Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 22

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 22
பிரீமியம் ஸ்டோரி
News
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 22

ம.செந்தமிழன் - படம்: வி.பால் கிரேகோரி - ஓவியம்: ஹாசிப்கான்

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 22

னிதர்களுக்கான அடிப்படை உரிமைகளில் ஒன்று, மருந்து இல்லாமல் வாழும் உரிமை. `எந்த மருந்தும் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்’ என்ற விருப்பம், அனைவருக்கும் பொதுவானது தான். இவ்வாறு சிந்திப்பதும், இந்த விருப்பத்துடன் மருந்துகளை நிராகரிப்பதும் அவரவர் விருப்பம்; உரிமை. இந்திய அரசியலமைப்புச் சட்டமும், அதன் கீழ் உருவாக்கப்பட்ட சட்டங்களும் இந்த விருப்பத்தைப் பாதுகாக்கின்றன. வேதிமருந்துகளைத் தயாரிப் பதற்கும் விற்பனை செய்வதற்கும் பரிந்துரைப்பதற்கும் இந்தியச் சட்டங்களில் எண்ணற்ற கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், மருந்து இல்லா வாழ்வியலைக் கற்றுத்தருவதற்கும், மரபுவழிப்பட்ட வீட்டு மருந்துகள் பற்றிய கருத்துக் களைப் பரப்புவதற்கும் சட்ட ரீதியிலான தடை ஏதும் இல்லை. இது, இந்தியா எனும் நீண்டகால மரபுத் தொடர்ச்சி உள்ள நிலப் பகுதிகளில் வாழ்வோருக்குக் கிடைத்துள்ள கொடை.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 22

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மருந்து இல்லா வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை, இப்போது உயர்ந்துள்ளது. மருந்துகளின் பிடியில் இருந்து வெளியேறுவோரின் உடலும் மனமும், விடுதலை செய்யப்பட்ட புலியின் துள்ளல்போல் திளைக்கின்றன. மருந்து இல்லா வாழ்வியல் முறைகளின் மீது, மக்களின் நாட்டம் அதிகரித்துள்ளது. இந்தச் சூழல் மேன்மேலும் வளர வேண்டும் என்பது, என் போன்றோரின் விருப்பம். இது எந்த மருத்துவமுறைக்கும் எதிரான சிந்தனை அல்ல; சக மனிதர்களின் மீதுகொண்ட அன்பின் வெளிப்பாடு. இந்த நோய்க்கு இந்த மருந்து எனப் பரிந்துரைக்கும்போது, அந்த நோயைக் காட்டிலும் கூடுதலான சிக்கல்களை மருந்துகள் விளைவிக்கின்றன என்ற உண்மையை அறிந்துகொண்ட பிறகு, எனக்குள் இந்த அன்பின் தீவிரம் அதிகரித்தது.

`சர்க்கரை நோய்' எனப்படும் நீரிழிவு நோயைப் பற்றி அறியாதவர் எவரும் இருக்க முடியாது. `நீரிழிவு' ஒரு நோய் அல்ல; உடலின் சுரப்பிகளில் உருவாகும் சீரற்ற நிலை என்பதுதான் உலகின் அனைத்து நவீன மருத்துவ அமைப்புகளும் ஒப்புக்கொண்டுள்ள உண்மை. `நீரிழிவு ஒரு நோய் அல்ல என்பதால், அதைச் சரிசெய்வதற்கு எந்த மருந்தும் இல்லை’ என்பதும் உலகின் அனைத்து மருத்துவ அமைப்புகளும் அறிவித்துள்ள உண்மை.

இந்தக் கட்டுரை வழியாக உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் வரவேண்டும் என விரும்புகிறேன். ஆகவே, இரண்டு கருத்துக்களை மனதில் நன்றாகப் பதித்துக்கொள்ளுங்கள்.

1. நீரிழிவு என்பது, சீர்கேடுதான் (disorder); நோய் அல்ல.

2. நீரிழிவைக் குணப்படுத்த எந்த மருந்தும் இல்லை.

வாழ்க்கைமுறையைச் சீரமைப்பது ஒன்றுதான், நீரிழிவுச் சீர்கேட்டில் இருந்து வெளியேறி நீண்ட ஆயுளுடன் நலமாக வாழும் வழி.

நீரிழிவுக்காக மருத்துவத் துறையில் மிகுதியாக விற்பனை செய்யப்படும் இரு மருந்துகள், மெட்ஃபார்மின் (metformin) மற்றும் பயோக்ளிட்டஸோன் (Pioglitazone).

பின்வரும் உடல்நலக் கேடுகளைப் பாருங்கள்: தசையில் வலி, தசை பலவீனம் அடைதல், மூச்சு விடுவதில் சிரமம், எந்நேரமும் தூக்கக் கலக்கத்தில் இருத்தல், தலைசுற்றல், சோர்வு அல்லது மிகவும் பலவீனமாக இருத்தல், வயிற்றுவலி, வாந்தியுடன்கூடிய குமட்டல், இதயத்துடிப்பின் வேகம் குறைதல் அல்லது சீரற்ற இதயத்துடிப்பு ஏற்படுதல் இவை அனைத்தும் பொதுவான சீர்கேடுகள்.

அடுத்த பட்டியலில் உள்ளவை எல்லாம் ‘தீவிர சிக்கல்கள்’ என வரையறுக்கப்பட்டவை. அவை மூச்சுத்திணறல், வீக்கம், திடீரென எடை கூடிக்கொண்டேபோவது, காய்ச்சல், உடல் குளிர்ந்துபோவது.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 22

இவை தவிர சாதாரண விளைவுகள் சில பட்டியலிடப்பட்டுள்ளன. அவை, தலைவலி, தசை வலி, பலவீனம், குறைவான குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வாயுத்தொல்லை, வயிற்றுவலி.

இவை, நீரிழிவு நோயினால் வருபவை அல்ல; நீரிழிவுக்காக வழங்கப்படும் மெட்ஃபார்மின் எனும் மருந்தினால் வர வாய்ப்பு உள்ளவை. இந்தப் பட்டியலை வெளியிட்டிருப்பது, எந்த மரபுசார்ந்த ‘பிற்போக்குத்தனமான’ அமைப்பும் அல்ல; அமெரிக்க தேசிய சுகாதார மையம் (National Health Institute) என்பதைக் குறித்துக்கொள்ளுங்கள்.

அதே அமெரிக்க தேசிய சுகாதார மையம் அறிவித்துள்ள மற்றோர் அறிவுரைப் பட்டியல் இது...

`மெட்ஃபார்மின் உட்கொள்ளும் முன்னர் பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள்:

1. நீங்கள், மெட்ஃபார்மின் ஒவ்வாமை (Allergy) உள்ளவரா என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

2. மெட்ஃபார்மின் விற்பனைசெய்யும் மருந்துக் கடைக்காரரிடம் அந்த மருந்தில் உள்ள உட்பொருட்களின் பட்டியலைத் தெரிந்து கொள்ளுங்கள். பின்னர், அந்தப் பட்டியலில் உள்ள மருந்துகளில் எவையேனும் உங்களுக்கு ஒவ்வாமை உருவாக்குபவையா என்பதையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

3. வேறு எந்த மருந்துகள், மூலிகைகள், சத்துணவுகள், வைட்டமின்கள் உட்கொள்கிறீர்கள் என்பதை உங்கள் மருத்துவரிடம் / மருந்தாளு நரிடம் தெரிவித்து, `இவற்றோடு மெட்ஃபார்மைச் சேர்த்து உண்ணலாமா?' எனக் கேட்டுக்கொள் ளுங்கள்.

4. நீங்கள் கருவுற்றவரா, கருவுறும் எண்ணத்தில் இருப்பவரா, குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுபவரா என்பதை, உங்கள் மருத்துவரிடம் தெரிவியுங்கள்.

5. குறைவாகச் சாப்பிட்டு அதிகமாக உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், அதைப் பற்றி மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். மெட் ஃபார்மின் உட்கொள்ளும்போது மேற்கண்டவாறு நீங்கள் நடந்துகொண்டால், ரத்தத்தில் குளூகோஸின் அளவை அது பாதிக்கும். உங்கள் மருத்துவர் அதற்கு ஏற்ப மருந்துகளை மாற்றித் தருவார்.

இவை அனைத்தும் நீரிழிவு நோயாளிகளுக்கான எச்சரிக்கைகள் அல்ல; குறிப்பிட்ட மருந்தை உட்கொள்வோருக்கானவை என்பதை மீண்டும் நினைவில்கொள்ளுங்கள்.

பயோக்ளிட்டஸோன் எனும் மருந்தை, கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ம் தேதி இந்திய சுகாதார அமைச்சகம் தடைசெய்தது. இதயக் கோளாறுகள், சிறுநீர்ப்பை புற்றுநோய், உடல் பருமன் போன்ற ஆபத்துக் களுக்குக் காரணம் பயோக்ளிட்ட ஸோன்தான் என்பதை பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப் பட்டதால், அது தடை செய்யப்பட்டது. இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கமும் அலோபதி மருத்துவர்கள் பலரும் இந்தத் தடைக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தினர். அதன் விளைவாக, அதே ஜூலை மாதம் 31-ம் தேதி பயோக்ளிட்ட ஸோன் மீதான தடை விலக்கப்பட்டது. பயோக்ளிட்டஸோனை ஆண்டுக்கணக்கில் விழுங்கும் மக்களுக்கு, இந்தத் தடையைப் பற்றியும் தெரியாது; அதற்கு எதிராக மருத்துவர்கள் போராடியதும் தெரியாது.

இந்திய சுகாதார அமைச்சகம், பயோக்ளிட்ட ஸோனுக்கு ஒரு கட்டுப்பாடு விதித்தது. ‘பயோக்ளிட்டஸோன் மாத்திரைப் பெட்டிகளில், இந்த மருந்தின் தீய விளைவுகளைப் பற்றிய எச்சரிக்கை வாசகத்தை அச்சிட வேண்டும்’ என்றது சுகாதார அமைச்சகம். இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம், இந்தக் கட்டுப்பாட்டை எதிர்த்து அமைச்சகத்துக்குக் கடிதம் அனுப்பியது. பின்னர், `மிகச்சிறிய அளவிலாவது எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற வேண்டும்' என்று அமைச்சகம் இறங்கிவந்தது.

இந்த பயோக்ளிட்டஸோன் மருந்தின் விளைவுகளைப் பற்றி அமெரிக்க சுகாதார அமைப்பு ஓர் ஆய்வை மேற்கொண்டது. மிக நீண்டகாலம் நடத்தப்பட்ட விரிவான ஆய்வு அது. `பயோக்ளிட்டஸோன் மருந்து, மக்கள் மத்தியில் உருவாக்கும் தாக்கங்கள்' (Epidemiological Study of Pioglitazone) என்பது, அந்த ஆய்வின் பெயர். 1997-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளில் வெகு சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.

1. பயோக்ளிட்டோஸோன் மருந்தை ஓர் ஆண்டுக்கும் மேலாக உட்கொண்டுவந்தால், சிறுநீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

2. மருத்துவர்களுக்கு இதனால் அறிவிக்கப் படுவது என்னவெனில், ஏற்கெனவே சிறுநீர்ப்பை புற்றுநோய் இருப்பவர்களுக்கு பயோக்ளிட்ட ஸோனைப் பரிந்துரைக்காதீர்கள். ரத்தத்தில் குளூகோஸின் அளவைக் கட்டுப்படுத்துவதில், பயோக்ளிட்டஸோனின் செயல்பாட்டை மதிப்பிடும்போது, அந்த மருந்தால் புற்றுநோய் வரும் அபாயத்தையும் கணக்கில்கொண்டு செயல்படுங்கள்.

3. நோயாளிகளுக்கு இதனால் அறிவிக்கப்படுவது என்னவெனில், பயோக்ளிட்டஸோன் உட்கொள்ளும்போது சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. பயோக்ளிட்டஸோன் வாங்கும்போது அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கையேட்டைப் படித்துப் பாருங்கள். அதில், இந்த மருந்தை உட்கொள்வதால் ஏற்படும் இடர்பாடுகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. பயோக்ளிட்டோஸோன் பற்றி அறிந்துகொள்ள விரும்பினால், உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.

4. மருத்துவர்களுக்கான கூடுதல் தகவல்கள் சில:

சிறுநீர் கழிப்பதில் உள்ள அறிகுறிகள் குறித்து நோயாளிகளிடம் உரையாடுங்கள். பயோக்ளிட்டஸோன் மருந்தின் கையேட்டைப் படிக்கும்படி நோயாளிகளுக்கு அறிவுறுத்துங்கள்.

இந்த எச்சரிக்கைகளை வழங்கியது, மரபுகளில் பிடிப்புகொண்ட மூடநம்பிக்கையாளர்களின் அமைப்பு அல்ல; அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (FDA).

தமிழகத்தில், மெட்ஃபார்மின் மற்றும் பயோக்ளிட்டஸோன் ஆகிய இரண்டும்தான் நீரிழிவு மருத்துவத் துறையில் மிக அதிகமாகவும் அதிவேகமாகவும் விற்பனை செய்யப்படும் மருந்துகள்.

`நீரிழிவு நோயால் இறந்துபோனார், நீரிழிவால் சிறுநீரகம் பழுதானது, நீரிழிவால் இதயம் சீர்கெட்டது’ போன்ற செய்திகளைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். நீரிழிவுக்கு வழங்கப்படும் மருந்து களால் உருவாகும் நோய்களின் பட்டியலை மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள்.

இந்தத் தகவல்கள் யாவும் உங்களுக்கு மருத்துவர்களால் தெரிவிக்கப்பட வேண்டும். அதுதான் உலகம் எங்கும் உள்ள சுகாதார அமைப்புகள் வகுத்துள்ள ஒழுங்குமுறை. மிகக் குறிப்பாக, இந்திய சுகாதார அமைச்சகத்தின் சட்ட விதிகளின்படி, மேற்கண்ட எல்லா தகவல்களையும் நீரிழிவு நோய்க்கு மருந்து எழுதும் மருத்துவர் தமது ‘நோயாளி’களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

இவற்றை எல்லாம் தெரிவித்த பிறகும் ‘எனக்கு அந்த மருந்தையே எழுதித்தாருங்கள்’ எனக் கேட்பவர்களுக்கு மட்டுமே அந்த மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டும் என்பது சட்டம். நடைமுறை என்னவாக இருக்கிறது என்பதை என்னைவிட நீங்கள் நன்கு அறிவீர்கள்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 22

நமது மரபுவழிப்பட்ட வாழ்வியலைக் கொஞ்சம் கவனியுங்கள்.

பசிக்கும்போது மட்டும் உணவு, தாகம் எடுத்தால் மட்டும் தண்ணீர், இரவில் கண்விழிக்காமல் இருத்தல், அதிகாலையில் எழுதல், காலையில் பசித்தால் சிறுதானியக் கஞ்சி மற்றும் கூழ் வகைகள், மதியம் பசித்தால் எளிதில் செரிக்கும் வகையிலான உணவுகள், பல்வேறு வகையான  நாட்டுக் காய்கறிகளை உணவில் இணைத்தல், இரவில் ஆவியில் வேகவைத்த உணவுகளை (இட்லி, இடியாப்பம், புட்டு) உட்கொள்ளுதல், இயற்கை விளைப் பொருட்களையே உணவாகக் கொள்ளுதல், இயன்ற அளவு உடல் உழைப்பில் ஈடுபடுதல் போன்ற வாழ்க்கைநெறிகளைப் பின்பற்றினால், எந்தச் சீர்கேட்டில் இருந்தும் வெளியேற முடியும்.

ஒரே நாளில் மருந்துகளில் இருந்து விடுபட வேண்டும் என்ற அவசரம் தேவை இல்லை. உங்கள் உடலின் இயக்கத்தைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப மாற்றங்களை மேற்கொண்டால், கொஞ்சம் கொஞ்சமாக மருந்துகள் இல்லாத வாழ்க்கைக்குத் திரும்பலாம்.

`மரபு மருத்துவம்' என்ற பெயரில் நீரிழிவு நோய்க்கு மருந்து தருவதாகப் பலர் கூறுகிறார்கள். நமது மரபில் உடல் சர்க்கரையைத் தற்காலிக மாகக் குறைக்கும் மூலிகைகள் உள்ளனவே தவிர, நிரந்தரமாகக் குணப்படுத்தும் எந்த மருந்தும் இல்லை. இது மரபு மருத்துவங்களின் குறைபாடு அல்ல. நீரிழிவு என்பது நோயே அல்ல எனும்போது, அதற்கான நிரந்தரமான மருந்து எப்படி இருக்கும்?

எது நோய் இல்லையோ, அதற்கு மருந்தும் இல்லை. எது சீர்கேடாக உள்ளதோ, அதைச் சீராக்க முடியும். நீரிழிவு, ஒரு சீர்கேடுதான். அதைச் சீராக்க நம்மால் முடியும்.

 - திரும்புவோம்...