Published:Updated:

ஆசை - பச்சைக் கிளிகள் தோளோடு...

 ஆசை - பச்சைக் கிளிகள் தோளோடு...
பிரீமியம் ஸ்டோரி
News
ஆசை - பச்சைக் கிளிகள் தோளோடு...

பரிசல் கிருஷ்ணாபடங்கள்: கே.ராஜசேகரன்

‘என் மகனுக்கு பறவைகள் என்றால் அவ்வளவு ப்ரியம்; எனக்கு, கிளிகள் என்றாலே பெரும் காதல். சென்னையில் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு தினமும் உணவு அளித்துவரும் சேகரின் இடத்துக்கு எங்களை அழைத்துச்செல்வீர்களா?’ - திண்டுக்கல்லில் இருந்து முருகானந்தி அனுப்பிய ஆசை இது.

 ஆசை - பச்சைக் கிளிகள் தோளோடு...

சென்னை ராயப்பேட்டையில் வசிக்கும் கிளி ப்ளஸ் கேமரா புகழ் சேகரிடம் பேசினோம். ‘`இப்ப எல்லா நாட்டுல இருந்து வந்து கிளிகளைப் பார்த்தாலும், முதன்முதல்ல என்னை வீடியோ எடுத்துப் போட்டது விகடன்தான்’' என்றார் சேகர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆசை குடும்பத்தினர், திண்டுக்கல்லில் இருந்து காலையிலேயே காரில் புறப்பட்டிருந்தார்கள். வழி முழுவதும் வாட்ஸ்அப் அப்டேட், முருகானந்தியிடம் இருந்து வந்துகொண்டே இருந்தன. சேகரின் இருப்பிடத்தை விகடன் குழு அடைந்தபோது மணி 2:30. கிளிகள் வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. சிறிது நேரத்தில் கிளிப்பச்சை உடையில் வந்து இறங்கினார் முருகானந்தி.

‘`நானோ டெக்னாலஜியில் நான் பிஹெச்.டி., முடிச்சிருக்கேன். இது என் அக்கா சிவசங்கரி. அவரோட கணவர் ரவிக்குமாரும், என் கணவர் சிவக்குமாரும் அண்ணன் தம்பிகள். ரெண்டு பேரும் திண்டுக்கல்ல பிசினஸ் பண்றாங்க. இது அக்கா மகன் அரவிந்த். இது என் மகன் ப்ரித்விராஜ். எல்லாரும் ஒரே வீட்டுலதான் இருக்கோம். ப்ரித்விக்குப் பறவைகள் வளர்க்கிறதுல ரொம்பவே ஆர்வம்'’ என்று எல்லோரையும் அறிமுகம் செய்துவைக்கிறார் முருகானந்தி. சந்திப்புக்கு, ரவிக்குமாரைத் தவிர அனைவரும் வந்திருந்தனர்.

மாடியில் வீட்டுக்கு முன்னர் ஐந்தாறு கூண்டுகளில் சில கிளிகள். ஒரு கிளி மட்டும் வெளியே நடந்துகொண்டிருந்தது. ‘`இவரு கூண்டுல இருக்க மாட்டேன்கிறாரு. வெளியேதான் நடப்பாராம். சமையலறை வரைக்கும் ஜாலியா நடந்துட்டே இருப்பார்’' - கிளிகளை அவர், இவர், அவங்க என்றுதான் அன்போடு அழைக்கிறார் சேகர். அந்தக் கிளியை எடுத்து முருகானந்தியிடம் நீட்ட, அவர் விரல் பிடித்து தோளில் ஏறி அமர்ந்துகொள்கிறது கிளி. உடை, ஹேர் க்ளிப், ஹேர்பேண்டு, வளையல், பொட்டு, செயின், மோதிரம், தோடு உள்பட எல்லாமே கிளிப்பச்சை நிறத்தில் இருந்ததாலோ என்னமோ, அவரிடம் பச்சக்கென ஒட்டிக்கொண்டது கிளி.

 ஆசை - பச்சைக் கிளிகள் தோளோடு...

``கிளிகளைக் கூண்டில் அடைத்து வளர்க்கக் கூடாது. இந்தக் கூண்டில் இருக்கும் கிளிகள், அடிபட்டுக் காயங்களுடன் வந்தவை. அவற்றுக்கு சிகிச்சை அளித்து குணமானதும் மீண்டும் பறக்கவிட்டுவிடுவேன்'' என்றார் சேகர், முருகானந்தியின் மகன் ப்ரித்விராஜிடம்.

`‘ நாலு மணிக்கு வர ஆரம்பிச்சுடுவாங்க. நாம அவங்களுக்குத் தீனி வைக்கணும். வாங்க’' என்று வாளிகளில் அரிசியை எடுத்துக்கொண்டு வந்து தயாராகிறார் சேகர். பேசிக்கொண்டே மொட்டை மாடியில் பலகைகளை அடுக்கி, அரிசியைத் திட்டுத்திட்டாக வைக்கிறார்.

மொட்டைமாடியில் சாதாரணமாக அரிசிச் சாப்பாடை வைத்துக் கொண்டிருந்த சேகரின் வீட்டுக்கு, முதலில் புறாவும் காகமும்தான் வந்துகொண்டிருந்தன. 2004-ம் ஆண்டு நிகழ்ந்த சுனாமிக்குப் பிறகு, ஒருநாள் இரண்டு கிளிகள் வந்திருக்கின்றன. அதன் பிறகு கிளிகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, இப்போது ஒருநாள் குறைந்தபட்சம் 2,000 கிளிகள் வருகின்றன. ஆமாம் பாஸ், இங்கேயும் 2,000-தான்.

 ஆசை - பச்சைக் கிளிகள் தோளோடு...

தினமும் காலை 5 மணி, மாலை 4 மணிக்கு மேல் கிளிகள் வர ஆரம்பிக்குமாம். மழைக்காலங்கள் என்றால், 3 மணிக்கே வர ஆரம்பித்துவிடும். மழை தொடர்ந்து பெய்யும்போது எல்லாம் காலையில் இருந்து மாலை வரை அங்கேயே இருக்கும். அந்த மாதிரி நேரங்களில் மழைக்கோட்டு போட்டுக்கொண்டு தீரத் தீர அரிசி வைக்கிறார் சேகர். தினமும் அரிசியை ஊறவைத்துக் கழுவி வைக்கிறார்.

மணி, நான்கை நெருங்கிக்கொண்டிருந்தது. எல்லாரும் மேலே பார்க்க ஆரம்பித்தோம்.

சுமார் 30 கிளிகள் கூட்டமாக வந்து மேலே வட்டமிட்டுவிட்டு, வந்த வேகத்தில் தூரத்தில் தெரிந்த ஒரு மரத்தை நோக்கிச் சென்றன.

‘`மேல நீங்க பார்க்கிற கேபிள் எல்லாம் நானா போட்டது. அது மேல வந்து உட்கார ஆரம்பிச்சுடுவாங்க. நான் வெச்சு முடிச்சதும்,கீழே வந்து சாப்பிட்டுட்டுப் போவாங்க. அஞ்சரை வரைக்கும் இருப்பாங்க. நாம இத்தனை பேர் இருக்கிறதால எல்லாரும் மரத்துக்குப் போறாங்க. நாம எதிர் பில்டிங் போகலாம்’' என்றார் சேகர்.

`‘அப்ப அவங்ககூட செல்ஃபி எடுத்துக்க முடியாதா?’' என்ற முருகானந்தியைப் பார்த்து, ‘`கிளி மாதிரி மூக்கும் செட் பண்ணிட்டு வந்திருந்தீங்கன்னா, ஒருவேளை இங்கேயே உட்கார்ந்திருக்கலாம்’' என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறார் சேகர்.

 ஆசை - பச்சைக் கிளிகள் தோளோடு...

எல்லா பலகைகளிலும் அரிசி வைத்துவிட்டு, எதிரில் இருக்கும் கட்டடத்தில் இருந்து பார்ப்பதற்காக அந்த இடத்தைவிட்டு கீழே வந்தோம். நாங்கள் விலக ஆரம்பித்ததும், கிளிகள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தன. எங்கு இருந்து வருகின்றன என்ற அறிகுறியே இல்லாமல், பெருங்கூட்டமாக கிளிகள் மேலே பறந்துகொண்டிருப்பதைப் பார்த்ததும் முருகானந்தியும் அவர் குடும்பத்தினரும் ஆச்சர்யத்தில் திகைத்துப்போய் நின்றனர்.

‘`மழை இருந்திருந்தா இன்னும் நிறையப் பேர் வருவாங்க; அதிக நேரம் இருப்பாங்க. 2015-ம் ஆண்டு டிசம்பர் சென்னை மழைக்காலத்துல தினமும் 8,000 கிளிகள் வரை வந்தாங்க'’ என்கிறார் சேகர்.

ஒரு மணி நேரத்துக்கு மேல் அவற்றைப் பார்வையிட்டுவிட்டு, மீண்டும் சேகரின் வீட்டுக்குள் நுழைந்தோம்.

சேகரின் கேமரா கலெக்‌ஷனைப் பார்க்க அனுமதிகேட்டார் சிவக்குமார். `‘வாங்க போகலாம்'’ என்று வீட்டுக்குள் அழைத்துக்கொண்டு போய்க் காட்டினார். அவற்றைப் பார்த்ததும் அனைவருமே மீண்டும் ஒருமுறை ஆச்சர்யப்பட்டனர்.
 
‘`டி.வி., வி.சி.ஆர் மெக்கானிசம் பேஸிக்ல இருந்து எலெக்ட்ரானிக் வரைக்கும் படிச்சேன். அப்ப அதுக்கு நிறையப் பேர் இருந்தாங்க. `என்ன பண்ணலாம்?'னு யோசிச்சு, கேமரா மெக்கானிக் பண்ணலாம்னு முடிவுபண்ணினேன். அப்போ சென்னையிலேயே ரெண்டு பேர்தான் பெரிய அளவுல கேமரா மெக்கானிக். நான் மந்தைவெளியில இருந்து மகாபலிபுரம் வரை நடந்துபோய், என் விசிட்டிங் கார்டைக் கொடுத்துட்டு வருவேன். ‘உனக்கு என்னடா தெரியும் கேமரா பத்தி... ஒரு கேமரா என்ன விலை தெரியுமா?’னு திட்டுவாங்க. அப்படித் திட்டின பல பேர், இத்தனை வருஷம் கழிச்சும் என் வாடிக்கையாளரா இருக்காங்க.

`ஒரு கேமரா என்ன விலை தெரியுமா?’னு என்னைக் கேட்டது மாறி, இப்போ என்கிட்ட 4,500 கேமராக்கள் இருக்கின்றன. இந்தியா - சீனா போரின்போது பயன்படுத்தியது, காந்தியைப் படம் பிடித்தது, எம்.ஜி.ஆரின் பிரத்யேகப் புகைப்படக்காரர் வைத்திருந்த கேமரா என... அதுல பல கேமராக்கள் ரொம்பவே ஸ்பெஷல்.''

‘`சொந்த அம்மா-அப்பாவுக்கே சோறு போடாத இந்தக் காலத்துல, இத்தனை கிளிகளை தினமும் ஆறேழு மணி நேரம் கஷ்டப்பட்டுப் பார்த்துக்கிற நீங்க, ரொம்பப் பெரிய புண்ணியவான். இதை தொடர்ந்து செய்ய, உங்களுக்கு உதவிகள் கிடைக்கணும்’' என்று நெகிழ்ந்த முருகானந்தி, அன்புப் பரிசு ஒன்றை சேகரிடம் கொடுக்க, அசந்துபோனார் சேகர்.


முருகானந்தி திண்டுக்கல் போய்ச் சேர்ந்ததும் வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்தது. `அந்தக் கிளிகள் பறந்ததுபோலவே என் மனதில் இருந்து சின்னச்சின்னக் கவலைகளும் பறந்துவிட்டன. தேங்க்ஸ் டு விகடன்' என ஸ்மைலிகளாகச்  சிரித்தார் முருகானந்தி!

வாசகர்களே... இதுபோல நெகிழ்ச்சியான, ஜாலியான, ரசனையான, காமெடியான ஆசைகளை எழுதி அனுப்புங்கள். ஆசிரியர் குழுவினரின் பரிசீலனையில் தேர்வாகும் ஆசைகளை, விகடன் நிறைவேற்றித் தருவான். உங்கள் ஆசைகளை அனுப்பும்போது அலைபேசி எண்ணை மறக்காமல் குறிப்பிடுங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி...
‘ஆசை’,
ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,
சென்னை - 600 002.
இ-மெயில்: aasai@vikatan.com