Published:Updated:

இழுத்து மூடுங்கள் இந்தக் கதவுகளை...

இழுத்து மூடுங்கள் இந்தக் கதவுகளை...
பிரீமியம் ஸ்டோரி
News
இழுத்து மூடுங்கள் இந்தக் கதவுகளை...

ஜெ.சரவணன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

இழுத்து மூடுங்கள் இந்தக் கதவுகளை...

வம்பர் - 8, 2016... இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாளாகப் பதிவாகிவிட்டது. கறுப்புப் பணம் மீதான இந்த இரண்டாம் சுதந்திரப்போர் மக்களிடையே அச்சத்தையும் பல தொந்தரவுகளையும் உண்டாக்கிவிட்டது. எனினும் இந்திய மக்கள், இந்த நடவடிக்கையை வரவேற்கவே முயற்சிக்கிறார்கள். காரணம்... கறுப்புப் பணம் ஒழிந்துவிடும் என்ற ஒற்றை நம்பிக்கை.

ஆனால், இந்த நடவடிக்கையால் மட்டுமே கறுப்புப் பணம் முற்றிலுமாக ஒழிக்கப்​பட்டுவிடுமா, இந்தியாவில் கறுப்புப் பணம் நோட்டுக்​களாகவேதான் பதுக்கப்படுகிறதா, தங்கமும் ரியல்எஸ்டேட்டும் மட்டும்தான் பதுக்குவதற்கான வழிகளா... என்பது போன்ற கேள்விகளில் இருக்​கிறது கொள்ளையர்களை முற்றிலும்  விரட்டியடிப் பதற்கான 70 ஆண்டுகாலப் புதிரின் விடை!  

ஹவாலாதான் பெஸ்ட்!

கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கு​வதில் ஹவாலா பரிவர்த்தனை முதன்மைப் பங்கு வகிக்கிறது. இருந்த இடத்தில் இருந்து​கொண்டே, எவ்வளவு கோடி ரூபாய் களையும் கைமாற்றிவிடும் அசாத்தியத் திறமை ஹவாலா மோசடிக்காரர்களுக்கு உண்டு. இங்கு உள்ள ஹவாலா ஏஜென்ட் ஒருவரிடம் கறுப்புப் பணத்தைப் பதுக்கியவர், இந்திய ரூபாயில் கொடுத்துவிடுவார். அவர் தனது சக ஏஜென்ட் மூலம் இந்தத் தொகைக்கு நிகரான மதிப்பில் அந்நாட்டுச் செலாவணியாக, வெளிநாட்டில் உள்ள ஒருவருக்கு அதாவது கறுப்புப் பணத்தை மாற்ற நினைப்பவரின் கையாளுக்குக் கொடுத்துவிடுவார். அவர் அந்தப் பணத்தை அங்கு இருந்து இந்தியாவுக்குள் வெள்ளைப் பணமாகக் கொண்டுவருவதற்கான வழிகளைப் பார்ப்பார். அதற்கு ஷேர்மார்க்கெட் நல்ல ரூட்!

பங்குபோடும் சந்தை!

பிநோட்ஸ் என்ற பங்கேற்புப் பத்திரங்கள் மூலமாக பங்குச்சந்தையில், பெரும்பான்மையான கறுப்புப் பணம் முதலீடு செய்யப்படுகின்றன. பிநோட்ஸ் மூலம் முதலீடு செய்பவர்கள், தங்கள் விவரங்களை முழுமையாகக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வெளிநாட்டில் ஏதோ ஒரு நிறுவனத்தின் பெயரில் முதலீடு செய்வார்கள். அதற்கு என்றே பல ஷெல் கம்பெனிகள் தொடங்கப்படுகின்றன. அதன் முதலாளி யார், எங்கு இருக்கிறது என்ற விவரங்கள் எதுவும் தெரியாது. இந்தியாவில் செய்யப்படும் அதிகமான அந்நிய முதலீடுகள் மொரிஷியஸ், சிங்கப்பூர் வழியாகத்தான் வருகின்றன. அவ்வளவு பணமும் இங்கு இருந்து போய்த்தான் இந்தியாவுக்குள் திரும்பி வருகிறது.

மொரிஷியஸ் சின்ன நாடு. அங்கு எந்தவித பொருளாதார வளர்ச்சிக்கான ஆதாரமும் இல்லை. ஆனால், இந்தியாவுக்குள் செய்யப்படும் அந்நிய முதலீட்டில் 40 சதவிகிதம், மொரிஷியஸ் வழியாகத்தான் வருகிறது. சிங்கப்பூரில் இருந்து 10 சதவிகிதம் முதலீடு செய்யப்படுகிறது. 2015-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் முதலீடு செய்யப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 63 பில்லியன் டாலர்.

அறக்கட்டளை அபாயம்!

வெளிநாடுகளில் இருந்து கறுப்புப் பணத்தை வெள்ளையாக இந்தியாவுக்குள் கொண்டுவர சிறந்த வழி அறக்கட்டளை வழி பரிவர்த்தனை. பொதுசேவை சார்ந்த பல விஷயங்​களில் ஈடுபடும் அறக்கட்டளை​களுக்கு பல நாடுகளில் இருந்தும், பல நபர்களிடம் இருந்தும் பல ஆயிரம் கோடி ரூபாய்​களில் நன்கொடைகள் குவிகின்றன. இப்படிக் குவியும் பணத்தில் பெரும் பங்கு கறுப்புப் பணமே. இந்தியாவில் பெரும்பாலான அறக்​கட்டளைகள், அரசியல்​வாதிகளாலும் மத நிறுவனங்​களாலும் கல்வி நிலையங்களாலும் நடத்தப்படுபவை. இந்தியாவில் உள்ள அறக்கட்டளைகளின் எண்ணிக்கைக்கும், அவர்கள் செய்வதாகக் குறிப்பிடும் நலத் திட்டங்களுக்கும் இந்நேரம் இந்தியா வல்லரசு ஆகியிருக்க வேண்டாமா, வறுமை ஒழிந்திருக்க வேண்டாமா, கல்வி எல்லோருக்கும் தரப்​பட்டிருக்க வேண்டாமா...ஆனால் நடந்திருக்கிறதா?

இழுத்து மூடுங்கள் இந்தக் கதவுகளை...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz



வெளிநாட்டில் பதுக்கு!

இந்தியாவில் ஊழல் செய்கிறவர்களில் பெரும்பகுதியினர் வெளிநாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்வதையும், வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கிக் குவிப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். சுவிஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மட்டும் பார்த்தால், இந்தியர்கள் அங்கு டெபாசிட் வைத்துள்ள கறுப்புப் பணத்தின் மதிப்பு  1,500 பில்லியன் அமெரிக்க டாலர். இந்திய ரூபாயில் 70 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல். இது இந்தியாவுக்கு இருக்கும் கடனைவிட அதிகம்.

தீவிரவாதிகளோடு கைகோர்க்கலாம்!

உலகம் எங்கும் தீவிரவாத இயக்கங்களும் கறுப்புப் பண முதலைகளும் பன்னெடுங்காலமாக ஒன்றிணைந்தே செயல்படுகிறார்கள். ஆயுதங்கள் வாங்கவும் ஆள் சேர்க்கவும் தாக்குதல்களைத் திட்டமிடவும் என, தீவிரவாதிகளின் ஒரே `சோர்ஸ் ஆஃப் இன்கம்’ கறுப்புப் பணம்தான். தீவிரவாத இயக்கங்களின் செயல்பாடுகளுக்கு ரொக்கமாக பெரும் பணம் எப்போதும் தேவையாக இருக்கிறது. இதற்காக இவர்கள் பதுக்கும் கறுப்புப் பணம் ஒருபக்கம் இருந்தாலும், கள்ள நோட்டுகளையும் தயார்செய்கிறார்கள். பெரும்பாலும் உச்ச மதிப்பில் இருக்கும் நோட்டுகளே கள்ள நோட்டுகளாக அச்சடிக்கப்படுகின்றன. அதுதான் கைமாற்றவும் கையாளவும் வசதியாக இருக்கும். பாகிஸ்தானில் உள்ள பெஷாவர், கள்ளப் பணம் அதிக அளவில் அச்சடிக்கப்படுகிற இடமாக அறியப்படுகிறது.

இன்னும் எப்படி எல்லாம்?


தேர்தலுக்குச் செலவிடப்படும் பணமும் ஓட்டுக்குக் கொடுக்கப்படும் பணமும்கூட கறுப்புப் பணம்தான். பெரும்பான்மையான கறுப்புப் பணம் வெளி​யேற்றப்படும் களமாக இந்தியாவில் தேர்தலே இருக்கிறது. 

இதுபோக கிரிக்கெட், குதிரைப் பந்தயம் போன்ற விளையாட்டுக்களில் சூதாட்டத்துக்குப் பயன்படுத்தப்​படுகிறது. சினிமா துறையிலும் கறுப்புப் பணம் விளையாடுகிறது. விலை உயர்ந்த பாரம்பர்யப் பொருட்களாகவும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைர ஆபரணங்களாகவும், விலை உயர்ந்த ஓவியங்கள் மற்றும் கலைப் பொருட்களாகவும்கூட மாற்றிவைத்துக்கொள்வது, உலக அளவில் பின்பற்றப்படுகிற வழிமுறைகள்.

இந்தியாவில் இப்படி பணம் பதுக்கும் ஓராயிரம் வழிகளைப் பதுக்கல் பேர்வழிகள் அறிந்தே வைத்துள்ளனர். ஆனால், வெறும் 500-1,000 ரூபாய் தாள்களை மாற்றிவிட்டதாலேயே அந்தப் பணப்பேய்கள் எல்லாம் அழிந்து, இங்கே வசந்தம் வந்துவிடும் என நினைப்பது வெற்றுக்கூச்சலாகவே இருக்கும். இது ஒரு நல்ல தொடக்கம். மோடி விதைத்திருப்பது ஒரு மிகப்பெரிய போராட்டத்துக்​கான முதல் அடி. நம் அரசின் அசராத தொடர் நடவடிக்கைகளே கறுப்புப் பணத்தை முற்றிலுமாக ஒழிக்கும்.  அந்த நாளில் நிச்சயம் வசந்தம் வரும்!