பிரீமியம் ஸ்டோரி
உணவு நல்லது வேண்டும்!

கறிவேப்பிலை இட்லி

தேவையானவை: சிறிய இட்லி - 15, இட்லிப் பொடி, கறிவேப்பிலைப் பொடி - தலா 1 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, இட்லிப் பொடி, கறிவேப்பிலைப் பொடியைச் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். இதனுடன் இட்லித் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். இட்லியுடன் சாம்பார், சட்னி சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

பலன்கள்: தாது உப்புகள், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு இது. உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வாரிவழங்கும் கறிவேப்பிலை இட்லியை, அனைவருமே காலை மற்றும் இரவு வேளைகளில் சாப்பிடலாம். ரத்தசோகை உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு இது. 

உணவு நல்லது வேண்டும்!

பீட்ரூட் சூப்

தேவையானவை: பீட்ரூட் - 1, வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், சோள மாவு - தலா 2 டீஸ்பூன், கார்ன் ஃபிளேக்ஸ் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: பீட்ரூட்டைத் தோல் சீவி அரிந்து, நீர் விட்டு உப்பு சேர்த்து வேகவைத்து, மைய அரைக்க வேண்டும். வாணலியில் வெண்ணெய்யைப் போட்டு சூடானதும் கார்ன் ஃபிளேக்ஸை வறுத்துத் தனியே வைக்க வேண்டும். பின்னர், அதே வாணலியில் மிளகுத்தூளைப் போட்டு, அரை கப் நீர் விட்டுக் கொதிக்கவிட வேண்டும். இதில், பீட்ரூட் விழுதுடன் அரை கப் நீர் விட்டுக் கரைத்த சோள மாவைச் சேர்த்து, மேலும் ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும். பரிமாறும் முன்னர் கார்ன் ஃபிளேக்ஸ் சேர்த்து அருந்தலாம்.

பலன்கள்: ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி6, சி, ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், புரதம், நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும். செரிமானத்தை மேம்படுத்தும். ரத்தச் சிவப்பணுக்களை மேம்படுத்துவதால், சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவுகிறது.

நவம்பர் 14  - சர்க்கரை நோய் விழிப்புஉணர்வு தினம்

உணவு நல்லது வேண்டும்!

சர்க்கரை நோய் தவிர்ப்போம்!

உடல் பருமன், உடல் உழைப்புக் குறைவு, தவறான உணவுப்பழக்கம், மனஅழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் `டைப் 2' சர்க்கரை நோய் ஏற்படுகிறது. கார்போஹைட்ரேட் நிறைந்த, மிகக் குறைந்த கிளைசமிக் இண்டெக்ஸ் கொண்ட, எளிதில் செரிமானமாகி ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்ப்பது அல்லது குறைத்துக்கொள்வது நல்லது. சரிவிகித ஊட்டச்சத்து உணவுடன், உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.

தவிர்க்கவேண்டியவை: மைதா, பிரெட், சிப்ஸ், சாக்லேட், பிஸ்கட், ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், இனிப்புகள்.

சேர்க்கவேண்டியவை: பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், முழுதானியங்கள்.

உணவு நல்லது வேண்டும்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு