Published:Updated:

கெத்தா முந்துது... முன்னேறுது! கோயம்புத்தூர்

ச.ஜெ.ரவி, பரிசல் கிருஷ்ணா, படங்கள்: தி.விஜய்

பிரீமியம் ஸ்டோரி

வேகமாகக் காற்றடித்தால் ஓடிவருகிறது கேரளத்து வாசனை. திரும்பும் திசை எல்லாம் பச்சை மலைகள், மகிழ்ச்சியை அறுவடை பண்ணும் மரியாதைமிகு மக்கள், பொதுவான காரியம் என்றால் முன்னுக்கு வந்து நிற்கும் இளைஞர் கூட்டம், நாடே வியந்துபார்க்கும் தொழில் நகரம்... இவைதான் கோயம்புத்தூரின் முகம். கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் என்று மட்டுமே அறியப்பட்ட கோயம்புத்தூர் நகரம், இப்போது விறுவிறுவென மெட்ரோபாலிட்டன் நகரமாகத் தன்னை மாற்றிக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது.

கெத்தா முந்துது... முன்னேறுது! கோயம்புத்தூர்

• கேரளாவுக்கு அருகில் அமைந்துள்ள மாநகரம் கோயம்புத்தூர் என்பதால், கேரள மக்களை அதிகமாகவே பார்க்கலாம். இவர்களைத் தவிர வட மாநிலத்தவரின் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்துவருகிறது. பீகார், மேற்குவங்கம், சட்டீஸ்கர் போன்ற வறட்சி மாவட்டங்களில் இருந்து கட்டுமானத் தொழிலுக்காக வந்த வட மாநிலத்தவரை, தொழிலாளர்களாக மட்டும் அல்லாமல் தொழில்முனைவோர்களாகவும் உருவாக்கியுள்ளது கோயம்புத்தூர். 

• வெளியூர் தொழிலாளர்களுக்காக வீதிக்குவீதி குட்டிக் குட்டியாக நிறைய ஹோட்டல்கள் முளைத்துள்ளன. சாலையோரங்களில்கூட புளிசாதம், தயிர்சாதம் என டெம்போ வண்டி ஹோட்டல்களைக் காண முடிகிறது.

• பார்க், கோயில், ரேஸ்கோர்ஸ் எனப் பசுமையான சூழலில் நடந்த காதலர்கள், நண்பர்கள் மீட்டிங் அனைத்தும் இப்போது மால்களுக்கு இடம்பெயர்ந்துள்ளன. பெரும்பாலான குடும்பங்களின் வார இறுதி நாட்கள் மால்களில்தான் கழிகின்றன. புரூக் ஃபீல்ட்ஸ், ஃபன் மால் என இரு மால்கள் மாநகரின் இரு திசைகளில் அமைந்திருக்க... ஐ.டி ஊழியர்களை மையப்படுத்தி சரவணம்பட்டியில் பிரமாண்ட மாலுக்கான வேலைகள் நடந்துவருகின்றன. பார்க்கில் விளையாடி, மருதமலை படி ஏறி நட்பு வளர்த்தவர்கள், இப்போது மால்களில் அமர்ந்து ஸ்மார்ட்போனை நோண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

• விமான நிலைய விரிவாக்கப் பணி, பல்லாண்டுகளாகத் தாமதமாகிவருகிறது. வெளிநாட்டு விமானப் பயணம் என்றால் கொச்சி, சென்னை அல்லது பெங்களூரு மார்க்கமாகத்தான் போகவேண்டியிருக்கிறது. சர்வதேச விமான நிலையம் என்றாலும் சிங்கப்பூர், ஷார்ஜாவுக்கு மட்டுமே சர்வதேச விமானங்கள் இயக்கப் படுகின்றன. வெறும் 8 விமானங்களை நிறுத்தும் அளவுக்கே இடம் உள்ளது. சரக்குப் போக்குவரத்தும் கொச்சி, சென்னை, பெங்களூரு, திருச்சி மார்க்கமாகத்தான் நடைபெறுகிறது என்பது கோவையின் வளர்ச்சியைப் பாதிக்கிற விஷயம்.

• 1872-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ரயில் போக்குவரத்து சேவை, இத்தனை ஆண்டுகள் ஆகியும் நகரம் அடைந்த வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் அளவில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. சேலம் கோட்டத்துக்கு உட்பட்டதாகத்தான் கோவை ரயில் நிலையம் உள்ளது. `சென்னைக்கு அடுத்து, முக்கிய ரயில் நிலையம் எனப் பெயருக்குச் சொல்லப்பட்டாலும், வாரத்துக்கு 332 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. கூடுதல் ரயில்களும் வசதிகளும் தேவை' என்கின்றனர் பயணிகள்.

• கோவை மக்கள், மரியாதை யானவர்கள்தான். ஆனால், சினிமாக்களில் காண்பிக்கப்படுவதுபோல வார்த்தைக்கு வார்த்தை `ங்க... ங்க’ , `ன்ர... ன்ர' போட்டுப் பேசுவது எல்லாம் இப்போது இல்லை. இயல்பாகவே மரியாதையான ஒரு பொதுத் தமிழ்ப் பேச்சுவழக்கு காணப்படுகிறது.

கெத்தா முந்துது... முன்னேறுது! கோயம்புத்தூர்

• வெளியூரில் இருந்து பேருந்தில் வந்து இறங்கும் எவரையுமே அண்ணாந்து பார்க்கவைக்கிறது புதிதாக முளைத்திருக்கும் பிரமாண்டமான பாலம். 162 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நஞ்சப்பா சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலையை இணைக்கும் இந்தப் பாலம், 1,752 மீட்டர் நீளத்துக்குக் கட்டப்பட்டுள்ளது. மார்ச் மாதமே திறக்கப்படவேண்டிய பாலப் பணிகள் இன்னும் முடியவில்லை. சாலையின் குறுக்கே செல்லும் மின்கம்பிகளை, நிலத்தடியில் கொண்டுசென்று பாலப் பணிகளை முடிக்க வேண்டும் என்பதாலேயே இந்தத் தாமதம்.

• 1970-ம் ஆண்டில் கட்டப்பட்ட நேரு ஸ்டேடியம்  ஒன்றுதான் சொல்லிக்கொள்ளும் படியான ஒரே விளையாட்டு மைதானம். ஆனால், `மாறிவரும் விளையாட்டு ஆர்வத்துக்கு இது பத்தாது பாஸ்’ என்கிறார்கள் கோவை மக்கள். டென்னிஸ் தவிர சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் எதுவும் கோவையில் நடைபெறுவது இல்லை என்பது விளையாட்டு ஆர்வலர்களின் ஆதங்கக் குரல். தவிர பேட்மின்டன், கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுக் களுக்கான பயிற்சி மைதானமும் வேண்டும் என்பது மக்களின் ஆதங்கம்.

• முதலில் ஆண்டுக்கு ஒன்று, இரண்டு என நடந்துவந்த மாரத்தான் போட்டி, இப்போது அடிக்கடி நடக்கத் தொடங்கியிருக்கிறது. புற்றுநோய் விழிப்பு உணர்வு தொடங்கி, போதைப்பொருள் பயன்பாடு தவிர்ப்பு, மாநகரின் தூய்மை என, சமூகநலனுக்கான நிகழ்வாக மாறிப்போயுள்ளது மாரத்தான் போட்டிகள். போட்டிகளில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவருவதே இதற்கு முக்கியக் காரணம்.

கெத்தா முந்துது... முன்னேறுது! கோயம்புத்தூர்

• கார் ரேஸ் போட்டிகளின் தலைநகரம் என்றால் அது கோவைதான். கோவை செட்டிபாளையத்தில் உள்ள கரிமோட்டர் ஸ்பீட் வேயில்தான் தேசிய அளவிலான ரேஸ் போட்டிகள் நடக்கின்றன. அப்படிப்பட்ட கோவையில் ரேஸ் வீரர்களுக்குப் பஞ்சம் இருக்குமா என்ன? கரிவரதன் தொடங்கி பல தொழிலதிபர்கள் ரேஸ் போட்டியில் ஆர்வம்கொண்டவர்களாக இருந்தார்கள். அந்த வரிசையில் தனது தந்தை கார்த்திகேயன் மூலம் ஆவல் தூண்டப்பட்டு ரேஸ் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிய நரேன் கார்த்திகேயன்தான், ஃபார்முலா-1 தொட்டு பிரபல கார் ரேஸராக உயர்ந்துநிற்கிறார். கோவையின் அடையாளங்களில் ஒருவராக நரேன் கார்த்திகேயன் மாறிப்போனார்.

• கோவையில் சரவணம்பட்டி துடியலூர் ரோடு, கீரநத்தம், அவினாசி சாலையில் டைட்டல் பார்க் என மூன்று இடங்களில் ஐ.டி பார்க் உள்ளது. கோவையின் சூழல் ஐ.டி துறைக்கு ஏற்ற சூழலாக இருப்பதாகச் சொல்லப்பட... நாளுக்கு நாள் புதிய புதிய ஐ.டி நிறுவனங்கள், கோவையை நோக்கி வரத் தொடங்கியுள்ளன. விரைவில் சென்னைக்கு இணையாக கோவையில் ஐ.டி நிறுவனங்களின் வளர்ச்சி இருக்கும் என்கிறார்கள்.

• மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருந்து பிறக்கும் நொய்யல் ஆறு, 170 கிலோ மீட்டர் பயணித்து கொடுமுடியில் காவிரியுடன் கலக்கிறது. ஆனால், சாக்கடைக் கழிவுகள் திருப்பூர் ஆலைகளின் சாயக் கழிவுகளால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
l உக்கடம் பெரியகுளம், தன்னார்வலர்களால் தூய்மைப்படுத்தப்பட்டு குறிப்பிடத்தகுந்த நீர்நிலையாகக் காட்சியளிக்கிறது. பெரியகுளத்தையொட்டி இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்ட பாலத்தில் காலை 8 மணி வரை வாக்கிங் மற்றும் சைக்கிளிங் அனுமதிக்கப்படுகிறது.

• தென் இந்தியாவின் முதல் திரையரங்கான வெரைட்டி ஹால், `டிலைட் தியேட்டராகி’ இப்போதும் படங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. முன்னர் எல்லாம் கொஞ்சம் பெரிய தியேட்டர் என்றால், கே.ஜி-யும் பாபா காம்ப்ளெக்ஸும்தான். மால்களில் திரையரங்குகள் வந்த பிறகு, போட்டிகளைச் சமாளிக்க மற்ற தியேட்டர்களும் தங்களை நவீனப்படுத்திக்கொண்டு மாறியிருக்கின்றன. கூடவே டிக்கெட், பாப்கார்ன், பார்க்கிங் ரேட்களையும் ஏற்றிவிட்டனர். 

கெத்தா முந்துது... முன்னேறுது! கோயம்புத்தூர்

• பிச்சைக்காரர்கள் இரவில் அங்கே இங்கே எனப் படுத்திருப்பதைப் பார்க்க முடியவில்லை. காரணம், அவர்களுக்கு என இரண்டு இடங்களை மாநகராட்சி ஒதுக்கியிருக்கிறது. கிக்கானி பள்ளி அருகே ஒன்று, ஆர்.எஸ்.புரத்தில் ஒன்று என பிச்சைக்காரர்கள் தங்கும் வகையில் இரண்டு விடுதிகளை அமைத்திருக்கிறது.

• கோவையைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், மினி வேடந்தாங்கலாக மாறிவருகிறது கோவைக் குளங்கள். சிங்காநல்லூர் குளம், உக்கடம் பெரியகுளம், வேடப்பட்டி குளம், வாலாங்குளம்... போன்ற நீர்நீலைகளுக்கு இந்தியப் பறவைகள் மட்டும் அல்லாமல் அமெரிக்கா, சைபீரியா நாட்டைச் சேர்ந்த பறவைகளும் வந்து செல்கின்றன என்பது கூடுதல் சிறப்பு.

• `சிறுதுளி’, `அறம்’, `வளம்’, `பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா’, `ஓசை’ என கோவையில் ஏராளமான தன்னார்வ அமைப்புகள் இயங்குகின்றன. அவை நீர்நிலைகளைக் காப்பது, ரத்ததான முகாம் நடத்துவது, நொய்யலைத் தூய்மைப்படுத்துவது, குளங்களைத் தூர் வாருவது, சூழலை மேம்படுத்துவது எனப் பல வேலைகளைச் செய்கின்றன.  `அறம்’ அமைப்பு, சமீபத்தில் பேரூர் குளத்தைச் சுத்தப்படுத்தி யிருக்கிறது. பொது காரியத்துக்காக எந்த அமைப்பு அழைத்தாலும், மற்ற அமைப்புகள் ஆர்வத்தோடு கலந்துகொள்வது இந்த அமைப்புகளின் சிறப்பு!

• கோவையின் முக்கிய வீதிகள் மிகவும் சுத்தமாக இருக்கின்றன. இதற்குக் காரணம், உலகத்தமிழ் மாநாட்டின்போது உருவாக்கிய `க்ளீன் கோயம்புத்தூர் திட்டம்'தான். அந்தச் சமயத்தில் பிளாஸ்டிக் தடைசெய்யப்பட்டது. ஆனால், அந்தப் பணிகள் தொடர்ச்சியாக நடக்கவில்லை.

கெத்தா முந்துது... முன்னேறுது! கோயம்புத்தூர்
கெத்தா முந்துது... முன்னேறுது! கோயம்புத்தூர்

• அரசு மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 5,000 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.  நான்கு அடுக்கு மாடியில் புதிய மருத்துவமனை கட்டடம், சில மாதங்களுக்கு முன்னர்தான் திறக்கப்பட்டது. ஆனால், இன்னும் இது முழுப் பயன்பாட்டுக்கு வரவில்லை. `மெடிக்கல் ஹப்' எனச் சொல்லப்படும் கோயம்புத்தூரில், அரசு மருத்துவமனையின் நிலைமையோ அந்தோ பரிதாபம்! இதயம், சிறுநீரக அறுவைசிகிச்சைகள் எல்லாம் இங்கே முழுமையாகச் செய்யப்படுவது இல்லை. நவீன மருத்துவ வசதிகள் இன்னும் வரவில்லை.

• சிறுவாணி நீர்தான் ஆசியாவிலேயே சுவைமிகுந்த குடிநீர். 100 ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய தமிழ்நாடு மெட்ராஸ் மாகாணமாக இருந்தபோது, `மிக மோசமாக இருந்தது கோயம்புத்தூர் நீர்தான்' எனச் சொல்லப்பட்டது. குடிநீருக்காக, தீவிரமான போராட்டங்கள் நடந்தன. கடும் நெருக்கடிக்களுக்கு இடையே, 1929-ம் ஆண்டு சிறுவாணி நீர் கோவை மக்களின் குடிநீர் ஆனது. இப்போது அந்தச் சிறுவாணியின் குறுக்கே அணை கட்டுவதன் மூலம், புதிய சிக்கலை உருவாக்க முயல்கிறது கேரளா.

• கோவையின் அவினாசி சாலை, பொள்ளாச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை என எல்லா சாலைகளின் இருபுறமும் வரவேற்கும் மரங்கள் சாலை விரிவாக்கப் பணியால் வெட்டி வீழ்த்தப்பட... பழைய குளு குளு தன்மையையும் பசுமையையும் பெரும் அளவு இழந்துவிட்டது கோயம்புத்தூர் நகரம். மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில், வனம் ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டடங்கள் எழுப்பப்படுவது இதற்கு முக்கியக் காரணம். வெளியூரில் இருந்து கோயம்புத்தூர் வருபவர்கள் க்ளைமேட்டை மெச்சினாலும், கோயம்புத்தூர்வாசிகளுக்குத்தான் தெரியும் எவ்வளவு இழந்திருக்கோம் என்பது.

• வனத்தைப் பாதுகாக்கும் யானைகளை மிகவும் அலட்சியமாகக் கையாள்வது கோயம்புத்தூரில்தான். இந்த ஆண்டில் மட்டும் 20-க்கும் அதிகமான யானைகள் மனிதத் தவறுகளால் இறந்துள்ளன. வனத்தைப் பாதுகாப்பதிலும் தவறிவருகிறது கோயம்புத்தூர். கல்வி நிறுவனங்கள், ஆன்மிக நிறுவனங்கள், ரிசார்ட்கள் என வனத்தில் எழும் புதிய கட்டடங்களால் அழிந்துவருகிறது வனம். 10 ஆண்டுகளுக்கு முன்னர் சாட்டிலைட் புகைப்படத்தில் கோவை வனப்பகுதியில் இருந்த பசுமை, இப்போது எடுக்கும் படங்களில் மிஸ்ஸிங்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு