Published:Updated:

இருக்கு... ஆனா இல்லை!

இருக்கு... ஆனா இல்லை!
பிரீமியம் ஸ்டோரி
News
இருக்கு... ஆனா இல்லை!

வ.நாகப்பன்ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

றுப்புப் பணத்தை முற்றிலுமாக அழித்து ஒழிக்கும் முயற்சிகள் இந்தியாவுக்குப் புதிது அல்ல. சுதந்திரம் பெற்ற நாள் தொடங்கி, ஆட்சிக்கு வந்த ஒவ்வோர் அரசும் வெவ்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டே வருகின்றன. ஆனால், இந்த மாதிரி நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப் பட்டும், அவை பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதே நிதர்சனம்.

இருக்கு... ஆனா இல்லை!

கறுப்புப் பணப் பிரச்னை ஏன் மீண்டும் மீண்டும் தலை தூக்குகிறது? எது கறுப்புப் பணம்? கறுப்புப் பணம் யாரிடம் அதிகம் இருக்கிறது? அதை முழுமையாகத் தடுக்க முடியுமா? அதற்குச் சிறந்த வழி இதுதானா?

ஏன்... இங்கே... இப்போது?

ஒரே இரவில் ஒட்டுமொத்தமாக, `இனி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது’ என அரசு இப்போது எடுத்திருக்கும் நடவடிக்கையை, சர்வதேச அளவில் `டி மானிட்டைசேஷன்' என்பார்கள். பொதுவாக, இது `ஹைப்பர் இன்ஃபிளேஷன்' எனச் சொல்லக்கூடிய அதீத பணவீக்கத்தால் அவதிப்படும் மூன்றாம் உலக நாடுகளில்தான் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தற்காலிகமாக, அங்கு விலைவாசியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அது அமையும். ஆனால் இந்தியாவிலோ, கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தவும் அச்சடிக்கப்பட்ட போலி கரன்சி நோட்டுக்களைத் தவிர்க்கவும்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. அரசு எதிர்பார்க்கும் தீர்வு இந்த நடவடிக்கையால் மட்டும் கிடைக்குமா எனப் போகப்போகத்தான் தெரியும் என்றாலும், கறுப்புப் பணத்தை ஒழிப்பதில் இது ஒரு முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது என்பது நிச்சயம்.

இப்போது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையால், கையில் பெருமளவில் கறுப்புப் பணம் வைத்திருக்கும் அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், உயர் அதிகாரிகள் எனப் பலரும் அதிர்ச்சியில் உறைந்துபோய் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தச் செய்தி வெளியான அன்று ஆடிட்டர்களின் தொலைபேசிகள் ஒட்டுமொத்தமாக பிஸியானதே இதற்கு சாட்சி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இருக்கு... ஆனா இல்லை!இந்தச் செய்தியை முன்கூட்டியே தெரிந்துகொண்டு உயர்மட்டத்தில் வெகுசிலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கலாம் எனும் யூகங்களும் வெளியாகின. இதற்கான ஆதாரங்கள் ஏதும் வெளியே வராத வரை இவை வெறும் யூகங்களே. அப்படியே ஒருவேளை இருந்தாலும் அவை பெரும்பாலும் வெளியே வராது. அப்படியே ஒருசிலர் தப்பித்துக் கொண்டார்கள் என ஒரு வாதத்துக்காக எடுத்துக் கொண்டால்கூட, அதற்காக இந்த நடவடிக்கையைக் குறைகூற முடியாது. டிசம்பருக்குப் பிறகு வரப்போகும் புள்ளிவிவரங்கள் நம்முடைய முன் முடிவுகளுக்கு எல்லாம் பதிலாக இருக்கும். முக்கியமான சில முடிவுகளை எடுக்கும்போது இப்படி நடப்பதை முன்னரே பார்த்திருக்கிறோம். அதற்காக ஒரு திட்டத்தைச் யல்படுத்தாமலேயே இருக்க முடியாது. ஊழல்வாதிகளே மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருகிறார்கள் என வெறுத்துபோய் தேர்தலே நடத்தாமல், ஓட்டு போடாமல் இருக்கலாமா?

நிஜமாகவே அரசுக்கு அக்கறை இருக்கிறதா?

*அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை திடீர் விளம்பர ஸ்டன்ட் அல்ல என்பதற்கு, இந்த விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே அரசு அடுத்தடுத்து எடுத்திருக்கும் நடவடிக்கைகளைப் திரும்பிப் பார்த்தாலே நன்றாகப் புரியும்.
 
*கடந்த சில ஆண்டுகளாகவே `கறுப்புப் பணத்தைத் தடுக்க, தக்க நடவடிக்கை எடுப்போம்!' என மத்திய அரசு தொடர்ந்து சொல்லிவந்தது.
 
*
பேச்சோடு நிற்காமல் அதன் தொடர்ச்சியாக கறுப்புப் பணத்தைத் தடைசெய்யும் சட்டம் கொண்டுவந்தது.

* கறுப்புப் பணத்தைக் கையில் வைத்திருப்போருக்கான பொதுமன்னிப்புத் திட்டமும் ஏற்கெனவே கொண்டுவந்தது. 45 சதவிகிதம் வரி கட்டி, தப்பித்துக்கொள்ள வழிவகுத்தும் கொடுத்தது. இது ஏற்கெனவே ஒழுங்காக வரி கட்டி வந்தோரின் நியாயமான ஆதங்கத்தையும் கோபத்தையும் சம்பாதித்தாலும், கறுப்புப் பணத்தை ஓரளவுக்கு வெளிக்கொணர்ந்தது. அப்படிக் கொண்டுவந்ததன் மூலமாக அந்தப் பணம் உற்பத்திக்கு மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் வங்கிகளுக்குள் வந்தது.

* சென்ற ஆண்டுக்கான வருமானவரித் தாக்கல் செய்யும் காலக்கெடுவை வழக்கமான செப்டம்பர் 30-ம் தேதியில் இருந்து அக்டோபர் 15-ம் தேதிக்குத் தள்ளிவைத்தது, சிலரின் புருவத்தை உயர்த்தவைத்தது. கறுப்புப் பணத்தை வெளிக்கொணரும் திட்டத்துக்கான காலக்கெடு செப்டம்பர் 30 என்பதை இங்கு நினைவில் கொள்ளவேண்டும்.

இப்போது இவற்றின் தொடர்ச்சியாகத்தான் ரூபாய் நோட்டுக்களை மாற்றும் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார் பிரதமர் மோடி.

இந்த நடவடிக்கையால் பொதுமன்னிப்புத் திட்டத்தில் பணம் வெளிவந்ததுபோல இதில் வருமா எனத் தெரியவில்லை. ஏனெனில், இப்போது டெபாசிட் செய்யும் கணக்குவழக்குகள் முறையாக இல்லாதபட்சத்தில், அந்தப் பணத்தை முறையற்ற வருமானமாக எடுத்துக்கொண்டு அதன் மீது வழக்கமான வருமானவரியைக் கட்டச் சொல்வதோடு, அதைப்போல 200 சதவிகிதம் (அதாவது இரு மடங்கு) அபராதத்தொகையும் கட்ட வேண்டும் என எச்சரித்திருக்கிறார்கள்.

உதாரணமாக, இப்போது வங்கியில் கட்டும் 10 லட்சம் ரூபாய்க்கு உங்களால் முறையாகக் கணக்குக்காட்ட முடியவில்லை என்றால், அது முழுவதுமே வருமானமாக எடுத்துக்கொள்ளப்பட்டு, அதன் மீது மூன்று லட்சம் ரூபாய் வருமான வரியும், அதுபோக ஆறு லட்சம் ரூபாய் அபராதத்தொகையும் வசூலிக்கப்படலாம். மீதம் ஒரு லட்சம் ரூபாய்தான் கையில் மிஞ்சும்.

இதுவரை நியாயமாக வரி கட்டி வந்தவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை – தாற்காலிகச் சங்கடங்களைத் தவிர்த்து. கணக்கில் உள்ள பணம் எத்தனை கோடிகளாக இருந்தாலும் பயப்படத் தேவை இல்லை, வங்கியில் ரிலாக்ஸ்டாக பரிவர்த்தனை செய்யலாம்.

எங்கே இருக்கிறது பணம்?


அரசின் இந்தக் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது, பெரும் பண முதலைகள் யாரும் இந்தியாவில் பணத்தை வைத்திருப்பது இல்லை என்பதே. ஒன்று தெரிந்துகொள்ள வேண்டும், கறுப்புப் பணம் பற்றிய துல்லியமான புள்ளிவிவரங்கள் யாரிடமும் இல்லை, அரசு உள்பட. ஆளுக்கொரு புள்ளிவிவரங்களை அள்ளிவிடுகிறார்கள்.

இருக்கு... ஆனா இல்லை!

இதில் `முதல் மூன்றுவிதமான கறுப்புப் பணமும் இப்போதைய நடவடிக்கையால் சரிசெய்யப்படுமா?' என்பது நிச்சயம் எழுப்பவேண்டிய கேள்விதான். ஆனால், நான்காவதாகச் சொல்லப்பட்டிருக்கும் கையில் பதுக்கிவைத்திருக்கும் ரொக்கத்தை மட்டும்தான் இந்தத் திட்டம் டார்கெட் செய்கிறது. ஏற்கெனவே கொண்டு வந்த வாலன்டரி டிஸ்க்ளோஷர் திட்டம் மூலமாக மேற்சொன்ன வகைகளில் இருந்து கொஞ்சம் பணம் வெள்ளியாக மாற்றப்பட்டிருக்கலாம்.

கறுப்புப் பணத்தில் பெரும்பகுதி வெளிநாட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கலாம் என எண்ணப்படுகிறது. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது நிச்சயம். அதற்காக அதைத் தவிர்த்து வேறு எந்த நடவடிக்கைகளும் எடுக்கக் கூடாது எனச் சொல்வது சரியான அணுகுமுறையாக இருக்காது.

கறுப்புப் பணத்தைத் தங்கமாகவும் ரியல்எஸ்டேட்டிலும் முதலீடு செய்து வைத்திருப்பவர்களும் ஏராளமாக இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் மீதும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதைச் செய்யும் வரை இதைச் செய்யாதே எனச் சொல்வது எப்படிச் சரியாக இருக்கும்?

தங்கள் கைவசம் இருக்கும் கறுப்புப் பணத்தைப் பிரித்து தங்கள் உறவினர்கள், நண்பர்கள், ஊழியர்கள் மூலமாக வெள்ளைப் பணமாக மாற்றுவார்களே எனும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எல்லோராலும் முடியாத காரியம் இது. நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படும் விஷயம் இது. இருந்தாலும் செய்யலாம். அதற்காகத்தான் அரசு, வருமானவரி சட்டத்தின் 270A ஷரத்தைப் பயன்படுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என அறிவித்துள்ளது.

இதையும் தாண்டி புதிய உத்திகளைக் கண்டுபிடித்து சாமர்த்தியசாலிகள் சிலர் செயல்படலாம் என மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜனே முன்னர் தெரிவித்திருந்ததாகச் செய்திகளையும் பார்த்தோம். எந்தச் சட்டம் கொண்டுவந்தாலும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்நடவடிக்கைகள் இருக்கவே செய்யும் என்பதால், அரசு சும்மா இருக்க முடியுமா? ஆனால், எடுக்கும்  நடவடிக்கை சாமானிய மக்களுக்குத் தொல்லை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே இங்கு முக்கியம்.

இருக்கு... ஆனா இல்லை!

மிக அதிகமாக கணக்கில் வராத பணம் வைத்திருப்போர் இடையே அரசின் அறிவிப்பு எத்தகைய பீதியைக் கிளப்பியது எனத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், ஒரு செய்தியைப் பாருங்கள்.

இந்தத் திட்டம் அறிவித்த அன்று இரவு தங்கத்தின் விலை இருமடங்காக அதிகரித்ததாகச் தகவல்கள் உலாவந்தன. 10 கிராமுக்கு 65 ஆயிரம் ரூபாய் கொடுத்து கறுப்புப் பணத்தை மாற்றியதாக தகவல்கள் சந்தையில் சொல்லப்பட்டது. அதைக் கட்டுப்படுத்தவும் அரசு உடனே நடவடிக்கையில் இறங்கியது. பான் அட்டை இல்லாமல் தங்கம் விற்கக் கூடாது எனச் சொன்னதோடு, சில ரெய்டுகளும் நடத்தப்படலாம் எனச் சொன்னது. மும்பை, டெல்லி, சென்னை என முக்கிய நகரங்களில் பெரிய நகைக்கடைகளில் ரெய்டுகளையும் நடத்தியது.

மேலே சொன்னதுபோல இது ஒரு இன்ட்டகரேட்டட் நடவடிக்கையாக ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து அடுத்தடுத்து ஒன்றுக்கொன்று `சப்ளிமென்ட்டிங்'காக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த முயற்சி வெற்றிபெறும். இல்லையேல், இதற்கு முன்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப்போலத்தான் இதுவும் ஒரு தற்காலிகப் பலனைக் கொடுக்கும்.

இருக்கு... ஆனா இல்லை!

பாதிக்கப்பட்ட வியாபாரிகள்:

நம் நாட்டில் 5.50 கோடி சிறு மற்றும் குறுதொழில் நிறுவனங்கள் இருப்பதாக அரசே சொல்கிறது. எட்டு கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் துறையாகவும் இது இருக்கிறது. ஆறாயிரம் பேருக்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம் நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சியில் இதன் பங்கு எட்டு சதவிகிதமாக இருக்கிறது. நாட்டின் மொத்த உற்பத்தியில் 45 சதவிகிதம் மொத்த ஏற்றுமதியில் 45 சதவிகிதம் சிறுதொழில் நிறுவனங்களில் இருந்துதான் என அரசே ஒப்புக்கொள்ளும் விஷயம். இப்படிப்பட்ட சிறுதொழில்கள் எல்லாமே ரொக்கத்தை நம்பியே இயங்குகின்றன. `இந்தத் திடீர் அறிவிப்பால் அவர்களுக்குப் பாதிப்பு உண்டாகாதா?' என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது.
மெள்ள மெள்ள ரொக்கம் இல்லா சமூகமாக மாறுவதில் எங்களுக்கு எந்த மனத்தடையும் இல்லை எனச் சிறு தொழில்களுக்கான வர்த்தகச் சங்கத் தலைவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் சொல்லும் ஒரே விஷயம் –  `இப்போதைக்கு இன்னமும் நாங்கள் அதற்குத் தயாராகவில்லை' என்பதுதான்.

என்ன கிடைக்கும்?

வீட்டில் பெருங்காய டப்பாவில் இல்லத்தரசிகள் போட்டுவைத்திருக்கும் சிறுவாட்டுப் பணம், சீட்டு கட்டிவந்த பணம் ஆகியவை அரசின் நோக்கம் அல்ல. இவர்கள் இந்தப் பணத்தை முழுவதுமே தங்கள் வங்கிக்கணக்கில் போட்டுக்கொள்ளலாம். ஒருசில ஆண்டுகள் முன்னர் வரை பல கோடிப் பேர்களுக்கு வங்கிக்கணக்கே இல்லை எனும் நிலை இருந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறிவருகிறது. இன்றும் பலர் கணக்கு இல்லாமல் இருந்தாலும் அவர்களையும் வங்கிக்கணக்குக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இது, மானியங்கள் கொடுப்பதற்கும் வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கும் பயன்படும்.

இந்த நடவடிக்கையின் மூலமாக இந்தியாவின் ஒட்டுமொத்த கறுப்புப் பணமும் உள்ளே வராமல்போகலாம் என்றாலும், உள்ளே பல ஆயிரம் கோடிகள் வரலாம் எனும் எதிர்பார்ப்பு உள்ளது. வங்கிகளுக்குள் இந்தப் பணம் வரும்போது CASA எனச் சொல்லக்கூடிய கரன்ட் அக்கவுன்ட் மற்றும் சேவிங்ஸ் அக்கவுன்டுக்குள்தான் முதலில் வரும். வங்கிகளுக்கு மூலதனம் நாம் கொடுக்கும் பணம்தான்.

அதை நாம் ஃபிக்ஸட் டெபாசிட்டாகப் போடும்போது நமக்கு ஏழு அல்லது எட்டு சதவிகிதம் வட்டி கொடுக்கப்படும் வங்கிகளின் மூலதனப்பொருளின் அடக்கவிலை அதிகம். அதையே நாம் `காஸா' கணக்குகளில் போடும்போது மூன்று சதவிகிதம் அல்லது நான்கு சதவிகிதம்தான் அதன் அடக்கவிலை.

எனவே, பொதுவாகவே வங்கிகள் `காஸா' கணக்குகளையே விரும்புவார்கள். குறைந்த வட்டியில் பணம் வாங்கி அதைக் கடன் கொடுக்கும்போது வங்கிகள் ஈட்டக்கூடிய `நிம்' NIM – Net Interest Margin மற்றும் NII – Net Interest Income எனும் வருவாய் மற்றும் லாபம் கணிசமாக வரும் ஆண்டுகளில் உயரும். பொதுத் துறை வங்கிகளுக்கு, குறிப்பாக இது நல்லது. (பெரும்பான்மையான சேமிப்பு இங்குதான் வரும் என்பதால்.) பாரலல் எக்கானமியில் இருந்து பணம் வங்கிகள் மூலமாக வரும்போது இப்போது தற்காலிகமாக உருவாகிவரும் பணத் தட்டுப்பாடு குறைந்து பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. பணப்புழக்கம் அப்படி அதிகரிக்கும்போது, வட்டிவிகிதம் கணிசமாகக் குறையும். வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் சிறுதொழில்கள் கடன் மீதான வட்டியும் குறைய வேண்டும்.

இந்தத் திட்டங்கள் வெற்றிபெறும்பட்சத்தில், நம் நாட்டின் பற்றாக்குறையும் கணிசமாகக் குறையலாம் (45 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது மூன்று ட்ரில்லியன் ரூபாய் குறையும் எனச் சொல்கிறது ஈடெல் வெய்ஸ் நிறுவனத்தின் ஆய்வு. ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் இன்னும் அதிகமாகச் சொல்கிறது. 4.60 ட்ரில்லியன் ரூபாய் அளவுக்கு கறுப்புப் பணம் ரொக்கமாக உள்ளே வருவதால் நாட்டின் பற்றாக்குறை அந்த அளவுக்குக் குறையும் எனக் கருத்துத் தெரிவித்திருக்கிறது!) இந்தப் பணம் கல்வி, மருத்துவம், விவசாயம், பாதுகாப்பு என மக்கள்நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் பட்சத்தில், மக்களின் கேள்விகள் பதில் அளிக்கப்படும். ஒரு பக்கம் பற்றாக்குறை குறைவு. மறுபக்கம் வட்டிவிகிதம் குறைவு என்பதால், விலைவாசியும் கணிசமாகக் குறையும். இதுதான் சாமானிய மக்கள் விரும்புவது. நடக்குமா என்பது செயல்படுத்தலில்தான் உள்ளது.

முடிந்துவிடவில்லை போர்!


இந்த மொத்த முயற்சியும் வெற்றிபெற வேண்டும் என்றால், இத்தோடு நிறுத்தக் கூடாது. இப்போதைய முயற்சி, ஏற்கெனவே இருக்கும் கறுப்புப் பணத்தைத்தான் ஓரளவுக்கு அழித்திருக்கும். ஆனால், இனி வருவது?

ஊற்றுக்கண்ணிலேயே தவிர்க்காவிட்டால் இப்போதைய நடவடிக்கை விரைவிலேயே நீர்த்துப்போகும். அதற்கு, ஒருபக்கம் போதை மருந்து, தங்கம் கள்ளக்கடத்தல் போன்ற சட்டத்துக்குப் புறம்பான தொழில்களைச் செய்பவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனைகள் வழங்குவதோடு, மறுபக்கம் லஞ்சம், ஊழல் ஆகியவற்றில் ஈடுபடும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் மீதும் கடும் நடவடிக்கைகள் பாயவேண்டும்.

கறுப்புப் பணம் உருவாவதைத் தவிர்ப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அதன் பயன்பாட்டையும் செயலிழக்கச் செய்ய வேண்டும். அதற்கான முயற்சியாகத்தான் இதைப் பார்க்க வேண்டும். அந்த விதத்தில், கறுப்புப் பணம் மேலும் புழங்கக்கூடிய இடங்களான தங்கம் மற்றும் ரியல்எஸ்டேட் துறைகளையும் மேலும் ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியமாகிறது.

சுமார் 25 ஆண்டுகள் முன்னர் வரைகூட பங்குச்சந்தைகளில் ரொக்கம் கட்டி பங்குகளை வாங்க முடியும். ஆனால், இன்று முடியாது. பங்குச்சந்தைகளில் ஒரு ரூபாய்கூட ரொக்கமாக கட்ட முடியாது. காசோலை மூலமாகவோ வங்கிப் பரிவர்த்தனைகள் மூலமாகவோ மட்டுமே முடியும். இதன் மூலம் கறுப்புப் பணம் பெருமளவில் கட்டுக்குள் வந்தாலும், இன்று வேறு ஒரு பிரச்னை தொடர்ந்துகொண்டிருக்கிறது. அதுதான் பார்ட்டிசிபேட்டரி நோட்.

`பார்ட்டிசிபேட்டரி நோட்' மூலமாக நம் நாட்டின் நிதி/பங்குச்சந்தைக்குள் வரும் முதலீடுகளில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு கேய்மேன் ஐலேண்ட் எனும் இந்தச் சிறு தீவில் இருந்துவருவதாகச் சொல்கிறது எஸ்.ஐ.டி! இது 2015-ம் ஆண்டு நிலவரம்.
வெறும் 55,000 பேர் மட்டுமே ஜனத்தொகையாகக்கொண்ட இந்தத் தீவில் இருந்து நம் நாட்டுக்குள் வந்த முதலீட்டின் அளவு எவ்வளவு தெரியுமா? 85 ஆயிரம் கோடி ரூபாய்! இதேபோல பனாமா நாட்டில் இருந்தும் இந்தப் பிரச்னை! செபி அமைப்பு இப்போது சட்டதிட்டங்களைத் திருத்தி, கொஞ்சம் கடுமை காட்டிய பிறகு இந்தப் பணவரத்துக் கணிசமாகக் குறைந்து இருந்தாலும், கடுமையான கண்காணிப்பும் தொடர் நடவடிக்கையும் தேவை.

`ரவுண்ட் ட்ரிப்பிங்' என்பார்கள். இதன் மூலம் இந்தியர்களின் கறுப்புப் பணமே வெளிநாடு சென்று மீண்டும் இந்தியாவுக்குள் மறுசுழற்சியில் வருகிறதோ எனும் அச்சத்தில், சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் செபி இதைத் தடைசெய்தது. தடைசெய்த செபியின் தலைவரின் பதவிக்காலம் முடிந்தவுடன் அவர் தூக்கப்பட்டார். அடுத்த சில மாதங்களிலேயே இந்தத் தடை நீக்கப்பட்டது ஏன் என்பது இன்று வரை புரியாதபுதிர். இனியாவது விரைவில் தடைசெய்யப்பட வேண்டும்.

அரசின் இந்த நடவடிக்கையில் குளறுபடிகள் இருக்கின்றன. எளிய மக்கள் நிச்சயம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இன்று நாம் கடக்கும் இந்தப் பாதிப்புகள் ஒரு அறுவைசிகிச்சையின் தற்காலிக வலிகளைப் போன்றவை. இந்த நாட்கள் கடந்துபோகும். இனிவரும் நாட்களில் நாம் பார்க்கப்போகும் நல்ல மாற்றங்கள் அதை மெய்ப்பிக்கும்!

கறுப்புப் பணம் உருவாவது எப்படி... எங்கே?

இருக்கு... ஆனா இல்லை!
இருக்கு... ஆனா இல்லை!
இருக்கு... ஆனா இல்லை!