Published:Updated:

யாருக்கு இழப்பு?

யாருக்கு இழப்பு?
பிரீமியம் ஸ்டோரி
News
யாருக்கு இழப்பு?

அதிஷா, மு.நியாஸ் அகமது

யாருக்கு இழப்பு?

மும்பையைச் சேர்ந்த கிரண் நிறைமாதக் கர்ப்பிணி. டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தேதி குறித்துக்கொடுத்தார்கள். ஆனால், நவம்பர் 9 -ம் தேதி அன்றே வலி வந்து வீட்டிலேயே குழந்தை பெற்றிருக்கிறார். குழந்தையை இன்குபேட்டரில் வைக்க வேண்டும் என்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். இவர்களிடம் இருந்ததோ பழைய 500 ரூபாய் நோட்டுக்கள். ஆனால், மருத்துவமனை நிர்வாகமோ `இந்தப் பணம் செல்லாது' எனச் சொல்லி, அந்தக் குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துவிட்டது. சிகிச்சை கிடைக்காமல் அந்தக் குழந்தை இறந்தே போனது.

அரசாங்கம் தெளிவாகக் கூறத்தானே செய்தது... `மருத்துவமனைகள், மருத்துவர்கள் பழைய 1,000, 500 நோட்டுக்களை வாங்கிக்கொள்ள வேண்டும்' என்று. சரிதான். ஆனால், அதைக் கண்காணிக்க என்ன வழிமுறை வைத்திருந்தது அல்லது வைத்திருக்கிறது?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
யாருக்கு இழப்பு?

`இந்தியாவில் இருக்கும் மொத்த மருத்துவர் களில் ஏறத்தாழ 57 சதவிகிதம் பேர், போலி மருத்துவர்கள்’ என்கிறது உலக சுகாதார மைய அறிக்கை. அதைக் கட்டுப்படுத்தவே நம்மிடம் எந்த வழிமுறையும் இல்லையே.  இதில் எப்படி அவர்கள் 500 ரூபாய் வாங்குகிறார்களா... இல்லையா எனக் கண்காணிக்க முடியும்.

இது ஏதோ மும்பையில் நடந்த ஒரே ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் அல்ல. 32 லட்சம் சதுர கிலோமீட்டருக்குப் பரந்து விரிந்திருக்கும் இந்தியாவில், சிறு நகரங்கள் முதல் பெரு நகரம் வரை வாழும் அனைத்துச் சாமானியர்களும் இப்படி ஓர் அசாதாரண சூழலை எதிர்கொண்டு வருகிறார்கள்.

`மோடி ஆபரேஷன்' யானைகளுக்கானவை. ஆனால் வலையில் யானைகளோடு பலியானவை எறும்புகளும்தான். எண்ணற்ற அப்பாவிகளும் எளிய மனிதர்களும் இந்த திடீர் அறிவிப்பால் திக்குமுக்காடிப் போனார்கள். நவம்பர் 8-ம் தேதி  இரவும் அதற்கு அடுத்து வந்த நாட்களும், அவர்களுக்கு மரண அவஸ்தையாக இருந்தது.

இரவு 8 மணிக்குக் குடும்பத்தோடு பொள்ளாச்சியில் இருந்து திருப்பதிக்கு வண்டி ஏறிய மாரிமுத்துவுக்கு விடியும்போது மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு அதிகாலை நேரத்தில் திருப்பதியின் தெருக்களில் பாலுக்காகவும், சில்லறைக்காகவும் நாயாகத் திரிந்த அனுபவத்தை இனி காலத்துக்கும் மறக்க மாட்டார்.

மாரிமுத்துவைப் போலவே அதே திருப்பதியில் முந்தைய நாள் எல்லாம் கால்கடுக்க க்யூவில் நின்று சாமி தரிசனம் முடித்து, இருந்த காசுக்கு எல்லாம் லட்டுகளை வாங்கிவிட்டுத் திரும்பிய பக்தர்கள் நிலையும் அப்படித்தான் இருந்தது. கையில் காசே இல்லாமல் பஸ்ஸிலும் ஏறமுடியாமல், அன்றைய தினம் திருப்பதி பேருந்து நிலையம் பாகிஸ்தான் எல்லையைவிட பரபரப்பாக இருந்தது. இதை யார் சரியாகக் கையாண்டிருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்க வேண்டியது யார்?

யாருக்கு இழப்பு?

இந்த நாட்களில் தனியாக வசிக்கிற முதியவர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் எழுதித் தீராது. தொடர்ச்சியாக உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள் வாங்க இயலாமல், மருத்துவப் பரிசோதனைக்கு ஆட்டோக்களைக்கூடப் பயன் படுத்த முடியாமல், உணவுக்கும்கூட வழியின்றி தவித்துப்போனதை வேதனையோடு எங்கும் காணமுடிந்தது. தங்களுடைய கைவசம் இருக்கிற 1,000 ரூபாய் தாள்களை எப்படி மாற்றுவது, எங்கு மாற்றுவது என்ற உதவிகள் கிடைக்காமல், அதை யாராவது பறித்துக்கொள்வார்களோ என்ற அச்சத்தோடு வங்கிகளைத் தேடி அலைந்து கொண்டிருந்தனர்.

வெவ்வேறு ஊர்களில் இருந்து வீட்டைவிட்டு வந்து தங்கிவாழும் பேச்சுலர்கள் நிலையும் மோசம். உணவும் பெட்ரோலும்  அறைவாடகையும் தர முடியாமல் திண்டாடினர். சில்லறைத் தட்டுப்பாடு காரணமாக அக்கவுன்ட் வைத்திருந்த மெஸ்கள் எல்லாம் மூடியிருக்க ஒருவேளை சோறுகூடக் கிடைக்காமல், வாழைப்பழங்களில் வயிற்றுப்பசி தீர்த்த பையன்கள் ஆயிரக்கணக்கில் இருப்பார்கள்.

தன் அழகான உண்டியல்களை அப்பா, அம்மாவை நம்பி பத்திரமாக வைத்துவிட்டு பள்ளிக்குச் சென்றுவிட்ட குட்டீஸ்களுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. இந்த நாட்களில் உடைக்கப்பட்டிருக்கும் உண்டியல்களைக் கணக்கில் எடுத்தால் தெரியும் குழந்தைகளின் வேதனை.

எப்போதும் தூங்கிவழியும் ஏ.டி.எம்-களில் எந்நேரமும் பொழுதுபோகாமல் சிறிய அறையைச் சுத்தப்படுத்திக்கொண்டே இருக்கிற வாட்ச்மேன் களுக்கும்கூட அந்த நாள் அதிர்ச்சிகரமானதாகவே இருந்திருக்கும். எத்தனையோ வாட்ச்மேன்கள் முரட்டு மனிதர்களை, அந்த இரவில் கட்டுப்படுத்த முடியாமல் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

நவம்பர் 8-க்குப் பிறகு திருமணம் வைத்திருந்த பலரும்,  யாருக்கும் எந்தப் பணமும் தரமுடியாமல், ஏற்பாடுகளைக் கவனிக்கவும் இயலாமல் பரிதவிக்கின்றனர். இப்போது மொய்ப்பணமாக வந்துகுவிந்துவிட்ட பழைய 500 ரூபாய் நோட்டுக்களை என்ன செய்வது என்றும் திக்குமுக்காடி இதை எந்தக் கணக்கில் காட்டுவது என்பதிலும் தெளிவு இல்லை. இந்தக் குழப்பங் களுக்கான பதிலைத் தர வேண்டிய பொறுப்பு யாருக்கு?

திடீர் அறிவிப்பின் மூலம் கள்ளப் பணம் வைத்திருப்பவர்கள் மீது தாக்குதல்கள் தொடுத்தது வரை சரியே. இந்த அறிவிப்பை இன்னும் தெளிவாகக் கொடுத்திருக்கலாம். கொடுத்தி ருந்தால் அது ஒரு மரணத்தைத் தவிர்த்திருக்கும்.

உத்திரபிரதேசம் குஷிநகர் கோரக்பூரைச் சேர்ந்த 40 வயது பெண் தித்ரஜி. ஒரு சலவைத் தொழிலாளி, `உன்னிடம்  இருக்கும் இரண்டு 1,000 ரூபாய் தாள்களும் இனி செல்லாது அவ்ளோதான்’ என யாரோ சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் இறந்துபோயிருக்கிறார். இது நமக்குத் தெரிந்த மரணம்.

தெரியாதவை? இந்த நாட்களில் இறந்துபோன ஒருவரின் இறுதிக் காரியங்களைச் செய்யமுடியாமல் தவித்தவர்கள் எத்தனை பேர்?

வீடுகளில் அத்தியாவசியப் பொருட்களில் மளிகைச்சாமான்களை டெபிட், கிரெடிட் கார்டுகளில் வாங்கிவிட்டாலும், தண்ணீர் கேன், கேஸ் மாதிரியான சமாச்சாரங்களுக்கு ரூபாய் நோட்டுக்கள் அத்தியாசவசியமானவை. பெரும்பாலான வீடுகளில் கேஸ் தீர்ந்துபோய், அதைக் கொண்டுவந்த கேஸ் வண்டிக்காரரிடம் 500 ரூபாய்களை நீட்டி, அவர் வாங்க மறுத்தது என களேபரங்கள் அதிகம்.

சும்மாவே அரசு அலுவலகங்கள் சிறப்பாகச் செயல்படுகிற நாட்டில், இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் என்ன நடக்கும், எங்கும் குழப்பங்கள், எப்படிப் பணம் செலுத்துவது, பணம் கட்டதவறினால் என்னாகும் என்பதில் எல்லாம் ஒரு தெளிவு இல்லை. அதோடு அரசு அலுவலர்களுக்கும் எந்தவித முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை. தேர்வுக் கட்டணம் செலுத்த முடியாமலும், பதிவுகள் செய்ய முடியாமல் திண்டாடியவர்கள் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தொடும்.

வேலைக்குச் செல்ல இயலாது, கடைகளுக்கு செல்ல முடியாது, அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாது, சாலையில் இறங்க முடியாது, மீறி இறங்கினால் வண்டி பஞ்சர் ஆனாலும்கூட பஞ்சர் போட முடியாத ஒரு சூழலை என்ன என்று அழைப்பது?

இந்த நாட்களில் நாம் இழந்திருக்கிற வீணாக்கியிருக்கிற மனித சக்தியும் உழைப்பும் எவ்வளவு அதிகம். பணத்தை மாற்ற விடுமுறை போட்டுக்கொண்டு வரிசையில் நின்றவர்கள், கையிருப்பாக இருக்கும் பணத்தைச் செலவழிக்க வேண்டாம் என நினைத்து வீட்டுக்குள் முடங்கி யவர்கள் என இந்த இழப்புக்கு அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? எத்தனை கோடி ரூபாய்க்கு சிறு குறு வியாபாரிகள் தங்களுடைய அன்றாட வியாபாரத்தை இழந்திருப்பார்கள்?

தினக் கூலிகள், வெளிமாநிலப் பணியாளர்கள், திருநங்கைகள், பிச்சைக்காரர்கள், கைவிடப்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், பாலியல் தொழிலாளிகள் என விளிம்புநிலை மனிதர்கள் இந்த அறிவிப்பினால் நேரடியாகப் பாதிக்கப்பட் டுள்ளனர். பார்வையற்ற ஒருவர் இந்த துர்பாக்கிய சூழலை எவ்விதம் கடந்துசெல்வார். எவ்வித அடையாள அட்டைகளும் இல்லாத வெளிமாநிலக் கூலிகளை நினைத்துப்பாருங்கள்.

உண்மையில் கறுப்புப் பணம் இந்தியாவின் மார்பில் படர்ந்திருக்கும் புற்று. இந்தியா நன்றாகச் சுவாசிக்க வேண்டும் எனில், அந்தப் புற்றை அகற்ற வேண்டும். இதை  யாரும் மறுக்க முடியாது. ஆனால், அதற்கான அறுவை சிகிச்சையின்போது கைகளையும் கால்களையும் அகற்றுவது எப்படிச் சரியாக இருக்கும்? ஆனால், அதுதான் இப்போது நடக்கிறது. 

ஒரு சமூகத்தின் நன்மைக்காக நான்கு பேர் பரிதவிப்பது தவறு இல்லை என்கிறீர்களா? சரிதான். ஆனால், சமூகத்தின் கீழ் அடுக்குகளில் வாழும் அந்த நான்கு பேரே எப்போதும் பாதிப்புக்கு உள்ளாகிறார்களே... ஏன்?

காணாமல்போன சிறுவாடு!

யாருக்கு இழப்பு?

``என் மனைவி வெச்சிருந்த, 2500 ரூபாய் கருப்புப் பணத்தை வெளியே கொண்டுவந்த மோடி அரசு வாழ்க!’’

`மோடியின் இரவில்' மிக அதிகமாகப் பகிரப்பட்ட வாட்ஸ்அப் செய்தி இது. இந்தச் செய்திகளுக்குப் பின்னால் ஓர் ஆணாதிக்கப் பெருமிதம் வெளிப்படுவதை யாருமே உணர்ந்துகொள்ள முடியும். `இத்தனை நாள் எனக்குத் தெரியாம ஆட்டையைப் போட்டல்ல இப்ப மாட்டுனியா?' என்ற ஓர் அதிகாரக் கொக்கரிப்பு அது. பொருளாதாரத் தேவைகளைச் சுயமாக நிர்வகிக்கிற பெண்ணின் மீதான வெறுப்பின் வெளிப்பாடு.

டாஸ்மாக்குகள் ஆட்சிசெய்யும் தமிழ்நாட்டில் வீட்டை அடையும் ஆணின் வருவாய் என்பது மிகவும் சொற்பமே. பெண்களால்தான் பல வீடுகளின் நிதியாதாரங்கள் காக்கப்படுகின்றன. அந்தச் சில்லறைச் சேமிப்புகளும் சிறுவாட்டுக் காசுகளும்தான் `பிரதமர் மோடியின் துல்லியத் தாக்குதலில்' இப்போது கைப்பற்றப்பட்டிருக்கிறது. இப்போது மோடியின் உதவியோடு ஆண்களால் `மீட்க’ப்பட்ட இந்தக் கறுப்புப் பணத்தில் எவ்வளவு தொகை பெண்களுக்கு மீளக் கிடைக்கும்?

‘‘எங்களுக்கு நான்கு மகள்கள். மூன்று பேருக்குத் திருமணம் செய்துவிட்டேன். கடைசி மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எங்க வீட்டுக்காரர் ஆட்டோ மொபைல் ஷோரூம் வைத்திருக்கிறார். அவருக்கு எவ்வளவு பணம் கிடைத்தாலும் ஷோரூமை டெவலப் செய்வதாகச் சொல்லி செலவுசெய்துவிடுவார். அதனால் அவருக்குத் தெரியாமல் சீட்டு போட்டு சேமித்து வைத்திருக்கும் தொகையில், மகளுக்கு கூடுதலாக நகைகள் போட்டு திருமணம் செய்து வைத்திருக்கிறேன். அதேபோல கடைசி மகளுக்கும் கூடுதலாக நகை போடுவதற்காக சீட்டு போட்டு போன வாரம் தான் இரண்டரை லட்சம் ரூபாய் எடுத்துவைத்திருந்தேன். அதில் அதிகப்படியாக 500,

1,000 ரூபாய் தாள்களாக இருக்கின்றன. அதை எப்படி மாற்றுவது எனத் தெரியாமல் கடைசியா அவருகிட்ட உண்மையைச் சொல்லிட்டேன். அவர் தன்னுடைய நிறுவனத்துக்கு அவசரமாகத் தேவை என வாங்கிப் போய்விட்டார். இனி அந்தத் தொகையைத் திரும்ப வாங்க பெரிய போராட்டமே நடத்த வேண்டி இருக்கும்!’’ - திருச்சியைச் சேர்ந்த பர்வின்பானுவின் நிலைமை இது.

பெண்கள் தாங்களாகவே வங்கிக்கணக்கில் ரகசியமாகப் போட்டு மாற்றலாமே என்ற கேள்வி எழலாம். ஆனால் இன்றும்கூட பல குடும்பங்களில் ஆணின் தயவு இல்லாமல் பெண்களால் வங்கிகளில் கணக்கு வைத்துக்கொள்வதும், அதை நிர்வகிப்பதும் சாத்தியம் அல்ல. 

``பசங்க அனுப்புற சம்பளத்துல மிச்சம்புடிச்சு ஐந்நூறு ஆயிரத்தை அப்பப்போ கொஞ்ச கொஞ்சமா சேர்த்துவெச்சிருக்கேன். வீட்டுக்காரருக்குத் தெரியாம நான் வெச்சிருக்கிறதே பெரிய விஷயம். அவசியமா தேவைப்படும்போது அதில் இருந்து எடுத்துக்குவேன். பல நேரங்கள்ல கைகொடுக்கும். எப்படிக் கிடைச்சதுனு வீட்டுல கேட்டா பக்கத்து வீட்டு அக்காகிட்ட கடன் வாங்குனேன்னு சொல்லிச் சமாளிப்பேன். அப்படித்தான் எங்க தெருவுல நிறையப் பேர் வீட்டுல ரகசிய கஜானா நடத்திட்டிருக்கோம்.

ஆனா இந்த கவர்மென்ட் திடீர்னு ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் செல்லாதுனு அறிவிச்சதும் என்ன பண்றது ஏது பண்றதுன்னு தெரியலை. `நாசுக்கா பேங்க்ல போய் போட்டுடலாம்ல’னு நீங்க கேப்பீங்க. அதுக்கு வழியிருக்குத் தான். ஆனா என் அக்கவுன்ட்க்கு கான்டாக்ட் நம்பர் என் கணவர் நம்பரைத்தான் கொடுத்திருக்கோம். அதனால், நூறு ரூபாய் போட்டாக்கூட அவர் போனுக்கு மெசேஜ் போய்டும். இப்ப என்ன செய்றதுனு தெரியலை. எப்படியும் நான் சேர்த்து வெச்சிருக்கிற பணம், என் வீட்டுக்காரருக்குத் தெரிஞ்சுடும். இனி புதுசாத்தான் என் ரகசிய சேமிப்பைத் தொடங்கணும்’’- வேதனையோடு சொன்னார் மதுரையைச் சேர்ந்த சுபலட்சுமி.

இதுதான் இன்றைய உண்மை நிலை. இன்னும் ஏராளமான சுபலட்சுமிகளுக்கு வங்கிக்கணக்கு என்பது கணவனால் தந்தையால் மகன்களால் கண்காணிக்கப் படுகிறது; ஆண்களால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. வேலைக்குச் செல்லும் மனைவியின் டெபிட்கார்டையும் சேர்த்து தன்வசம் வைத்துக்கொண்டு தேவையான பணத்தை மட்டும் எடுத்துத்தருகிற கணவர்கள்தான் இங்கே அதிகம்.

பெண்களுக்கான பொருளாதாரச் சுதந்திரம் என்பது இந்தியா முழுக்கவே இப்படித்தான். பொருளீட்டுதலும், அதை விருப்பம்போல செலவழித்தலும் இங்கே ஆணுக்கான உரிமையாகப் பார்க்கப்படுகிறது. கையில் 1,000 ரூபாய் தாள்களாக வைத்துக்கொண்டு, `இதை என்ன பண்றதுனு தெரியலை, மகன் கண்ணுல பட்டா போச்சு புடுங்கிக்குவான்' எனக் கதறி அழும் பாட்டிகளின் குரல்களை, இந்த நாட்களில்  வங்கி வாசல்களில் பார்க்க முடிகிறது.

வீட்டில் இருந்த சேமிப்புப் பணம் பறிபோனதால் மட்டும் அல்ல... மளிகை, பால், பேப்பர், கேபிள் என ஒவ்வொரு நாளும் வசூலுக்கு வருபவர்களை எதிர்கொள்கிறவர்களும் பெண்கள்தான்.
``தினமும் ஹவுஸ் ஓனருக்கு நான்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கு. பேப்பர்காரர், பால்காரர்னு எல்லோருக்குமே இன்னும் பணம் கொடுத்து முடிக்கலை. சில்லறை இல்லாம மளிகைச் சாமான்கள் வாங்க முடியலை’’ என்கிறார் விருதுநகரைச் சேர்ந்த நித்யா.

கணவனுக்கு, மகனுக்கு, தந்தைக்குத் தெரியாமல்  வீட்டுப்பெண்களால் சேமிக்கப்படும் எந்தச் சிறுதொகையும் வெட்டிச்செலவுகளுக்கு செல்வது இல்லை. அவை சுயதேவைகளுக்கானவை அல்ல... அவசரத் தேவைகளுக்காக  உதவுபவை. தன் மகளின் திருமணத்துக்கு என நகை சேர்க்கவும், மகனின் கல்விக்கு என பொருள் சேர்க்கவுமான போராட்டத்தில் வீட்டுப் பெண்களின் மிகப்பெரிய பங்களிப்புகளே, இந்தக் கடுகு டப்பா சேமிப்புகள். தங்க நகைகள்தான் இன்றுவரை ஒவ்வொரு இந்தியனின் வீட்டிலும் செய்யப்படுகிற முதல் சேமிப்பு; முதலீடு. அடுப்பங்கரைகளில்தான் ஒவ்வொரு குடும்பத்துக்குமான `எமர்ஜென்ஸி ஃபண்ட்' சேர்க்கப்படுகிறது.

மோடியின் நோக்கம் நியாயமானது. ஆனால்,  வீட்டை நிர்வகிக்கும் பெண்களைப் பற்றியும்  அவர் சிந்தித்திருக்கலாம். பெண்கள் பலரும் தங்கள் சேமிப்பை வீட்டு ஆண்களிடம் இழந்து நிற்கிறார்கள். இனி அவர்கள் தங்களின் பொருளாதாரச் சுதந்திரத்துக்கான போராட்டத்தை முதலில் இருந்து தொடங்க வேண்டும்!

வி.கே.ரமேஷ், செ.சல்மான்
படம்: அ.குரூஸ்தனம்