”

ந்த எட்டு பேரையும் முதலில் பார்த்தவர் நரேஷ் பால். சந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்த இவர், அதிகாலை 7 மணிக்கு வீட்டைவிட்டு வெளியில் வந்தபோது, தொலைவில் அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட 500 மீட்டர் இடைவெளி என்பதால் முகங்கள் தெரியவில்லை. அவர்கள் நதியை நோக்கி நகர்ந்துகொண்டி ருந்ததால் மீனவர்களாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டார் நரேஷ் பால். அல்லது அக்கம்பக்கத்துக் கிராமங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். யாராக இருந்தால் என்ன, நம் ஆட்கள்தானே என நினைத்து கையசைத் திருக்கிறார். பிறகு சற்றே குரலை உயர்த்தி, `ஜெய் ஸ்ரீராம்’ என்று முழங்கியிருக்கிறார். ஆனால், ஒருவர்கூட பதில் அளிக்கவில்லை. பிறகு, சாவகாசமாக 8 மணிக்கு டி.வி போட்டுப் பார்த்த போதுதான், அவர்கள் ஏன் பதில் அளிக்கவில்லை என்பது நரேஷ் பாலுக்குப் புரிந்தது.

என்ன சொல்கிறார்கள்?

அவர்கள் போபால் மத்தியச் சிறைச்சாலையில் இருந்து, அக்டோபர் 31-ம் தேதி அன்று அதிகாலை 3 மணிக்குத் தப்பித்திருக்கிறார்களாம். கிட்டத்தட்ட 15 கி.மீ தள்ளி பாதுகாப்பாக வந்துசேர்ந்துவிட்ட பிறகு, காவல் துறையினரும் அவர்களைக் கண்டுபிடித்துவிட்டார்களாம். அதற்குப் பிறகு இரு தரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையின் முடிவில், எட்டு பேரும் காவல் துறையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனராம். இதுவே அரசுத் தரப்பு செய்திக்குறிப்பு.

ஐ.எஸ்.ஓ 9001:2015 சான்றிதழ் பெற்ற, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டிய, மத்தியச் சிறைச்சாலையில் இருந்து எட்டு பேரும் தப்பியது எப்படி? `உணவு நேரத்திலோ, குளிக்கும் சமயத்திலோ ஒன்றுகூடி விவாதித்துத் திட்டமிட்டிருக்கிறார்கள். 32 அடி உயரத்துக்கு எழும்பி நிற்கும் சுவரைத் தாண்டிக் குதிக்க, உள்ளேயே ஓர் ஏணி உருவாக்கப்பட்டிருக்கிறது. படுக்கை விரிப்புகளைச் சுருட்டி ஒன்றோடு ஒன்று முடிச்சிட்டு, அதை வீசி எறிந்து தாண்டியிருக் கிறார்கள். ராம்ஷங்கர் யாதவ் என்கிற காவலர் அவர்களைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். ஆனால் ஸ்பூன், தட்டு ஆகியவற்றைக் கொண்டு அவர் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டார்கள். ஆனால், நல்லவேளையாக காவல் துறை விரைவாகச் செயல்பட்டு, அவர்களைக் கண்டுபிடித்து அழித்துவிட்டது...’ எப்படித் தப்பித்தார்கள் என்பதற்கு அதிகாரிகள் அளித்துள்ள விளக்கம் இது. சுபம்.

‘அவர்களை சுட்டுத்தள்ளுங்கள்!”

ஏன் நம்ப முடியவில்லை?

இந்த விளக்கத்தைக் கேட்கும்போதே, அதில் உள்ள ஓட்டைகள் கொத்துக்கொத்தாகப் புலப்பட ஆரம்பித்துவிட்டன. 32 அடி உயர சுவரைத் தாண்டிக் குதிக்கும் வரை, ஏன் யாருமே பார்க்கவில்லை? படுக்கை விரிப்புகளைக்கொண்டு ஏணி அமைத்து மேலே ஏறிக் குதிப்பதற்கு, எப்படியும் 45 நிமிடங்கள் தேவைப்படும் என அதிகாரிகளே சொல்கிறார்கள். இருந்தும் அடுக்கடுக்கான பாதுகாப்பு வளையத்தில் இருந்து ஒருவர்கூடவா இவர்களைக் கவனிக்கவில்லை? `ஹை ரிஸ்க் வார்டு' எனப்படும் பிரிவில் இருந்தே இப்படிச் சுலபமாகத் தப்பிக்க முடிகிறது என்றால், மற்ற சிறைப் பகுதிகள் எந்த லட்சணத்தில் இருக்கும்?

பிறகு, தப்பிய எட்டு பேரும் ஏன் தனியே பிரிந்து செல்லாமல் ஒன்றாகக் கரம்கோத்தபடி இறுதி வரை ஓடினார்கள்? எப்படி ஒரே இடத்தில் அவர்கள் தட்டுப்பட்டார்கள், எப்படி ஒன்றுபோல் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்? முதலில் வெளிவந்த அதிகாரபூர்வச் செய்தியின்படி, எட்டு பேரும் ஆயுதம் எதுவும் தரித்திருக்கவில்லை எனச் சொல்லப்பட்டது. பிறகு எப்படி இரு தரப்புக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது? ஓடும் வழியில் எட்டு பேருக்கும் ஆளுக்கு ஒரு துப்பாக்கி கீழே கிடைத்திருக்குமா என்ன? தப்பித்து எட்டு மணி நேரம் ஆன பிறகும் குறைவான தொலைவே அவர்கள் சென்றிருப்பது ஏன் ஒருவருக்குமே வியப்பை ஏற்படுத்தவில்லை? தப்பிப் பிழைத்து ஓடுபவர்கள் நிச்சயம் கையை, காலை வீசியபடி நடந்து செல்ல மாட்டார்கள் அல்லவா?

இந்தச் சந்தேகங்கள் போதாது என என்கவுன்ட்டர் வீடியோவும் வந்துசேர்ந்தது. இது, நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. என்கவுன்ட்டர் நடைபெற்றதற்கு முன்னரும் அதற்குப் பிறகுமான காட்சிகள், இந்த வீடியோவில் பதிவாகியிருக்கின்றன. முதல் பகுதியில் கன்ட்ரோல் ரூமுக்கும், விரட்டிப் பிடிப்பதற்காகச் சென்ற காவல் துறையினருக்கும் இடையிலான உரையாடல் பதிவாகியுள்ளது. பாஸ் சொல்கிறார்... `எட்டு பேரையும் சுட்டுத் தள்ளுங்கள்’. சில நிமிடங்கள் கழித்து காவலர்களின் குரல் கேட்கிறது... ‘கதை முடிந்தது. எட்டு பேரும் இப்போது இறந்துவிட்டார்கள்.’ இரண்டாவது பகுதியில், வீழ்த்தப்பட்ட உடல்கள் மீது காவலர்கள் துப்பாக்கிக் குண்டுகளைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வீடியோவின் நம்பகத்தன்மை இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், போபால் மத்தியச் சிறைத் துறை அதிகாரிகளும் (இவர்களில் சிலர் இப்போது பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்) ஆளும் சிவ்ராஜ்சிங் சௌகான் அரசும் அளித்துள்ள முழுநீள என்கவுன்ட்டர் கதை நம்ப முடியாதது என்பது தெளிவு. ‘`அதிகபட்சப் பாதுகாப்புடன் கூடிய சிறை எப்படி உடைக்கப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளவாவது இரண்டு, மூன்று பேரை விட்டுவைத்திருக்கலாம்'’ என்கிறார் இதழாளர் சித்தார்த் வரதராஜன். ``காவல் துறையினர் அளிக்கும் என்கவுன்ட்டர் விளக்கங்களைச் சுத்தமாக நம்ப முடியவில்லை’' என்கிறார் இவர்.

‘அவர்களை சுட்டுத்தள்ளுங்கள்!”

ஏன் என்கவுன்ட்டர்கள் தொடர்கின்றன?

சில வாரங்களுக்கு முன்னர் ஆந்திரா, ஒடிசா எல்லையில் உள்ள மல்கான்கிரிக் காட்டுப் பகுதியில், 24 மாவோயிஸ்ட்கள் ஒடிசா காவல் துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட போதும் இதுபோன்ற சந்தேகங்கள் எழுந்தன. இஷ்ரத் ஜெகான், சோராபுதின் ஷேக் எனத் தொடங்கி 2002-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை குஜராத்தில் மட்டும், 22 போலி என்கவுன்ட்டர் கொலைகள் நடைபெற்றுள்ளன. தேசிய மனித உரிமை ஆணையம் அளிக்கும் புள்ளிவிவரங்களின்படி, 2002-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை இந்தியா முழுவதும் 440 போலி மோதல் கொலைகள் நடைபெற்றுள்ளன. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இதில் முன்னணி வகிக்கின்றன. 2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 555 என்கவுன்ட்டர்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. இவை உத்தரப்பிரதேசம், மணிப்பூர், அசாம், மேற்குவங்கம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்துள்ளன.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியே என்கவுன்ட்டர் வரலாறு இருக்கிறது. 1960-களில்தான் முதல்முறையாக போலி மோதல் கொலைகளைக் குறிக்க என்கவுன்டர் என்னும் பதம் புழக்கத்துக்கு வந்தது. ‘பயங்கரவாதிகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில்’ இவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்னும் செய்தியும் அப்போதுதான் முதலில் வெளிவரத் தொடங்கியது. இன்று வரை இந்த வாக்கியம் ஒரு சொல் மாறாமல், வெவ்வெறு மொழிகளில் அப்படியே திரும்பத் திரும்பச் சொல்லப்படுவதைப் பார்க்கலாம். அதேபோல் காவல் துறையினர் அரங்கேற்றும் இத்தகைய என்கவுன்ட்டர்கள் அனைத்தையும், மத்திய அரசுகளும் மாநில அரசுகளும் ஆதரிக்கும் போக்கும் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

திறமையுடன் அதிகம் பேரைக் கொல்லும் காவல் துறை அதிகாரிகள் `என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ என்று அழைக்கப்பட்டனர். இதில் மும்பை காவல் துறையினருக்கு சிறப்பான இடம். துரித என்கவுன்ட்டர்கள் மூலம் மட்டுமே துரித ‘நிதி’ சாத்தியம் என்று இங்குள்ள பலர் கருதுகிறார்கள். பிரதீப் ஷர்மா என்கிற இன்ஸ்பெக்டரின் புகழ்பெற்ற முழக்கம் இது... ‘கிரிமினல்கள் அசுத்தத்தைக் குறிக்கிறார்கள். நான் அவர்களைச் சுத்தப்படுத்துகிறேன்’. போலி என்கவுன்ட்டர் வழக்குகளில் சிக்கி, 2010-ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட இவரை,
2013-ம் ஆண்டு நீதிமன்றம் விடுவித்தது.

மும்பை நிழல் உலகையும் அதன் தாதாக்களின் நடமாட்டத்தையும் சுட்டிக்காட்டி, மகாராஷ்டிரா என்கவுன்ட்டரை நியாயப்படுத்துகிறது என்றால், ஆந்திராவும் சட்டீஸ்கரும் மாவோயிஸ்ட்களைச் சுட்டிக்காட்டுகின்றன. வடகிழக்கு மாநிலங்களுக்குப் பிரிவினைவாதிகள் இருக்கிறார்கள். காஷ்மீருக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அல்லது தேசவிரோதிகள்.

அடிப்படைப் பிரச்னை என்ன?

இன்னோர் ஆபத்தான போக்கை நாம் கவனிக்கத் தவறக் கூடாது. தப்பிய எட்டு பேரும் 2001-ம் ஆண்டு தடைசெய்யப்பட்ட `சிமி' எனப்படும் இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். கொலை, கொள்ளை உள்ளிட்ட ஏராளமான குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன என்றாலும், இன்னமும் அவை முறைப்படி நிரூபிக்கப்பட வில்லை. இப்படி குற்றம் நிரூபிக்கப்படாமலேயே சிறையில் அடைபட்டிருப்பவர்கள் ஏராளம் பேர்.

‘அவர்களை சுட்டுத்தள்ளுங்கள்!”

2013-ம் ஆண்டு வெளிவந்த ஓர் அறிக்கை (ஜமியா டீச்சர்ஸ் சாலிடாரிட்டி அசோசியேஷன்) சில முக்கிய உண்மைகளைச் சுட்டிக்காட்டுகிறது. சிமி ஆட்களைத் துப்பறிந்து பிடிக்கிறோம் எனும் பெயரில், எந்தவித ஆதாரமும் இன்றி வெறும் சந்தேகத்தின் பேரில், இஸ்லாமிய இளைஞர்கள் தொடர்ச்சியாக மத்தியப்பிரதேசத்தில் சிறைப்படுத்தப்படுகின்றனர். சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. 1967-ம் ஆண்டு உருவான இந்தச் சர்ச்சைக்கு உரிய சட்டம் 1972, 2004, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில், தொடர்ச்சியாகத் திருத்தப்பட்டு அமலில் இருக்கிறது. இதன்படி தேச ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் எனச் சொல்லி, எந்த ஓர் அமைப்பையும் பயங்கரவாத இயக்கமாக மத்திய அரசால் அறிவிக்க முடியும். அதில் உள்ளவர்களைப் பயங்கரவாதத்துக்குத் துணைபோகிறவர்கள் எனக் குற்றம்சாட்டி காலவரையின்றி அடைத்துவைக்கவும் முடியும்.

தேசவிரோதச் செயல் என்றால் என்ன என்பது தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்பதால், காவல் துறையினர் எந்தவிதத் தயக்கமும் அச்சமும் இன்றி இந்தச் சட்டத்தைச் சகட்டுமேனிக்குப் பயன்படுத்துகிறார்கள். இதனால், அதிகம் பாதிக்கப்படுபவர்கள் சிறுபான்மையினரும் பழங்குடிகளும் மாற்றுச் சிந்தனைகளை முன்வைக்கும் அரசியல் இயக்கங்களும்தாம். முன்னதாக பொடா, தடா ஆகிய பெயர்களில் வலம்வந்த சட்டமே இப்போது யுஏபிஏ என்னும் வடிவத்தைப் பெற்றிருக்கிறது. காலனிய காலத்தில் இருந்து இன்று வரை இந்த ஆயுதத்தை அரசு பத்திரப்படுத்திப் பாதுகாக்கிறது.

என்ன செய்யவேண்டும்?

ஆனால், இதை எல்லாம் வசதியாக மறைத்துவிட்டு என்கவுன்ட்டரை நியாயப்படுத்த எப்போதும், ஒரு பெருங்கூட்டம் நம்மிடையே இருக்கிறது. உதாரணத்துக்கு, இணையத்தில் உலவிக்கொண்டிருக்கும் இந்தப் பாராட்டைப் பாருங்கள்... ‘உண்மையிலேயே இது நிஜ என்கவுன்ட்டராக இருந்தால், காவல் துறைக்கு ஒரு தம்ஸ்அப். ஒருவேளை போலி என்கவுன்ட்டராக இருந்தால் பத்து தம்ஸ்அப்!’ இருப்பதிலேயே அதிக ஆபத்து இதுதான். அநீதியைவிடவும் ஆபத்து அதை ஆதரிக்கும் மனோபாவம். எதையாவது அழித்தே தீரவேண்டும் என்றால், இதைத்தான் முதலில் அழிக்கவேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு